Tuesday, December 25, 2007

குற்றவாளிக்கு ஜாமீன் உண்டு! விசாரணை கைதிக்கு ஜாமீன் கிடையாது! -உச்ச நீதிமன்ற விந்தை தீர்ப்புகள்.

சத்திஸ்கர் மாநில அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள டாக்டர் பினாயக் சென் (Dr. Binayak Sen) என்பவரை ஜாமீனில் விடுவதற்கு உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

டாக்டர் பினாயக் சென் ஏன் கைது செய்யப்பட்டுள்ளார்? யாருடைய சிறுநீரகத்தையாவது திருடியிருப்பாரா? கவனக்குறைவாக சிகிச்சை அளித்து யாருடைய மரணத்திற்காவது காரணமாக இருந்திருப்பாரா? கொள்ளை லாப வெறியோடு தனியார் மருத்துவமனை நடத்தினாரா? தேவையற்ற பரிசோதனைகளை செய்யவைத்து மக்களை சுரண்டினாரா? மருந்து வியாபாரிகளோடு கள்ள உறவு வைத்து தேவையற்ற மருந்துகளை மக்களிடம் திணித்தாரா? அல்லது தன்னிடம் வரும் நோயாளிகளை மிரட்டி ஆபாசப்படம் எடுத்து இணைய தளம் மூலம் வணிகம் செய்தாரா? டாக்டர் பினாயக் சென் ஏன் கைது செய்யப்பட்டுள்ளார்? அவரை ஜாமீனில் விடுவதற்கு உச்சநீதிமன்றம் ஏன் மறுப்பு தெரிவிக்க வேண்டும்?

யார் இந்த பினாயக் சென்?

தமிழ்நாட்டில் “வ”(VA) என்ற ஒலிக்கப்படும் எழுத்து மேற்கு வங்கத்தில் “ப”(BA) என்று ஒலிக்கப்படுகிறது. இந்த அடிப்படையில் “டாக்டர் பினாயக் சென்”-ஐ தமிழ்ப்படுத்தினால் “விநாயக் சென்” ஆகிவிடும்.



இந்த டாக்டர் விநாயக் சென், தமிழ்நாட்டிலுள்ள வேலூர் கிறித்துவ மருத்துவ கல்லூரியில் MBBS மற்றும் MD ஆகிய படிப்புகளை மிகச்சிறப்பாக படித்துத் தேறியவர். பின்னர் 1976 முதல் 1978ம் ஆண்டுவரை புதுதில்லி, ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சமூக மருத்துவத்துறையில் ஆசிரியராக பணியாற்றியவர். பிறகு சமூக-பொருளாதார தளத்தில் பின் தங்கிய மக்களுக்கு நேரடியாக பணியாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் அப்பணியை உதறிவிட்டு(பல தனியார் மருத்துவமனை அழைப்புகளையும் புறக்கணித்துவிட்டு) கூலித்தொழிலாளிகள் மற்றும் ஆதிவாசி மக்கள் வாழும் பகுதியில் சென்று மருத்துவ சேவை செய்ய ஆரம்பித்தார்.

வறுமை நிலையில் உள்ள மக்களின் நோய் அகற்ற, அவர் படித்த நவீன மருத்துவம் முழுமையாக பயன்படாத நிலையில், பாரம்பரிய மருத்துவமுறைகளையும் பயன்படுத்திய அவர், சுகாதாரமான வாழ்வும் - ஊட்டச்சத்துமே நோயற்ற வாழ்வுக்கு சரியான வழி என்பதை உணர்ந்து கொண்டார். ஆனால் மத்திய, மாநில அரசுகள் சார்பில் மக்களின் நல்வாழ்வுக்கு ஒதுக்கப்படும் நிதி அனைத்தும் அரசியல்வாதிகள்-அதிகாரிகள்-மருந்து மற்றும் மருத்துவ சேவை வியாபாரிகளின் கூட்டணிக் கொள்ளை காரணமாக மக்களுக்கு பயன்படாமல் போவதைக் கண்டு மனம் கொதித்தார். மேலும், சமூகத்தில் நிலவும் சுரண்டல் அமைப்பில் ஆதிவாசிகள் மற்றும் தலித் மக்களின் வளங்கள் சூறையாடப்பட்டு, அம்மக்கள் அகதிகளாக விரட்டப்படுவதை கண்டு கொதித்து எழுந்தார்.



ஆரோக்கியமும், நல்வாழ்வும் அடிப்படை மனித உரிமைகள் என்பதை உணர்ந்து கொண்ட டாக்டர் வினாயக் சென், மக்கள் சிவில் உரிமைக் கழக(Peoples’ Union for Civil Liberties)த்துடன் இணைந்து செயல்படத் தொடங்கினார். (தமிழகம் போலல்லாது, சில மாநிலங்களில் அந்த அமைப்பு சாமானிய மக்களுக்காக உண்மையிலேயே செயலாற்றி வருகிறது) பின்னர் அந்த அமைப்பின் தேசியத்துணைத் தலைவராகவும், சத்திஸ்கர் மாநில செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆதிவாசிகள் மற்றும் தலித் மக்களின் நலன்களை அரசு அமைப்புகள் புறக்கணித்தபோது, அம்மக்கள் மாவோயிஸ இயக்கங்களில் சேர்ந்தனர். மாவோயிஸ இயக்கப்பணியாளர்களை அரசுப்படையினரும், அரசின் ஆதரவு பெற்ற சல்வா ஜுடும் என்ற ஆதிக்க சக்திகளின் கூலிப்படையினரும் வேட்டையாடுவதைக்கண்டு மனம் பொறுக்காத அவர், உண்மை கண்டறியும் குழுக்களை அமைத்து அரசு மற்றும் அரசு ஆதரவு பெற்ற கூலிப்படையினரின் அராஜகங்களை அம்பலப்படுத்தினார்.

அதேநேரத்தில் அடித்தள மக்களின் நல்வாழ்வைப்பேண சமூக மருத்துவத்துறையிலும் பல சாதனைகளைப் படைத்தார். இதைப் பாராட்டும்விதமாக வேலூர் சிஎம்சி மருத்துவக்கல்லூரி, அதன் முன்னாள் மாணவர்களுக்கு வழங்கும் “பால் ஹாரிசன்” என்ற பெருமை மிக்க விருதை கடந்த 2004ம் ஆண்டில் டாக்டர் வினாயக் சென்னுக்கு வழங்கி கவுரவித்தது.

இந்நிலையில்தான், கடந்த 2007 மே மாதம் 17ம் தேதி சத்திஷ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் டாக்டர் விநாயக் சென் கைது செய்யப்பட்டார். பணிநிமித்தமாக கொல்கத்தா சென்றிருந்த அவரை, தலைமறைவாகி விட்டார் என்று காவல்துறையினர் பிரச்சாரம் செய்ததால் தாமாகவே காவல் நிலையம் சென்ற அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கு உதவி செய்ததாக அவர் மீது, சத்திஸ்கர் சிறப்பு பொதுப்பாதுகாப்பு சட்டம் (Chhattisgarh Special Public Security Act, 2006) மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் (Unlawful Activities (Prevention) Act, 2004) ஆகிய சட்டங்களின்படி கைது செய்துள்ளதாக சத்திஸ்கர் மாநில அரசு கூறுகிறது.

ராய்ப்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாராயண் சன்யால் என்ற கைதி எழுதிய கடிதங்களை, மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த பியூஷ் குஹா என்பவருக்கு டாக்டர் விநாயக் சென் சட்டவிரோதமாக கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தற்போது கைது செய்யப்பட்டுள்ள பியூஷ் குஹா கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த கைது நடைபெற்றுள்ளதாகவும் அரசுத்தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் தம்மை சித்ரவதை செய்து வெற்றுத்தாள்களில் காவல் மற்றும் சிறைத்துறையினர் கையொப்பம் பெற்றதாக பியூஷ் குஹா நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சிறையில் உள்ள நாராயண் சன்யால், சிறைத்துறை அதிகாரிகளின் அனுமதியுடன் டாக்டர் விநாயக் சென்னுக்கு எழுதிய கடிதத்தை அவருக்கு எதிரான சான்றாக காட்டுகிறது அம்மாநில அரசு. அந்த கடிதத்தில் டாக்டர் விநாயக் சென்-ஐ “தோழர்” என்று நாராயண் சன்யால் அழைத்துள்ளாராம். இது ஒன்றே போதுமாம், டாக்டர் விநாயக் சென்-னும் மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்தவர்தான் என்று கூறுவதற்கு. ஆனால், நாராயண் சன்யாலை சிறைத்துறை அதிகாரிகளின் அனுமதியுடன் பலமுறை பார்த்துள்ள டாக்டர் விநாயக் சென், சிறையில் கைதிகளின் அவல நிலையை அம்பலப்படுத்தி வெளியிட்டுள்ள அறிக்கைகள் குறித்து அரசுத்தரப்பில் விளக்கம் ஏதுமில்லை.

சத்திஸ்கர் மாநில அரசின் இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் இதுவரை பத்திரிகைகளில் வெளிவந்ததுதான். அவர் கைது செய்யப்பட்டு ஆறு மாதங்களுக்கு மேலாகியும் அவர் மீது நீதிமன்றத்தில் முறைப்படி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை.

ஆனால் அவரை ஜாமீனில் விடுவிக்குமாறு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தாலோ, அரசு அதிகாரிகள் வழக்கம் போல தாமதப்படுத்தும் தந்திரங்களை கையாண்டு வருகின்றனர்.

இதன் உச்சகட்டம் மனித உரிமைகள் தினமாக அனுசரிக்கப்படும் டிசம்பர் 10ம் தேதி, நாட்டின் கடைசி நியாயஸ்தலமாக கருதப்படும் உச்சநீதிமன்றத்திலும் நடந்தேறியது. நீதியரசர்கள் அஷோக் பான், டி.கே. ஜெயின் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற விசாரணையில் டாக்டர் விநாயக் சென் சார்பில் பிரபல வழக்கறிஞர் ராஜீவ் தவான் வாதாடினார்.

அப்போது டாக்டர் விநாயக் சென் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை என்றும், எனவே அவர் மீது இதுவரை குற்றப்பத்திரிகைகூட தாக்கல் செய்யப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். டாக்டர் விநாயக் சென்னின் வீட்டில் கைப்பற்றப்பட்ட கம்ப்யூட்டரில் காவல்துறையினர் “கதை விட்டதை”ப்போல எந்த விவகாரமும் காணப்படவில்லை என்று ஆந்திர மாநில குற்றப்புலனாய்வு அதிகாரிகள் கூறியதையும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த வாதம் அனைத்தையும் கேட்ட நீதியரசர்கள், “இந்த வாதங்கள் அனைத்தும் விசாரணை நீதிமன்றத்தில் கூற வேண்டியது” என்று கூறினர். அதற்கு பதில் அளித்த வழக்கறிஞர் ராஜீவ் தவான், “விசாரணை நீதிமன்றத்தில் குற்றச்சாட்டே பதிவு செய்யாத நிலையில் இருப்பதால்தான் உச்சநீதிமன்றம் வர நேர்ந்தது” என்று எடுத்துரைத்தார்.

ஆனால் அவரது வாதத்தை ஏற்க முடியாது என்று தள்ளுபடி செய்த நீதியரசர்கள், டாக்டர் விநாயக் சென்-னை ஜாமீனில் விடமுடியாது என்று தீர்ப்பளித்தனர். டாக்டர் விநாயக் சென்னுக்கு ஜாமீன் அளிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்த நாள், டிசம்பர் 10, 2007. மனித உரிமைகள் தினமாக உலகெங்கும் அனுசரிக்கப்படும் ஒரு தினத்தில்தான் மனிதஉரிமைக்காக போராடிய ஒருவருக்கான நீதி மறுக்கப்பட்டுள்ளது.


இந்த நேரத்தில் பிரபல ஹிந்தி திரைப்பட நடிகர் சஞ்சய் தத்-துக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியதையும் ஒப்பு நோக்கலாம்.

மும்பையில் கடந்த 1993 ஆண்டு நடைபெற்ற தொடர்குண்டு வெடிப்பு சம்பவத்தில் 257 பேர் கொல்லப்பட்டதாக அரசு புள்ளிவிவரம் கூறுகிறது. இந்த வழக்கில் சஞ்சய் தத் உட்பட சுமார் 100 பேர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதாகக்கூறி சஞ்சய் தத்துக்கு 6 ஆண்டு சிறை தண்டனை விதித்து தடா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அந்த தண்டனையை வழங்கிய நீதிபதி, நடிகர் சஞ்சய் தத் 100 ஆண்டுகள் வாழ்ந்து பல திரைப்பட சாதனைகளை படைப்பார் என்றும், அவரது ஆயுளில் 6 வருடங்களை மட்டுமே தாம் பறிப்பதாகவும் மிகுந்த கவலையுடனும், அக்கறையுடனும் கூறினார். இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீட்டு செய்துள்ள நிலையில் நடிகர் சஞ்சய் தத் உள்ளிட்ட சிலருக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன், நீதிபதிகள் ஆர்.வி. ரவீந்திரன், ஜே.எம்.பஞ்ச்சால் ஆகியோர் அடங்கிய முதன்மை பெஞ்ச் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. ஆக அரசியல் பின்புலமும், பிரபலமும் இருந்தால் உச்சநீதிமன்றம் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டவருக்குக்கூட ஜாமீன் வழங்கும். ஆனால் இதுபோன்ற உயர்மட்ட தொடர்புகள் இல்லாத சாதாரண டாக்டர் விநாயக் சென் போன்றவர்கள் மீது குற்றப்பத்திரிகையே தாக்கல் செய்யப்படாவிட்டாலும் அவர்களுக்கு ஜாமீன் வழங்க வழியில்லை.



சட்டத்தின் முன் அனைவரும் சமமாம். நம்புவோம்!

-சுந்தரராஜன்

(sundararajan@lawyer.com)

டாக்டர் விநாயக் சென்-ஐ விடுவிக்க கோரும் மனுவிற்கு:

http://www.freebinayaksen.org/

http://www.savebinayak.ukaid.org.uk/

http://www.binayaksensupport.blogspot.com/

7 comments:

jayakaarthi said...

இதுபோன்ற அநியாய தீர்ப்புகள் நீதிமன்றங்களில் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. நீதிபதிகளுககும் இடையேயும் கருத்து வேறுபாடுகள் நீடிக்கிறது. பணம் செல்வாக்கு தான் அனைத்தையும் தீர்மானிப்பதாக இருப்பது வேதனை.

seethag said...

சஞ்சய் தத் பணக்காரர். அரசியல் செல்வாக்குள்ளவர்.பினாயக் சென் ஏழைகளுக்காகதானே (!) பாடுபட்டார். அவர் என்ன அவ்வளவு முக்கியமானவரா? சிஎம்சியில் கையெழுத்து வேட்டைக்காக, கையெழுத்து போட்டேன். எவ்வளவு முயற்ச்சி செய்தும் அவர் வெளியே வராதது வருத்தம்

Anonymous said...

தொடர்ந்து இதுபோன்ற கட்டுரைகளை மட்டுமே எழுதிக்கொண்டிருந்தால் உங்களையும் பிடித்து ஏதாவது பொய் வழக்கில் சிக்கவைக்கப் போகிறார்கள். ஜாக்கிரதையாக இருக்கவும்.

நீதித்துறை விமர்சனம் தேவைதான். அதே சமயம் பொதுமக்களுக்கு சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தும் கட்டுரைகளையும் அதிகம் வெளியிடலாமே.

உரிமைகள் கேட்கப்படும்போதுதானே அது வளரும். அதற்கும் ஏதாவது செய்யவும்.

Anonymous said...

"தமிழகம் போலல்லாது, சில மாநிலங்களில் அந்த அமைப்பு சாமானிய மக்களுக்காக உண்மையிலேயே செயலாற்றி வருகிறது)"

இந்த இடுகைக்கு இது தொடர்பில்லாத ஒன்று.தமிழ்நாட்டில் பி.யு.சி.எல் வலுவாக இல்லை.இயன்ற அளவு அவர்களும் செயல்பட்டு வருகிறார்கள்.பினாயக் சென்னுக்கு பிணை கொடுத்திருக்க வேண்டும்.உச்ச நீதிமன்றத்தின் முடிவை நான் எதிர்க்கிறேன். ஆனால் நீங்கள் ஒப்பிட்டிருப்பது பொருத்தமற்றது. சஞ்சய் தத் சிறையில் இருந்து, தீர்ப்பு வந்த பின், மேல் முறையீடு செய்திருக்கிறார்,
பிணையில் வெளி வந்திருக்கிறார். பினாயக் சென்Chhattisgarh Special Public Security Act, 2006 என்ற சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இதை செல்லாது என்று நீதிமன்றம் அறிவிக்காத வரை இது நடைமுறையில் இருக்கும். இந்த சட்டம் செல்லாது என்று அறிவிக்கப்படாத வரை இதன் கீழ் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் பிணையில் வெளியே வருவது
எளிதல்ல. இது போன்ற சட்டச் சிக்கல்களை விளக்காமல் மொட்டைக்காலுக்கும், முழங்காலுக்கும்
முடிச்சுப் போட்டு எழுதி உங்கள் மன அரிப்பினை தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள். பினாயக் சென்னுக்கு பிணை வழங்காததை நான் கண்டிக்கிறேன்.
"ஆக அரசியல் பின்புலமும், பிரபலமும் இருந்தால் உச்சநீதிமன்றம் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டவருக்குக்கூட ஜாமீன் வழங்கும். ஆனால் இதுபோன்ற உயர்மட்ட தொடர்புகள் இல்லாத சாதாரண டாக்டர் விநாயக் சென் போன்றவர்கள் மீது குற்றப்பத்திரிகையே தாக்கல் செய்யப்படாவிட்டாலும் அவர்களுக்கு ஜாமீன் வழங்க வழியில்லை. "

அந்த முடிவிற்கு உங்களைப் போல் நான் உள்ளர்த்தம் கற்பிக்க விரும்பவில்லை.சென்னை டாக்டர் பிரகாஷ் உட்பட பலர் உச்ச நீதிமன்றத்தினை நாடியும் பிணை கிடைக்காமல் சிறையில் உள்ளனர். இந்த வழக்கில் சத்திஸ்கர் அரசு செயல்பட்ட விதமும், மெளனமாக இருக்கும் மத்திய அரசும் விமர்சிக்கப்பட வேண்டியவை. நக்சகளை ஒடுக்குவது என்ற பெயரில் செய்யப்படும் மனித உரிமை மீறல்களை கண்டிப்பது அவசியம். ஆனால் அரசியல் கட்சிகள் அவ்வாறு செய்வதில்லை என்பதே கசப்பான உண்மை.

மக்கள் சட்டம் said...

//சரியான மாற்றுக் கருத்துடன் வரும் விமரிசனங்கள் வரவேற்கப்படுகின்றன. அனானி / ஆங்கில பின்னூட்டங்கள் நீக்கப்படும்.//

என்ற அறிவிப்புக்கு பின்னரும் மேற்கண்ட அறிவிப்புக்கு பின்னும்கூட அனானி பதிவு போடும் அன்பர் கூறுகிறார், "மொட்டைக்காலுக்கும், முழங்காலுக்கும்
முடிச்சுப் போட்டு எழுதி உங்கள் மன அரிப்பினை தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள்"

ஹ்ம்ம்...!!!???

//"தமிழகம் போலல்லாது, சில மாநிலங்களில் அந்த அமைப்பு சாமானிய மக்களுக்காக உண்மையிலேயே செயலாற்றி வருகிறது)"

இந்த இடுகைக்கு இது தொடர்பில்லாத ஒன்று.தமிழ்நாட்டில் பி.யு.சி.எல் வலுவாக இல்லை.இயன்ற அளவு அவர்களும் செயல்பட்டு வருகிறார்கள்.//

அப்படியா? அப்படியா?? அப்படியா???

அகராதி said...

மக்கள் சட்டம் வலைப்பூவில் என்னை கவர்ந்த அம்சமே, பின்னூட்டங்களுக்கு பின்னூட்டம் போடுவதில்லை என்பதுதான். ஆனால் தற்போது நீங்களும் provogue ஆகி பின்னூட்டங்களுக்கும் பின்னூட்டம் போடுவது திருப்தி அளிக்கவில்லை.

நூலோர்களுக்கும், மேலோர்களுக்கும் அவர்களைக்குறித்தும், அவர்கள் சார்ந்த அமைப்புகள் குறித்தும் உண்மைகளை கூறும்போது கோபம் வருவது இயற்கைதான்.

உலகத்துக்கே நேர்மையை போதிக்கும் இவர்கள் அனானி பதிவு கூடாது என்ற எளிய நேர்மையைக்கூட மதிப்பதில்லை என்பது உண்மைதான் எனினும் அதற்கு பின்னூட்டம் இடுவது தேவையற்றது என நினைக்கிறேன். பரிசீலிக்கவும்.

தமிழே தெரியாத அனானியின் பின்னூட்டத்திற்கு பின்னூட்டம் போடும்போது உங்கள் தமிழும் தடுமாறுவதை உணருங்கள்.

மற்றபடி பதிவு நல்ல பதிவே. இதுபோன்ற பதிவுகள் அதிகம் தேவை.

Anonymous said...

unappealing pretty supervisees readmission lists rents generating spendingthis ofmr subventions cognizance
lolikneri havaqatsu

Post a Comment

உங்கள் கருத்துகளே எங்களை மேலும் செயல்படத் தூண்டும்.

ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.

அனானி மற்றும் ஆங்கில மறுமொழிகள் நீக்கப்படலாம்!