Saturday, December 22, 2007

மனித உரிமைப் போராளி அசுரன் மறைந்தார்!

(முக்கிய அறிவிப்பு: இவர் போர்ப்பறை பிளாக் அசுரன் அல்ல. போர்ப்பறை அசுரன் நீண்டநாள் வாழ்ந்து மக்கள் பணியாற்ற வாழ்த்துகள்)
...
சுற்றுச்சூழல் ஆர்வலரும், மனித உரிமைப் போராளியும், இடதுசாரி சிந்தனையாளருமான தோழர் அசுரன் 21-12-2007 (வெள்ளி) அன்று மாலை 5 மணி அளவில் மறைந்தார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்த ராம்குமார் என்ற இயற்பெயருடைய இவர், கம்யூட்டர் துறையில் கல்வி கற்றிருந்தாலும் சமூகத்தின் மீதுள்ள அக்கறை காரணமாகவும், சுற்றுச்சூழல், மனித உரிமைகள் குறித்த விழி்ப்புணர்வை வளர்க்க வேண்டும் என்ற ஆவல் காரணமாகவும் எழுத்தாளராக உருவெடுத்தார்.
.

திண்டுக்கல்லில் இருந்து வெளியாகும் "புதிய கல்வி" என்ற சுற்றுச்சூழல் இதழின் இணை ஆசிரியராக பணியாற்றிய இவருக்கு கடந்த சில ஆண்டுகள் முன்புதான் திருமணம் நடந்தது. இவருக்கு மனைவியும், ஒரு மகளும் உள்ளனர்.

கடந்த சில நாட்களாக சிறுநீரகங்கள் செயலிழந்த நிலையில், நாகர்கோவில் ராஜேந்திரா சித்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். அந்த நிலையிலும் திண்ணை இணைய இதழ், சமூக விழிப்புணர்வு போன்ற இதழ்களி்ல் எழுதி வந்தார். பின்பு நோய் முற்றிய நிலையில் திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இடதுசாரி சிந்தனையாளர் என்ற அடிப்படையில் ஒத்த கருத்துள்ள அனைவரையும் அரவணைத்து செல்லும் இயல்புள்ள இவர், எதிர்க்கருத்துள்ளவர்களுடன் கூர்மையான விவாதங்களை மேற்கொண்டார். இவரது விவாதங்களில் சூடுபறந்தாலும் உரையாடல்கள் மிகவும் இனிமையாகவே இருந்தன.

.

பன்னாட்டு ஏகபோகங்களுக்கு எதிரான மாற்று அறிவியல், வேளாண்மை, மருத்துவம் ஆகியவற்றை பரிந்துரை செய்வதில் முனைந்து நின்ற இவர் அண்மையில் "புதிய தென்றல்" என்ற சிற்றிதழையும் கொண்டுவந்தார்.

.

உலக அளவில், மனித உரிமை - சுற்றுச்சூழல் குறித்த புதிய சட்டங்களையும், செய்திகளையும் தெரிந்து கொள்வதிலும் அதை மற்றவர்களுக்கு தெரிய செய்வதிலும் மட்டற்ற ஆர்வம் காட்டியவர். அதைபோல செல்ஃபோன் மூலமான எஸ்எம்எஸ் சேவையையும்கூட சமூக மாற்றத்திற்கான ஆயுதமாக மாற்றியவர்.

.

இடதுசாரி சிந்தனையாளர் என்றபோதிலும், நாடாளுமன்ற இடதுசாரிகளைப்போல அணுசக்தி விவகாரத்தில் அமைதியாக இராமல் அணுசக்தி எதிர்ப்பாளராக தம்மை அடையாளம் காட்டிக்கொண்டவர். குறிப்பாக கூடங்குளம், கல்பாக்கம் அணுஉலைகளுக்கு எதிராக மருத்துவர்கள் ரமேஷ், புகழேந்தி ஆகியோரோடு இணைந்து செயல்பட்டவர்.

அவரது எழுத்தையும், செயல்பாடுகளையும் பார்ப்பவர்கள் யாரும், அவர் உயிருக்கு கடுமையாக போராடிக்கொண்டே இத்தகைய செயல்களில் ஈடுபட்டார் என்பதை உணர்ந்திருக்க முடியாது.

தவணை முறையில் மரணத்தை சந்தித்தாலும், உயிருடன் இருக்கப்போவது எத்தனை மணித்துளிகள் என்பது தெரியாத நிலையிலும், மனிதாபிமானம்-மனித குல விடுதலை என்பதையே இறுதி இலக்காக கொண்டு கடைசிவரை வாழ்ந்த தோழர் அசுரனின் குரல் இனி ஒலிக்காது.

அவரது குரலை தொடர்ந்து ஒலிக்கச்செய்வதே அவருக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாக இருக்கும்.

-மக்கள் சட்டம் குழு

மறைந்த தோழர் அசுரன் அவர்களின் சமூக அக்கறை கொண்ட எழுத்தின் ஒரு சிறிய பகுதியை படிக்க:

http://www.keetru.com/puthiyathendral/index.php

http://www.thinnai.com/?module=archives&op=searchauth&search_string=+அசுரன்


19 comments:

லக்கிலுக் said...
This comment has been removed by a blog administrator.
லக்கிலுக் said...
This comment has been removed by a blog administrator.
Osai Chella said...
This comment has been removed by the author.
முத்துகுமரன் said...
This comment has been removed by a blog administrator.
-/பெயரிலி. said...
This comment has been removed by the author.
TBCD said...

அன்னாரின் குடும்பதார்க்கு என் இரங்கல்கள்.

:((((((

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
rajavanaj said...
This comment has been removed by a blog administrator.
மக்கள் சட்டம் said...

மன்னிக்க வேண்டுகிறோம். தவறு நேர்ந்து விட்டது.

பெயர்க்குழப்பம் காரணமாக நிகழ்ந்த இந்த தவறு இனி நிகழாமல் இருக்க அதிகபட்ச முயற்சி மேற்கொள்ள உறுதி ஏற்கிறோம்.

-மக்கள் சட்டம் குழு

Osai Chella said...
This comment has been removed by a blog administrator.
நண்பன் said...

ஒரு நிமிடம் ஆடிப் போய்விட்டது. இறுதியாக, செய்த அறிவிப்பை முன்னரே முதல் வரிகளிலே கொடுத்திருக்கலாம்.

என்றாலும், இதழிலியலாளர் அசுரனின் மரணம் கூட ஒரு இழப்பு தான். எங்கே எது நடந்தாலும் எனக்கென இயங்கும் மனிதர்கள் நிறைந்த உலகில், பொது மக்களிடையே விழிப்புணர்வைத் தூண்டும் வகையில் செயல்பட்டவரைப் பாராட்டத் தான் வேண்டும்.

ஒரு மனிதரைப் பற்றிய அறிமுகம் அவரது மரணத்தின் மூலமாகத் தான் நிகழ்கிறது என்பது என்ன ஒரு கொடுமை!

இறந்துவிட்ட மனிதரின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன் - மிகுந்த வருத்தத்துடன்.

-/பெயரிலி. said...

நண்பன் சொல்லியிருப்பதே என் உணர்வுமாகிறது

ஜமாலன் said...

அசுரனை அறிமுகமில்லை என்றாலும் மனித உரிமைப்பபோராளியாக வாழ்ந்து மறைந்த அவரது மரணத்திற்கு எனது அஞ்சுலி. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.

-ஜமாலன்.

வவ்வால் said...

ரொம்ப அதிர்ச்சியான தகவல், ஆனால் பெயர்க்குழப்பம் என்பது இப்போது தான் தெரிகிறது. நாகர்கோவில் அசுரன் ஒரு சமூக போராளி என்பது தெரிகிறது,அவர் இழப்பும் சமூகத்திற்கு பெரும் இழப்பே. அவருக்கு எனது அஞ்சலி!

வஹ்ஹாபி said...

திண்ணையில் நிறைய எழுதி இருக்கிறார்.

ஏறத்தாழ மூன்றாண்டுகளுக்கு மேலாக நோயோடு போராடி இருக்கிறார்.

திண்ணையில் அசுரன்:
http://www.thinnai.com/?module=archives&op=searchauth&search_string=+அசுரன்

cheena (சீனா) said...

மறைந்த அசுரன் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் துயரத்தைத் தாங்கும் சக்தி கிடைக்கவும், அசுரனின் ஆன்மா சாந்திஅடையவும் இறையை வேண்டுகிறேன்.

மிகுந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

பிறைநதிபுரத்தான் said...

அவரது எழுத்தையும், செயல்பாடுகளையும் பார்ப்பவர்கள் யாரும், அவர் உயிருக்கு கடுமையாக போராடிக்கொண்டே இத்தகைய செயல்களில் ஈடுபட்டார் என்பதை உணர்ந்திருக்க முடியாது. -

மிகவும் சரியாக சொன்னீர்கள்.

அன்னாரை இழந்து தவிக்கும் - அவரின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்

-/சுடலை மாடன்/- said...

‘திண்ணை ‘ படித்த ஆண்டுகளில் அசுரனின் எழுத்துக்களை தொடர்ந்து படித்து வந்தேன். அதன் பின் சில சமயங்களில் மின் அஞ்சலில் தொடர்பு கொண்டிருந்தாலும் இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில்தான் குமரி மாவட்டம் தக்கலையில் அவர் தங்கி சிகிச்சை எடுத்து வரும் இராஜேந்திரா சித்த மருத்துவமனையில் சந்தித்துப் பேசும் வாய்ப்புக் கிடைத்தது. சித்த மருத்துவத்தின் மூலம் தான் முழுமையாகக் குணம் அடைந்து விட்டதாயும், விரைவில் வீடு திரும்பி நிறைய பணிகள் செய்யவிருப்பதாயும் தெரிவித்தார்.

மருத்துவ மனையில் சிகிச்சை பெற்ற காலத்திலும் 'புதிய தென்றல்' சிறு பத்திரிகையை ஒரு வேள்வியாக நடத்தி வந்தவர். அவருடன் பேசிக் கொண்டிருந்த அந்த இரண்டு மணி நேரத்திலும் கூட பத்திரிகைப் பணியையும் கணினி முன்னே செய்து கொண்டேயிருந்தார். அவரிடமிருந்த தியாக உள்ளத்தையும், போராட்டக் குணத்தையும், கொள்கைத் தெளிவையும், கடின உழைப்பையும் அன்று என்னால் உணர முடிந்தது. அவர் போன்ற தன்னலமில்லாத எத்தனையோ போராளிகளால்தான் இன்னும் மனித உரிமைகளும், விளிம்புநிலை மனிதர்களின் வாழ்க்கையும் கொஞ்சமாவது பாதுகாப்பாயிருக்கின்றன. அவருக்கு என்னுடைய கண்ணீர் அஞ்சலி. அவருடைய குடும்பத்துக்கும் நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

நன்றி - சொ. சங்கரபாண்டி

Anonymous said...

"தீவட்டி"யாய் தொடங்கி
"புதிய கல்வி"யாய் புலர்ந்து
"புதிய தென்றலா"ய் வீசி
சமூகப் போராளியாய் வாழ்ந்தவன்
இன்று காற்றோடு கலந்து விட்டான்
-சிவகுமார்

Post a Comment

உங்கள் கருத்துகளே எங்களை மேலும் செயல்படத் தூண்டும்.

ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.

அனானி மற்றும் ஆங்கில மறுமொழிகள் நீக்கப்படலாம்!