Tuesday, October 16, 2007

தமிழ்ப் பல்கலைக் கழகம் - சித்த மருத்துவக் கல்வி - தகவல் உரிமை சட்டத்தின்கீழ் மேல் முறையீடு

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில், அஞ்சல் வழியில் சித்தமருத்துவம் கற்றுத்தருவதாக வந்த விளம்பரத்தை அடுத்து நாம் மேற்கொண்ட விசாரணையில், இந்திய மருத்துவத்திற்கான மத்திய குழு உள்ளிட்ட அதிகார அமைப்புகளிடம் இருந்து எந்தவிதமான அனுமதியும் பெறாமல் பணம் பண்ணும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிந்தது. இதையடுத்து இந்த கோர்ஸுக்கு தடைவிதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதற்கிடையில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் சித்த மருத்துவத்துறையில் ஆய்வு முனைவர்(Ph D), ஆய்வு நிறைஞர்(M Phil) ஆகிய ஆய்வுப் படிப்புகளும் வழங்கப்படுவதாக தெரியவந்தது. ஆனால் இந்தப் பட்டங்களை இந்திய மருத்துவத்திற்கான மருத்துவக்குழுவோ, டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகமோ அங்கிகரிக்க வில்லை என்பதும் தெரியவந்தது. எனவே இந்த பட்டங்களின் அந்தஸ்து குறித்து சில தகவல்களை தகவல் உரிமைச்சட்டத்தின் கீழ் கடந்த 05-09-2007 அன்று கேட்டோம்.

இம்மனுவைப் பெற்றுக்கொண்ட தமிழ்ப் பல்கலைக்கழக பதிவாளர் முனைவர். க. பாஸ்கரன் அவர்கள் பதில் அனுப்பி உள்ளார். அதில் தமிழ்ப் பல்கலைக்கழகம் அஞ்சல் வழியில் நடத்தும் சித்த மருத்துவ பட்டய படிப்பை எதிர்த்து நாம் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் நாம் கேட்டுள்ள விவரங்களை தெரிவிக்க முடியவில்லை எனக்கூறியுள்ளார்.

மேலும் மேல்முறையீடு செய்ய விரும்பினால் துணைவேந்தரிடம் மேல் முறையீடு செய்யலாம் என்றும் நல் வாய்ப்பொன்றை வழங்கி உள்ளார். எனவே நாம் மேல்முறையீட்டு மனுவை அனுப்பி உள்ளோம். அதன் நகல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
16-09-2007
சென்னை

அனுப்புனர்,

பி. சுந்தரராஜன்,
வழக்கறிஞர்,
1-P, பாண்டு கிளிக்ஸ் பிளாஸா,
330/168, தம்பு செட்டி தெரு,
சென்னை-600 001.

பெறுனர்,

துணை வேந்தர்,
தமிழ்ப் பல்கலைக்கழகம்,
தஞ்சாவூர் - 613 010.

ஐயா,

பொருள்: தகவல் உரிமைச் சட்டம் பிரிவு 19ன் கீழான மேல் முறையீட்டு மனு

---

கடந்த 05-09-2007 அன்று, தங்கள் பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவத்துறையில் வழங்கப்படும் ஆய்வு முனைவர்(Ph D), ஆய்வு நிறைஞர் (M Phil) ஆகிய பட்டங்கள் குறித்த கீழ்க்கண்ட தகவல்களை வழங்குமாறு பொதுத்தகவல் அதிகாரியான பதிவாளருக்கு மனு அனுப்பினேன்.

அக்கேள்விகள் கீழ் வருமாறு:

1. தங்கள் பல்கலைக்கழகத்தின் சித்தமருத்துவத்துறையில் சித்தமருத்துவம் படித்த முழுநேரப் பேராசிரியர்கள் எத்தனை பேர் பணிபுரிகின்றனர்?
.
2. தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இதுவரை எத்தனை பேர், சித்தமருத்துவ துறையில் ஆய்வு முனைவர்(Ph D) மற்றும் ஆய்வு நிறைஞர்(M Phil) பட்டம் பெற்றுள்ளனர்? இந்தப் பட்டங்களுக்காக தற்போதைய நிலையில் எத்தனை மாணவர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்?
.
3. தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் சித்தமருத்துவத்துறையில் வழங்கப்பட்ட ஆய்வு முனைவர் (Ph D) மற்றும் ஆய்வு நிறைஞர் (M Phil) பட்டங்களை இந்திய மருத்துவத்திற்கான மத்தியக் குழு (CENTRAL COUNCIL FOR INDIAN MEDICINE) அங்கீகரித்துள்ளதா? ஆம் எனில் எந்த அடிப்படையில் அங்கீகரித்துள்ளது? இல்லையெனில் எந்த அடிப்படையில் அங்கீகாரம் மறுக்கப்பட்டது?
.
4. தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு முனைவர் (Ph D) மற்றும் ஆய்வு நிறைஞர் (M Phil) பட்டம் பெற்றவர்களை சித்தமருத்துவ விரிவுரையாளர்களாக –அல்லது- பேராசிரியர்களாக தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் அங்கீகரித்துள்ளதா? ஆம் எனில் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் ஆய்வு முனைவர் (Ph D) மற்றும் ஆய்வு நிறைஞர் (M Phil) பட்டம் பெற்றவர்கள் எத்தனை பேர் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் சித்தமருத்துவ விரிவுரையாளர்களாக –அல்லது- பேராசிரியர்களாக பணி நியமனம் பெற்றுள்ளனர்?
.
5. தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு முனைவர் (Ph D) மற்றும் ஆய்வு நிறைஞர் (M Phil) பட்டம் பெற்றவர்களை சித்தமருத்துவ விரிவுரையாளர்களாக –அல்லது- பேராசிரியர்களாக தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் அங்கீகரிக்கவில்லை எனில் அங்கீகாரம் பெற என்ன முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது?
.
இந்த மனுவைப் பெற்றுக் கொண்ட தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பொதுத்தகவல் அதிகாரியும், பதிவாளருமான முனைவர் க.பாஸ்கரன் பதில் கடிதம் அனுப்பி உள்ளார்.
.
அதில், 2007-08ஆம் கல்வி ஆண்டில் தமிழ்ப் பல்கலைக் கழகத் தொலைநிலைக்கல்வி இயக்கக வழி, சித்த மருத்துவப் பட்டயக் கல்வி பயிற்றுவிப்பதற்கு எதிராகத் தாங்கள் சென்னை, உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையிள்ள நிலையில், கேட்கப் பட்டுள்ள விவரங்களைத் தெரிவிக்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு அஞ்சல் வழியில் வழங்கப்படும் சித்த மருத்துவப் பட்டயக்கல்வி குறித்ததே. அந்த வழக்கில் தங்கள் பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழி அல்லாத முறைகளில் வழங்கப்படும் ஆய்வு முனைவர்(Ph D), ஆய்வு நிறைஞர் (M Phil) ஆகிய பட்டங்கள் குறித்து இதுவரை எந்த கேள்வியும் எழுப்பப்படவில்லை.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2007 அக்டோபர் முதல் தேதி அன்று விசாரணைக்கு வந்தபோது தங்கள் பல்கலைக்கழகம் சார்பில் வழக்கறிஞர்கள் சார்பில் யாரும் ஆஜராகவில்லை. இந்நிலையில் வழக்கில் எந்த தொடர்பும் இல்லாத அம்சம் குறித்த - தகவல் உரிமைச் சட்டம் பிரிவு 8ன் படி தகவல் அளிக்க விலக்கு அளிக்கப்பட்ட அம்சங்களில் சேர்க்கப்படாத தகவலை அளிக்க மறுப்பது, தகவல் உரிமைச் சட்டம் பிரிவு 20ன் கீழ் தண்டனைக்கு உரியது.

எனவே, மேலேக் கோரப்பட்ட தகவல்களை உரியகாலத்தில் வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இந்த தகவல் கோரலுக்கான கட்டணம் ரூ.10/= (பத்து ரூபாய் மட்டும்) நீதிமன்ற கட்டண வில்லையாக செலுத்தப்பட்டுள்ளது.
நன்றி.


தங்கள் உண்மையுள்ள,
.
(பி. சுந்தரராஜன்)
.
இந்த மனுவிற்கு வரும் பதிலும் மக்கள் சட்டம் வலைப்பூவில் பதிவாக இடம் பெறும்.

மக்கள் சட்டம் வலைப்பூவின் இதுபோன்ற சமூக செயல்பாடுகள் குறித்து உங்கள் கருத்துகளை தெரிவியுங்கள். நீங்களும் தேவைப்படும் இடங்களில் தகவல் உரிமை சட்டத்தை பயன்படுத்தி அதிகாரிகளின் தூக்கத்தை கலையுங்கள்.
-மக்கள் சட்டம் குழு

3 comments:

Anonymous said...

தமிழ் நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் பதிவு செய்து சித்தமருத்துவ துறையில் மிக அண்மையில் முனைவர் பட்டம் பெற்ற மாணவர் ஒருவர், நாட்டின் மிக உயர்ந்த சித்த மருத்துவ நிலையமான தேசிய சித்த மருத்துவ நிலைய(NATIONAL INSTITUTE OF SIDDHA, CHENNAI)த்தில் விரிவுரையாளராக பணியில் சேர்ந்துள்ளார்.

ஆனால் பல ஆண்டுகளுக்கு முன் தமிழ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்கள் யாரும் இதுவரை அரசுப்பணியில் அமர்த்தப் படவில்லை என்பது தமிழ் பல்கலைக் கழகத்திற்கு இழுக்கு. அதை சரி செய்யாமல் "டபாய்ப்பது" தமிழ் பல்கலைக் கழகத்திற்கு அழகல்ல.

இந்த லட்சணத்தில் அஞ்சல் வழியில் சித்த மருத்துவத்தை கற்பிக்க இருப்பதாக கூறுவது அசிங்கம்.

வெங்கட்ராமன் said...

சமூக அக்கறையை சொல்லில் மட்டும் அல்லாமல் செயலிலும் காட்டி உள்ளீர்கள், தொடரட்டும் உங்கள் நல்ல பணி.

Anonymous said...

ஐயா,

நல்லது.

தற்போது சேலத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழகம் அஞ்சல் வழிக்கல்வியில் B Sc (Yoga & Naturopathy) மற்றும் Diploma in Physiotherapy போன்ற கோர்சுகளை நடத்துவதாக கடந்த ஞாயிறு அன்று வெளியான ஹிந்து மற்றும் தினத்தந்தி நாளிதழ்களில் விளம்பரம் வெளியாகி உள்ளது.

ஆக மக்களின் ஆரோக்கியம் என்பது கல்வி நிலையங்களின் கொள்ளை வணிகப்போக்கிற்கு தீனி போடும் அம்சமாகி விட்டது.

சேலம் பெரியார் பல்கலைக்கழகம் நடத்தும் கோர்சுகள் உரிய அமைப்புகளிடம் அங்கீகாரம் வாங்கி நடத்துகிறார்களா என்பதையும் விசாரியுங்கள்.

நன்றி.

Dr. பரமேஸ்வரன்

Post a Comment

உங்கள் கருத்துகளே எங்களை மேலும் செயல்படத் தூண்டும்.

ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.

அனானி மற்றும் ஆங்கில மறுமொழிகள் நீக்கப்படலாம்!