Thursday, October 11, 2007

பாலைவனமாகும் தேரிக்காடும் கலைஞர் மறந்த திருக்குறளும்

30,000 பேருக்கு வேலை வழங்கும் நிலத்தை எடுத்துக் கொண்டு 2,000 பேருக்கு வேலை தரும் டாடாவின் பெருந்தன்மையைத் தேரிக்காட்டு மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் இந்தப் பெருந்தன்மையால் எரிச்சலடைந்துள்ளனர். அவர்களின் கோபத்தில் நியாயம் இருக்கிறது. இந்தச் சிவந்த மண் பூமியை நம்பித்தான் இங்கே உள்ள முழு மக்கள்தொகையும் வாழ்ந்துவருகிறது.

டாடா நிறுவனத்தினர் 15,000 ஏக்கர் நிலத்தை வாங்கப்போகிறார்கள். அவர்கள் வாங்கப்போகும் நிலத்தில் வீடுகள், சாலைகள், கல்லறைகள், மாதா கோவில்கள், மசூதிகள், கோவில்கள், பள்ளிகள், விவசாய நிலம் என்று அனைத்தும் அடக்கம். டாடா நிறுவனத்தினர் இந்த நிலத்தின் மேலிருக்கும் அனைத்தையும் அகற்றிவிட்டுத் தோண்டி எடுக்கப்போகிறார்கள். 30 ஆண்டுகள் கழித்து என்ன மிச்சமிருக்கும்?


இந்தப் பூமி வளமான விவசாய பூமி. முருங்கை, கொய்யா, மா, முந்திரி போன்ற பணப்பயிர்கள் செழித்து வளர்ந்துள்ள பூமி. நிலமற்ற மக்கள் விவசாய வேலைகளில் கிடைக்கும் கூலியில்தான் வாழ்கிறார்கள்.

அதுமட்டுமல்ல, வானுயர வளர்ந்துள்ள பனை மரக்காடுகள் செழித்துள்ள பூமி. பனை மரத்தைக் கர்ப்பக விருட்சம் என்றும் சொல்வார்கள். அதன் அனைத்து பாகங்களும் மனிதர்களுக்கு வாழ்வளிக்கும். இந்த மரங்களை நம்பி இங்கே நாடார் சமூகம் வாழ்ந்துவருகிறது. அவர்கள் மிக மோசமான வாழ்க்கை நடத்துகின்றனர். மரம் ஏறுதல், பதநீர் இறக்குதல், கருப்பட்டி, பனை ஓலை-மட்டைகளைப் பதப்படுத்துதல், கூடை அல்லது பாய் முடைதல் என்று இவர்களின் குடும்பமும் வாழ்க்கையும் பனையைச் சுற்றியே இருக்கிறது. டாடாவின் சுரங்கத் தொழிலில் இவர்களில் எத்தனை பேருக்கு வேலை கிடைக்கும்? அதற்கான சிறப்புத் தகுதிகள் என்ன இருக்கிறது இவர்களிடம்? இவர்கள் வாழ்க்கை என்னவாகும்?


தேரிக்காடு: நீர்வனமா? பாலைவனமா?

கருணாநிதி தேரிக்காடுகளைப் பாலைவனம், பயனற்ற பொட்டல் காடு என்கிறார். எப்படியாவது டாடாவின் டைட்டானியம் டை ஆக்சைடு தொழிலகத்தை நிறுவிவிட வேண்டும் என்ற அவசரத்தில் அவர் பேசுகிறார். ஆனால், தேரிகள் அதாவது மணற்குன்றுகள் மழை நீரைத் தேக்கிவைக்கும் இயற்கை அணைகள். பெய்யும் மழையைச் சேகரித்து அவை ஆண்டு முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றுகின்றன. தேரிகள் இல்லை என்றால் நீரில்லை. நீரின்றி அமையாது உலகு என்ற வள்ளுவர் கூற்றைத் தமிழறிஞர் கலைஞர் மறந்திருக்க வாய்ப்பில்லை. மழை மறைவுப் பிரதேசத்தில் அமைந்திருக்கும் தேரிகளின் முக்கியத்துவத்தை உணர்ந்திருக்கும் தமிழக அரசு பல கோடிகள் செலவழித்து முந்திரிக்காடுகளை வளர்த்துக் காற்றால் ஏற்படும் மண் அரிப்பைத் தடுத்துத் தேரிகளைக் காப்பாற்றும் வேலையைச் செய்து வந்திருக்கிறது. தஞ்சபுரம் கிணறு 40 அடியில் நல்ல நீரைக் கொண்டுள்ளது. குட்டம் என்னும் கிராமத்தின் 1,500 குடும்பங்களுக்குத் தேவையான நீரை ஆண்டு முழுவதும் தந்துகொண்டிருக்கிறது.


டாடாவால் கொள்முதல் செய்யப்படும் நிலங்களில் 50 அடிகள்வரை ஆழங்கொண்ட மணற்குன்றுகள் இருக்கின்றன என்று உள்ளூர்வாசிகள் சொல்கிறார்கள். ஆற்று மணலையே அடியாழம்வரை தோண்டிப் பாறாங்கற்களைக் கண்டுபிடிக்கும் மணற்கொள்ளையரைத் தமிழகம் பார்த்திருக்கிறது. டாடா 50 அடிவரை தோண்டினார் என்றால் தேரிக்காடு, நீர்வனம் என்ற இன்றைய நிலையிலிருந்து உண்மையிலேயே பாலை வனம் ஆகிவிடும்.

டாடாவின் திட்டந்தான் என்ன?

டைட்டானியம் அடங்கிய இல்லுமினேட் என்னும் தாதுப்பொருளை ஆண்டுக்கு 5,00,000 டன் தோண்டி எடுத்து, 1,00,000 டன் டைட்டானியம் டை ஆக்சைடு தயார் செய்வதுதான் டாடாவின் திட்டம். 2,500 கோடி ரூபாய் மூலதனத்தில் தொடங்கப்படும் இத் திட்டம் 15,000 ஏக்கர் பரப்பைத் தோண்டும். இது ஏறக்குறைய 60 ச.கி.மீ பரப்பாகும். மதுரை நகரின் பரப்பைவிடப் பெரியதாகும்.

இந்த மாபெரும் திட்டத்தின் விவரம் எதனையும் தமிழக அரசு இதுவரை தரவில்லை. டாடாவும் வழக்கம்போல அது பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. இந்தத் திட்டத்தின் சுற்றுச்சூழல் தாக்கம் என்ன என்பது பற்றியோ உற்பத்தி நடக்கும் முறை பற்றியோ எந்த முறையான தகவலும் கிடைக்கவில்லை. என்ன நடக்கும் என்பதைத் தெரிந்துகொள்ளும் உரிமை மக்களுக்கு உண்டு என்பதை யாரும் கண்டுகொள்ளவில்லை.


டைட்டானியம் என்றால் என்ன?
டைட்டானியம் வலுமிக்க உலோகம் ஆகும். ஆனால், அதன் எடை மிகவும் குறைவு. டைட்டானியம் அடங்கிய மூலப்பொருள்கள் புவிப்பரப்பில் பெருமளவு இருக்கின்றன. ஆனால், வணிக ரீதியாக எடுக்கப்படக்கூடிய மூலப்பொருள்கள் ருட்டைல் (Rutile) என்னும் வடிவிலும் இல்லுமினேட் (Ilmenite) என்னும் வடிவிலும் கிடைக்கின்றன. ருட்டைல் வடிவத்தில் கிடைக்கும் டைட்டானிம் டை ஆக்சைடு மிகவும் சுத்தமானது. ஆனால், அது அரிதாகத்தான் கிடைக்கிறது.

டைட்டானியத்திற்கும் அதன் டை ஆக்சைடுக்கும் பெரிய அளவான சந்தை காத்திருக்கிறது. அதன் வலு மற்றும் குறைவான எடை, அதுமட்டுமல்லாமல் அரிப்பை எதிர்க்கும் தன்மையின் காரணமாக இராணுவ ஆயுதத் தொழிலிலும் விண்வெளித் தொழிலிலும் வானூர்தித் தொழிலிலும் தொழிலகக் கட்டுமானங்களிலும் அது பெருமளவு பயனாகிறது. டைட்டானியம் டை ஆக்சைடு மின்னலடிக்கும் வெண்மை நிறம்கொண்டது. இதனால் வண்ணங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இதனைப் பெருமளவு பயன்படுத்துகின்றன. இது விஷத்தன்மை அற்றதுங்கூட. அதனால், மாவு, தூய வெண்மையான உயர்தரச் சர்க்கரை, இனிப்புகள், பற்பசை, அழகு சாதனப் பொருள்கள் போன்றவற்றில் வெண்மை வண்ணம் ஊட்டுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது.


சொல்லப்படாத செய்திகள்
டாடா எந்த உற்பத்தி முறையைப் பயன்படுத்தப்போகிறார் என்பது தெரியவில்லை. ஆனால், உலகெங்கும் உள்ள டைட்டானியம் உற்பத்திமுறைகளைப் பார்க்கும்போது, டாடா என்ன செய்வார் என்று ஊகிக்கமுடிகிறது. கிடைக்கும் தகவல்களை வைத்துப் பார்க்கும்போது, இல்லுமினேட்டில் இருந்து டைட்டானியம் டை ஆக்சைடு தயார்செய்து அதனை உள்ளூர் மற்றும் அயல்நாட்டுச் சந்தைக்கு டாடா அனுப்பப்போகிறார் எனத் தெரிகிறது.


இல்லுமினேட் அடங்கிய கடற்கரை மணலை அள்ளியெடுத்து வேதியியல் முறையின் மூலம் மிக உயர்ந்த சுத்தமுள்ள டைட்டானியம் டை ஆக்சைடைப் பிரித்தெடுப்பதுதான் டாடாவின் திட்டம். இதன் சுற்றுச்சூழல் தாக்கத்தை மதிப்பிட வேண்டுமென்றால் தோண்டியெடுக்கும் முறை பற்றியும் உள்ளூர் உயிர்ச் சூழல் மற்றும் புவியியல் தன்மைகளையும் ஆழமாகப் படிக்க வேண்டும். ஆனால், இந்த இரண்டைப் பற்றியும் போதுமான தகவல்கள் இல்லை. இருந்தபோதும் டைட்டானியம் டை ஆக்சைடு தொழில் பொதுவாக எவ்வாறு நிகழ்த்தப்படுகிறது என்ற விவரங்களை வைத்துக்கொண்டு இந்தக் கட்டுரை எழுதப்படுகிறது.

தோரியம் என்ற பூதம் என்னவாகும்?

இந்தத் தாதுப்பொருளை எடுக்கும்போது தோரியம் போன்ற கதிரியக்கத் தனிமமும் கிடைக்கும். அணுசக்தி தொடர்பான துறைகளில் தனியார் நுழைவது பற்றிய அதிருப்திக் குரல்கள் ஆங்காங்கே கேட்கத் தொடங்கியுள்ளன. டாடாவின் வரலாற்றையும் அணுசக்தித் துறையில் அவர்கள் காட்டும் ஆர்வத்தையும் கவனிக்கும் எவரும் கவலைகொள்வார்கள். தோரியம் போன்ற அணுசக்தி மற்றும் ஆயுத முக்கியத்துவம் உள்ள தாதுப் பொருள்கள் கிடைக்கும் நிலத்தைத் தனியாருக்குத் தாரை வார்ப்பது நீண்டகால நோக்கில் கவலைக்குரியதாகும்.


சுரங்கமும் அதன் தாக்கமும்: குறையுள்ள குழந்தை, துரத்தும் புற்றுநோய்

கேரளா மற்றும் தமிழகக் கடற்கரையில் இல்லுமினேட், ருட்டைல், ஜிர்கான் என்று மூன்று தாதுப்பொருள்கள் பொதுவாகக் கிடைக்கின்றன. பல தொழில் நிறுவனங்கள் கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் கடற்கரை மணலை அள்ளியெடுத்துத் தொழில்செய்து வருகின்றன. தோரியம் உள்ளிட்ட கதிரியக்கத் தனிமங்களைப் பிரித்தெடுக்கும் தொழில் கொல்லம் மாவட்டத்தில் பரவலான ஆரோக்கியக் குறைவை ஏற்படுத்தியுள்ளது. குறையுள்ள குழந்தைகள் பிறப்பது, கூடுதல் புற்றுநோய்த் தாக்குதல் முதலியவற்றுக்கான அபாயங்கள் பரவலாக இருக்கின்றன.

டைட்டானியம், டைட்டானியம் ஆக்சைடு என்ற அதன் ஆக்சைடு வடிவத்தில் இரும்பு மற்றும் யுரேனியம், தோரியம் போன்ற கதிரியக்கத் தனிமங்களுடன் கிடைக்கிறது. இயற்கையான அமைப்பை நாம் தொந்தரவு செய்யாத வரையில் கதிரியக்கத் தனிமங்களின் நிலைத்தன்மை பாதிக்கப்படாதவரையில் அவை அபாயகரமான கதிரியக்கத்தை வெளிப்படுத்துவதில்லை. தோண்டி எடுத்து அவற்றைப் பிரித்தெடுத்துச் சுத்தம்செய்யும்போது, அவை கதிரியக்கத்தை வெளிப்படுத்துகின்றன. அதன் காரணமாகத் தொழிலாளர்களும் அருகாமை மக்களும் புற்று நோய் மற்றும் குறையுள்ள குழந்தைப் பிறப்புகளுக்கு ஆளாகிறார்கள்.


நிர்வாணமாகும் பூமி

டைட்டானியம் வழக்கமாக 'நிர்வாணச் சுரங்க முறை'யில் எடுக்கப்படுகிறது. அதாவது புவிப் பரப்பின்மீதுள்ள அனைத்துத் தாவரங்களும் அழித்தொழிக்கப்பட்டு, பூமியை நிர்வாணமாக்கி, தாதுக்களைத் தோண்டியெடுக்கிறார்கள். மேல் மண்ணை அகற்றி வைத்துவிடுவார்கள். தாதுப்பொருள் அடங்கிய கீழ் மண் எவ்வளவு ஆழம்வரை கிடைக்கிறதோ அதனை எடுத்து முதல் கட்டச் சுத்திகரிப்புக்கு அனுப்புவார்கள். தூத்துக்குடியில் வெளி வரும் செய்தித்தாள்கள் 6 மீட்டர் முதல் 20 மீட்டர்வரை தோண்டப்படும் எனச் செய்தி வெளியிட்டுள்ளன. நமது அரசியல்வாதிகள் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகளின் பணப்பசியையும் டாடாவின் பணபலத்தையும் பார்க்கும் எவரும் ஆழம் பற்றிய எந்தக் கணக்கும் செல்லுபடியாகாது என்பதைப் புரிந்துகொள்வார்கள். பணம் பாதாளம் வரைக்கும் பாயும் என்பது உண்மையாகும்.

நிர்வாணச் சுரங்கம் உள்ளூர்ச் சுற்றுச்சூழல்மீது நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆழமாகத் தோண்டுவது நிலத்தடி நீர்வளத்தைப் பாதிக்காது என்றாலும், நிலத்தடியை ஒட்டிய ஆழக்குறைவான நீர்வளமும் ஓடைகளும் வடிகால்களும் குளங்களும் மறைந்துபோக நீர்வளம் குறைய ஆரம்பிக்கும்.

நிலத்தடியில் 50 மீட்டரில் கடும்பாறைகள் இருக்கின்றன என்று உள்ளூர் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். கடற்பஞ்சு போல நீரை உறிஞ்சி வைத்துக்கொள்ளும் மணலை அகற்றுவது அப்பகுதியின் நீர்ச்சமநிலையைப் பாதிக்கும். இந்தப் பகுதியின் நிலத்தடி நீர்வளம் தேரிகளையே நம்பியுள்ளது.


நிலத்தின் மீதுள்ள தாவரங்கள் அகற்றப்படும்போது, வெப்பம் நேரடியாகப் பூமியைத் தாக்கும். அருகாமைக் கடலிலிருந்து வரும் குளிர்ந்த காற்று வெப்பமடையும். இதன் காரணமாக உள்ளூர் மழையின் அளவும் தன்மையும் முறையும் மாற்றமடையும். அனைத்தையும்விட மிக முக்கியமானது, கடல் அருகாமையில் இருப்பதால் நிலத்தடியில் கடல் நீர் புகுவதே. இதனால் குடிப்பதற்கும் வாழ்வதற்குமான நீர் அரிய பொருளாகிவிடும். நிர் வாணச் சுரங்கத்தால் எழும் தூசு அருகாமைத் தாவரங்களில் படிந்து ஒளிச்சேர்க்கையைத் தடுத்து, இருக்கும் பசுமையையும் சாகடிக்கும்.



தாதுக்களைச் சுத்தம் செய்தல்
தாதுப்பொருள்களுயும் தேவையற்ற மணலும் புவியீர்ப்பு விசையைப் பயன்படுத்திப் பிரிக்கப்படுகிறது. பெருமளவு நீருள்ள தொட்டியில் தோண்டியெடுக்கப்பட்ட மணல் கொட்டிக் கலக்கப்படும்போது, கனமான தனிமங்களான ஜிர்கான், இல்லுமினேட், மோனோ சைட், ரூட்டைல் போன்றவை கீழே தங்கிவிட லேசான மணல் மேல்பகுதியில் மிதக்கிறது. அந்தத் தேவையற்ற மணல் வெளியேற்றப்படுகிறது.


டைட்டானியம் டை ஆக்சைடு உற்பத்தி
வணிகத் தேவைக்கான டைட்டானியம் டை ஆக்சைடு உற்பத்தி இரண்டு வழிகளில் நடைபெறக்கூடும். ஒன்று சல்பேட் முறை, மற்றது குளோரைடு முறை. இந்த இரண்டு முறைகளுமே கடும் மாசுபாட்டை ஏற்படுத்தக்கூடியவை. விவசாயத்தையும் மீன் வளத்தையும் அழிக்கக் கூடியவை. இந்த முறைகளில் மிக அபாய கரமானது சல்பேட் முறையாகும். இந்த இரண்டு முறைகளில் குளோரைடு முறையையே டாடாக்கள் பயன்படுத்துவார்கள் என்று தெரிகிறது.

இந்த முறையில் குளோரைடு மற்றும் ஆக்சிஜன் நிரப்பி இல்லுமினேட் எரிக்கப்பட்டு டைட்டானியம் டெட்ரா குளோரைடு என்ற வாயு பெறப்படும். இதனை வடித்தெடுத்து ஆக்சிஜனோடு இணைத்து எரிக்கும்போது, டைட்டானியம் டை ஆக்சைடு கிடைக்கும். அதோடு சேர்ந்து குளோரின் வாயுவும் உற்பத்தியாகும். உற்பத்தியில் மீண்டும் மீண்டும் குளோரின் பயன்படுத்தப்படும் என்றாலும் வாயுக் கசிவு ஏற்படுவது தவிர்க்க முடியாதது. நிலம், நீர், காற்றில் குளோரின் கலப்பது தவிர்க்க முடியாதது.



இந்த உற்பத்தி முறையில் வெளியேறும் மற்ற முக்கியப் பொருள்கள்: ஹைட்ரஜன் குளோரைடு, ஹைட்ரோ குளோரிக் அமிலம், குளோரின் வாயு, அமிலத் தன்மையுள்ள சகதி, சல்பர் டை ஆக்சைடு, கார்பன் டை ஆக்சைடு, கன உலோகங்கள் நிறைந்த திடக்கழிவுகள், அமிலத் தன்மையுள்ள திரவக் கழிவுகள் மற்றும் காற்றில் மிதக்கும் திடப்பொருள் துகள்கள். டைட்டானியம் டை ஆக்சைடு உற்பத்தியில் வெளியாகும் கழிவுகளில் அலுமினியம், ஆண்டிமணி, ஈயம், மோலிப்டனும் போன்றவை மிகக்குறைந்த அளவில் இருக்கும். இந்த உலோகங்கள் காற்றில் மிதக்கும் தூசுக்களிலும் இருக்கும். இந்த மிகக்குறைந்த அளவே போதுமான அபாயத்தை விளைவிக்கும். இவை நுரையீரலில் மிகக்குறைந்த அளவு நுழைந்தால்கூட, நீண்ட காலப்போக்கில், சரிசெய்ய முடியாத இழப்புகளை ஏற்படுத்தக்கூடியவை.

சல்பர் டை ஆக்சைடு உள்ளூர் அளவில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும். அது அந்தப் பகுதியில் அமில மழையை ஏற்படுத்தும். வெளியேறும் திடக்கழிவுகள் நிலத்தையும் நீரையும் கடலையும் நஞ்சாக்கும்.


இந்த முறையில் இரும்பு குளோரைடும் உற்பத்தியாகும். இதனை முறையாகப் பாதுகாத்து வைக்கவில்லை என்றால், அது சுற்றுச்சூழலில் கலந்துவிடும். கேரளாவில் சவரா என்னும் ஊரில் கேரளா மினரல் & மெட்டல் என்னும் நிறுவனம் டைட்டானியம் ஆலையை நடத்தி வருகிறது. அந்த ஆலையிலிருந்து வெளியேறிய கழிவுகள் நிலத்தடி நீரை மாசுபடுத்திவிட்டன என்று உச்ச நீதி மன்றக் கண்காணிப்புக் குழு 2004இல் குற்றஞ்சாட்டியது. தற்போது அந்த ஆலையைச் சுற்றியுள்ள ஊர்களிலுள்ள மக்கள் ஆலை கொண்டுவந்து அளிக்கும் நீரை நம்பியே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.


குளோரைடு முறையில் டைட்டானியம் டை ஆக்சைடு உற்பத்தி செய்யப்படும்போது, 76 கிலோ சல்பர் டை ஆக்சைடும் 1 டன் திடக் கழிவுகளும் 2.7 கிலோ திரவக் கழிவுகளும் உற்பத்தியாகும்.

மிகுந்த கவனத்திற்குரியது குளோரைடு முறையின் மூலம் டைஆக்சினும் (dioxins) ஃபுரானும் (furans) உற்பத்தியாகும் என்பதே. குளோரைடு முறை இந்த விஷ வாயுக்களையும் உற்பத்தி செய்யும் என்று ஐக்கிய நாட்டுச் சபையின் சுற்றுச்சூழல் திட்டம் கூறுகிறது. அறிவியலுக்குத் தெரிய வந்த மிகக்கொடூரமான நச்சுத் தன்மைகொண்ட 100 வேதிப்பொருள்களின் பட்டியலில் இந்த இரண்டு பொருள்களும் இடம்பிடித்துள்ளன. இவை புற்றுநோயை உண்டாக்குவதோடு குறைபாடுகளுள்ள குழந்தைகள் பிறப்பதற்கும் காரணமாகின்றன. மிகக் குறைந்த அளவு டைஆக்சின் உடலில் நுழைந்தால்கூட அது உடலின் நோய் எதிர்ப்புத் தன்மையை ஒழித்துக்கட்டிவிடுகிறது. இதன் காரணமாக இப் பொருளை வேதியல் எய்ட்ஸ் என்று கூறுகின்றனர். வைரசுக்குப் பதிலாக டைஆக்சினும் ஃபுரானும் உடலின் நோய் எதிர்ப்புச்சக்தியை ஒழித்து மனிதர்களை மரணத்தின் பிடிக்குள் தள்ளுகின்றன.


டைட்டானிய உற்பத்தியின் ஆபத்தும் எதிர்ப்புப் போராட்டங்களும்

வழக்கமான ஆலை மாசுபாடுகளுக்கு அப்பால் அபாயகரமான கழிவுகளின் தாக்குதலுக்கும் மக்கள் ஆட்பட வேண்டியிருக்கும். டைட்டானியம் டெட்ரா குளோரைடு ஒரு பிரச்சினைக்குரிய வாயுவாகும். அது நீருடன் கடுமையான வினையாற்றி ஹைட்ரஜன் குளோரைடு வாயுவை உருவாக்கும். ஹைட்ரஜன் குளோரைடு தரையைத் தழுவியபடியே பயணித்துப் பெரிய பகுதிக்குப் பரவும். அது பரவும் இடம் முழுவதும் மரணம் பரவும். எத்தனை சிறப்பாகப் பராமரிக்கப்படும் ஆலையிலும் விபத்து ஏற்படுவது இயற்கை என்பதால் இதுபோன்ற விபத்துகள் ஏற்படாது என்று 100 சதம் உத்திரவாதம் தர முடியாது.

2006 ஆகஸ்ட்டில் சீனாவின் ஜிங்சூ மாகாணத்தில் டைட்டானியம் ஆலை நானி ஆற்றில் 3000 டன் சுத்தி கரிக்கப்படாத கழிவை வெளியேற்றிய குற்றத்திற்காக மூடப்பட்டது. அந்தக் கழிவு ஆற்றைக் கொன்று போட்டது. ஆற்றங்கரையில் உள்ள ஊர்மக்கள் அனை வரும் பாதிக்கப்பட்டனர்.

1999இல் இங்கிலாந்தின் டைட்டானிய உற்பத்தி ஆலை ஒன்றில் விபத்து ஏற்பட்டது. குழாய் உடைந்ததால் 8 ஆயிரம் டன் திரவக் கழிவு வெளியேறியது. அதில் 37 டன் அடர்த்தியான ஹைடிரோ குளோரிக் அமிலமும் அடக்கம். விளைவாக 17 ஏக்கர் நிலம் பயனற்றுப்போனது.

அமெரிக்காவின் தெற்கு ஜார்ஜியாவில் பழங்குடியினர் பகுதியில் டூபாண்ட் நிறுவனம் டைட்டானியம் தோண்டியெடுக்க 1999இல் முயற்சி செய்தது. ஆனால், பழங்குடி மக்களின் போராட்டத்தின் காரணமாக விரட்டியடிக்கப்பட்டது.

நிலத்தடி நீர் கெட்டுப்போனது மற்றும் குறைந்துபோனது என்று காரணம் காட்டி மத்திய வியட்னாமின் கிராம மக்கள் 2006இல் டைட்டானியம் தோண்டியெடுப்பதை வலுக்கட்டாயமாகத் தடுத்து நிறுத்தினர்.

கென்யாவின் கடற்கரைப் பகுதியான க்வாலேவில் பழங்குடியினர் டைட்டானிய உற்பத்தியின் பாகசுரக் கம்பெனியான டியோமினுடன் (Tiomin) விடாப்பிடியான யுத்தம் நடத்திவருகின்றனர். தங்களது மூதாதையர் நிலத்தைத் தோண்டவிடமாட்டோம் என்று அவர்கள் போராடுகின்றனர்.

எது பெரியது?

எந்த முறையைப் பயன்படுத்துகிறார்கள் என்பது முக்கியமல்ல. ஏனென்றால் அனைத்து முறைகளும் ஆபத்தானவை. அவை சுற்றுச்சூழலையும் மனிதர்களின் நல்வாழ்வையும் பாதிக்கும்.

அரசியல் கட்சிகள் அனைத்தும் இந்த டைட்டானியத் தொழிற்சாலை பற்றிய முக்கிய விவரங்களைப் பார்க்கத் தவறுகின்றன. நிலத்தை யார் வாங்குகிறார்கள் அரசா? டாடாவா? என்பதோ, தொழிலை யார் நடத்துகிறார்கள் அரசா? டாடாவா? என்பதோ முக்கியமல்ல. யார் தோண்டினாலும் டைட்டானியம் 30 ஆண்டுகளில் தீர்ந்துபோகும். டாடா உலகப் பணக்காரர்களில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்துவிடுவார். அதே சமயம் அந்தப் பகுதியின் நீரும் தீர்ந்துபோயிருக்கும்.

எது பெரியது? எது முக்கியம்?

டைட்டானியமா? நீரா?

எவர் முக்கியமானவர்?

டாடாவா? மக்களா?



டைட்டானியம் இன்றி வாழ்ந்திருக்கிறோம். ஆனால், நீரின்றி அமையாது உலகு.



-நித்தியானந்த் ஜெயராமன்




(கட்டுரை ஆசிரியர் தொழில்நிறுவனங்கள் இழைக்கும் குற்றங்கள் பற்றியும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் பற்றியும் கவனம் செலுத்தும் எழுத்தாளர். சுதந்திரமான பத்திரிகையாளராகப் பணியாற்றுகிறார். அவர் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரை இது. [தமிழில்: ப்ரேமா ரேவதி])


நன்றி:

அக்டோபர் 2007

2 comments:

அகராதி said...

ஆழ்ந்து யோசிக்க வேண்டிய பல கேள்விகளை எழுப்பும் பதிவு. மக்கள் நலனுக்காக மேற்கொள்ளப் படுபடுவதாக கூறப்படும் இத்தகைய திட்டங்கள் குறித்து எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதில் கிடைப்பதில்லை.

இத்தகைய கேள்விகளை எழுப்புபவர்கள் அரசுக்கும், மக்களுக்கும், வளர்ச்சிக்கும் எதிரானவர்களாக கருதப்படுகின்றனர். இந்த நிலை மாற வேண்டும். வளர்ச்சி என்பது யாருக்கு என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

மிகவும் நல்ல பதிவு. மிகவும் நல்ல பணி. தொடர்ந்து செய்யுங்கள்.

Anonymous said...

An wonderful and thoght provoking article.

Environment perspective is the least considered item in planning these kind of projects.

The economics behind these projects screened the eyes of politicians and authorities.

The enlightenment among the public only can save the planet from the (unethical/no-ethical) politicians and authorities.

Keep on posting such kind of articles. As I couldn't right Tamil, I have post my complaint in English. Excuse me. Thanks for the article.

Post a Comment

உங்கள் கருத்துகளே எங்களை மேலும் செயல்படத் தூண்டும்.

ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.

அனானி மற்றும் ஆங்கில மறுமொழிகள் நீக்கப்படலாம்!