Thursday, October 18, 2007

நீதித்துறையின் விடுமுறைக்கால கொண்டாட்டம்...! சாமானிய மக்களுக்கோ திண்டாட்டம்...!

அக்டோபர் 15 முதல் 19ம் தேதி வரை சென்னை உயர்நீதிமன்றத்திற்கும் மற்ற உரிமையியல் நீதிமன்றங்களுக்கும் தசரா பண்டிகைக்கால விடுமுறை. தசரா பண்டிகைக்கும் நீதித்துறையினருக்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா? விடுமுறைகள் அறிவிப்பதில் இந்திய நீதிமன்றங்கள் கல்வி நிலையங்களுடன் போட்டியிடுகின்றன என்று துணிந்து கூறலாம்.

தாமதித்து வழங்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதிக்கு சமம் என்ற வசனம் திரைப்படங்களிலும், மேடை நாடகங்களிலும் பலமுறை உச்சரிக்கப்பட்டாலும் உரியவர்களின் காதுகளில் அந்த வசனம் சரிவர விழுவதில்லை.


இந்தியாவின் உச்ச நீதிமன்றம் உட்பட நாட்டின் அனைத்து நீதிமன்றங்களிலும் பல நீதிபதி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன என்பதும், அந்த நீதிமன்றங்களில் கோடிக்கணக்கான வழக்குகள் விசாரணைக்காக காத்திருப்பதும் அனைவரும் அறிந்த செய்தியே.

இந்த நிலையில் நாட்டின் முக்கிய நீதிமன்றங்களின் செயல்பாடு மிகுந்த அச்சத்தை அளிப்பதாகவே உள்ளது. உதாரணமாக, 2007ம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்திற்கு கோடை விடுமுறை 49 நாட்கள்; தசரா பண்டிகை விடுமுறை 8 நாட்கள்; தீபாவளி பண்டிகை விடுமுறை 8 நாட்கள்; கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறை 16 நாட்கள்; இதோடு வார விடுமுறைகளயும் சேர்த்தால் சுமார் 137 நாட்கள் விடுமுறை. அதாவது சுமார் நான்கரை மாதங்கள் இந்தியாவின் உச்சநீதி மன்றம் இழுத்து மூடப்படுகிறது.

தமிழ்நாட்டின் உயர்நீதிமன்றத்திற்கு கோடை விடுமுறை 37 நாட்கள். தீபாவளி பண்டிகை விடுமுறை 9 நாட்கள். கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறை 11 நாட்கள். இதோடு வார விடுமுறைகளயும் சேர்த்தால் சுமார் 145 நாட்கள் (5மாதங்கள்) விடுமுறை. அதாவது சென்னை உயர்நீதிமன்றம், இந்த ஆண்டின்12 மாதங்களில் சுமார் ஏழு மாதங்களும் 10 நாட்களும் மட்டுமே பணியாற்றுகிறது.

பல்வேறு காரணங்களுக்காக வழக்கறிஞர்கள் மேற்கொள்ளும் நீதிமன்ற புறக்கணிப்புகள் தனிக்கணக்கு.

வாரம் முழுவதும் பணியாற்றும் பணியாளர்களுக்கு வார இறுதி நாளன்று ஓய்வு தேவை என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் மதம் சார்ந்த பண்டிகைகளுக்காக வாரக்கணக்கிலும், கோடை விடுமுறை என்ற பெயரில் மாதக்கணக்கிலும் நீதிமன்றங்களுக்கு விடுமுறை விடும் அரசை மக்கள் நல அரசாகவும் கருத முடியாது.
.
மக்களின் அடிப்படை மனித உரிமைகளை பறிக்கும் அனைத்து அமைப்புகளும் எந்த விடுமுறையுமின்றி, எந்நேரமும் பணியாற்றி வருகையில், மனித உரிமைகளை பாதுகாக்க வேண்டிய நீதித்துறை, நீண்ட விடுமுறைகளை அனுமதிப்பது அப்பட்டமான மனித உரிமை மீறலே!

மதசார்பற்ற அரசின் நீதித்துறை, மதம் சார்ந்த மக்களின் வழிபாட்டு உரிமைகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும். ஆனால் அதற்கு மற்றவர்களின் உரிமைகளை விலையாக கொடுக்கும் நிலை இருக்கக்கூடாது. எனவே பண்டிகைக் கால நீண்ட விடுமுறைகள் குறித்த மறுபரிசீலனை அவசியம்.

கோடை விடுமுறை என்பதே, இந்தியா சுதந்திரம் பெற்றதை அங்கீகரிக்காத போக்காக படுகிறது. ஏனெனில் கோடை விடுமுறை ஆங்கிலேயர் காலத்தில் ஆரம்பித்த நடைமுறை. இந்தியா அடிமை தேசமாக இருந்தபோது, இந்தியர்களுக்கான நீதி என்பது அடிமை-இந்தியர்கள் மீது காட்டப்படும் கருணையாக இருந்தது. குளிர் தேசமான இங்கிலாந்தில் பிறந்து, வளர்ந்த ஆங்கிலேய நீதிபதிகளுக்கு இந்தியாவின் கோடை வெப்பம் ஒத்துவராததால் அவர்கள் சொந்த நாடான இங்கிலாந்து செல்வதற்காக நீதிமன்றங்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. மின்விசிறிகூட இல்லாத அந்த காலத்தில் ஆங்கிலேயர்கள் கோடையில் விடுமுறை அனுபவித்ததை புரிந்து கொள்ள முடிகிறது.
.
ஆனால், இந்தியாவிலேயே பிறந்து, இந்நாட்டின் வெப்பத்திலேயே வளர்ந்து, குளிர்பதனம் (Air Condition) செய்யப்பட்ட நீதிமன்றங்களில் அமர்ந்து நீதிபரிபாலனம் செய்யும் தற்கால நீதியரசர்(!)களுக்கு கோடை விடுமுறை என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. குளிர்பதன வசதி செய்யப்படாத பல விசாரணை மற்றும் கீழ்நிலை நீதிமன்றங்கள் கோடை காலத்திலும் பணியாற்றுகின்றன என்பது குறிப்பிட வேண்டிய முக்கிய செய்தி.

நம் நாட்டில் கற்றுத்தேர்ந்த வழக்கறிஞர்களுக்கோ, நீதியியல் அறிஞர்களுக்கோ பஞ்சமில்லை. ஆனால் அவர்கள் செயல்படுவதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவு. சமூகத்தின் உயர்நிலையில் உள்ள ஆதிக்க சக்திகளே நீதித்துறையையும் ஆக்கிரமித்துள்ளதால், சாமானிய மக்களின் பிரசினைகள், நாட்டின் உச்சத்தில் உள்ள தலைவர்களை சென்றடைவதில்லை.
.
மக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதற்குதான் நீதிமன்றங்கள் இயங்குகின்றன என்பது உண்மையானால் அவை காலை, மாலை என இரு அமர்வுகளாக (ஷிப்ட் முறையில்) கூடுதல் நீதிபதிகள் மற்றும் பணியாளர்களுடன் இயங்கவேண்டும். வழக்குகளை தீர்ப்பதற்கான கால அவகாசம் நிர்ணயிக்கப்பட வேண்டும். வழக்குகளை உரிய காலத்தில் தீர்க்காத நிலையில். அதனால் வழக்கு தொடுக்கும் பொதுமக்கள் அடையும் இழப்புகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். மக்கள் எந்த நாளிலும், எந்த நேரத்திலும் நீதிமன்றத்தை அணுகி, நீதிபெற முடியும் என்ற நிலை வந்தால்தான் நாட்டில் 'சட்டத்தின் ஆட்சி' நடப்பதாக பொருள் கொள்ள முடியும்.

கோடை விடுமுறை உள்ளிட்ட அசாதாரண விடுப்புகளை கோரும் நீதித்துறை அதிகாரிகளுக்கு சம்பளம் இல்லாத விடுப்பு அளிக்கலாம். மூத்த வழக்கறிஞர்கள் பலரும் இது போன்ற நீண்ட விடுமுறைகள் தேவை என்றே கருத்து தெரிவிக்கக்கூடும். மூளை உழைப்பாளிகளான தங்களுக்கு இது போன்ற கட்டாய விடுமுறைகள் மட்டுமே ஓய்வு அளிப்பதாக அவர்கள் கூறக்கூடும்.
.
ஆனால் அடுத்த தலைமுறை வழக்கறிஞர்கள் உருவாவதை விரும்பாத, பேராசை படைத்த மூத்த வழக்கறிஞர்கள் மட்டுமே இத்தகைய வாதத்தை முன்வைப்பார்கள் என்பதை அனைவரும் அறிவர். உண்மையாகவே மக்களுக்கு பாடுபடும் எந்த ஒரு வழக்கறிஞரும் எந்த நேரத்திலும் மக்களுக்கு உதவி செய்ய தயாராகவே இருப்பர் என்பதை கூறத்தேவையில்லை.
-சுந்தரராஜன்
.
பின்குறிப்பு: இந்த பதிவிற்கு மறுமொழி எழுதுவதால் நீதிமன்ற அவதூறு சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க முடியாது. எனவே உங்கள் கருத்துகளை தைரியமாக பதிவு செய்யலாம்.

Tuesday, October 16, 2007

தமிழ்ப் பல்கலைக் கழகம் - சித்த மருத்துவக் கல்வி - தகவல் உரிமை சட்டத்தின்கீழ் மேல் முறையீடு

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில், அஞ்சல் வழியில் சித்தமருத்துவம் கற்றுத்தருவதாக வந்த விளம்பரத்தை அடுத்து நாம் மேற்கொண்ட விசாரணையில், இந்திய மருத்துவத்திற்கான மத்திய குழு உள்ளிட்ட அதிகார அமைப்புகளிடம் இருந்து எந்தவிதமான அனுமதியும் பெறாமல் பணம் பண்ணும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிந்தது. இதையடுத்து இந்த கோர்ஸுக்கு தடைவிதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதற்கிடையில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் சித்த மருத்துவத்துறையில் ஆய்வு முனைவர்(Ph D), ஆய்வு நிறைஞர்(M Phil) ஆகிய ஆய்வுப் படிப்புகளும் வழங்கப்படுவதாக தெரியவந்தது. ஆனால் இந்தப் பட்டங்களை இந்திய மருத்துவத்திற்கான மருத்துவக்குழுவோ, டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகமோ அங்கிகரிக்க வில்லை என்பதும் தெரியவந்தது. எனவே இந்த பட்டங்களின் அந்தஸ்து குறித்து சில தகவல்களை தகவல் உரிமைச்சட்டத்தின் கீழ் கடந்த 05-09-2007 அன்று கேட்டோம்.

இம்மனுவைப் பெற்றுக்கொண்ட தமிழ்ப் பல்கலைக்கழக பதிவாளர் முனைவர். க. பாஸ்கரன் அவர்கள் பதில் அனுப்பி உள்ளார். அதில் தமிழ்ப் பல்கலைக்கழகம் அஞ்சல் வழியில் நடத்தும் சித்த மருத்துவ பட்டய படிப்பை எதிர்த்து நாம் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் நாம் கேட்டுள்ள விவரங்களை தெரிவிக்க முடியவில்லை எனக்கூறியுள்ளார்.

மேலும் மேல்முறையீடு செய்ய விரும்பினால் துணைவேந்தரிடம் மேல் முறையீடு செய்யலாம் என்றும் நல் வாய்ப்பொன்றை வழங்கி உள்ளார். எனவே நாம் மேல்முறையீட்டு மனுவை அனுப்பி உள்ளோம். அதன் நகல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
16-09-2007
சென்னை

அனுப்புனர்,

பி. சுந்தரராஜன்,
வழக்கறிஞர்,
1-P, பாண்டு கிளிக்ஸ் பிளாஸா,
330/168, தம்பு செட்டி தெரு,
சென்னை-600 001.

பெறுனர்,

துணை வேந்தர்,
தமிழ்ப் பல்கலைக்கழகம்,
தஞ்சாவூர் - 613 010.

ஐயா,

பொருள்: தகவல் உரிமைச் சட்டம் பிரிவு 19ன் கீழான மேல் முறையீட்டு மனு

---

கடந்த 05-09-2007 அன்று, தங்கள் பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவத்துறையில் வழங்கப்படும் ஆய்வு முனைவர்(Ph D), ஆய்வு நிறைஞர் (M Phil) ஆகிய பட்டங்கள் குறித்த கீழ்க்கண்ட தகவல்களை வழங்குமாறு பொதுத்தகவல் அதிகாரியான பதிவாளருக்கு மனு அனுப்பினேன்.

அக்கேள்விகள் கீழ் வருமாறு:

1. தங்கள் பல்கலைக்கழகத்தின் சித்தமருத்துவத்துறையில் சித்தமருத்துவம் படித்த முழுநேரப் பேராசிரியர்கள் எத்தனை பேர் பணிபுரிகின்றனர்?
.
2. தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இதுவரை எத்தனை பேர், சித்தமருத்துவ துறையில் ஆய்வு முனைவர்(Ph D) மற்றும் ஆய்வு நிறைஞர்(M Phil) பட்டம் பெற்றுள்ளனர்? இந்தப் பட்டங்களுக்காக தற்போதைய நிலையில் எத்தனை மாணவர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்?
.
3. தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் சித்தமருத்துவத்துறையில் வழங்கப்பட்ட ஆய்வு முனைவர் (Ph D) மற்றும் ஆய்வு நிறைஞர் (M Phil) பட்டங்களை இந்திய மருத்துவத்திற்கான மத்தியக் குழு (CENTRAL COUNCIL FOR INDIAN MEDICINE) அங்கீகரித்துள்ளதா? ஆம் எனில் எந்த அடிப்படையில் அங்கீகரித்துள்ளது? இல்லையெனில் எந்த அடிப்படையில் அங்கீகாரம் மறுக்கப்பட்டது?
.
4. தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு முனைவர் (Ph D) மற்றும் ஆய்வு நிறைஞர் (M Phil) பட்டம் பெற்றவர்களை சித்தமருத்துவ விரிவுரையாளர்களாக –அல்லது- பேராசிரியர்களாக தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் அங்கீகரித்துள்ளதா? ஆம் எனில் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் ஆய்வு முனைவர் (Ph D) மற்றும் ஆய்வு நிறைஞர் (M Phil) பட்டம் பெற்றவர்கள் எத்தனை பேர் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் சித்தமருத்துவ விரிவுரையாளர்களாக –அல்லது- பேராசிரியர்களாக பணி நியமனம் பெற்றுள்ளனர்?
.
5. தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு முனைவர் (Ph D) மற்றும் ஆய்வு நிறைஞர் (M Phil) பட்டம் பெற்றவர்களை சித்தமருத்துவ விரிவுரையாளர்களாக –அல்லது- பேராசிரியர்களாக தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் அங்கீகரிக்கவில்லை எனில் அங்கீகாரம் பெற என்ன முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது?
.
இந்த மனுவைப் பெற்றுக் கொண்ட தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பொதுத்தகவல் அதிகாரியும், பதிவாளருமான முனைவர் க.பாஸ்கரன் பதில் கடிதம் அனுப்பி உள்ளார்.
.
அதில், 2007-08ஆம் கல்வி ஆண்டில் தமிழ்ப் பல்கலைக் கழகத் தொலைநிலைக்கல்வி இயக்கக வழி, சித்த மருத்துவப் பட்டயக் கல்வி பயிற்றுவிப்பதற்கு எதிராகத் தாங்கள் சென்னை, உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையிள்ள நிலையில், கேட்கப் பட்டுள்ள விவரங்களைத் தெரிவிக்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு அஞ்சல் வழியில் வழங்கப்படும் சித்த மருத்துவப் பட்டயக்கல்வி குறித்ததே. அந்த வழக்கில் தங்கள் பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழி அல்லாத முறைகளில் வழங்கப்படும் ஆய்வு முனைவர்(Ph D), ஆய்வு நிறைஞர் (M Phil) ஆகிய பட்டங்கள் குறித்து இதுவரை எந்த கேள்வியும் எழுப்பப்படவில்லை.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2007 அக்டோபர் முதல் தேதி அன்று விசாரணைக்கு வந்தபோது தங்கள் பல்கலைக்கழகம் சார்பில் வழக்கறிஞர்கள் சார்பில் யாரும் ஆஜராகவில்லை. இந்நிலையில் வழக்கில் எந்த தொடர்பும் இல்லாத அம்சம் குறித்த - தகவல் உரிமைச் சட்டம் பிரிவு 8ன் படி தகவல் அளிக்க விலக்கு அளிக்கப்பட்ட அம்சங்களில் சேர்க்கப்படாத தகவலை அளிக்க மறுப்பது, தகவல் உரிமைச் சட்டம் பிரிவு 20ன் கீழ் தண்டனைக்கு உரியது.

எனவே, மேலேக் கோரப்பட்ட தகவல்களை உரியகாலத்தில் வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இந்த தகவல் கோரலுக்கான கட்டணம் ரூ.10/= (பத்து ரூபாய் மட்டும்) நீதிமன்ற கட்டண வில்லையாக செலுத்தப்பட்டுள்ளது.
நன்றி.


தங்கள் உண்மையுள்ள,
.
(பி. சுந்தரராஜன்)
.
இந்த மனுவிற்கு வரும் பதிலும் மக்கள் சட்டம் வலைப்பூவில் பதிவாக இடம் பெறும்.

மக்கள் சட்டம் வலைப்பூவின் இதுபோன்ற சமூக செயல்பாடுகள் குறித்து உங்கள் கருத்துகளை தெரிவியுங்கள். நீங்களும் தேவைப்படும் இடங்களில் தகவல் உரிமை சட்டத்தை பயன்படுத்தி அதிகாரிகளின் தூக்கத்தை கலையுங்கள்.
-மக்கள் சட்டம் குழு

Thursday, October 11, 2007

பாலைவனமாகும் தேரிக்காடும் கலைஞர் மறந்த திருக்குறளும்

30,000 பேருக்கு வேலை வழங்கும் நிலத்தை எடுத்துக் கொண்டு 2,000 பேருக்கு வேலை தரும் டாடாவின் பெருந்தன்மையைத் தேரிக்காட்டு மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் இந்தப் பெருந்தன்மையால் எரிச்சலடைந்துள்ளனர். அவர்களின் கோபத்தில் நியாயம் இருக்கிறது. இந்தச் சிவந்த மண் பூமியை நம்பித்தான் இங்கே உள்ள முழு மக்கள்தொகையும் வாழ்ந்துவருகிறது.

டாடா நிறுவனத்தினர் 15,000 ஏக்கர் நிலத்தை வாங்கப்போகிறார்கள். அவர்கள் வாங்கப்போகும் நிலத்தில் வீடுகள், சாலைகள், கல்லறைகள், மாதா கோவில்கள், மசூதிகள், கோவில்கள், பள்ளிகள், விவசாய நிலம் என்று அனைத்தும் அடக்கம். டாடா நிறுவனத்தினர் இந்த நிலத்தின் மேலிருக்கும் அனைத்தையும் அகற்றிவிட்டுத் தோண்டி எடுக்கப்போகிறார்கள். 30 ஆண்டுகள் கழித்து என்ன மிச்சமிருக்கும்?


இந்தப் பூமி வளமான விவசாய பூமி. முருங்கை, கொய்யா, மா, முந்திரி போன்ற பணப்பயிர்கள் செழித்து வளர்ந்துள்ள பூமி. நிலமற்ற மக்கள் விவசாய வேலைகளில் கிடைக்கும் கூலியில்தான் வாழ்கிறார்கள்.

அதுமட்டுமல்ல, வானுயர வளர்ந்துள்ள பனை மரக்காடுகள் செழித்துள்ள பூமி. பனை மரத்தைக் கர்ப்பக விருட்சம் என்றும் சொல்வார்கள். அதன் அனைத்து பாகங்களும் மனிதர்களுக்கு வாழ்வளிக்கும். இந்த மரங்களை நம்பி இங்கே நாடார் சமூகம் வாழ்ந்துவருகிறது. அவர்கள் மிக மோசமான வாழ்க்கை நடத்துகின்றனர். மரம் ஏறுதல், பதநீர் இறக்குதல், கருப்பட்டி, பனை ஓலை-மட்டைகளைப் பதப்படுத்துதல், கூடை அல்லது பாய் முடைதல் என்று இவர்களின் குடும்பமும் வாழ்க்கையும் பனையைச் சுற்றியே இருக்கிறது. டாடாவின் சுரங்கத் தொழிலில் இவர்களில் எத்தனை பேருக்கு வேலை கிடைக்கும்? அதற்கான சிறப்புத் தகுதிகள் என்ன இருக்கிறது இவர்களிடம்? இவர்கள் வாழ்க்கை என்னவாகும்?


தேரிக்காடு: நீர்வனமா? பாலைவனமா?

கருணாநிதி தேரிக்காடுகளைப் பாலைவனம், பயனற்ற பொட்டல் காடு என்கிறார். எப்படியாவது டாடாவின் டைட்டானியம் டை ஆக்சைடு தொழிலகத்தை நிறுவிவிட வேண்டும் என்ற அவசரத்தில் அவர் பேசுகிறார். ஆனால், தேரிகள் அதாவது மணற்குன்றுகள் மழை நீரைத் தேக்கிவைக்கும் இயற்கை அணைகள். பெய்யும் மழையைச் சேகரித்து அவை ஆண்டு முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றுகின்றன. தேரிகள் இல்லை என்றால் நீரில்லை. நீரின்றி அமையாது உலகு என்ற வள்ளுவர் கூற்றைத் தமிழறிஞர் கலைஞர் மறந்திருக்க வாய்ப்பில்லை. மழை மறைவுப் பிரதேசத்தில் அமைந்திருக்கும் தேரிகளின் முக்கியத்துவத்தை உணர்ந்திருக்கும் தமிழக அரசு பல கோடிகள் செலவழித்து முந்திரிக்காடுகளை வளர்த்துக் காற்றால் ஏற்படும் மண் அரிப்பைத் தடுத்துத் தேரிகளைக் காப்பாற்றும் வேலையைச் செய்து வந்திருக்கிறது. தஞ்சபுரம் கிணறு 40 அடியில் நல்ல நீரைக் கொண்டுள்ளது. குட்டம் என்னும் கிராமத்தின் 1,500 குடும்பங்களுக்குத் தேவையான நீரை ஆண்டு முழுவதும் தந்துகொண்டிருக்கிறது.


டாடாவால் கொள்முதல் செய்யப்படும் நிலங்களில் 50 அடிகள்வரை ஆழங்கொண்ட மணற்குன்றுகள் இருக்கின்றன என்று உள்ளூர்வாசிகள் சொல்கிறார்கள். ஆற்று மணலையே அடியாழம்வரை தோண்டிப் பாறாங்கற்களைக் கண்டுபிடிக்கும் மணற்கொள்ளையரைத் தமிழகம் பார்த்திருக்கிறது. டாடா 50 அடிவரை தோண்டினார் என்றால் தேரிக்காடு, நீர்வனம் என்ற இன்றைய நிலையிலிருந்து உண்மையிலேயே பாலை வனம் ஆகிவிடும்.

டாடாவின் திட்டந்தான் என்ன?

டைட்டானியம் அடங்கிய இல்லுமினேட் என்னும் தாதுப்பொருளை ஆண்டுக்கு 5,00,000 டன் தோண்டி எடுத்து, 1,00,000 டன் டைட்டானியம் டை ஆக்சைடு தயார் செய்வதுதான் டாடாவின் திட்டம். 2,500 கோடி ரூபாய் மூலதனத்தில் தொடங்கப்படும் இத் திட்டம் 15,000 ஏக்கர் பரப்பைத் தோண்டும். இது ஏறக்குறைய 60 ச.கி.மீ பரப்பாகும். மதுரை நகரின் பரப்பைவிடப் பெரியதாகும்.

இந்த மாபெரும் திட்டத்தின் விவரம் எதனையும் தமிழக அரசு இதுவரை தரவில்லை. டாடாவும் வழக்கம்போல அது பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. இந்தத் திட்டத்தின் சுற்றுச்சூழல் தாக்கம் என்ன என்பது பற்றியோ உற்பத்தி நடக்கும் முறை பற்றியோ எந்த முறையான தகவலும் கிடைக்கவில்லை. என்ன நடக்கும் என்பதைத் தெரிந்துகொள்ளும் உரிமை மக்களுக்கு உண்டு என்பதை யாரும் கண்டுகொள்ளவில்லை.


டைட்டானியம் என்றால் என்ன?
டைட்டானியம் வலுமிக்க உலோகம் ஆகும். ஆனால், அதன் எடை மிகவும் குறைவு. டைட்டானியம் அடங்கிய மூலப்பொருள்கள் புவிப்பரப்பில் பெருமளவு இருக்கின்றன. ஆனால், வணிக ரீதியாக எடுக்கப்படக்கூடிய மூலப்பொருள்கள் ருட்டைல் (Rutile) என்னும் வடிவிலும் இல்லுமினேட் (Ilmenite) என்னும் வடிவிலும் கிடைக்கின்றன. ருட்டைல் வடிவத்தில் கிடைக்கும் டைட்டானிம் டை ஆக்சைடு மிகவும் சுத்தமானது. ஆனால், அது அரிதாகத்தான் கிடைக்கிறது.

டைட்டானியத்திற்கும் அதன் டை ஆக்சைடுக்கும் பெரிய அளவான சந்தை காத்திருக்கிறது. அதன் வலு மற்றும் குறைவான எடை, அதுமட்டுமல்லாமல் அரிப்பை எதிர்க்கும் தன்மையின் காரணமாக இராணுவ ஆயுதத் தொழிலிலும் விண்வெளித் தொழிலிலும் வானூர்தித் தொழிலிலும் தொழிலகக் கட்டுமானங்களிலும் அது பெருமளவு பயனாகிறது. டைட்டானியம் டை ஆக்சைடு மின்னலடிக்கும் வெண்மை நிறம்கொண்டது. இதனால் வண்ணங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இதனைப் பெருமளவு பயன்படுத்துகின்றன. இது விஷத்தன்மை அற்றதுங்கூட. அதனால், மாவு, தூய வெண்மையான உயர்தரச் சர்க்கரை, இனிப்புகள், பற்பசை, அழகு சாதனப் பொருள்கள் போன்றவற்றில் வெண்மை வண்ணம் ஊட்டுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது.


சொல்லப்படாத செய்திகள்
டாடா எந்த உற்பத்தி முறையைப் பயன்படுத்தப்போகிறார் என்பது தெரியவில்லை. ஆனால், உலகெங்கும் உள்ள டைட்டானியம் உற்பத்திமுறைகளைப் பார்க்கும்போது, டாடா என்ன செய்வார் என்று ஊகிக்கமுடிகிறது. கிடைக்கும் தகவல்களை வைத்துப் பார்க்கும்போது, இல்லுமினேட்டில் இருந்து டைட்டானியம் டை ஆக்சைடு தயார்செய்து அதனை உள்ளூர் மற்றும் அயல்நாட்டுச் சந்தைக்கு டாடா அனுப்பப்போகிறார் எனத் தெரிகிறது.


இல்லுமினேட் அடங்கிய கடற்கரை மணலை அள்ளியெடுத்து வேதியியல் முறையின் மூலம் மிக உயர்ந்த சுத்தமுள்ள டைட்டானியம் டை ஆக்சைடைப் பிரித்தெடுப்பதுதான் டாடாவின் திட்டம். இதன் சுற்றுச்சூழல் தாக்கத்தை மதிப்பிட வேண்டுமென்றால் தோண்டியெடுக்கும் முறை பற்றியும் உள்ளூர் உயிர்ச் சூழல் மற்றும் புவியியல் தன்மைகளையும் ஆழமாகப் படிக்க வேண்டும். ஆனால், இந்த இரண்டைப் பற்றியும் போதுமான தகவல்கள் இல்லை. இருந்தபோதும் டைட்டானியம் டை ஆக்சைடு தொழில் பொதுவாக எவ்வாறு நிகழ்த்தப்படுகிறது என்ற விவரங்களை வைத்துக்கொண்டு இந்தக் கட்டுரை எழுதப்படுகிறது.

தோரியம் என்ற பூதம் என்னவாகும்?

இந்தத் தாதுப்பொருளை எடுக்கும்போது தோரியம் போன்ற கதிரியக்கத் தனிமமும் கிடைக்கும். அணுசக்தி தொடர்பான துறைகளில் தனியார் நுழைவது பற்றிய அதிருப்திக் குரல்கள் ஆங்காங்கே கேட்கத் தொடங்கியுள்ளன. டாடாவின் வரலாற்றையும் அணுசக்தித் துறையில் அவர்கள் காட்டும் ஆர்வத்தையும் கவனிக்கும் எவரும் கவலைகொள்வார்கள். தோரியம் போன்ற அணுசக்தி மற்றும் ஆயுத முக்கியத்துவம் உள்ள தாதுப் பொருள்கள் கிடைக்கும் நிலத்தைத் தனியாருக்குத் தாரை வார்ப்பது நீண்டகால நோக்கில் கவலைக்குரியதாகும்.


சுரங்கமும் அதன் தாக்கமும்: குறையுள்ள குழந்தை, துரத்தும் புற்றுநோய்

கேரளா மற்றும் தமிழகக் கடற்கரையில் இல்லுமினேட், ருட்டைல், ஜிர்கான் என்று மூன்று தாதுப்பொருள்கள் பொதுவாகக் கிடைக்கின்றன. பல தொழில் நிறுவனங்கள் கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் கடற்கரை மணலை அள்ளியெடுத்துத் தொழில்செய்து வருகின்றன. தோரியம் உள்ளிட்ட கதிரியக்கத் தனிமங்களைப் பிரித்தெடுக்கும் தொழில் கொல்லம் மாவட்டத்தில் பரவலான ஆரோக்கியக் குறைவை ஏற்படுத்தியுள்ளது. குறையுள்ள குழந்தைகள் பிறப்பது, கூடுதல் புற்றுநோய்த் தாக்குதல் முதலியவற்றுக்கான அபாயங்கள் பரவலாக இருக்கின்றன.

டைட்டானியம், டைட்டானியம் ஆக்சைடு என்ற அதன் ஆக்சைடு வடிவத்தில் இரும்பு மற்றும் யுரேனியம், தோரியம் போன்ற கதிரியக்கத் தனிமங்களுடன் கிடைக்கிறது. இயற்கையான அமைப்பை நாம் தொந்தரவு செய்யாத வரையில் கதிரியக்கத் தனிமங்களின் நிலைத்தன்மை பாதிக்கப்படாதவரையில் அவை அபாயகரமான கதிரியக்கத்தை வெளிப்படுத்துவதில்லை. தோண்டி எடுத்து அவற்றைப் பிரித்தெடுத்துச் சுத்தம்செய்யும்போது, அவை கதிரியக்கத்தை வெளிப்படுத்துகின்றன. அதன் காரணமாகத் தொழிலாளர்களும் அருகாமை மக்களும் புற்று நோய் மற்றும் குறையுள்ள குழந்தைப் பிறப்புகளுக்கு ஆளாகிறார்கள்.


நிர்வாணமாகும் பூமி

டைட்டானியம் வழக்கமாக 'நிர்வாணச் சுரங்க முறை'யில் எடுக்கப்படுகிறது. அதாவது புவிப் பரப்பின்மீதுள்ள அனைத்துத் தாவரங்களும் அழித்தொழிக்கப்பட்டு, பூமியை நிர்வாணமாக்கி, தாதுக்களைத் தோண்டியெடுக்கிறார்கள். மேல் மண்ணை அகற்றி வைத்துவிடுவார்கள். தாதுப்பொருள் அடங்கிய கீழ் மண் எவ்வளவு ஆழம்வரை கிடைக்கிறதோ அதனை எடுத்து முதல் கட்டச் சுத்திகரிப்புக்கு அனுப்புவார்கள். தூத்துக்குடியில் வெளி வரும் செய்தித்தாள்கள் 6 மீட்டர் முதல் 20 மீட்டர்வரை தோண்டப்படும் எனச் செய்தி வெளியிட்டுள்ளன. நமது அரசியல்வாதிகள் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகளின் பணப்பசியையும் டாடாவின் பணபலத்தையும் பார்க்கும் எவரும் ஆழம் பற்றிய எந்தக் கணக்கும் செல்லுபடியாகாது என்பதைப் புரிந்துகொள்வார்கள். பணம் பாதாளம் வரைக்கும் பாயும் என்பது உண்மையாகும்.

நிர்வாணச் சுரங்கம் உள்ளூர்ச் சுற்றுச்சூழல்மீது நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆழமாகத் தோண்டுவது நிலத்தடி நீர்வளத்தைப் பாதிக்காது என்றாலும், நிலத்தடியை ஒட்டிய ஆழக்குறைவான நீர்வளமும் ஓடைகளும் வடிகால்களும் குளங்களும் மறைந்துபோக நீர்வளம் குறைய ஆரம்பிக்கும்.

நிலத்தடியில் 50 மீட்டரில் கடும்பாறைகள் இருக்கின்றன என்று உள்ளூர் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். கடற்பஞ்சு போல நீரை உறிஞ்சி வைத்துக்கொள்ளும் மணலை அகற்றுவது அப்பகுதியின் நீர்ச்சமநிலையைப் பாதிக்கும். இந்தப் பகுதியின் நிலத்தடி நீர்வளம் தேரிகளையே நம்பியுள்ளது.


நிலத்தின் மீதுள்ள தாவரங்கள் அகற்றப்படும்போது, வெப்பம் நேரடியாகப் பூமியைத் தாக்கும். அருகாமைக் கடலிலிருந்து வரும் குளிர்ந்த காற்று வெப்பமடையும். இதன் காரணமாக உள்ளூர் மழையின் அளவும் தன்மையும் முறையும் மாற்றமடையும். அனைத்தையும்விட மிக முக்கியமானது, கடல் அருகாமையில் இருப்பதால் நிலத்தடியில் கடல் நீர் புகுவதே. இதனால் குடிப்பதற்கும் வாழ்வதற்குமான நீர் அரிய பொருளாகிவிடும். நிர் வாணச் சுரங்கத்தால் எழும் தூசு அருகாமைத் தாவரங்களில் படிந்து ஒளிச்சேர்க்கையைத் தடுத்து, இருக்கும் பசுமையையும் சாகடிக்கும்.



தாதுக்களைச் சுத்தம் செய்தல்
தாதுப்பொருள்களுயும் தேவையற்ற மணலும் புவியீர்ப்பு விசையைப் பயன்படுத்திப் பிரிக்கப்படுகிறது. பெருமளவு நீருள்ள தொட்டியில் தோண்டியெடுக்கப்பட்ட மணல் கொட்டிக் கலக்கப்படும்போது, கனமான தனிமங்களான ஜிர்கான், இல்லுமினேட், மோனோ சைட், ரூட்டைல் போன்றவை கீழே தங்கிவிட லேசான மணல் மேல்பகுதியில் மிதக்கிறது. அந்தத் தேவையற்ற மணல் வெளியேற்றப்படுகிறது.


டைட்டானியம் டை ஆக்சைடு உற்பத்தி
வணிகத் தேவைக்கான டைட்டானியம் டை ஆக்சைடு உற்பத்தி இரண்டு வழிகளில் நடைபெறக்கூடும். ஒன்று சல்பேட் முறை, மற்றது குளோரைடு முறை. இந்த இரண்டு முறைகளுமே கடும் மாசுபாட்டை ஏற்படுத்தக்கூடியவை. விவசாயத்தையும் மீன் வளத்தையும் அழிக்கக் கூடியவை. இந்த முறைகளில் மிக அபாய கரமானது சல்பேட் முறையாகும். இந்த இரண்டு முறைகளில் குளோரைடு முறையையே டாடாக்கள் பயன்படுத்துவார்கள் என்று தெரிகிறது.

இந்த முறையில் குளோரைடு மற்றும் ஆக்சிஜன் நிரப்பி இல்லுமினேட் எரிக்கப்பட்டு டைட்டானியம் டெட்ரா குளோரைடு என்ற வாயு பெறப்படும். இதனை வடித்தெடுத்து ஆக்சிஜனோடு இணைத்து எரிக்கும்போது, டைட்டானியம் டை ஆக்சைடு கிடைக்கும். அதோடு சேர்ந்து குளோரின் வாயுவும் உற்பத்தியாகும். உற்பத்தியில் மீண்டும் மீண்டும் குளோரின் பயன்படுத்தப்படும் என்றாலும் வாயுக் கசிவு ஏற்படுவது தவிர்க்க முடியாதது. நிலம், நீர், காற்றில் குளோரின் கலப்பது தவிர்க்க முடியாதது.



இந்த உற்பத்தி முறையில் வெளியேறும் மற்ற முக்கியப் பொருள்கள்: ஹைட்ரஜன் குளோரைடு, ஹைட்ரோ குளோரிக் அமிலம், குளோரின் வாயு, அமிலத் தன்மையுள்ள சகதி, சல்பர் டை ஆக்சைடு, கார்பன் டை ஆக்சைடு, கன உலோகங்கள் நிறைந்த திடக்கழிவுகள், அமிலத் தன்மையுள்ள திரவக் கழிவுகள் மற்றும் காற்றில் மிதக்கும் திடப்பொருள் துகள்கள். டைட்டானியம் டை ஆக்சைடு உற்பத்தியில் வெளியாகும் கழிவுகளில் அலுமினியம், ஆண்டிமணி, ஈயம், மோலிப்டனும் போன்றவை மிகக்குறைந்த அளவில் இருக்கும். இந்த உலோகங்கள் காற்றில் மிதக்கும் தூசுக்களிலும் இருக்கும். இந்த மிகக்குறைந்த அளவே போதுமான அபாயத்தை விளைவிக்கும். இவை நுரையீரலில் மிகக்குறைந்த அளவு நுழைந்தால்கூட, நீண்ட காலப்போக்கில், சரிசெய்ய முடியாத இழப்புகளை ஏற்படுத்தக்கூடியவை.

சல்பர் டை ஆக்சைடு உள்ளூர் அளவில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும். அது அந்தப் பகுதியில் அமில மழையை ஏற்படுத்தும். வெளியேறும் திடக்கழிவுகள் நிலத்தையும் நீரையும் கடலையும் நஞ்சாக்கும்.


இந்த முறையில் இரும்பு குளோரைடும் உற்பத்தியாகும். இதனை முறையாகப் பாதுகாத்து வைக்கவில்லை என்றால், அது சுற்றுச்சூழலில் கலந்துவிடும். கேரளாவில் சவரா என்னும் ஊரில் கேரளா மினரல் & மெட்டல் என்னும் நிறுவனம் டைட்டானியம் ஆலையை நடத்தி வருகிறது. அந்த ஆலையிலிருந்து வெளியேறிய கழிவுகள் நிலத்தடி நீரை மாசுபடுத்திவிட்டன என்று உச்ச நீதி மன்றக் கண்காணிப்புக் குழு 2004இல் குற்றஞ்சாட்டியது. தற்போது அந்த ஆலையைச் சுற்றியுள்ள ஊர்களிலுள்ள மக்கள் ஆலை கொண்டுவந்து அளிக்கும் நீரை நம்பியே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.


குளோரைடு முறையில் டைட்டானியம் டை ஆக்சைடு உற்பத்தி செய்யப்படும்போது, 76 கிலோ சல்பர் டை ஆக்சைடும் 1 டன் திடக் கழிவுகளும் 2.7 கிலோ திரவக் கழிவுகளும் உற்பத்தியாகும்.

மிகுந்த கவனத்திற்குரியது குளோரைடு முறையின் மூலம் டைஆக்சினும் (dioxins) ஃபுரானும் (furans) உற்பத்தியாகும் என்பதே. குளோரைடு முறை இந்த விஷ வாயுக்களையும் உற்பத்தி செய்யும் என்று ஐக்கிய நாட்டுச் சபையின் சுற்றுச்சூழல் திட்டம் கூறுகிறது. அறிவியலுக்குத் தெரிய வந்த மிகக்கொடூரமான நச்சுத் தன்மைகொண்ட 100 வேதிப்பொருள்களின் பட்டியலில் இந்த இரண்டு பொருள்களும் இடம்பிடித்துள்ளன. இவை புற்றுநோயை உண்டாக்குவதோடு குறைபாடுகளுள்ள குழந்தைகள் பிறப்பதற்கும் காரணமாகின்றன. மிகக் குறைந்த அளவு டைஆக்சின் உடலில் நுழைந்தால்கூட அது உடலின் நோய் எதிர்ப்புத் தன்மையை ஒழித்துக்கட்டிவிடுகிறது. இதன் காரணமாக இப் பொருளை வேதியல் எய்ட்ஸ் என்று கூறுகின்றனர். வைரசுக்குப் பதிலாக டைஆக்சினும் ஃபுரானும் உடலின் நோய் எதிர்ப்புச்சக்தியை ஒழித்து மனிதர்களை மரணத்தின் பிடிக்குள் தள்ளுகின்றன.


டைட்டானிய உற்பத்தியின் ஆபத்தும் எதிர்ப்புப் போராட்டங்களும்

வழக்கமான ஆலை மாசுபாடுகளுக்கு அப்பால் அபாயகரமான கழிவுகளின் தாக்குதலுக்கும் மக்கள் ஆட்பட வேண்டியிருக்கும். டைட்டானியம் டெட்ரா குளோரைடு ஒரு பிரச்சினைக்குரிய வாயுவாகும். அது நீருடன் கடுமையான வினையாற்றி ஹைட்ரஜன் குளோரைடு வாயுவை உருவாக்கும். ஹைட்ரஜன் குளோரைடு தரையைத் தழுவியபடியே பயணித்துப் பெரிய பகுதிக்குப் பரவும். அது பரவும் இடம் முழுவதும் மரணம் பரவும். எத்தனை சிறப்பாகப் பராமரிக்கப்படும் ஆலையிலும் விபத்து ஏற்படுவது இயற்கை என்பதால் இதுபோன்ற விபத்துகள் ஏற்படாது என்று 100 சதம் உத்திரவாதம் தர முடியாது.

2006 ஆகஸ்ட்டில் சீனாவின் ஜிங்சூ மாகாணத்தில் டைட்டானியம் ஆலை நானி ஆற்றில் 3000 டன் சுத்தி கரிக்கப்படாத கழிவை வெளியேற்றிய குற்றத்திற்காக மூடப்பட்டது. அந்தக் கழிவு ஆற்றைக் கொன்று போட்டது. ஆற்றங்கரையில் உள்ள ஊர்மக்கள் அனை வரும் பாதிக்கப்பட்டனர்.

1999இல் இங்கிலாந்தின் டைட்டானிய உற்பத்தி ஆலை ஒன்றில் விபத்து ஏற்பட்டது. குழாய் உடைந்ததால் 8 ஆயிரம் டன் திரவக் கழிவு வெளியேறியது. அதில் 37 டன் அடர்த்தியான ஹைடிரோ குளோரிக் அமிலமும் அடக்கம். விளைவாக 17 ஏக்கர் நிலம் பயனற்றுப்போனது.

அமெரிக்காவின் தெற்கு ஜார்ஜியாவில் பழங்குடியினர் பகுதியில் டூபாண்ட் நிறுவனம் டைட்டானியம் தோண்டியெடுக்க 1999இல் முயற்சி செய்தது. ஆனால், பழங்குடி மக்களின் போராட்டத்தின் காரணமாக விரட்டியடிக்கப்பட்டது.

நிலத்தடி நீர் கெட்டுப்போனது மற்றும் குறைந்துபோனது என்று காரணம் காட்டி மத்திய வியட்னாமின் கிராம மக்கள் 2006இல் டைட்டானியம் தோண்டியெடுப்பதை வலுக்கட்டாயமாகத் தடுத்து நிறுத்தினர்.

கென்யாவின் கடற்கரைப் பகுதியான க்வாலேவில் பழங்குடியினர் டைட்டானிய உற்பத்தியின் பாகசுரக் கம்பெனியான டியோமினுடன் (Tiomin) விடாப்பிடியான யுத்தம் நடத்திவருகின்றனர். தங்களது மூதாதையர் நிலத்தைத் தோண்டவிடமாட்டோம் என்று அவர்கள் போராடுகின்றனர்.

எது பெரியது?

எந்த முறையைப் பயன்படுத்துகிறார்கள் என்பது முக்கியமல்ல. ஏனென்றால் அனைத்து முறைகளும் ஆபத்தானவை. அவை சுற்றுச்சூழலையும் மனிதர்களின் நல்வாழ்வையும் பாதிக்கும்.

அரசியல் கட்சிகள் அனைத்தும் இந்த டைட்டானியத் தொழிற்சாலை பற்றிய முக்கிய விவரங்களைப் பார்க்கத் தவறுகின்றன. நிலத்தை யார் வாங்குகிறார்கள் அரசா? டாடாவா? என்பதோ, தொழிலை யார் நடத்துகிறார்கள் அரசா? டாடாவா? என்பதோ முக்கியமல்ல. யார் தோண்டினாலும் டைட்டானியம் 30 ஆண்டுகளில் தீர்ந்துபோகும். டாடா உலகப் பணக்காரர்களில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்துவிடுவார். அதே சமயம் அந்தப் பகுதியின் நீரும் தீர்ந்துபோயிருக்கும்.

எது பெரியது? எது முக்கியம்?

டைட்டானியமா? நீரா?

எவர் முக்கியமானவர்?

டாடாவா? மக்களா?



டைட்டானியம் இன்றி வாழ்ந்திருக்கிறோம். ஆனால், நீரின்றி அமையாது உலகு.



-நித்தியானந்த் ஜெயராமன்




(கட்டுரை ஆசிரியர் தொழில்நிறுவனங்கள் இழைக்கும் குற்றங்கள் பற்றியும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் பற்றியும் கவனம் செலுத்தும் எழுத்தாளர். சுதந்திரமான பத்திரிகையாளராகப் பணியாற்றுகிறார். அவர் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரை இது. [தமிழில்: ப்ரேமா ரேவதி])


நன்றி:

அக்டோபர் 2007

Monday, October 8, 2007

கிரெடிட் கார்டை பாதுகாப்பாக பயன்படுத்த சில ஆலோசனைகள்...

அன்பார்ந்த நண்பர்களே. தீபாவளிப் பண்டிகை நெருங்கிவிட்டது. ஒருநாள் கொண்டாட்டத்திற்காக கிரெடிட் கார்டை கவனமில்லாமல் கையாண்டால் அது பல நாட்களுக்கு பிரசினைகளை ஏற்படுத்தக்கூடும். எனவே, கிரெடிட் கார்டை பாதுகாப்பாக பயன்படுத்த சில ஆலோசனைகள்...


1. கிரெடிட் கார்டு என்பது உங்கள் பர்சை உடனடியாக காலி செய்யாவிட்டாலும், உரியகாலத்தில் அளவுக்கதிகமான கட்டணத்தோடு காலி செய்யும். எனவே உங்கள் கிரெடிட் கார்டை கவனமாக பாதுகாக்க/கையாள வேண்டும்.


2. கிரெடிட் கார்டுக்கான விண்ணப்பத்தை நிரப்பும்போது, அதை நீங்களே நிரப்புங்கள். தேவையானபோது மட்டும் விற்பனை பிரதிநிதியின் உதவியை நாடுங்கள். நிரப்பப்பட்ட விண்ணப்பத்தை நகல் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். அதைத்தொடர்ந்து கிரெடிட் கார்டுக்காக தனியே ஒருஃபைல் போட்டு கிரெடிட் கார்டு தொடர்பாக பில்கள் உட்பட அனைத்து கடிதத்தொடர்புகளையும், நீங்கள் கிரெடிட் கார்டு மூலம் பெற்ற பொருள் மற்றும் சேவை குறித்து அஞ்சல் மூலம் வரும் விளம்பரங்களையும் சேமித்து வையுங்கள்.


3. கிரெடிட் கார்டு விண்ணப்பத்தின் பின்புறத்தில் அச்சிடப்பட்டுள்ள மற்றும் கிரெடிட் கார்டுடன் வழங்கப்படும் விதிமுறைகளை பொறுமையுடன், முழுமையாக படியுங்கள். விளக்கம் தேவைப்பட்டால் வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகி விளக்கம் பெற தயங்காதீர்கள்.


4. புதிய கிரெடிட் கார்டு வாங்கும்போது இயன்றவரை புகைப்பட கிரெடிட் கார்டை வாங்குங்கள். இதற்காக கூடுதலாக மிகச்சொற்பமான தொகையே வசூலிக்கப்படுகிறது. கிரெடிட் கார்டை பெற்றுக்கொண்ட உடனே மறக்காமல் பின்புறத்தில் கையெழுத்திட வேண்டும். இவை, உங்கள் கார்டை மற்றவர்கள் உபயோகிப்பதை (ஓரளவு) தடுக்கும்.


5. கிரெடிட் கார்டு தொலைந்துபோனால் புகார் கொடுக்க வேண்டிய வங்கியின் புகார் பிரிவு எண்ணை எப்போதும் கையில் (தனியே) வைத்திருக்க மறந்து விடாதீர்கள். அதோடு கிரெடிட் கார்டின் எண்ணையும் குறித்து வைத்திருங்கள். கிரெடிட் கார்டு தொலைந்து விட்டதாக தோன்றினால் உடனடியாக வங்கிக்கு புகார் செய்யுங்கள். மேலும் தொலைபேசி மூலம் புகார் தெரிவித்ததற்கான பதிவெண் வழங்கப்பட்டால் அதையும் குறிப்பிட்டு எழுத்து மூலமான புகாரையும் பதிவு செய்யுங்கள். அதற்கான நகல்களையும் அத்தாட்சிகளையும் ஃபைலில் சேர்க்கவும்.

6. கிரெடிட் கார்டை பயன்படுத்தி பொருட்கள் வாங்கும்போது அவசியம் தேவையான பொருட்களை மட்டுமே வாங்குங்கள். சபலங்களுக்கு இடம் கொடுத்து தேவையற்ற பொருட்களை வாங்கி குவிக்காதீர்கள். ஏனெனில் அதற்கும் நீங்கள்தான் (மிகக்கூடுதலான வட்டியுடன்) பணம் செலுத்த வேண்டும்.


7. ஒவ்வொரு பில்லையும் முழுமையாக சோதனை செய்யுங்கள். நீங்கள் பயன்படுத்திய தொகை மட்டும்தான் பில்லில் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை கவனமாக கண்காணியுங்கள்.? தவறுகள் இருந்தால் வங்கி நிர்வாகத்திற்கு உடனடியாக புகார் செய்யுங்கள்.


8. தவறான பில் குறித்து உரிய காலத்தில் தெரிவித்தால் மட்டுமே வங்கிகள், அந்த தவறுகளை களைகின்றன. காலம் தாழ்த்தி செய்யப்படும் புகார்களை வங்கிகள் ஏற்க மறுக்கின்றன.


9. புதிதாக பொருள் வாங்கியிருந்தால், அதற்கான தொகை மட்டுமே அதற்கடுத்த மாத பில்லில் இடம் பெற வேண்டும். அதற்கான வட்டி முதல் மாதத்தில் கணக்கிடக்கூடாது. அவ்வாறு வட்டி முதல் மாதத்திலேயே சேர்க்கப் பட்டிருந்தால் உடனடியாக வங்கி நிர்வாகத்திற்கு புகார் செய்யுங்கள்.


10. உங்கள் அனுமதியின்றியே பலவகையான இன்சூரன்ஸ் திட்டங்களை வாடிக்கையாளர் தலையில் கட்டுவதை வங்கிகள் வழக்கமாக்கி வருகின்றன. எனவே நீங்கள் அனுமதிக்காத எந்த தொகையையும், அது எவ்வளவு சிறிய தொகையாக இருந்தாலும் உடனடியாக வங்கிக்கு தொடர்பு கொண்டு தெளிவு பெறுங்கள். தேவையற்ற கட்டணங்களை தவிருங்கள்.


11. மாதாந்திர பில் தொகையை செலுத்தும்போது இயன்றவரை முழு தொகையையும் செலுத்துங்கள். முடியாவிட்டால் கூடியவரை அதிகபட்ச தொகையை செலுத்துங்கள்.


12. குறைந்தபட்ச தவணைத்தொகை என்ற வலையில் சிக்குவதை தவிர்த்திடுங்கள். அவ்வாறு கட்டும் தொகையின் பெரும்பகுதி வட்டி மற்றும் இதர கட்டணங்களுக்கே நேர் செய்யப்படுவதால் கடன்தொகை குறைவதில்லை என்பதை உணருங்கள்.


13. எந்த பிரசினை தொடர்பாகவும் வங்கி அதிகாரிகளிடம் தொலைபேசி மூலமாக மட்டும் புகார் செய்தால் போதாது. ஏனெனில் யாரிடம் புகார் செய்தீர்கள் என்பதையோ, புகாரை பதிவு செய்தவர் அதன்மீது என்ன நடவடிக்கை எடுத்தார் என்பதையோ கண்டுபிடிக்க முடியாது. எனவே வங்கிக்கு எழுத்து மூலமான புகாரை பதிவு அஞ்சலில் அனுப்புங்கள். அஞ்சல் பெட்டி எண் கொண்ட முகவரிக்கு பதிவு அஞ்சலோ, கூரியர் மூலமான தபாலோ அனுப்ப முடியாது. எனவே கிரெடிட் கார்டு வாங்கும்போதே சரியான, முழுமையான முகவரியை கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள்.


14. ஏற்கனவே உள்ள கிரெடிட் கார்டின் அடிப்படையில், வேறு வங்கியில் புதிய கார்டு பெற முயற்சிப்பவர்கள், பழைய கார்டின் முதல் பக்க நகலை மட்டும் கொடுத்தால் போதுமானது. இரு பக்க நகலையும் கொடுத்தால் அவற்றில் உள்ள கார்டு எண் மற்றும் பாதுகாப்பு எண்ணை பயன்படுத்தி, பழைய கார்டில் உள்ள கடன் அனுமதி தொகையை (available balance) வேறு யாரேனும், இணையம் மூலமாகவோ அல்லது வேறு முறைகளிலோ முறைகேடாக பயன்படுத்தும் அபாயம் உள்ளது.


15. புதிய கார்டு வாங்கும்போது உண்மையான ஆவணங்களை கொடுத்து கிரெடிட் கார்டு வாங்குங்கள். விற்பனை பிரதிநிதிகளை முழுமையாக நம்பாதீர்கள். அவர்கள் கூடுதலான கிரெடிட் கார்டை விற்று அதிக ஊக்கத்தொகை பெறுவதற்காக போலியான ஆவணங்கள் மூலம் கிரெடிட் கார்டை பெற்றுத்தரக்கூடும். பிரசினை வந்தால் அவர்கள் தப்பிவிடுவார்கள். போலி ஆவணம் கொடுத்து வங்கியை ஏமாற்றியதற்காக சட்டரீதியான நடவடிக்கையை நீங்கள் எதிர்கொள்ள நேரிடும்.


16. உங்கள் சம்பளம் ஏதேனும் வங்கி மூலம் வழங்கப்பட்டால், அந்த வங்கியின் கிரெடிட் கார்டு வாங்குவதை தவிர்த்து விடுங்கள். ஏனெனில் உங்களுக்கும், வங்கிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டால், (தவறு வங்கியின் பக்கம் இருந்தாலும்கூட) உங்கள் சம்மதம் இன்றியே, உங்கள் சம்பள பணத்தை வங்கிகள் "ஸ்வாகா" செய்து விடும் அபாயம் உள்ளது.


17. தவிர்க்கமுடியாத காரணங்களால் கிரெடிட் கார்டு கடன் தவணை கட்டத்தவறும்போது வசூல் குண்டர்கள் உங்களை மிரட்டினால் காவல் நிலையத்தையோ, வழக்கறிஞரையோ அணுகுங்கள்.

18. கிரெடிட் கார்டு நிறுவனங்களுக்கு எதிரான உங்கள் உரிமைகளை பாதுகாக்க இந்த விவகாரங்களை கையாளும் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகளை கண்டறிந்து வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இந்த அமைப்புகளை அறிமுகப்படுத்துங்கள்.

19. கிரெடிட் கார்டு வழங்கும் நிறுவனங்கள், வாடிக்கையாளர்களிடம் நடந்து கொள்ள வேண்டிய நெறிமுறைகள் குறித்து மத்திய ரிசர்வ் வங்கி மற்றும் இந்திய வங்கிகள் சங்கம் ஆகிய அமைப்புகள் திட்டவட்டமான விதிமுறைகளை வகுத்துள்ளன. அவற்றில் கூறப்பட்டுள்ளபடி உங்கள் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

20. உங்கள் உரிமைகள் மீறப்பட்டால் உடனடியாக வங்கிக்கும், இந்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ள வங்கி குறைதீர்ப்பு அதிகாரிக்கும் புகார் செய்யுங்கள். அதோடு உங்கள் குறைகளை இந்த வலைப்பூவிலோ அல்லது www.creditcardwatch.org என்ற இணைய தளத்திலோ பதிவு செய்யுங்கள். அது தவறிழைக்கும் வங்கிகளை அம்பலப்படுத்துவதற்கும் மற்ற வாடிக்கையாளர்கள் விழிப்படைவதற்கும் உதவும்.


(கிரெடிட் கார்டு குறித்த நுகர்வோர் தரப்பு தகவல்களுக்கும், ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளுக்கும் www.creditcardwatch.org என்ற இணையதளத்தை பார்க்கவும்)


-மக்கள் சட்டம் குழு

Saturday, October 6, 2007

கிரெடிட் கார்டு - தகவல் உரிமைச் சட்டம் - அரசின் பதில்

தமிழ்நாடு அரசின் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பாக கடந்த ஆகஸ்ட் 29ம் தேதியன்று சென்னை எழும்பூர், ஓட்டல் மெரீனா டவர்ஸ்-ல், “வங்கிக்கடன் அட்டையால் நுகர்வோருக்கு பலனா? அல்லது சுமையா?” என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி குறித்து தகவல் உரிமைச்சட்டத்தின்கீழ் சில தகவல்களை கேட்டு மனு அளிக்கப்பட்டது.

அந்த கேள்விகளும், அதற்கு அத்தறையின் தகவல் வழங்கும் அலுவலர் திருவாளர் சி. கோதண்டன் அளித்த பதில்களும்.
...
கேள்வி 1. இந்த நிகழ்ச்சி குறித்து நாளிதழ்களில் விளம்பரம் செய்யப்பட்டதா? ஆம் எனில் எந்த பத்திரிகைகளில் விளம்பரம் செய்யப்பட்டது? (இலவசமாக “இன்றைய நிகழ்ச்சி” பகுதியில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்புகள் தவிர)

பதில்: இந்த நிகழ்ச்சி குறித்து நாளிதழ்களில் விளம்பரம் செய்யப்படவில்லை.
...
கேள்வி 2. இந்த நிகழ்ச்சிக்கு செலவழிக்கப்பட்ட மொத்தத்தொகை எவ்வளவு?

பதில்: இந்த நிகழ்ச்சிக்கு செலவிடப்பட்ட தொகை ரூ.72,388/- ஆகும்.
...
கேள்வி 3. சென்னையில் அரசுக்கு சொந்தமான அரங்குகளும், மாநகராட்சிக்கு சொந்தமான அரங்குகளும் பல இருக்கும் நிலையில், தனியார் ஓட்டல் ஒன்றில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது ஏன்?

பதில்: இந்த துறை மூலம் நுகர்வோர் நலன் தொடர்பாக நடத்தப்படும் கருத்தரங்குகளின் பொருளினை பொறுத்து கூட்ட அரங்கு தேர்ந்தெடுக்கப்படுகிறது. இதற்கு முன்பு இந்த துறையால் நடத்தப்பட்ட, ரியல் எஸ்டேட் தொடர்பான கருத்தரங்கு சேவை வழங்குபவர் அரசுத்துறை மற்றும் தனியாளர்கள் என்ற முறையில் அரசுக்கு சொந்தமான அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையத்திலும், மருந்துகள் விற்பனை தொடர்பான கருத்தரங்கு சமூக சேவை நிறுவனத்தின் அரங்கான ஆஷா நிவாஸிலும் நடத்தப்பட்டது. கடன் அட்டைகள் தொடர்பான கருத்தரங்கினை பொறுத்த மட்டில் சேவை வழங்குபவர்கள் அரசுடைமை/ தனியார் / பன்னாட்டு வங்கிகளைச் சேர்ந்த உயர் அலுவலர்கள் என்ற முறையிலும் கடன் அட்டையைப் பயன்படுத்தும் நுகர்வோர்கள் சமூகத்தில் நடுத்தர மற்றும் மேல்நிலை வாழ்க்கைத்தரத்தில் உள்ள நிலையிலும் இக்கருத்தரங்கினை தனியார் ஓட்டலில் நடத்த தீர்மானிக்கப்பட்டது.
...
கேள்வி 4. கிரெடிட் கார்டு வணிகத்தை நெறிப்படுத்துவது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி கடந்த 2007 ஜூலை மாதத்தில் மேம்படுத்தப்பட்ட முதன்மை சுற்றறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், தங்கள் நிகழ்ச்சியில் 2005ம் வருடத்திய (பழைய) சுற்றறிக்கையை வழங்கியது ஏன்?

பதில்: இத்துறை வாயிலாக கருத்தரங்கின்போது வழங்கப்பட்ட விவரங்கள் இந்திய ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் இருந்தும் இத்துறையில் பதிவு செய்துள்ள தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள் வாயிலாகவும் பெற்று தொகுத்து வழங்கப்பட்டன. அதில் கூடுதல் விவரங்கள் மற்றும் நுகர்வோர்க்கான தெளிவுரைகள் வழங்கவே இந்த கருத்தரங்கிற்கு ரிசர்வ் வங்கியின் ஆம்புட்ஸ்மேன் அலுவலர் சிறப்பு அழைக்கப்பட்டிருந்தார். அவர் வாயிலாக ரிசர்வ் வங்கியின் தற்போதைய நெறிமுறைகள் அனைத்தும் தெளிவாக விளக்கப்பட்டன.
...
கேள்வி 5. கருத்தரங்கம் முடிவடைந்த பின் அரங்கில் விவாதிக்கப்பட்ட அம்சங்களிலிருந்தே தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவது வழக்கம். ஆனால் தாங்கள் நடத்திய நிகழ்ச்சியில் தீர்மானங்கள், நிகழ்ச்சி தொடங்கப்படுவதற்கு முன்பாகவே வழங்கப்பட்டது. இது எவ்வாறு சாத்தியமானது?

பதில்: தமிழகத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட ஆலோசனைகள் / புகார்கள் தொகுக்கப்பட்டு கருத்தரங்கில் விவாதிக்க தொகுக்கப்பட்டன. மனுதாரர் கூறியவாறு தீர்மானங்கள் எதுவும் வழங்கப்படவில்லை. கருத்தரங்கின் இறுதி நிகழ்வாக இத்துறையின் இணை ஆணையாளர் வாயிலாக கருத்தரங்கின் ஆலோசனைகள் தொகுத்து வழங்கப்பட்டன.
...
கேள்வி 6. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் மொத்தம் எத்தனை பேர்? அவர்களில் உங்கள் துறை பணியாளர்கள் எத்தனை பேர்? வங்கிகளின் பிரதிநிதிகள் எத்தனை பேர்? நுகர்வோர் அமைப்பு நிர்வாகிகள் எத்தனை பேர்? பொதுமக்கள் எத்தனை பேர்?

பதில்: நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள்
நுகர்வோர் அமைப்பை சேர்ந்தவர்கள்---60 பேர்
வங்கியை சேர்ந்தவர்கள்---12 பேர்
இத்துறையைச் சேர்ந்த உயர் அலுவலர்கள் மற்றும்
கருத்தரங்கு தொடர்பாக பணிபுரிந்த பணியாளர்கள்---14 பேர்
இத்துறை மற்றும் இதர அரசுதுறைகளை சார்ந்த கடன்
அட்டை உபயோகிப்பாளர்கள், பிற நலசஙக
பொறுப்பாளர்கள் & பத்திரிகையில் "இன்றைய நிகழ்ச்சி"
வாயிலாக அறிந்து வருகை புரிந்த பொதுமக்கள்---59 பேர்
பத்திரிகை & தொலைக்காட்சி ஊடகப்பணியாளர்கள்---10 பேர்

மொத்தம் --- 155 பேர்
...

கேள்வி 7. இந்த நிகழ்ச்சியின் விளைவாக ஏற்பட்ட பயன் என்ன? இந்த நிகழ்ச்சி குறித்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நுகர்வோர் அமைப்பு பிரதிநிதிகளிடமும் பொதுமக்களிடமும் கருத்து கேட்கப்பட்டதா? ஆமெனில் பெரும்பான்மையானோர் என்ன கருத்து தெரிவித்தனர்? இல்லை எனில் ஏன் அவ்வாறு கருத்து கேட்கப்படவில்லை?

பதில்: இக்கருத்தரங்கு குறித்த விவரம் முன்னமே தமிழகத்தில் செயல்பட்டு வரும் அனைத்து தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளுக்கும் தெரிவிக்கப்பட்டு அவர்களது கருத்துகள் / புகார்கள் மற்றும் ஆலோசனைகள் பெற்று தொகுக்கப்பட்டு கருத்தரங்கில் விவாதிக்க கொடுக்கப்பட்டன. இவ்விவரங்கள் சம்பந்தப்பட்ட சேவைகள் வழங்கும் வங்கிகளின் அலுவலர்கள், ரிசர்வ் வங்கியின் அலுவலர் மற்றும் கூடியிருந்த அனைத்து நபர்களுக்கும் வழங்கப்பட்டன. மேலும் ஒவ்வொரு அமர்விலும் கடன் அட்டை உபயோகிப்பவர்கள் தங்களது சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள போதிய வாய்ப்புகள் வழங்கப்பட்டது. இந்த கருத்தரங்கின் தொடர்ச்சியாக ரிசர்வ் வங்கி வாயிலாக கூடுதல் நெறிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் கொண்டுவர தக்க பரிந்துரைகள் இத்துறை வாயிலாக அனுப்பப்படுகின்றன.
...
கேள்வி 8. இந்த கிரெடிட் கார்டுகளால் ஏற்படும் பிரசினை குறித்து தங்கள் துறை சார்பில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்ன? எதிர்கால திட்டம் என்ன?

பதில்: இத்துறை கடன் அட்டைகள் சேவை உட்பட பொதுமக்கள் "நுகர்வோர்" என்ற முறையில் பெறும் அனைத்து சேவைகளிலும் நேர்மையற்ற வணிக முறைகளில் சிக்கி அல்லல் அடையாத வண்ணம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்குடன் கருத்தரங்குகள் நடத்தி வருகிறது. இத்தகைய கருத்தரங்குகளுக்கான பொருட்கள் நுகர்வோர் அமைப்புகளின் பிரதிநிதிகள் வழங்கும் கருத்துகளின் அடிப்படையில்தான் முடிவு செய்யபடுகின்றன. மேற்படி கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்ட தீர்மானங்களை ரிசர்வ் வங்கி வாயிலாக ஆணைகளாக பெறத்தக்க பிரேரணைகள் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
...

இந்த பதில்கள் மேலும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. அவற்றையும் அடுத்த மனுவில் கேட்கவிருக்கிறோம். இந்த நடவடிக்கை உங்கள் கருத்துகளையும், உங்களுக்கு தோன்றும் கேள்விகளையும் எழுதினால் அவற்றையும் அடுத்த மனுவில் சேர்க்க முடியும்.

அடுத்த சுற்று ஆட்டத்துக்கு நாங்க ரெடி! நீங்க ரெடியா?