தமிழ்நாட்டில் வழக்கறிஞர்கள் மேற்கொண்டுள்ள நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் குறித்து பல்வேறு கருத்துகள் நிலவி வருகிறது. ஓய்வுபெற்ற நீதியரசர் ஹரிபரந்தாமன் இந்தப் பிரச்சினை குறித்த தனது கருத்துகளை பதிவு செய்கிறார்.
தற்சமயம் தமிழகத்தில் வழக்கறிஞர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை, ஆர்.கே.ஆனந்தின் தீர்ப்பின் வெளிச்சத்தில் பரிசீலிப்போம். உயர் பதவிகளில் உள்ளவர்களும், இருந்தவர்களும், செல்வமும், செல்வாக்கும் உள்ளவர்களும் கடும் குற்றம் புரிந்தால், அவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்; இது என் கருத்து. ஆனால், செல்வமும், செல்வாக்கும் உள்ளவர்கள் தண்டிக்கப்படுகின்றனரா? : சாட்சியை விலை கொடுத்து வாங்கிய ஆர்.கே.ஆனந்த் கடந்த, 1999 ஜன., 1ம் தேதி, டில்லியில் பெரும் செல்வந்தரின் மகன் சஞ்சீவ் நந்தா என்பவர், பி.எம்.டபிள்யூ., காரை கவனக்குறைவாகவும், அதி வேகமாகவும் ஓட்டி விபத்தை நிகழ்த்தினார். அதில், ஆறு பேர் உயிர் இழந்தனர்; ஆறு பேரில், மூவர் காவல்துறையினர். விபத்தை நிகழ்த்திய பின் நிற்காமல் சென்றுவிட்டார். அவர் காரை ஓட்டியபோது, மதுவும் அருந்தி இருந்தார் என்பது காவல்துறையின் வழக்கு. குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு ஆமை வேகத்தில் நடந்து கொண்டிருந்தது. குற்றவியல் நீதிமன்றத்தில், சஞ்சீவ் நந்தாவின் வழக்கறிஞர் ஆர்.கே.ஆனந்த்; அரசு தரப்பு வழக்கறிஞர் ஐ.யு.கான். இந்த நிலையில், வழக்கின் நேரடி சாட்சியான சுனில் குல்கர்னியுடன் மேற்சொன்ன ஆர்.கே.ஆனந்த் மற்றும் ஐ.யு.கான் சந்தித்து, சாட்சியை பெரும் தொகை கொடுத்து வாங்குவது என்ற நிகழ்ச்சியை, 'என்டிடிவி' சேனல், 2007 மே, 30ம் தேதி ஒளிபரப்பியது. இது டில்லியில் மிகுந்த பரபரப்பை உண்டாக்கியது. அந்த சேனல் இப்படி ஒரு முறைகேட்டை ஒளிபரப்பாமல் இருந்திருந்தால், இது வெளி உலகத்தின் மற்றும் நீதிமன்றத்தின் கவனத்திற்கே வந்திருக்காது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு : இந்த நிலையில், டில்லி உயர் நீதிமன்றம் தானாக முன் வந்து மூத்த வழக்கறிஞர் ஆர்.கே.ஆனந்த் மற்றும், இருவர் மேல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பதிவு செய்தது. உயர் நீதிமன்றத்தின், இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு வழக்கை விசாரித்தது. இதை எதிர் கொண்ட ஆர்.கே.ஆனந்த், பல இடைக்கால மனுக்களை தாக்கல் செய்தார்; அம்மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. அந்த விபரங்களுக்குள் நான் செல்லவில்லை.
அவர் எழுப்பிய, ஒரு முதல் நிலை எழு வினா பற்றி மட்டும் குறிப்பிட விரும்புகிறேன். அவர், 'என்டிடிவி -தான் குற்றவியல் விசாரணையில் தலையிடும் வகையில் ஒளிபரப்பு செய்தது; எனவே, அதன் மீது தான் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும்' என்று ஆட்சேபனையை எழுப்பினார்; அந்த ஆட்சேபனையை நீதிமன்றம் நிராகரித்தது.
ஆர்.கே.ஆனந்திற்கு வழங்கப்பட்ட தண்டனை : அவர் சாட்சியை விலை பேசிய தன் மூலம், நீதிமன்ற நடவடிக்கையில் தலையிட்டு நீதிமன்ற மாட்சிமையை குலைத்து அவமதிப்பு செய்தார் என்ற குற்றம் நிரூபிக்கப்பட்டதாக, 2008 ஆக., 21ல், டில்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு கூறியது; அவருக்கு கீழ்கண்ட தண்டனைகளை விதித்தது.
1) டில்லி உயர் நீதிமன்றத்திலும், கீழமை நீதிமன்றங்களிலும், நான்கு மாதங்களுக்கு அவர் வழக்கறிஞர் தொழில் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால், அவர் மற்ற வழக்கறிஞர் வேலைகளை, - ஆலோசனை, அறிவுரை, விளக்கவுரை, கருத்துகளாகச் செய்யலாம்.
2) மூத்த வழக்கறிஞர் பதவி பறிக்கப்பட்டது.
3) 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
உச்ச நீதிமன்றத்தில் ஆர்.கே. ஆனந்தின் மேல்முறையீடு : இந்த உத்தரவை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். மேல்முறையீட்டை, 2009 ஜூலை, 29ல் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், அவர் செய்த குற்றத்திற்கு அவருக்கு அளிக்கப்பட்ட தண்டனை குறைவு என்று கூறி, 'அதிக தண்டனை ஏன் அளிக்கக்கூடாது?' என்பதற்கு விளக்கம் அளிக்குமாறு அறிவிப்பு அனுப்பியது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்திற்கு உதவி செய்ய, 'அமீக்கஸ் க்யூரி'யாக, இரு வழக்கறிஞர்களை நியமித்தது. அவர்கள், மூத்த வழக்கறிஞர்கள் கோபால் சுப்ரமணியம் மற்றும் நாகேஸ்வர ராவ். அதன் தீர்ப்பில் கூறியுள்ளதாவது: உயர் நீதிமன்றத்தின், இருவர் அமர்வின் மூத்த நீதிபதி, தன் வழக்கை விசாரிக்கக்கூடாது என்றும், வழக்கில் இருந்து விலகிக் கொள்ள வேண்டும் என்றும் ஆர்.கே.ஆனந்த் மனு போட்டார். அமர்வுக்கு தலைமை தாங்கிய அந்த நீதிபதியின் மேல் கடும் குற்றச்சாட்டுகளை கூறினார். அவரது மனு, நீதிபதியை மிரட்டுவதாக இருந்தது. அந்த மனு, தலைமை தாங்கிய மூத்த நீதிபதியால் நிராகரிக்கப்பட்டது.
நீதிபதியின் மீது தனிப்பட்ட முறையில் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டதால், மற்றொரு நீதிபதி மனுவின் மீது எந்த உத்தரவும் போடவில்லை. ஆனால், அமர்வில் எந்த பங்கும் வகிக்க மறுத்து விட்டார். இதை பயன்படுத்தி, மேற்சொன்ன உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று, ஆர்.கே.ஆனந்த் மனு போட்டார். தலைமை நீதிபதி, அமர்வின் இளைய நீதிபதியை மாற்றி மற்றொரு இளைய நீதிபதியை கொண்ட அமர்வை ஏற்படுத்தினார். 'பழைய அமர்வே மறுபரிசீலனை மனுவை விசாரிக்க வேண்டும்' என்று ஆர்.கே.ஆனந்த் தரப்பில் வாதிடப்பட்டது.
புதிய அமர்வு, மறுபரிசீலனை மனுவை, தள்ளுபடி செய்தது. அந்த உத்தரவை, அமர்வின் சார்பில் புதிதாக நியமிக்கப்பட்ட இளைய நீதிபதி, உத்தரவு எழுதினார். அதற்குப்பின் அந்த வழக்கின் முக்கிய உத்தரவுகள் அனைத்தையும் இளைய நீதிபதியே எழுதினார்.
இறுதியில் மேல்முறையீட்டை உச்ச நீதிமன்றம், 2009 ஜூலை 29ல் தள்ளுபடி செய்கையில், ஆர்.கே.ஆனந்திற்கு அளிக்கப்பட்ட தண்டனை குறைவு என்றும், அதிக தண்டனை ஏன் அளிக்கக்கூடாது என்பதற்கும், நான்கு மாதங்களுக்கும் மேலாக, நீண்ட காலத்திற்கு வழக்கறிஞர் தொழிலில் இருந்து நீக்கக்கூடாது என்பதற்கும் அவர் விளக்கம் அளிக்க கோரியது.
ஆர்.கே.ஆனந்திற்கு அதிக தண்டனை அளிக்கப்பட்டதா? : கடந்த, 2010 ஜன., 13ல் அவர், உச்ச நீதிமன்றத்தில் அவரது விளக்கத்தை அளித்தார். அதில், அவர் மன்னிப்பு கோரியும், நடவடிக்கையை கைவிடுமாறும் கோரினார். அந்த விளக்கத்தை பரிசீலித்த உச்ச நீதிமன்றம், அவர் செய்த தவறுக்கு அவர் வருந்தியதாக தெரியவில்லை என்றது. இதை உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியவுடன், 2011 மே 4ல், கூடுதல் ஆணை உறுதியுரை தாக்கல் செய்தார். அதில், உச்ச நீதிமன்றம், 2009 ஜூலை, 29ல் தீர்ப்பில் கூறிய அனைத்தையும் ஒப்புக்கொள்வதாகவும், முந்தைய விளக்கத்தில் கூறிய ஆட்சேபகரமான பகுதியை திரும்ப பெற்றுக் கொள்வதாகவும் கூறினார்.
பின், 2012 செப்., 24ல் மேலும், ஒரு ஆணை உறுதியுரை தாக்கல் செய்தார். அதில், அவர் இந்திய பார் கவுன்சிலுக்கு, 21 லட்சம் ரூபாய் நன்கொடை அளிக்க ஒப்புக் கொள்வதாகவும், ஒரு ஆண்டுக்கு டில்லி இலவச சட்ட மையத்தில் ஏழைகளுக்காக வழக்கு நடத்த ஒப்புக் கொள்வதாகவும், 'இந்த ஓராண்டில், வழக்கறிஞர் கட்டணம் எதுவும் வசூலிக்க மாட்டேன்' என்றும் கூறி இருந்தார். அவர் செய்த கடும் குற்றத்திற்கு சிறை தண்டனை தான் சரியாக இருக்கும் என்று உச்ச நீதிமன்றம் தன் கருத்தை பதிவு செய்தாலும், அதிக தண்டனை வழங்கவில்லை.
அவருக்கு, 69 வயது ஆவதாக வும், அவர், 2007 முதல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்கொண்டு வருவதாகவும், அவரது மனைவி உடல் நலம் இல்லாமல் இருப்பதாகவும், 21 லட்சம் ரூபாய் பார் கவுன்சிலுக்கு நன்கொடை அளிப்பதையும், ஓர் ஆண்டு இலவச சட்ட உதவி மைய வழக்குகளை நடத்த ஒப்புக் கொள்வதையும் அதிக தண்டனை வழங்காத தற்கு காரணங்களாக அடுக்கியது. இறுதியில், 2012 நவ., 2012ல் உச்ச நீதிமன்றம் வழக்கை முடித்து தீர்ப்பு கூறியது.
ஆர்.கே.ஆனந்திற்கு, 21 லட்சம் ரூபாய் நன்கொடை என்பது, ஒரு பொருட்டே அல்ல. அவர், 21 கோடி ரூபாய் கொடுத்தால் சிறை தண்டனையில் இருந்து விடுபடலாம் என்றால், அதையும் கொடுக்கும் வசதி படைத்தவர். ஆனால், சாதாரண வழக்கறிஞர்கள் என்ன செய்வது? இப்படி, ஒரு பெரும் தொகையை நன்கொடையாக கொடுத்து, தண்டனையில் இருந்து சுலபமாக தப்பிக்க இயலுமா? விசாரணைக்குப் பின் தண்டனை என்பதற்கு மாறாக, விசாரணையை நிலுவையில் வைத்தே பல மாதங்கள் தமிழக வழக்கறிஞர்களை தொழிலில் இருந்து நீக்கம் செய்யலாமா? ஆறு மாதங்களுக்கும் மேலாக, ஒன்பது மாதங்கள் வரையில் கூட வழக்கறிஞர் தொழிலில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட தமிழக வழக்கறிஞர்கள் செய்த தவறுகள், ஆர்.கே.ஆனந்த் செய்த தவறுகளை விட கூடுதலானதா? ஆர்.கே.ஆனந்த் வழக்கில், டில்லி உயர் நீதிமன்றம் வழக்கறிஞர் சட்டப் பிரிவு - 34ன் கீழ் விதி ஏதும் செய்யவில்லை. எனவே, ஆர்.கே.ஆனந்த் தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தண்டனையாக, 'சஸ்பென்ஷன்' அல்லது வழக்கறிஞர் பதிவில் இருந்து நீக்கம் என்ற தண்டனையை அளிக்க முடியாது என்று வாதிடப்பட்டது.
அந்த வாதத்தை, உச்ச நீதிமன்றம் அவ்வழக்கில் உதவி செய்ய நியமித்த, இரு மூத்த வழக்கறிஞர்களும் ஆதரித்தனர். மேலும், உச்ச நீதிமன்றம் இதற்கு முன் வழங்கிய தீர்ப்பில், 'சஸ்பென்ஷன் மற்றும் பதிவில் இருந்து நீக்கம் என்பதை நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனையாக அளிக்க முடியாது' என்று கூறி இருப்பதை, தீர்ப்பின் பத்தி - 138ல், கீழ்கண்டவாறு பதிவு செய்துள்ளது. இந்த சூழலில், உச்ச நீதிமன்றம், அனைத்து உயர் நீதிமன்றங்களையும் வழக்கறிஞர் சட்டம் பிரிவு - 34ன் கீழ் விதிகளை உண்டாக்கச் சொன்னது. சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கனவே வழக்கறிஞர் சட்டம் பிரிவு - 34ன் கீழ் விதிகளை வகுத்துள்ளது. அதில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டிக்கப்படும் நபரை, அவர் நீதிமன்றத்தில் வழக்காடுவதில் இருந்து விலக்கி வைக்க வகை செய்துள்ளது. எனவே, இப்போது கொண்டு வரப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய புதிய விதிகள் தேவையற்றவை. இந்த புதிய சர்ச்சைக்குரிய விதிகளை உண்டாக்குவதற்கு, சென்னை உயர் நீதிமன்றம், ஆர்.கே.ஆனந்த் வழக்கைத் தான் சுட்டிக் காட்டுகிறது. ஏற்கனவே உரிய விதிகள் இருப்பதால் இந்த புதிய சர்ச்சைக்குரிய விதிகளை திரும்பப் பெற வேண்டும் என்பது என் கருத்து. பார் கவுன்சிலும், ஒழுங்கு நடவடிக்கையை ஒட்டி நடைபெறும் விசாரணையில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் மட்டுமே, சஸ்பென்ஷனோ அல்லது பதிவு நீக்கமோ செய்யலாமே ஒழிய, விசாரணை நிலுவையில் இருக்கும்போது செய்ய முடியாது.
இதை, இந்திய பார் கவுன்சிலின் தலைவர் மன்னன் குமார் மிஸ்ராவே, பாட்டியாலா நீதிமன்ற வளாகத்தில் நடந்த வன்முறை சம்பந்தமாக, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆணை உறுதி உரையில் குறிப்பிட்டுள்ளார். எனவேதான், நான் ஓய்வு பெற்றபோது ஆற்றிய உரையில், 'பார் கவுன்சில் சஸ்பென்ஷனை உடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டும்' என்றேன்.
மேலும், ஆர்.கே.ஆனந்த் வழக்கில், உச்ச நீதிமன்றம், 'நிரூபிக்கப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே, பார்கவுன்சில் சஸ்பென்ஷன் செய்ய இயலும்' என்றது. இத்தீர்ப்பின் பத்தி - 138ல் கீழ்கண்டவாறு கூறப்பட்டுள்ளதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
மேலும், பத்தி - 136ல், நீதிமன்றத்திற்கு உதவி செய்ய நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் நாகேஸ்வர ராவ் (இப்போதைய உச்ச நீதிமன்ற நீதிபதி) வாதத்தை உச்ச நீதிமன்றம் கீழ் கண்டவாறு பதிவு செய்துள்ளது.எனவே, பார் கவுன்சிலுக்கு விசாரணையை நிலுவையில் வைத்து சஸ்பென்ஷன் செய்யும் அதிகாரம் இல்லை. 'பாட்டியாலா நீதிமன்ற வளாகத்தில் வன்முறை செய்த வழக்கறிஞர்களை விசாரணை இல்லாமல் சஸ்பென்ஷன் செய்ய மாட்டேன்' என்று கூறும் மன்னன் குமார் மிஸ்ரா, தமிழ்நாட்டு வழக்கறிஞர்கள் மேல் மட்டும் சீறி பாய்வதேன்? சமீபத்தில், ஆந்திராவிலும், தெலுங்கானாவிலும், கோல்கட்டாவிலும் வழக்கறிஞர்கள் பெரிய அளவில் போராட்டங்கள் நடத்திய போது, அவர் இன்று வரை மவுனமாக இருப்பது ஏன்; தமிழகத்தில் மட்டும் வேறுபட்ட நிலைப்பாட்டை அவர் கொள்வதற்கு காரணம் என்ன?
கடுமையான குற்றம் இழைத்த, ஆர்.கே.ஆனந்திற்கு சிறை தண்டனை இல்லை. அவர் மிகவும் கண்டிக்கத்தக்க வகையில் நீதிமன்ற அவமதிப்பு குற்றம் இழைத்தார். ஆனால் தமிழகத்தில் வழக்கறிஞர்கள் நிலை என்ன? உயர் நீதிமன்றத்தின், முதலாவது அமர்வு முன், தமிழில் வாதாட வகை செய்ய வேண்டும் என்று அமைதியான முறையில் பதாகையை துாக்கிப் பிடித்தாலும், நீதிமன்ற நடவடிக்கையில் தலையிடுவதாக தான் கொள்ள வேண்டும். ஆனால், அந்த அமர்வு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஏதும் தொடரவில்லை. ஆனால் அவர்கள், ஒரு மாதம் சிறையில் இருந்தனர். அவர்களை, ஏழு மாதம் சஸ்பென்ஷனில் வைத்தது பார் கவுன்சில்; அதையே தண்டனையாகவும் அளித்தது. அதேபோல, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நடந்த நீதிமன்றத்தில் விசாரணையை பார்க்க செல்ல அனுமதிக்க வேண்டும் என்றதற்காக, பல வழக்கறிஞர்களை பார் கவுன்சில் சஸ்பென்ஷன் செய்தது. அவர்களில் சிலரின் சஸ்பென்ஷன், ஒன்பது மாதங்களுக்கு மேலாகி யும், இன்னும் தொடர்கிறது. சி.ஐ.எஸ்.எப்., சம்பந்தப்பட்ட வழக்கிலும், பல வழக்கறிஞர்கள் பார் கவுன்சிலால் விசாரணை இன்றி, பல மாதங்கள் சஸ்பென்ஷனில் வைக்கப்பட்டனர். இந்நிலையில், இந்த இறுதி பகுதியை வெளியிடும் நேரத்தில், 105 தமிழக வழக்கறிஞர் தலைவர்களை, இந்திய பார் கவுன்சில் சஸ்பென்ஷன் செய்துள்ளதாக, ஒரு பத்திரிகை செய்தி தெரிவிக்கிறது. இதை, மன்னன் குமார் மிஸ்ரா உறுதி செய்துள்ளதாக அச்செய்தி கூறுகிறது. மன்னன் குமார் மிஸ்ரா தமிழக வழக்கறிஞர்களை மட்டும் குறி வைத்து தாக்குவது ஏனோ? இதற்கு பின்புலமாக யார் இருக்கின்றனர் என்பதை தமிழக வழக்கறிஞர்கள் அறிவர்.
உயர் நீதிமன்றம் புதிய விதிகளை உடனே திரும்ப பெறவேண்டும்; பார் கவுன்சில் அனைத்து சஸ்பென்ஷன்களையும் உடனே ரத்து செய்ய வேண்டும். இதுவே நிரந்தர அமைதிக்கான தீர்வாக இருக்கும்.
வழக்கறிஞர் ஆர்.கே.ஆனந்த் யார்?
உச்சநீதிமன்றம், ஆர்.கே.ஆனந்த் வழக்கில் வழங்கிய தீர்ப்பு பற்றி, இன்று தமிழகத்தில் வழக்கறிஞர் மத்தியில் பேசப்படுகிறது. எனவே, அத்தீர்ப்பைப் பற்றி பரிசீலிப்பது அவசியம்; காலத்தின் கட்டாயம். தமிழகத்தில் வழக்கறிஞர்களின் தற்காலிக பணி நீக்கத்தையும், உயர்நீதிமன்றம் ஏற்படுத்தியுள்ள புதிய விதிகளையும், அத்தீர்ப்பின் அடிப்படையில் பரிசீலிக்கலாம். மேற்சொன்ன தீர்ப்பைப் பற்றி பரிசீலிப்பதற்கு முன், யார் இந்த ஆர்.கே.ஆனந்த் என்ற சிறு விபரத்தை தெரிந்து கொள்வது நன்றாக இருக்கும்.
ஆர்.கே.ஆனந்த், டில்லியில் மிக பிரபலமான மூத்த வழக்கறிஞர். மூன்று, இந்திய பிரதமர்கள் அவருக்கு கட்சிக்காரர்கள். அவர்களின் வழக்குகளை நடத்தி வெற்றி பெற்றவர்.
இந்திரா, பிரதமராக இருந்த போது, அவரது மகன் சஞ்சய், 1980-ல், விமான விபத்தில் இறந்தார். அவர் மனைவி மேனகா, நீதிமன்றம் மூலமாக, சஞ்சயின் உயிலின் அடிப்படையில் சொத்து உரிமை கோரினார். அதை எதிர்த்து, இந்திராவுக்காக, டில்லி உயர்நீதிமன்றம் வரை வெற்றிகரமாக வழக்காடியவர் வழக்கறிஞர் ஆர்.கே.ஆனந்த். இந்திராவுக்கு உயில் எழுதிய வழக்கறிஞரும் அவரே. இந்திரா, 1984ல் பிரதமராக இருந்தபோது கொல்லப்பட்டார்; ராஜிவ் பிரதமர் ஆனார். அந்த உயிலின் அடிப்படையில் ராஜிவுக்காக வழக்கு நடத்தியவரும் ஆர்.கே.ஆனந்த் தான்.
அடுத்து, முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ், மூன்று ஊழல் வழக்குகளில் குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்டபோது, அவருக்கு விசாரணை நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை வழக்கு நடத்தி வெற்றி பெற்று தந்தவரும், ஆர்.கே.ஆனந்த் தான். இந்திரா கொல்லப்பட்டதை அடுத்து, சீக்கியர்கள் மேல் நடந்த வன்முறை தாக்குதல் பற்றி அமைக்கப்பட்ட ரங்கநாத் மிஸ்ரா விசாரணை கமிஷன் முன், மத்திய அரசுக்காக ஆஜரான வழக்கறிஞரும் இவரே. மேற்சொன்ன விபரங்கள், ஆர்.கே.ஆனந்த் பிரபல மூத்த வழக்கறிஞராக இருந்தவர் என்பதை தெளிவாக்கும்.
பார் கவுன்சில் உறுப்பினர் மற்றும் தலைவர் மேலும், அவர் டில்லி பார் கவுன்சில் உறுப்பினராக, 25 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தார். இருமுறை, அதன் தலைவராகவும் இருந்தார்.
அரசியல் செல்வாக்கு அவர் மிகுந்த அரசியல் செல்வாக்கும் உடையவர். 2000 மார்ச் மாதம், ராஜ்யசபாவிற்கு ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து தேர்ந்துஎடுக்கப்பட்டார்.
கடந்த 2004-, லோக்சபா தேர்தலில், டில்லி தெற்கு தொகுதியில் காங்., சார்பில் போட்டியிட்டு தோற்றார். மீண்டும், 2014- தேர்தலில் பாரிதாபாத் லோக்சபா தொகுதியில், இந்திய தேசிய லோக்தளத்தின் வேட்பாளராக போட்டியிட்டு தோற்றார். கடந்த ஜூனில் நடந்த ராஜ்யசபா தேர்தலிலும் காங்., ஆதரவுடன் அரியானா மாநிலத்தில் போட்டியிட்டார். காங்., கலக சட்டசபை உறுப்பினர்கள், அவருக்கு ஓட்டு போடாததால் தோற்றுப் போனார்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு : டில்லி உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து, ஆர்.கே.ஆனந்த் பேரில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்தது. அவர் அதை மறுத்து வழக்காடினார். அவர் கடுமையான குற்றம் புரிந்தார் என்று நீதிமன்றம் முடிவுக்கு வந்தது; அவருக்கு தண்டனையும் அளித்தது. அதை எதிர்த்து, அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். மேல்முறையீட்டை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், அவருக்கு அளிக்கப்பட்ட தண்டனை குறைவானது என்றும், அதிக தண்டனையை ஏன் வழங்கக்கூடாது என்று காரணம் காட்டுமாறு அறிவிப்பு அளித்தது. ஆனால், அதிக தண்டனை அளிக்கப்படவில்லை.அவர் செய்த கடும் குற்றம் என்ன, அவருக்கு அளிக்கப்பட்ட தண்டனை என்ன, உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் அளித்த தீர்ப்பு என்ன, அவர் அவமதிப்பு வழக்கிலும், மேல்முறையீட்டு வழக்கிலும் நடந்துகொண்ட முறை என்ன போன்ற விபரங்களை பிரதான செய்தியில் படிக்கவும்.
அரிபரந்தாமன், ஓய்வு பெற்ற நீதிபதி
இ - மெயில்: hariparanthaman@gmail.com
தினமலர் நாளிதழில் 27-07-2016 அன்று வெளியான கட்டுரை
1 comment:
//ஆர்.கே.ஆனந்த் மற்றும் ஐ.யு.கான் சந்தித்து, சாட்சியை பெரும் தொகை கொடுத்து வாங்குவது என்ற நிகழ்ச்சியை, 'என்டிடிவி' சேனல், 2007 மே, 30ம் தேதி ஒளிபரப்பியது. இது டில்லியில் மிகுந்த பரபரப்பை உண்டாக்கியது.// வழக்கு டெல்லி தொடர்பானது அப்ப டெல்லியில் தானே சட்ட திருத்தம் கொண்டுவந்திருக்க வேண்டும் தமிழகம் ஏன்? சட்டம் அணைவருக்கும் சமம் என்றால் நாடு முழுவதற்கும் இந்த திருத்தங்களை அமுல்படுத்துவதை எது தடுத்தது?
Post a Comment
உங்கள் கருத்துகளே எங்களை மேலும் செயல்படத் தூண்டும்.
ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.
அனானி மற்றும் ஆங்கில மறுமொழிகள் நீக்கப்படலாம்!