Monday, April 7, 2014

சாலை விபத்துகளும், அவற்றைத் தடுப்பதற்கான சட்டத் தேவைகளும்..!

இந்த கட்டுரையை நீங்கள் படித்து முடிப்பதற்கு சுமார் 15 நிமிடங்கள் ஆகலாம். இந்த குறுகிய நேரத்திற்குள் இந்தியாவில் 5 பேர் சாலை விபத்துகளில் உயிர் இழந்திருப்பார்கள். தமிழ்நாட்டில் மட்டும் ஒவ்வொரு 3 நிமிடங்களுக்கும் ஒரு சாலை விபத்து நடக்கிறது. ஒவ்வொரு இரண்டு மணி நேரத்துக்கும் 3 பேர் சாலை விபத்தால் கொல்லப்படுகின்றனர். அதிர்ச்சி அடையாதீர்கள். இதுதான் உண்மை.


 இந்தியாவில் சுமார் 33 இலட்சத்து 14 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்திற்கு தேசிய நெடுஞ்சாலைகள் முதல் கிராமப்புற சாலைகள் வரையிலான சாலைகள் உள்ளன. இது உலகில் உள்ள மொத்த சாலைகளில் சுமார் 12 சதவீதம் இருக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்த சாலைகள் மூலமாகவே சுமார் 65 சதவீத பொருள் போக்குவரத்தும், சுமார் 87 சதவீத பயணிப் போக்குவரத்தும் நடைபெறுகின்றன.

கடந்த 2011ம் ஆண்டில் இந்தியாவில் 4,97,686 சாலை விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இதில் சுமார் 1,21,618 விபத்துகளில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த விபத்துகளில் 1,42,485 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 5,11,394 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் அரசின் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. 2011ம் ஆண்டில் தமிழ்நாட்டில்தான் மிக அதிக அளவில், 65,873 விபத்துக்கள் நடந்து அவற்றின் மூலம்  15,422 மரணங்கள் ஏற்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த 2012ம் ஆண்டில் இது மேலும் அதிகரித்து, தமிழ்நாட்டில் நிகழ்ந்த 67,757 விபத்துக்களில் 16,175 பேர் இறந்தனர். இந்தியாவில் நடக்கும் சாலை விபத்துகளில் தமிழ்நாடு கடந்த 10 ஆண்டுகளாக முதலாவது இடத்தில் இருக்கிறது என்பதில் யாரும் மகிழ்ச்சி அடைய முடியாது.

பன்னாட்டு சுகாதார நிறுவனத்தின் கருத்துப்படி இந்தியாவில் ஏற்படும் உயிரிழப்புகளுக்கான காரணங்களில் சாலைவிபத்துகள் ஆறாவது இடத்தில் உள்ளன. இவ்வாறு விபத்தில் சிக்குபவர்களுக்கு உடனடியாக முதலுதவி செய்வது, மருத்துவ சிகிச்சை அளிப்பது உள்ளிட்ட அனைத்துத்துறைகளிலும் நாம் மிகவும் பின் தங்கியே இருக்கிறோம்.

ஒரு சாலை விபத்து நடந்தவுடன் காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு, விபத்து நடந்த இடத்தை சுத்தம் செய்து அவ்வழியே செல்பவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வார்கள். ஆனால் அந்த விபத்தில் சிக்கியவருக்கும், அவரது உற்றார் உறவினருக்கும் அன்றைய நாள் தொடங்கி இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவது உறுதியாகிவிடும்.

 இந்தியாவில் நடக்கும் சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழப்பவர்களில் சுமார் 8 சதவீதம் பேர் நடந்து செல்பவர்கள் என்றும்சுமார் 23 சதவீதம் பேர் இருசக்கர வாகனங்களில் செல்வபர்கள் என்றும், சுமார் 19 சதவீதம் பேர் லாரிகளில் பயணிப்பவர்கள் என்றும் தெரியவருகிறது. இந்த புள்ளிவிபரங்களில் இருந்து இவர்களின் சமூகச்சூழலை புரிந்து கொள்ளலாம்.

இந்த விபத்துகளுக்கான காரணங்களாக பலவற்றைக் கூறலாம். மோசமான பராமரிப்பற்ற சாலைகள், தரக்குறைவான வாகனங்கள் வாகன உதிரிபாகங்கள், தரக்குறைவான வாகன எரிபொருள், தகுதியற்ற வாகன ஓட்டுனர்கள், மோசமான பணிச்சூழல், மதுப்பழக்கம், மக்கள் நெருக்கம், போக்குவரத்து மேலாண்மை குறித்த ஆட்சி செய்வோரின் திட்டமிடாமை, வாகன ஓட்டுனர்களின் பொறுப்பற்ற தன்மை, நடந்து செல்வோரின் விழிப்புணர்வு இல்லாநிலை என ஏராளமான காரணங்களை பட்டியலிடலாம். ஆனால் இவை அனைத்தையும்விட மிகமுக்கியமானது சாலைப் போக்குவரத்தை கட்டுப்படுத்த வேண்டிய சட்டம் மிகவும் பலவீனமாக இருப்பதே!

இந்திய தண்டனைச் சட்டத்தில் உள்ள பிரிவுகள் 279, 304, 336, 337, 338 மற்றும் மோட்டார் வாகனச் சட்டத்தின் சில பிரிவுகள் சாலை விபத்து குறித்து கவனம் செலுத்துகின்றன.

இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 279, பொதுச்சாலையில் அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் வாகனத்தை செலுத்துதல் குறித்து பேசுகிறது. இவ்வாறு வாகனத்தை செலுத்தி வேறொரு மனிதருக்கு உயிரிழப்போ அல்லது காயமோ ஏற்படுத்துபவருக்கு ஆறு மாதங்கள் வரையிலான சிறைத்தண்டனையோ, ஆயிரம் ரூபாய் வரையிலான அபராதமோ அல்லது இவை இரண்டுமோ வழங்கப்படலாம்.

இ. த. ச. பிரிவு 304, அசட்டையினால் மரணம் விளைவித்தல் குறித்து பேசுகிறது. மரணம் ஏற்படுத்தும் நோக்கமின்றி அசட்டையான செயல்பாடுகளால் மரணம் ஏற்படுத்துபவருக்கு இரண்டு ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையோ, அபராதமோ, அல்லது இரண்டுமோ விதிக்கப்படலாம்.

இ. த. ச. பிரிவுகள் 336, 337, 338 ஆகியவை, மற்றவர்களின் உயிருக்கு அல்லது உடலுக்கு ஆபத்து ஏற்படுத்தும் குற்றம், இத்தகைய செயல்பாடுகளால் காயம் அல்லது கொடுங்காயம் ஏற்படுத்தப்படுவது குறித்து விவாதிக்கிறது. இந்தப் பிரிவுகளில் கூட அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

மோட்டார் வாகனச் சட்டத்தின் பிரிவு 184, அபாயகரமாக வாகனத்தை ஓட்டுவது குறித்து கூறுகிறது.பொது மக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும்விதத்தில் வாகனத்தை ஓட்டுபவர், முதல் முறை அத்தவறை செய்யும்போது ஆறு மாதம் சிறையோ, ஆயிரம் ரூபாய் வரையிலான அபராதமோ விதிக்கப்படலாம். அவரே இரண்டாவது முறை அத்தவறை செய்தால் இரண்டாண்டுகள்வரை சிறைத்தண்டனை அல்லது ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

மோட்டார் வாகனச் சட்டத்தின் பிரிவு 185-ன் படி, குடிபோதையில் அல்லது போதை மருந்து பயன்படுத்திய நிலையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு முதல் முறை அந்த தவறை செய்யும்போது ஆறு மாதம் சிறைத்தண்டனை அல்லது ஆயிரம் ரூபாய் வரையிலான அபராதம் அல்லது இரண்டும் வழங்கப்படலாம். அதே தவறு இரண்டாம் முறையாக செய்யப்பட்டால் இரண்டாண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை அல்லது மூன்றாயிரம் ரூபாய் வரையிலான அபராதம் அல்லது இரண்டும் சேர்ந்து வழங்கப்படலாம்.

ஆக மொத்தத்தில் இவை அனைத்தையும் பிணையில் விடத்தகுந்த சிறிய அளவிலான குற்றங்களாகவே சட்டம் கருதுகிறது!

ஒரு குற்றம் நடந்த உடனேயே பிணையும் வழங்கக்கூடிய வகையில் இந்த குற்றங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளதால் சமூகத்தில் தேவையான அளவில் சட்டம் குறித்த அச்ச உணர்வு  இல்லை.

சாதாரண சூழ்நிலைகளில் சாலை விபத்தை ஏற்படுத்தி உயிரிழப்புக்கு காரணமாக இருப்பவர்கள் ஒரு நாள்கூட சிறையில் அடைக்கப்படாமல் தப்பிவிடும் வாய்ப்பு மிகவும் அதிகமாக இருக்கிறது.

சொந்த வாகனங்களை செலுத்தும் பொருள் வசதி கொண்டவர்களும், வசதி படைத்தவர்களின் வாகனங்களை தொழில்முறையாக செலுத்தும் ஓட்டுனர்களும் உரிய வழக்குரைஞர்களின் உதவியுடன் உடனடியாக பிணையில் சென்று விடுகின்றனர். இதற்கு வாய்ப்பில்லாதவர்கள் மட்டுமே இத்தகு குற்றத்திற்காக சிறையில் வாடக்கூடும்.

சாலை விபத்துக்கான சட்டங்கள் கடுமையாக இல்லாத காரணத்தால் சில திட்டமிட்ட கொலைகளும்கூட சாலை விபத்தாக திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

ஆக மொத்தத்தில் சாலை விபத்தில் உயிரையோ, உடல் உறுப்புகளையோ இழக்கும் நபர் மற்றும் அவர் குடும்பத்தினர் சந்திக்கும் அவலங்கள் உரிய கவனத்தை பெறாமலே புறக்கணிக்கப்படுகிறது.

உரிய கவனமின்றி வாகனத்தை செலுத்தி மனித உயிரிழப்புக்கு காரணமாக இருப்பவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டு பிணை கிடைக்கும்வரை குறைந்தபட்ச கால அளவிற்காவது சிறையிலடைக்கப்படும் நிலை உருவானால் நம் நாட்டில் சாலை விபத்துகள் பெருமளவில் குறைந்துவிடும் என நம்பலாம்.

இந்தியாவின் அடிப்படை குற்றவியல் சட்டங்கள் ஆங்கிலேயர் காலத்தில் மெக்காலே என்பவரால் தொகுக்கப்பட்டவை. எனவே குற்றவியல் சட்டங்களை மறு ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட 42வது சட்ட ஆணையம் கடந்த 1971ம் ஆண்டில் அதன் அறிக்கையை அளித்தது. இந்த அறிக்கையில் கொலையாகாத மரணம் ஏற்படுத்தும் குற்றத்திற்கு அதிகபட்சமாக 10ஆண்டுகளும், கவனக்குறைவு காரணமாக உயிரிழப்பு ஏற்படுத்தும் குற்றத்திற்கு அதிகபட்சமாக 5 ஆண்டுகளும் சிறைத்தண்டனை அளிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டது.

மேலும் இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 338ன்படி, மற்றவர்களின் உயிருக்கு அல்லது உடற்பாதுகாப்பிற்கு அபாயம் விளைவிக்கிற செய்கையால் கொடுங்காயம் ஏற்படுத்தும் குற்றத்திற்கு தற்போது வழங்கப்படும் அதிகபட்ச தண்டனையை இரண்டு ஆண்டுகளிலிருந்து மூன்று ஆண்டுகளாக உயர்த்த வேண்டும் என்றும் பரிந்துரை செய்யப்பட்டது.

எனினும் இந்த பரிந்துரைகள் அன்றைய அரசியல் சூழ்நிலை காரணமாக சட்டதிருத்தமாக உருவாகவில்லை.

இதேபோல மோட்டார் வாகன சட்டங்களிலும் திருத்தங்கள் கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

போதைப் பொருளை உட்கொண்டு வாகனம் ஓட்டுபவர் பிடிபட்ட உடன் அந்த இடத்திலேயே மூன்று மாதங்களுக்கு அவரது ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்வது: போதையில் வாகனம் ஓட்டி விபத்தால் ஒருவரின் உயிரிழப்பு ஏற்பட்டால் வாகன ஓட்டுனர் மீது, கொலையாகாத மரணம் ஏற்படுத்தும் (10 ஆண்டு தண்டனைக்குரிய) குற்றம் பதிவு செய்தல் உள்ளிட்ட பல அம்சங்கள் பரிந்துரை செய்யப்பட்ட சட்டதிருத்தத்திற்கான முயற்சிகள் நிலுவையில் உள்ளன.

மேலும் சாலைப் போக்குவரத்து மற்றும் நெருக்கடி மேலாண்மை வாரியம் அமைத்தல், தேசிய சாலை போக்குவரத்து கொள்கை உருவாக்குதல் ஆகிய திட்டங்களும்கூட நிலுவையில் உள்ளன.

மேற்கூறப்பட்ட பரிந்துரைகள் இந்திய அளவில் அளிக்கப்பட்டிருந்தாலும் நமது அண்டை மாநிலங்களான கேரளாவும், கர்நாடகாவும் இந்த பரிந்துரைகளில் உள்ள சில அம்சங்களை நடைமுறைப்படுத்தும் பணியை தொடங்கியுள்ளன.

இந்நிலையில் மத்திய சட்ட ஆணையம் சார்பில் சாலை விபத்துகளை குறைப்பது குறித்து ஆய்வு செய்வதற்காக மேலும் ஒரு குழு அமைக்கப்பட்டு அந்தக்குழுவின் அறிக்கை கடந்த 2009ம் ஆண்டில் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்திய தண்டனை சட்டத்தின் 304வது பிரிவில் புதிய உட்பிரிவை சேர்க்க வேண்டும். அதில் வரதட்சணை மரணங்களுக்கு வழங்கப்படும் கூடுதல் தண்டனையைப் போல், பொறுப்பற்ற முறையிலும், முரட்டுத்தனமாகவும் வாகனத்தை செலுத்தி மற்றவரின் உயிரிழப்புக்கு காரணமாக இருப்பவர்களுக்கு ஏழு ஆண்டுகளை வரை சிறைத்தண்டனை வழங்க வேண்டும். 338வது பிரிவின்படி உரிய கவனமின்றி செயல்பட்டு மற்றவர்களுக்கு கொடுங்காயம் ஏற்படும் வகையில் நடந்து கொள்பவர்களுக்கு தற்போது வழங்கப்படும் இரண்டு ஆண்டுகள் தண்டனையை (உடனே பிணையில் விடமுடியாதவாறு) மூன்று ஆண்டுகளாக உயர்த்த வேண்டும். இதே தவறு இரண்டாம் முறையாக செய்யப்பட்டால் அதிக பட்ச தண்டனையாக 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை இந்தக்குழு பரிந்துரை செய்துள்ளது.

இந்தக்குழுவின் பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்டு சுமார் 5 ஆண்டுகள் நிறைவடையும் நிலையிலும் இவற்றை சட்டத்திருத்தங்களாக்கும் முயற்சிகள் தொடங்கப்படவே இல்லை.

இதற்கான காரணங்களாக இரண்டு அம்சங்களை கூறலாம். முதலாவது, சாலை விபத்துகளில் மிக அதிகமாக உயிரிழப்பவர்கள் ஏழை மற்றும் சாமானிய மக்களே. இரண்டாவது, சாலை பாதுகாப்பை வலியுறுத்துவதற்கு பன்னாட்டு நிறுவனங்களோ, அமைப்புகளோ ஆர்வம் காட்டவில்லை.

இந்தியாவில் முதலீடு செய்யும் பன்னாட்டு வணிக நிறுவனங்களின் நலன்களை பாதுகாப்பதில் காட்டும் ஆர்வத்தில் எள்முனையளவு ஆர்வத்தைகூட குடிமக்களின் நலன்களை பாதுகாப்பதில் இந்திய அரசு காட்டுவதில்லை என்பதே உண்மை. இந்நிலையில் சாலை பாதுகாப்பு குறித்த இந்த அம்சங்கள் இந்திய அரசின் முன்னுரிமையில் இல்லை என்பதை உணர வேண்டும்.

சாலை விபத்திற்கான காரணங்களில் மோசமான பராமரிப்பற்ற சாலைகள், தரக்குறைவான வாகனங்கள் வாகன உதிரிபாகங்கள், தரக்குறைவான வாகன எரிபொருள் போன்றவையும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை. ஆனால் இவற்றை உறுதி செய்ய வேண்டிய அரசு இவற்றில் கவனம் செலுத்துவதே இல்லை. சாலை பாதுகாப்புக்கான முழுப்பொறுப்பும் மக்களிடமே முழுமையாக உள்ளது போன்ற தவறான கருத்தைப் பரப்பும் பணியிலேயை அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அரசு மற்றும் அரசு சார் அமைப்புகளையும், தனியார் வணிக நிறுவனங்களையும் எந்த விதத்திலும் தொந்தரவு செய்யாமல் இருக்க விரும்பும் ஆட்சியாளர்கள் குடிமக்கள் மீதே அனைத்து பொறுப்புகளையும் சுமத்துகின்றனர். இதை முழுமையாக ஏற்கவோ, ஆதரிக்கவோ இயலாது என்றாலும், சாலை விபத்துகளை தடுப்பதற்கும், தவிர்ப்பதற்கும் சட்டங்களை கடுமையாக்கி, தவறு செய்தவர்கள் யாரும் தண்டனையிலிருந்து தப்பிவிட முடியாது என்ற நிலையை ஏற்படுத்தலாம்.

சாலைவிபத்து குற்றங்களுக்கு உரிய தண்டனையை கடுமையாக்குவதற்கு கூடுதல் செலவுகள் ஏற்பட வாய்ப்பில்லை. எனவே பொருளாதார பிரச்சினைகள் காரணமாக இந்தப்பணியை ஆட்சியில் இருப்பவர்கள் தள்ளிப்போட வாய்ப்பில்லை. மக்களின் நல்வாழ்வு மீது அக்கறையில்லாத காரணத்தாலேயே இதுபோன்ற சட்டத்திருத்தங்களை அரசு அமைப்புகள் கிடப்பில் போட்டுவைத்து விடுகின்றன.

 இந்நிலையை மாற்றியமைப்பதிலும், சாலை விபத்துகளை தடுப்பதற்கு வழி காணும் சட்டதிருத்தங்களை உடனேசெய்யுமாறு அரசை வலியுறுத்துவதிலும் சமூகம் மீது பற்று கொண்ட அனைவரும் செயல்பட வேண்டும்.

            -சுந்தரராஜன்
(E-Mail: gmail@LawyerSundar.com)

4 comments:

Anitha Manohar said...

நிறைய தெரிந்துகொண்டேன். நன்றி.

Advocate P.R.Jayarajan said...

நீண்ட நாட்களுக்கு பிறகு தங்கள் வலைப்பக்கத்தில் தாங்கள் எழுதிய ஒரு முக்கியமான கட்டுரையை வாசித்தேன்.

அருமையான அலசல். பல்வேறு புள்ளி விவரங்கள் கட்டுரையின் தீவிரத்தை காட்டுகின்றது.

சாலை விபத்திற்கு நிறைய காரணங்கள் சொல்லலாம்.

எதை காரணமாக சொன்னாலும், மக்களின் அவசர உணர்வு, தனது வாகன ஓட்டத்தின் அதீத நம்பிக்கை, தவறாக தீர்மானித்தல், அசட்டை, தகாத துணிவு ஆகியன விபத்திற்கு பெரிதும் காரணமாக அமைகின்றன.

கொலைச் செயலில் ஒருவனின் உயிர் போகின்றது. அதே நேரத்தில் சாலை விபத்திலும் உயிர் போகின்றது. அதற்கு குற்றவாளிக்கு மரண தண்டனை கூட விதிக்க முடியும். ஆனால் இங்கு விபத்து இழைத்தவருக்கு அபராதம் அல்லது சொற்ப மாதங்கள் சிறைத்தண்டனை மட்டும் விதிக்கப்படுகின்றது. காரணம் இது விபத்து. எனவே ஒரு கொலையை விபத்தாக செய்து விட்டால் ? பெரும் தண்டனையிலிருந்து தப்பி விடலாமே.. ! இது சட்டத்தில் உள்ள ஓட்டை. மற்றொன்று, இழப்பீடு கொடுக்க காப்பீட்டு நிறுவனம் காத்து நிற்கின்றது. இது மற்றொரு சலுகை.

இலகு ரக, கன ரக வாகன ஓட்டிகள் - அவர்கள் யாராக இருந்தாலும், விபத்து செய்து விட்டால், கடும் தண்டனை உண்டு என்ற அளவில் இ.த.ச. திருத்தப்பட வேண்டும். நீதிமன்றம் நிர்ணயிக்கும் இழப்பீட்டில் 40 சதம் விபத்து ஏற்படுத்திய வாகன உரிமையாளரும் கொடுக்க வேண்டும். வழக்கு முடிந்து அவர் தனது 40 சதம் இழப்பீடு பணம் தரும் வரை, அவரது வாகனம் நீதிமன்ற பற்றுகையில் இருக்க வேண்டும். வாகன உரிமை பெயர் மாற்றம் செய்வதன் மீது வட்டார போக்குவரத்து கழகம் தடை விதிக்க வேண்டும். ஓட்டுனர் உரிமம் இரத்து செய்யப்பட வேண்டும்.

"கன்னா.. பின்னா.." என்று வாகனம் ஓட்டுபவர்களுக்கு இப்படி "கன்னா.. பின்னா.." என்று சில சட்ட நெருக்கடிகளும், அச்சுறுத்தல்களும் இருந்தால்தான் விபத்து குறையும். விபத்தில் அடிபட்டவன் போல, விபத்து செய்தவனும் தொடர் மன வேதனை, உளைச்சலில் இருக்க வேண்டும்.

சுருங்கச் சொன்னால் மனு நீதிச் சோழன் கொடுத்த தண்டனை போல கூட இருக்கலாம்.....!!

விபத்து, போக்குவரத்து, சட்டம், தண்டனை ஆகியன மீது மக்களுக்கு அரசு ஏற்படுத்திய விழிப்புணர்வு போதாது.

தங்கள் கட்டுரை ஒரு நல்ல திருப்பத்தை ஏற்படுத்தட்டும்.

Advocate P.R.Jayarajan said...

நீண்ட நாட்களுக்கு பிறகு தங்கள் வலைப்பக்கத்தில் தாங்கள் எழுதிய ஒரு முக்கியமான கட்டுரையை வாசித்தேன். அருமையான அலசல். பல்வேறு புள்ளி விவரங்கள் கட்டுரையின் தீவிரத்தை காட்டுகின்றது.

சாலை விபத்திற்கு நிறைய காரணங்கள் சொல்லலாம்.

எதை காரணமாக சொன்னாலும், மக்களின் அவசர உணர்வு, தனது வாகன ஓட்டத்தின் அதீத நம்பிக்கை, தவறாக தீர்மானித்தல், அசட்டை, தகாத துணிவு ஆகியன விபத்திற்கு பெரிதும் காரணமாக அமைகின்றன.

கொலைச் செயலில் ஒருவனின் உயிர் போகின்றது. அதே நேரத்தில் சாலை விபத்திலும் உயிர் போகின்றது. அதற்கு குற்றவாளிக்கு மரண தண்டனை கூட விதிக்க முடியும். ஆனால் இங்கு விபத்து இழைத்தவருக்கு அபராதம் அல்லது சொற்ப மாதங்கள் சிறைத்தண்டனை மட்டும் விதிக்கப்படுகின்றது. காரணம் இது விபத்து. எனவே ஒரு கொலையை விபத்தாக செய்து விட்டால் ? பெரும் தண்டனையிலிருந்து தப்பி விடலாமே.. ! இது சட்டத்தில் உள்ள ஓட்டை. மற்றொன்று, இழப்பீடு கொடுக்க காப்பீட்டு நிறுவனம் காத்து நிற்கின்றது. இது மற்றொரு சலுகை.

இலகு ரக, கன ரக வாகன ஓட்டிகள் - அவர்கள் யாராக இருந்தாலும், விபத்து செய்து விட்டால், கடும் தண்டனை உண்டு என்ற அளவில் இ.த.ச. திருத்தப்பட வேண்டும். நீதிமன்றம் நிர்ணயிக்கும் இழப்பீட்டில் 40 சதம் விபத்து ஏற்படுத்திய வாகன உரிமையாளரும் கொடுக்க வேண்டும். வழக்கு முடிந்து அவர் தனது 40 சதம் இழப்பீடு பணம் தரும் வரை, அவரது வாகனம் நீதிமன்ற பற்றுகையில் இருக்க வேண்டும். வாகன உரிமை பெயர் மாற்றம் செய்வதன் மீது வட்டார போக்குவரத்து கழகம் தடை விதிக்க வேண்டும். ஓட்டுனர் உரிமம் இரத்து செய்யப்பட வேண்டும்.

"கன்னா.. பின்னா.." என்று வாகனம் ஓட்டுபவர்களுக்கு இப்படி "கன்னா.. பின்னா.." என்று சில சட்ட நெருக்கடிகளும், அச்சுறுத்தல்களும் இருந்தால்தான் விபத்து குறையும். விபத்தில் அடிபட்டவன் போல, விபத்து செய்தவனும் தொடர் மன வேதனை, உளைச்சலில் இருக்க வேண்டும்.

சுருங்கச் சொன்னால் மனு நீதிச் சோழன் கொடுத்த தண்டனை போல கூட இருக்கலாம்.....!!

விபத்து, போக்குவரத்து, சட்டம், தண்டனை ஆகியன மீது மக்களுக்கு அரசு ஏற்படுத்திய விழிப்புணர்வு போதாது.

தங்கள் கட்டுரை ஒரு நல்ல திருப்பத்தை ஏற்படுத்தட்டும்.

Unknown said...

சட்டம் கடுமையாக இருந்தால் தான் குற்றங்கள்

Post a Comment

உங்கள் கருத்துகளே எங்களை மேலும் செயல்படத் தூண்டும்.

ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.

அனானி மற்றும் ஆங்கில மறுமொழிகள் நீக்கப்படலாம்!