Tuesday, November 1, 2011

குடி, குடிமக்கள், சட்டம்

‘குடி’யின் கெடுதல் குறித்து, தமிழ் சமூகத்தில் எவருக்கும் கட்டுரை எழுதி புரிய வைக்கவேண்டிய அவசியம் இல்லை. ஆனால் இன்று தமிழகத்தில், பத்து விழுக்காடு மக்கள் அதாவது ஏழரை லட்சம் மக்கள் தினமும் மது அருந்துகின்றனர் என்றும், மேலும் 13 வயது பள்ளி மாணவர்களும் கூட மது அருந்துவதாகவும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஏழை மக்களின் வாழ்வில் ஒளியேற்றி வைக்க வேண்டிய நமது ஆட்சியாளர்கள், குடும்பத்தலைவனை குடி பழக்கத்திற்கு அடிமையாக்கி அந்த குடியானவனைக் கொன்றுவிட்டு, அதன் மூலமாகக் கிடைக்கும் வருவாயைக்கொண்டு, அவனது மனைவிக்கு விதவை உதவித்தொகை வழங்கி வருகின்றனர். இப்படியாக ஒரு நாட்டின் குடிமக்கள், அவர்களின் ஆட்சியாளர்களால் திட்டமிட்டு போதைக்கு அடிமையாக்கப்பட்டு வருகின்றனர் என்பது கண்கூடு.

இந்திய அரசியலமைப்பு சாசனத்தில் மது விலக்கு:

“உணவு சத்துக்களை மேம்படுத்தவும், அடிப்படை வாழ்க்கை வசதிகளைப் பெருக்கவும், நல்வாழ்வினை உயர்த்தவும், தேவையானவற்றைத் தமது தலையாய கடமைகளாக அரசு கருத வேண்டும். அதிலும் குறிப்பாகப் போதையூட்டும் மதுவகைகளையும், உடலுக்குத் தீங்கு பயக்கும் நச்சுப் பொருள்களையும், மருந்துக்காக அன்றி வேறுவிதமாகப் பயன்படுத்துவதைத் தடை செய்வதற்காக மதுவிலக்கை அமல்படுத்த முயற்சி செய்யவேண்டும்.” என்று இந்திய அரசியலமைப்பு சாசனம், 1950ல் ‘அரசின் நெறியுறுத்தும் கொள்கைகள்’ என்ற தலைப்பின் கீழ் அமைந்துள்ள, பிரிவு 47 கூறுகிறது.

மது விலக்கு: 

போதை தரக்கூடிய, மது வகைகளை உற்பத்தி செய்வதற்கும், விற்பனை செய்வதற்கும், அதனை அருந்துவதற்கும் சட்டப்படி தடை செய்தல் முறையே மது விலக்கு என குறிப்பிடப்படுகிறது. 

 தமிழ் சமூகத்தில் தனி மனித வாழ்க்கையில் பெரும் ஒழுக்கக்கேடுகளாகக் கருதப்படுகின்றவற்றில் மது பழக்கமும் ஒன்று. 

பௌத்த மதத்தைப் பின்பற்றுவோர் கடைபிடிக்கும் ‘’பஞ்ச சீலம்’’ என அழைக்கப்படும் ஐந்து கொள்கைகளில், நான்காவது கோட்பாடானது, மதுவையோ அல்லது வேறு வகையான போதை பொருட்களையோ பயன்படுத்தக் கூடாது என்பதாகும்.

உலக பொதுமறையாம் ‘திருக்குறளில்”, அறத்துப்பால் எனும் தலைப்பில் இயற்றப்பட்டுள்ள குறள்களில் 93வது அதிகாரமாக “கள்ளுண்ணாமை” குறித்து அய்யன் வள்ளுவரால் பாடப்பட்டுள்ளது..

மது விற்பனையின் மூலமாகக் கிடைக்கும் வருவாயினை, ஒரு நாட்டின் கல்வி மற்றும் பொது சேவைக்குப் பயன்படுத்துவது குற்றம். மேலும் மது விற்பனையின் மூலமாக பெறப்படும் பணமானது கறை படிந்த ஒன்று. எனவே அது தேசத்தைச் சீரழித்துவிடும் என்று இந்தியாவின் தேசத்தந்தையாகப் போற்றப்படும், மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி எச்சரித்தார்.

மது விலக்கை வலியுறுத்தி ராஜாஜி “விமோசனம்” என்ற பெயரில் இதழ் ஒன்றை நடத்தினார்.

தந்தை பெரியார், 1921ம் ஆண்டில் ஈரோட்டில் நடந்த கல்லுக்கடை மறியல் போராட்டத்தில் பங்குபெற்றதோடு மட்டுமின்றி, அதனைத்தொடர்ந்து, சேலம் மாவட்டத்தில் தனக்குச் சொந்தமாக தாத்தம்பட்டியிலுள்ள தோப்பிலிருந்த ஐநூறு தென்னை மரங்களையும் வெட்டினார்.

தமிழ்நாட்டில் மது விலக்கு:

ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தின் போது, கடந்த 1937ம் ஆண்டில் ராஜாஜியின் ஆட்சியின்போது “தமிழ்நாடு மது விலக்கு சட்டம்” என்றொரு சட்டம் இயற்றப்பட்டு தமிழகத்தில் மது விலக்கு அமலுக்கு வந்து விட்டது. இப்படியாக, இந்தியாவில் மதுவிலக்கு கொண்டு வந்ததற்கு முன்னோடியாகத் திகழ்ந்தது தமிழ்நாடு. கடந்த, 1952ம் ஆண்டு அப்போதைய சென்னை மாகாணத்தில் முழு மது விலக்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது ராஜாஜி முதல்வராக இருந்தார். பின்னர், காமராஜர் ஆட்சி காலத்திலும், 1967ம் ஆண்டு அண்ணா முதல்வரான பிறகும்கூட தொடர்ந்து மது விலக்கு அமலில் இருந்தது.

தமிழ்நாட்டில் மது விலக்கு நீக்கம்:

சுதந்திர இந்தியாவில் தமிழ்நாட்டிலும், குஜராத் மாநிலத்திலும் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் மதுவிலக்கை மற்ற மாநிலங்களுக்கும் பரவலாக்கும் நோக்கத்தில் மத்திய அரசானது, புதிதாக மதுவிலக்கை அமல்படுத்தும் மாநிலங்களுக்கு மானியம் வழங்கப்படும் என்றும், ஆனால் ஏற்கனவே மதுவிலக்கை அமல்படுத்திவரும் மாநிலங்களுக்கு மானியம் ஏதும் வழங்கப்படமாட்டாது என்றும் 1970ம் ஆண்டில் அறிவித்தது. ஏற்கனவே மதுவிலக்கை அமல்படுத்திவரும் மாநிலங்களுக்கு இப்படி தண்டனை அளிப்பதா? எங்களுக்கும் மானியம் கொடுங்கள், என்று அப்போது தமிழக முதல் அமைச்சராக இருந்த கருணாநிதி, மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தபோதும் அது ஏற்கப்படாததைத் தொடர்ந்து, அவரது ஆட்சியின் போது, 1971 ஆகஸ்டு மாதம் 30ம் நாள் முதல், மதுவிலக்கு தள்ளி வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 

மது விலக்கை நீக்கும் அவசர சட்டம்: 

தமிழ்நாட்டில் மதுக்கடைகளைத் திறப்பதற்கு வழிவகுக்கும் வகையில் ‘’தமிழ்நாடு மது விலக்கு சட்டம்,1937 அமல்படுத்தப்படுவது அடியோடு நிறுத்தி வைக்கப்படுகிறது என்றும், அரசியல் சாசனத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது’’ என்றும் கூறி, அவசர சட்டம் ஒன்றை கடந்த 1971ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 30ம் நாள், சட்டசபை கூட்டம் கூட்டப்படாமலேயே, அப்போதைய ஆளுனர் கே.கே.ஷா பிறப்பித்தார். மேலும், தமிழ்நாட்டில் திட்டமிட்டபடி கள்ளுக்கடைகள் திறக்கப்படும். கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கருணாநிதி அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் கள்ளுக்கடைகள், சாராயக்கடைகள், ஒயின் மற்றும் மது கடைகள் திறக்கப்பட்டன. மாநிலம் முழுவதும் 7,395 கள்ளுக்கடைகளும், 3,512 சாராயக் கடைகளும் திறக்கப்பட்டன. சென்னை நகரில் 120 ஒயின் மற்றும் மது கடைகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டது. பிற மாவட்டங்களில் தலா 60 முதல் 100 கடைகள் வரையிலும் திறக்கப்பட்டன. 

 மீண்டும் மது விலக்கு: 

1973ம் ஆண்டு செப்டம்பரில் மீண்டும் மதுவிலக்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன் முதல் படியாக, 1973 ஜுலை 30ம் நாள் முதல் 7 ஆயிரம் கள்ளுக்கடைகளும், 1974 செப்டம்பர் 1ஆம் தேதி சாராயக் கடைகளும் தமிழ்நாட்டில் மூடப்பட்டன. 1981ம் ஆண்டில் மே மாதம் கள் மற்றும் சாராயத்தை உரிமத்துடன் விற்பனை செய்யலாம் என்று கூறப்பட்டது. 1984 வரையிலும், மதுபானங்களைத் தயாரிக்கும் உரிமம் தனியார் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டது. 1983ம் ஆண்டில் ஜுலை மாதம் “தமிழ்நாடு மாநில வாணிப கழகம்”(TASMAC) நிறுவனம் உருவாக்கப்பட்டு, அந்த நிறுவனமானது, இந்தியாவில் தயாரிக்கப்படும் அயல்நாட்டு மதுபானங்கள் மற்றும் சாராயத்துக்கான மொத்த விற்பனைக்கு பொறுப்பேற்றுக் கொண்டது.

மது விலக்கு சட்ட திருத்தம், 2003: 

‘’தமிழ்நாடு மது விலக்கு சட்டம், 1937ல், கடந்த 29.11.2003 அன்று, அப்போதைய ஜெயலலிதா ஆட்சியின் போது, மது தொடர்பாக சில்லறை விற்பனை செய்வதற்கும் அதிகாரம் பெற்ற ஒரே முற்றுரிமையாளராக, “தமிழ்நாடு மாநில வாணிப கழகம்” (TASMAC) மட்டுமே விளங்கும் என்று சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. அடுத்து 2006ல் பொறுப்பேற்ற கருணாநிதி ஆட்சியின் போதும் அதேநிலைதான் தொடர்ந்தது. 

மது விலக்கு கோரி வேண்டுகோள்:

கடந்த 2008ம் ஆண்டு, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள், பிரதிநிதிகள், அப்போதைய முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து தமிழகத்தில் மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்கள். அவர்களது கோரிக்கையை பரிசீலித்து படிப்படியாக மது விலக்கை நிறைவேற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்குமென்றும், 2006 மற்றும் 2007ம் ஆண்டுகளில் மட்டும் தமிழகம் முழுவதிலும் 1,300 மதுக் கூடங்களும், 128 சில்லரை விற்பனைக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. மேலும் தமிழகத்தில், படிப்படியாக முழு மது விலக்கினை எய்திடும் வகையில், முதற்கட்டமாக இனி புதிய மதுக்கடைகள் எதையும் தமிழகத்தில் திறப்பதில்லை என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஆனால் தமிழகத்தில் ஏற்கனவே 6 சாராய ஆலைகளுக்கு மட்டுமே அனுமதி இருந்த நிலையில் தற்போது மேலும் 8 ஆலைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக அமைச்சரவையின் கருத்து:

டாஸ்மாக்கினால் ஆண்டுக்கு 14000 கோடி வருமானம் வருகிறது. டாஸ்மாக்கை மூடினால், இந்த வருமானம் சமூக விரோதிகளுக்குப் போய்ச் சேர்ந்துவிடும். அதேவேளையில், இந்த வருமானத்தை ஈடு செய்யும் வகையில் மத்திய அரசு நிதி ஒதுக்கினால், மாநில அரசு அவற்றை மூடுவதற்குத் தயார். தமிழகத்தில் இருந்த கள்ளசாராய வியாபாரிகள் பெருமளவில் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இதனால் மாநிலத்தில் சாராயம் விற்பனை முழுமையாக ஒழிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் அண்டை மாநிலங்களில், மதுவிற்பனை நடக்கும் நிலையில், தமிழகத்தில் மட்டும் மதுவிலக்கை அமல்படுத்த முடியாது. அப்படி செய்தால் தமிழகம் தனித்தீவு போல காட்சியளிக்கும். மேலும், கள்ளச்சாராயமும், மதுவிற்பனையும் நடக்க வழிவகுக்கும். தமிழகத்தோடு சேர்ந்து, அண்டை மாநிலங்களும் மதுவிலக்கை அமல்படுத்தினால் அது பூரண மதுவிலக்கிற்கான வெற்றியை தரும் என்றும் தமிழ்நாட்டின், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், கடந்த ஆகஸ்ட் 12 ஆம் நாள் சட்டமன்றத்தில் கூறியுள்ளார். 

மது விலக்கு அமலுக்கு வந்தால் கள்ள சாராயம் பெருகும் என்பது ஆட்சியாளர்களால் முன் வைக்கப்படும் வாதங்களில் ஒன்று. ஆனால் மது விலக்கு அமலில் இல்லாத தற்போது, கடந்த ஏப்ரல் 25, 2011ல், தமிழக அரசு கொடுத்த செய்தி அறிக்கையின் படி, தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடத்தப்பட்ட தொடர் மது விலக்கு சோதனையில் 1,057 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 134 பெண்கள் உள்பட 1,002 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் படி பார்த்தால், கள்ள சாராயம் எல்லா காலத்திலும் காய்ச்சப்படுகிறது என்பது புலனாகிறது. 

தமிழ் சினிமாவில் மது விலக்கு: 

1980களில் உன்னால் முடியும் தம்பி, பேர் சொல்லும் பிள்ளை, பொன்மனச் செல்வன் என்பது போன்ற பல்வேறு தமிழ் திரைப்படங்கள் மது விலக்கு தொடர்பாக தயாரிக்கப்பட்டுள்ளது. 

மதுவினால் விளையும் தீமைகள்: 

மது அருந்தியதால் ஏற்பட்ட போதையில் தன் மகளிடமே தகாத முறையில் நடந்த தந்தை, தன் மருமகளிடம் மது போதையில் மதிகெட்டு நடக்கும் மாமனார், தனக்கு மது அருந்த பணம் தரவில்லை என்ற ஒரே காரணத்திற்காக பெற்ற தாயைக் கொலை செய்ய துணிந்த மகன், நாட்டில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய காவல் துறையினரே மது அருந்திவிட்டு, பொது இடத்தில் கட்டிபுரண்டு சண்டை, தமிழகத்தில் நிகழும் சாலை விபத்துகளில் 60 விழுக்காடு மது அருந்திவிட்டு வாகனத்தை இயக்குவதால் தான் என்கிறது புள்ளிவிபரம்.....இப்படி மது பழக்கம் கருவையே கருவருக்கின்றது. 

 “மது நாட்டுக்கும், வீட்டுக்கும், உயிருக்கும், உடலுக்கும் கேடு” என்று பள்ளி பாட புத்தகங்களில் அச்சடிக்கப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது. இதைப்படிக்கும் மாணவன் பள்ளியை விட்டு வெளியே வந்தால் அங்கு தென்படுவது டாஸ்மாக் கடை. என்னவொரு விந்தை? அதேபோல, குடி குடியைக் கெடுக்கும்” என்ற தமிழ் பழமொழியானது, அனைத்து மது புட்டிகளிலும் அச்சடிக்கப்பட்டு அரசால் விநியோகிக்கப்படுகிறது. போதாததற்கு, திரைப்படங்களில் மது அருந்தும் கட்சிகளின் போது, இதே வாசகம் ஒளிபரப்பப்படுகிறது. இதையெல்லாம் காணும்போது நகைச்சுவை எண்ணம் தான் மேலேழுகிறதேதவிர, “குடி” குறித்த விழிப்புணர்வு எண்ணம் ஏதும் தோன்றுவதில்லை. ஒரு நாட்டின் மண்ணின் மைந்தன், தன்னை அந்த நாட்டின் “குடிமகன்” என்று பெருமையாகச் சொல்லிக்கொள்ள முடியாத வகையில், இங்கே “குடிமகன்” என்ற வார்த்தைக்கு அர்த்தமே மாறிப்போய் உள்ளது.


மது விற்பனை செய்வது தனது அடிப்படை உரிமை என்று எவரும் கோர முடியாது என்றும், சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தொலைவிற்குள் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது என்ற வாதத்தை, பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் சூழலில் எடுக்க முடியாது என்பது போன்ற தீர்ப்புகளை நீதிமன்றங்கள் தொடர்ந்து வழங்கி வந்தாலும், மது விலக்கு தொடர்பான சரத்தானது, இந்திய அரசியலமைப்பு சாசனத்தில், ‘அரசின் நெறியுறுத்தும் கொள்கைகள்’ என்ற தலைப்பின் கீழ் அமைந்துள்ளதால், அது தொடர்பாக முடிவெடுக்க வேண்டியது அந்தந்த மாநிலங்கள் மட்டுமே. இதனால் இதில் நீதிமன்றங்களால் தலையிட முடியாத சூழலே நிலவுகிறது. ஆரம்பக் கல்வி வழங்க வேண்டியது, எப்படி அரசின் நெறியுறுத்தும் கொள்கைகள் என்பதிலிருந்து, அடிப்படை உரிமைக்கு மாற்றப்பட்டதோ அதேபோல, மது விலக்கும் அடிப்படை உரிமைக்கு மாற்றப்பட வேண்டியது இன்றியமையாத ஒன்றாகும். பூரண மது விலக்கு மட்டுமே ஒரு நாட்டைத் துடிப்புடன் வைத்திருக்க முடியும்.

-- இ.இ.இராபர்ட் சந்திரகுமார்

2 comments:

Jafar ali said...

//பூரண மது விலக்கு மட்டுமே ஒரு நாட்டைத் துடிப்புடன் வைத்திருக்க முடியும்.//

உண்மையான வார்த்தைகள்! ஆட்சியாளர்கள் செவிமடுப்பார்களா?

ganesh said...

மனிதா!நீ பார்த்து திருந்தாவிட்டால், உன்னைத் திருத்த யார் இருக்க இந்த உலகில். 'உன்னால் முடியும் தோழா''

Post a Comment

உங்கள் கருத்துகளே எங்களை மேலும் செயல்படத் தூண்டும்.

ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.

அனானி மற்றும் ஆங்கில மறுமொழிகள் நீக்கப்படலாம்!