தமிழ்நாட்டில் உயர்நீதிமன்றத்தைத் தவிர மற்ற நீதிமன்றங்களில் தமிழ் அலுவல் மொழியாக பயன்படுத்தப்படுகிறது. அதாவது வழக்கு தொடுப்பது, வழக்கு மறுப்பது, விசாரணை நடைமுறைகள், தீர்ப்பு வழங்கல் உள்ளிட்ட அனைத்தும் தமிழில் நடைபெறலாம் – நடைபெறுகிறது. இதனால் யாரும் பாதிக்கப்பட்டதாக இதுவரை செய்திகள் இல்லை
.
.
ஆனால் உயர்நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக பயன்படுத்துவதில் பல சர்ச்சைகள் உள்ளன. இது குறித்து பெரும்பாலான நீதிபதிகளும், உயர் குலத்தோர் என்று குறிப்பிடப் படுபவர்களும், மூத்த வழக்கறிஞர்களும் பொருள் பொதிந்த மவுனம் சாதிக்கின்றனர். மத்திய, மாநில அரசுகளின் முன்னுரிமை பட்டியலில் தமிழை நீதிமன்ற மொழியாக அங்கீகரிப்பது இல்லை என்பது நிரூபணம் ஆகிவிட்டது.
அரசியல் பார்வையற்ற சராசரி குடிமகனுக்கு மேற்கூறப்பட்ட வாக்கியம் அதிர்ச்சி அளிக்கலாம். தமிழாய்ந்த முதல் அமைச்சருக்கு, தமிழை நீதிமன்ற மொழியாக்குவதில் தடை என்ன இருக்கக்கூடும் என்ற கேள்வி எழலாம். உச்ச நீதிமன்றமும், மத்திய அரசும் ஏற்காத ஒரு பிரச்சினைக்கு தமிழக அரசை குற்றம் சாட்டுவது பொருத்தமற்றது என்ற எண்ணமும் வரலாம். ஆனால் அது முழுமையான சிந்தனையாகாது.
எந்த ஒரு அரசிலும், அதை மக்கள் நேயமுள்ள ஒரு தலைவர் வழி நடத்தினாலும் அந்த ஆட்சியில் சிலர் பாதிக்கப்படுவது இயல்பானதே! அவ்வாறு பாதிக்கப்படுபவர்கள் தங்கள் குறைபாடுகளை ஆட்சியில் இருப்பவர்களுக்கு ஏதோ ஒரு வழியில் எடுத்துச் சொல்லி தீர்வு காண்பது மக்களாட்சியின் வரம்புக்குள் அடங்கும் அம்சமே ஆகும்.
காமராஜர், அண்ணாதுரை போன்ற தலைவர்கள் ஆட்சியில் இருந்தபோது பாதிக்கப்பட்ட மக்களின் நிலை குறித்து ஊடகங்களில் செய்தி வெளியானாலோ, மக்கள் பிரதிநிதிகள் எடுத்துக்கூறினாலோ அந்த பிரசினைகளை தீர்க்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அவ்வாறு தீராத பிரசினைகளுக்காக பாதிக்கப்பட்டவர்கள் போராடினால் அதையும் இயல்பாக ஏற்றுக்கொண்டு அந்தப் பிரசினையை தீர்க்க முயலும் பக்குவம் அந்த தலைவர்களுக்கு இருந்தது.
அண்மைக்கால ஆட்சிகளிலோ மக்களின் எந்த நியாயமான கோரிக்கைகளும் போராட்ட வடிவம் எடுக்கும் வரை கேட்காமலே புறக்கணிக்கும் போக்கு நிலவுகிறது. எனவே தவிர்கக இயலாமல் நடக்கும் போராட்டங்களையும் அரசின் கவனத்தை ஈர்க்கும் நிகழ்வாக கருதாமல், தமது ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரும் நிகழ்வாக ஆட்சியாளர்கள் கருதுவதும், அதனால் கதிகலங்கி போராட்டங்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க முனைவதும் வாடிக்கையாகி வருகிறது. மக்களுடைய போராட்டங்கள் குறித்த செய்திகளை ஊடகங்கள் வெளியிடாமலிருக்கும் வகையில் ஊடக நிறுவனங்கள் சரிக்கட்டப் படுகின்றன. எதிர்க் கட்சிகள் வெளியிடும் கோரிக்கைகள் திட்டமிட்டு திசை திருப்பப்படுகின்றன. அரசின், ஆட்சியாளர்களின் புகழ்பாடும் கருத்துகளே ஊடகங்கள் மூலமாக மக்களிடம் கொண்டு சேர்க்கப் படுகின்றன.
இந்த நிலையில் பாதிக்கப்படும் மக்களின் நியாயமான உரிமைகளை எடுத்துப் பேசும் களமாக நீதிமன்றம் அமைகிறது. மக்கள் பிரசினைக்காக வழக்கு தொடுக்கும்போது அந்த பிரசினை ஊடகங்கள் மூலமாக மக்களிடம் சென்றடைவதோடு, அந்த பிரசினை குறித்து பதில் அளிக்கும் நிர்பந்தமும் அரசுக்கு ஏற்படுகிறது. நீதிமன்றங்களில் தொடுக்கப்படும் அனைத்து வழக்குகளும் முறையாக விசாரிக்கப்படுகின்றவா? பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நீதி கிடைக்கிறதா? என்பது ஒருபுறமிருக்க, மக்களின் பாதிப்பு குறித்து விவாதிப்பதற்கு ஒரு களம் உருவாகிறது என்பதே இங்கு முக்கியத்துவம் பெறுகிறது. இங்கு எழுப்பப்படும் கேள்விகளுக்கு அரசுத்தரப்பில் பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுவதும் கூடுதல் நற்பலனே.
மக்களின் நலனை முன்னிறுத்தும் பொதுநல வழக்குகளை உயர் நீதிமன்றத்திலோ, உச்ச நீதிமன்றத்திலோ மட்டுமே தொடுக்க முடியும். உச்ச நீதிமன்றம் என்பது வெகு தொலைவில் இருக்கும்போது அன்றாட பிரசினைகளுக்கு தீர்வு காண உயர்நீதிமன்றமே அருகில் உள்ளது. இவ்வாறு மக்களின் நியாயமான பிரசினைகள் குறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கும்போது மக்கள் சார்ந்த வழக்கறிஞர்களுக்கு மொழியும் ஒரு தடையாகிறது. ஆங்கிலம் நன்று கற்ற வழக்கறிஞர்கள் பொருளீட்டும் வழக்குகளில் முழுமையாக ஈடுபடும் வாய்ப்பு கிடைத்துவிடுவதால் அவர்களில் பலருக்கும் சமூகம் குறித்த உணர்வுகள் விரைவில் அற்றுப்போய்விடுகிறது. அரசுத்தரப்பு வழக்கறிஞராக பணியாற்றுவோருக்கு அரசு அமைப்புகள் செய்யும் அனைத்து முறைகேடுகளையும் – அநீதிகளையும் நியாயப்படுத்த வேண்டிய “தொழில் தர்மம்” வந்து விடுகிறது.
இந்நிலையில் மக்களின் பிரசினைகளை முழுமையாகவும், அனுபவ பூர்வமாகவும் புரிந்து கொண்டு அந்தப் பிரசினைக்கு சட்டரீதியாக தீர்வு காண முனைபவர்கள் முழுமையான ஆங்கிலப் புலமை இல்லாமல் (ஆங்கிலப் புலமை வேறு: சட்ட அறிவு, சமூக உணர்வு வேறு!) சாமானியனின் வாழ்வை வாழும் சாதாரண வழக்கறிஞர்களே. இந்த வழக்கறிஞர்கள் வழக்கமாக மேற்கொள்ளும் அதிகாரிகளிடம் மனு அளித்தல், தகவல் உரிமைச் சட்டப்படி தகவல் கோருதல் போன்றவையே அரசை பல்வேறு அம்சங்களிலும் முட்டுச்சந்தில் நிறுத்தி விடுகின்றன.
தகவல் உரிமைச் சட்டத்தை பயன்படுத்தியே அரசையும், அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் கலங்கடிக்கும் இந்த வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை நேரடியாக அணுகுவதில் அவர்களுக்கு தடையாக இருப்பது மொழி மட்டுமே. இந்தத் தடையை தவிர்ப்பதற்காகவே, உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை பல்லாண்டு காலமாக மக்கள் சார்பு வழக்கறிஞர்களாலும், சமூக பொறுப்புள்ளவர்களாலும் எழுப்பப்பட்டு வருகிறது.
ஆனால் உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அங்கீகரிப்பது என்பது, தமிழில் திரைப்படத்திற்கு பெயர் வைத்தால் வரிவிலக்கு என்பதைப் போன்ற சாதாரணமான அம்சம் அல்ல என்பது ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர்களுக்கு மிக நன்றாகத் தெரியும். தமிழை நீதிமன்ற மொழியாக அங்கீகரித்தால் கிடைக்கும் வாழ்த்துகளுக்கு எந்த பொருள் மதிப்பும் இல்லை என்பதும், தமிழை நீதிமன்ற மொழியாக அங்கீகரிக்கச் செய்வதால் ஏற்படும் விளைவுகளால் பொருள் ரீதியான பெரும் இழப்பு ஏற்படும் என்பதும் பொருள்முதவாதிகளான தமிழ்நாட்டு ஆட்சியாளர்களுக்கு மிக நன்றாகவேத் தெரியும். எனவேதான் சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்வதற்கு இணையான இந்த செயலை செய்வதற்கு அவர்களுக்கு துணிவில்லை.
தமிழை நீதிமன்ற மொழியாக்குவதற்கு தேவையான சட்ட நூல்கள் தமிழில் இருக்கின்றனவா? என்ற கேள்விகள் நீதிபதிகளாலும், பெரும்பான்மை வழக்கறிஞர்களாலும் எழுப்பப்படுகிறது. அண்டை நாடான இலங்கையில் மருத்துவம் தமிழ் வழி கற்பிக்கப்படுகிறது. தமிழ்நாட்டிலேயே பொறியியலை தமிழ்வழி கற்பிப்பதற்கான பாடநூல்கள் வெளியாகிவிட்டன. தமிழில் வாதாடும் வழக்கறிஞர்கள் பெருகும் நிலையில் சட்டநூல்களும் தேவையான அளவுக்கு வெளியாகும். தமிழை வளர்ப்பதற்காக இல்லை என்றாலும், வணிக நோக்கத்திலாவது தமிழில் தரம் வாய்ந்த சட்ட நூல்கள் வெளியாகும்.
தமிழில் வாதாடும் வாய்ப்பு கிடைத்தால் பொதுமக்களே நேரடியாக வழக்கை நடத்த முன் வந்து விடுவார்கள்: வழக்கறிஞர்களின் தொழில் வாய்ப்பு பாதிக்கப்படும் என்ற கருத்தும் சில வழக்கறிஞர்களிடம் உள்ளது. ஒரு வழக்கை நடத்த வெறும் சட்ட நூல்கள் (Bare Act Books) மட்டுமே போதாது என்பது வழக்கு நடத்தி அனுபவம் பெற்ற அனைத்து மக்களுக்கும் தெரியும். ஒரு வழக்கை வெற்றிகரமாக நடத்த அந்த விவகாரம் குறித்து நீதிமன்ற முன்மாதிரி தீர்ப்புகளும், வேறு பல அம்சங்களும் தேவை என்ற உண்மை சாதாரண மக்களுக்கு நன்றாகவே தெரியும். ஆனால் தமிழில் வழக்கு நடத்தினால், வழக்கு நடத்தப்படும் விதம் குறித்து பொதுமக்கள் தெளிவு பெற வழி பிறக்கும். இது வழக்காடும் மக்களுக்கு நல்லதே. இதனால் நேர்மையான வழக்கறிஞர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படபோவதில்லை.
எனவே நீதிமன்ற மொழியாக தமிழை அங்கீகரிப்பதில் சாதாரண மக்களுக்கு நன்மையே ஏற்படும். இதனால் அதிக அளவில் பாதிக்கப்படுவது ஆளும் வர்க்கமாகவே இருக்கும். ஆட்சியில் இருப்போர், அரசியல்வாதிகள், அதிகாரிகள் ஆகியோரே தமிழ் நீதிமன்ற மொழியாவதில் முதன்மையாக பாதிக்கப்படுபவர்களாக இருப்பார்கள்.
மக்களின் உழைப்பை சுரண்டி திரட்டப்பட்ட பொது நிதியை அத்தியாவசிய தேவைகளுக்கு பயன்படுத்தாமல் கவர்ச்சித் திட்டங்களுக்கு மட்டுமே பயன்படுத்தி வாக்குகளை அள்ள நினைக்கும் ஆட்சியாளர்களுக்கு, தமிழ் உயர்நீதிமன்ற அலுவல் மொழியாவதால் சிக்கல்கள் ஏற்படலாம். அரசின் பொறுப்பற்ற போக்கை, தொலைநோக்கற்ற குறுகிய அரசியல் பார்வைகளை, மக்களின் சிந்தனைகளை மழுங்கடிக்கும் சீர்கேட்டை பொதுநல வழக்கு என்ற பெயரில் பொதுமக்கள் கேள்வி கேட்டால், அக்கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய நிர்பந்தம் ஆட்சியாளர்களுக்கு வரும். தங்களை விமரிசனத்திற்கு அப்பாற்பட்டவர்களாக, போற்றுதலுக்கு மட்டுமே உரியவர்களாக கருதிக் கொள்ளும் ஆட்சியாளர்கள் மக்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் நிலை ஏற்படுவதை எப்படி அனுமதிப்பார்கள்? எனவே இந்த அரசியல்வாதிகள், தமிழை நீதிமன்ற மொழியாக அங்கீகரிப்பார்கள் என்று எதிர்பார்ப்பது பகல் கனவே!
இதையடுத்து உயர்குலம் சார்ந்தவர்களாக குறிப்பிடப்படும் வழக்கறிஞர்களும், ஆங்கிலம் அறிந்த காரணத்தாலேயே தம்மையும் உயர் குலத்தவராக கருதிக் கொள்ளும் வழக்கறிஞர்களும் தமிழை நீதிமன்ற மொழியாக அங்கீகரிப்பதால் பாதிக்கப்படுபவர்கள். ஆனால் இவர்கள் பாதிக்கப்பட்டால் அது மக்களுக்கு நன்மையாகவே இருக்கும். ஏனென்றால் இந்த வகை வழக்கறிஞர்களின் ஆதிக்கத்தில் நீதித்துறை இருப்பதாலேயே ஏராளமான வழக்குகள் தேங்கும் நிலை ஏற்படுகிறது.
சட்டம், சமூகம் ஆகியவை குறித்த ஆழ்ந்த அறிவிருந்தும் சரளமான ஆங்கிலப்புலமை இல்லாததால் பெரும்பாலான வழக்கறிஞர்கள் ஆங்கிலம் நன்கறிந்த வழக்கறிஞர்களை நாடும் நிலை உள்ளது. இதனால் ஆங்கிலம் நன்கறிந்த வழக்கறிஞர்களின் பணிச்சுமை அதிகரித்து பாதிக்கப்படும் மக்களுக்கான உரிமைகளை உடனே பெற்றுத்தராமல், அம்மக்களை அந்த அநீதிக்குள் பல காலம் வாழுமாறு நிர்ப்பந்தப் படுத்துகிறது.
இந்த அவல நிலையை மாற்றவதில், தமிழை நீதிமன்ற மொழியாக அங்கீகரிக்கும் செயல் முக்கிய பங்கு வகிக்கும். தமிழ் நீதிமன்ற மொழியாக அங்கீகரிக்கப்பட்டால் அனைத்து வழக்கறிஞர்களும் நேரடியாக நீதிமன்றத்தில் வழக்காடுவார்கள். எனவே மக்கள் நலன் நாடும் வழக்குகளில் தேவையின்றி காலநீட்டிப்பு (வாய்தா) பெற வேண்டிய அவசியம் இருக்காது. தாமதித்து வழங்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் என்று வசனம் பேசிக்கொண்டே அந்த அநீதியை தொடர்ந்து இழைத்து வரும் நீதித்துறை திருந்தும் காலம் வரும்.
சுருக்கமாக கூறினால் தமிழை நீதிமன்ற மொழியாக அங்கீகரிப்பது மொழி வளர்ச்சிக்கான செயல்பாடு மட்டுமே அல்ல. இது கடைக்கோடி மனிதனுக்கும் சமூக நீதி உள்ளிட்ட மனித உரிமைகளை கொண்டு சேர்க்கும் அருமையான வாய்ப்பாகும். அரசின் கடப்பாடுகளை வலியுறுத்தி உரிமைகளை பெறவும், ஊழலற்ற நிர்வாகத்தை கட்டமைக்கவும் தமிழை நீதிமன்ற மொழியாக அங்கீகரிப்பது மிகவும் முக்கியமான செயல்பாடாகும்.
இந்தியாவின் குடியரசு உண்மையிலேயே மக்களுக்காக, மக்களால் கட்டமைக்கப்பட்ட குடியரசு என்பது உண்மையானால் தமிழ் மட்டுமல்ல – அனைத்து மாநில மக்களும் அந்தந்த மாநில மொழிகளை அம்மாநில உயர்நீதிமன்றத்தில் பயன்படுத்தும் நிலை ஏற்பட வேண்டும்.
-பி. சுந்தரராஜன்
(sundararajan@lawyer.com)