நீதிமன்றங்கள் என்றாலே கருப்பு கோட்டும், கவுனும் அணிந்த வழக்ககறிஞர்கள் "மை லார்ட்" என்று கூவும் காட்சியே நமது நினைவுக்கு வரும். இவ்வாறுதான் திரைப்படங்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் காட்டப்பட்டுள்ளன. இவை ஒன்றும் மிகைப்படுத்தப்பட்ட காட்சி அல்ல.
ஒரு வாக்கியத்தை பேசுவதற்குள் ஏழெட்டுமுறை "மைலார்ட்" என்று சொல்லும் வழக்கறிஞர்களை உயர்நீதிமன்றத்தில் பார்க்கலாம்.
"லார்ட்" என்பது இங்கிலாந்து நீதிமன்றத்தில் பயன்படுத்தப்பட்ட ஒரு சொல். பிரபுக்கள் நீதி வழங்கியபோது உருவாக்கப்பட்ட நடைமுறை. நீதி என்பது குடிமக்களுக்கு பிரபுக்கள் வழங்கும் சலுகையாக கருதப்பட்ட காலத்தில் உருவாகிய பழக்கம். ஆனால் தற்போது நீதி என்பது சலுகையாக அல்லாமல், உரிமையாக மாறியுள்ளது.
இந்தியா சுதந்திரம் பெற்று அந்த சுதந்திரத்திற்கு பொன்விழா கொண்டாடும் நேரத்தில் சுயமரியாதை கொண்ட சில வழக்கறிஞர்கள், நீதிபதிகளை "மை லார்ட்" என்று அழைக்கும் அடிமைப்பழக்கத்தை கைவிட வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து பிரசாரத்தில் ஈடுபட்டார்கள்.
இதைத்தொடர்ந்து கடந்த 2006ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்திய வழக்குரைஞர் மன்றம் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது. அந்த தீர்மானத்தில், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடத்தும் வழக்கறிஞர்கள், நீதிபதியை "யுவர் ஹானர்" அல்லது "ஹானரபிள் கோர்ட்" என்று அழைத்தால் போதும்; "மை லார்ட்" என்று அழைக்கத் தேவையில்லை என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மற்ற நீதிமன்றங்களில் வழக்கு நடத்தும் வழக்கறிஞர்கள், நீதிபதியை, "ஐயா" என்று அழைத்தால் போதும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
ஆனால் நடைமுறையில் இதை செயல்படுத்துவதில் யாரும் ஆர்வம் காட்டவில்லை. பலகாலமாக மைலார்ட் என்று சொல்லிப்பழகியவர்களுக்கு அந்த பழக்கத்தை மாற்றிக்கொள்ள முடியவில்லை. அதை மாற்ற விரும்பிய இளம் வழக்கறிஞர்களுக்கோ நடைமுறையில் பெரும் தயக்கம். எதிர் தரப்பில் இருப்பவர்கள் "மை லார்ட்" என்று அழைக்கும்போது தாம் அவ்வாறு அழைக்காவிட்டால் நீதிபதி என்ன நினைத்துக் கொள்வாரோ? தீர்ப்பு என்னவாகுமோ? நமது கருத்துகளை நிலைநிறுத்துவதற்காக கட்சிக்காரரின் நலனை பலி கொடுப்பதா? என்பது போன்ற குழப்பங்கள் இருப்பதால் யாரும் இதனை செயல்படுத்த முன்வரவில்லை.
இந்த நிலையில்தான் நீதிபதி சந்துரு கடந்த 15-10-2009 அன்று ஒரு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டார். அவரது நீதிமன்றத்தில் யாரும் தம்மை 'மை லார்ட்' என்று அழைக்கக்கூடாது என்று அறிவிக்கையை தமது நீதிமன்றத்தில் வெளியிட்டார்.
அனைவரும் வரவேற்க வேண்டிய அறிவிப்பு இது. இதை மற்ற நீதிபதிகளும் பின்பற்றினால் நீதித்துறையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு இது ஒரு தொடக்கமாக அமையும்.
இந்திய வழக்கறிஞர்கள் அணியும் சீருடையும்கூட இங்கிலாந்து நீதித்துறையின் வழக்கம்தான். இன்று இங்கிலாந்திலும், இங்கிலாந்திடம் அடிமையாக இருந்த நாடுகளிலும் மட்டுமே கருப்பு கோட் மற்றும் கவுனை வழக்கறிஞர்கள் அணியும் வழக்கம் நடைமுறையில் உள்ளது.
மற்ற நாடுகளில் இந்த வழக்கம் இல்லை. அடிமைச்சின்னமாக உள்ள இந்த சீருடையை புறக்கணிப்பது குறித்தும் விவாதங்கள் உருவாக வேண்டும்.
இதேபோல நீதிமன்றங்களில் வழக்கு தொடுக்கும்போது நீதி வேண்டி பிரார்த்திப்பதாக மனு கொடுக்கப்படுகிறது. உரிமைகளை கோருவதில் தவறில்லை. ஆனால் நீதி வழங்குமாறு பிரார்த்திக்க வேண்டும் என்பதை ஏற்கக்கூடாது. உரிமைகளை கோருவதும் ஒரு அடிப்படை உரிமையே. அதைக்கோருவதில் சுயமரியாதை இழக்கும் நிலை இருக்கக்கூடாது. நீதி என்பது அதை வழங்குவோரின் விருப்புரிமையாகவும் இருக்கக்கூடாது. எனவே இதற்கும் வேறு வார்த்தைகளை பயன்படுத்துவது குறித்து விவாதங்கள் உருவாக வேண்டும்.
இந்த விவாதங்களை சட்டத்துறையினர்தான் முன்னெடுக்கவேண்டும் என்ற அவசியமில்லை. இந்தியர்களின் இறையாண்மை குறித்து அக்கறை கொண்ட யாரும் இந்த விவாதங்களை அவர்களுக்கு வாய்ப்புள்ள களங்களில் உருவாக்கவும், வளர்த்தெடுக்கவும் முன்வரவேண்டும்.
ஏனெனில் சட்டம் என்பது சட்டத்துறையினரும், வழக்கறிஞர்களும் மட்டும் தொடர்புடைய ஒரு அம்சம் அல்ல. அது அவ்வாறு இருக்கவும் கூடாது.
-சுந்தரராஜன்
(sundararajan@lawyer.com)