Tuesday, August 18, 2009

சட்டமெனும் இருட்டறை! (நன்றி: தினமணி)

எப்போது ஒரு பிரச்னை ஆட்சியாளர்களை அலட்டுகிறதோ, சிந்திக்க வைக்கிறதோ அப்போதே அந்தப் பிரச்னைக்கு ஒரு தீர்வு விரைவிலேயே ஏற்படும் என்கிற நம்பிக்கையும் பிறக்கிறது. பிரதமர் மன்மோகன் சிங், சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி மற்றும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் ஆகிய மூவரும் கலந்துகொண்ட முதல்வர்கள் மற்றும் தலைமை நீதிபதிகள் மாநாட்டில் அனைவரும் ஒத்த கருத்தினராக இருந்து கவலை தெரிவித்த விஷயம் தீர்ப்புக்காகத் தேங்கிக் கிடக்கும் வழக்குகள் பற்றியது.



ஜூன் 30, 2009 நிலவரப்படி, உச்ச நீதிமன்றத்தில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கை மட்டும் 52,592. பல்வேறு உயர் நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகள் 40,17,596. மாவட்ட மற்றும் கீழமை நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளோ ஏறத்தாழ மூன்று கோடி. இந்தப் புள்ளிவிவரங்களை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியே வழங்கி இருக்கிறார். பிரதமரும் தமது உரையில் குறிப்பிட்டிருக்கிறார்.


இந்த அளவுக்கு வழக்குகள் தேங்கிக் கிடப்பதற்கு என்ன காரணம்? உச்ச நீதிமன்றக் குறிப்புப்படி, தேங்கிக் கிடக்கும் இந்த வழக்குகளை விசாரித்து ஒரு வருடத்தில் அத்தனை வழக்குகளையும் பைசல் செய்வதற்கு 1,500 உயர் நீதிமன்ற நீதிபதிகளும், 23,000 கீழமை நீதிமன்ற நீதிபதிகளும் தேவை. உயர் நீதிமன்றங்களில் மட்டும் சுமார் 280 நீதிபதிகள் நியமிக்கப்படாமல் இருக்கிறார்கள். முதலில் நீதிபதிகளுக்கான பணி இடங்கள் முறையாகவும் விரைவாகவும் நிரப்பப்பட வேண்டும்.


இப்போது உடனடியாக ஓய்வுபெற்ற நீதிபதிகளை ஒரு வருட ஒப்பந்த அடிப்படையில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளை விசாரிக்க நியமிக்கலாமே. சமீபத்தில், சென்னையில் சட்ட அமைச்சர் முன்னிலையில் "மெகா லோக் அதாலத்' என்ற பெயரில் ஒரே நாளில் 15,650 வழக்குகளைப் பைசல் பண்ண முடிந்திருக்கிறதே? இதேபோல போர்க்கால அடிப்படையில் எல்லா நீதிமன்றங்களிலும் வழக்குகள் பைசல் செய்யப்படுவதில் என்ன தடை இருக்க முடியும்?


தேவையில்லாமல், காலனி காலத்திய நீதிபதிகளின் பாணியில் அளவுக்கு அதிகமான விடுமுறைகளை இப்போதும் நமது நீதிபதிகள் அனுபவித்துக் கொண்டிருப்பதே தார்மிகக் குற்றம். இத்தனை வழக்குகள் தேங்கிக் கிடக்கும்போது, பொறுப்புணர்வுடன் விடுமுறைகளைக் குறைத்துக் கொண்டு வழக்குகளைப் பைசல் செய்ய வேண்டும் என்கிற அக்கறை நீதிபதிகளுக்கும், நமது வழக்கறிஞர்களுக்கும் ஏன் வருவதில்லை?


பண்டைக் காலங்களில் கிராமப் பஞ்சாயத்துகள் இருந்தன. ஊர்ப் பெரியவர்கள் கூடித் தீர்ப்பளித்தனர். அதே பாணியில் மத்திய அரசு கொண்டுவர இருக்கும் கிராம் நியாயாலய மசோதா வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. அரசு நீதித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு அளித்து, நீதிமன்றச் செயல்பாடுகளை நவீனப்படுத்த உதவ வேண்டும். நீதிமன்ற ஆவணங்கள் கணிப்பொறியின் உதவியுடன் பதிவு செய்யப்பட வேண்டும்.


இன்றைய நிலையில், இந்தியாவில் வழக்கு விசாரணைக்கான சராசரி கால அளவு என்ன தெரியுமா? 15 ஆண்டுகளாம். இதை மூன்று ஆண்டுகளாகக் குறைக்க முயற்சிப்பதாகச் சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.


அதுபோல, கொலைக் குற்றங்களை விசாரித்துத் தீர்ப்பளிப்பதில் பல சிக்கல்கள் இருப்பதாக அந்த மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கப்பட்டது. உதாரணமாக, தில்லியில் மட்டும் ஆண்டொன்றுக்கு 380 கொலைகள் நடப்பதாகவும், ஆனால் சுமார் 250 வழக்குகளைத்தான் பைசல் செய்ய முடிகிறது என்றும் கவலை தெரிவித்தனர். இதே நிலைமைதான் ஏனைய மாநிலங்களிலும். இந்தப் பிரச்னைக்கு உடனடியாக முடிவு காணப்பட வேண்டும் என்பதில் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது.


இந்தியச் சிறைச்சாலைகளில் தீர்ப்புக்காகக் காத்திருக்கும் விசாரணைக் கைதிகளின் எண்ணிக்கை திடுக்கிட வைக்கிறது. இந்தியாவில் உள்ள சுமார் 1,500 சிறைச்சாலைகளில் இரண்டரை லட்சம் கைதிகளைப் பாதுகாப்பதற்கான வசதிகள்தான் உள்ளன. ஆனால் சிறைகளில் இருக்கும் கைதிகளின் எண்ணிக்கையோ மூன்றரை லட்சத்துக்கும் அதிகம். இதில் 70 சதவிகிதம் கைதிகள் விசாரணைக் கைதிகள். அதாவது, இவர்கள் குற்றம் செய்தார்களா என்பதுகூட நிரூபிக்கப்படாமல், சிறையில் காலத்தைக் கழிப்பவர்கள்.


இதைவிடக் கொடுமையான விஷயம் என்ன தெரியுமா? இந்த விசாரணைக் கைதிகளில் 70 சதவிகிதம் பேர், சிறு குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டவர்கள். இவர்களில் பலர் தண்டிக்கப்பட்டால்கூட ஒரு சில நாள் தண்டனைதான் கிடைக்கும். ஆனால் தீர்ப்பு எழுதப்படாமல், குற்றம் நிரூபிக்கப்படாமல் மாதக் கணக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிரபராதிகளின் அவலம் எழுத்தில் எழுதி மாளாது. உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றங்களும் பலமுறை, இதுபோன்ற விசாரணைக் கைதிகளை சொந்த ஜாமீனில் விடும்படி அறிவுறுத்தியும், காவல்துறையினரும் கீழமை நீதிமன்றங்களும் அதை சட்டை செய்வதாகத் தெரியவில்லை.


விசாரணைக் கைதிகள் என்கிற பெயரில் மூன்று மாதத்திற்கும் அதிகமாக, சிறு குற்றங்களில் கைது செய்யப்பட்ட யாரையும் சிறையில் வைத்திருப்பது மனித உரிமை மீறல் என்று கருதப்பட வேண்டும். அப்படிப்பட்ட மனித உரிமை மீறல்களுக்குச் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும். கீழமை நீதிமன்றங்கள் இந்தப் பிரச்னையில் முனைப்புடன் செயல்பட வேண்டும்.

பிரதமரையும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியையும் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தேசத்தையும் சிந்திக்க வைக்கும் பிரச்னையாக இது மாறினால் மட்டும்தான் இதற்குத் தீர்வு ஏற்படும்.

நன்றி: தினமணி, 18-08-2009

Monday, August 17, 2009

ரயில் விபத்து – நிவாரணங்களும்,வழிமுறைகளும்

சாலையில் மோட்டார் வாகன விபத்து அன்றாட நிகழ்ச்சியாகி விட்டது. இந்த விபத்துகளில் பாதிக்கப்படும் நபர்களுக்கு தேவையான சட்ட உதவிகள் தேவையான அளவிற்கு கிடைத்து விடுகின்றன.

ஆனால் ரயில் விபத்துகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடு, அதனைப் பெறும் முறை குறித்து பெரும்பாலானவர்களுக்கு தெரியவில்லை.

இரண்டு ரயில்கள் மோதிக்கொள்வதோ, அல்லது ஒரு ரயில் தடம்புரள்வதோ ரயில் விபத்து ஆகும். இந்த விபத்துகளில் பாதிக்கப்படுவோருக்கு நிவாரணம் வழங்கப்படுகிறது. அதேபோல ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிர் இழப்போருக்கும், உடல் பாகங்களை இழப்போருக்கும்கூட நிவாரணம் வழங்கப்படுகிறது.

ஆனால் இந்த செயல் தற்கொலை முயற்சியாகவோ, வேறு காரணங்களுக்காக தானாகவே மேற்கொள்வதாகவோ இருக்கக்கூடாது. இவ்வாறு தவறி விழுவோர் குடிபோதையில் விழுந்திருக்கக்கூடாது. மேலும் சட்டவிரோதமான குற்றச்செயலில் ஈடுபடும்போது தவறி விழுந்தாலும் இழப்பீடு கோரமுடியாது.

இதேபோல ரயில் பயணத்தின்போது நடக்கும் பயங்கரவாத செயல்கள், திருட்டு, கொள்ளை போன்ற சம்பவங்களால் பாதிக்கபோபடுவோரும் இழப்பீடு பெறலாம்.

இதற்காக மாநில அளவில் ரயில் (பயணிகள்) உரிமைத் தீர்ப்பாயம் [Railway Claims Tribunal} இயங்கி வருகிறது. தமிழ்நாட்டிற்கான ரயில் பயணிகள் உரிமைத் தீர்ப்பாயம் சென்னையில் இயங்கி வருகிறது.

விபத்து நடந்த ஓராண்டு காலத்திற்குள் இழப்பீடு கோரும் மனுவை பதிவு செய்யலாம்.

உயிர் இழப்புக்கு அதிகபட்சமாக ரூ.4 இலட்சம் வழங்கப்படும். அதேபோல உடல் உறுப்பு இழப்புக்கும் அதிகபட்சமாக ரூ.4 இலட்சம் வழங்கப்படும். பொருள் இழப்புக்கும், இழப்பின் தன்மைக்கு ஏற்ப இழப்பீடு வழங்கப்படுகிறது.

ரயில் பாதையில் அத்துமீறி பிரவேசித்து, கவனக்குறைவாக நடந்துகொண்டு ஏற்படும் இழப்புகளுக்கு ரயில்வே நிர்வாகம் பொறுப்பேற்காது.

பயணச்சீட்டு பெற்று முறைப்படி பயணம் செய்யும் பயணிகளே இந்த நிவாரணங்களை பெற தகுதி உடையவர்கள். அதே போல முறைப்படி ரயில் பெட்டியின் உட்புறத்தில் பயணம் செய்பவர்கள்தான் சட்டரீதியான பயணிகளாக கருதப்படுவார்கள். ரயில் பெட்டியின் கூரைமேல் அமர்ந்து செல்பவர்களுக்கு இந்த நிவாரணங்கள் கிடைக்காது. மேலும் கூரை அமர்ந்து செல்பவர்களுக்கு மூன்று மாத சிறைத்தண்டனையும், ஐநூறு ரூபாய் அபராதமும் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

ரயில்வே நிர்வாகம் அளிக்கும் இந்த நிவாரணங்களை முறைகேடாக பெறமுயற்சி செய்பவர்களுக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனையும், அபராதமும் பரிசாக கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது.

முகவரி:

Railway Claims Tribunal,

“Freshford”

50, McNichols Road,

Chetpet,

Chennai – 600 031

Website: http://www.rctchennai.org.in

Wednesday, August 12, 2009

தமிழ்நாடு மாநில வேளாண்மை மன்றச் சட்டம், விவசாயிகளின் உரிமைகளைப் பறிக்கிறதா?

தமிழ்நாடு மாநில வேளாண்மை மன்றச் சட்டம் (Tamil Nadu Agricultural Council Act) என்ற பெயரிலான சட்டத்தி்ற்கான முன்வடிவு ஒன்றை 23 ஜூன் 2009 அன்று தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

.

இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால், "தமிழ்நாடு மாநில வேளாண்மை மன்றம்" என்ற அமைப்பு நிறுவப்படும்.

தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் வேளாண்மை, வனவியல், தோட்டக்கலை, மனையியல், உயிர்தொழில் நுட்பம், வேளாண்மைப் பொறியியல், வேளாண்மை தகவல் தொழில் நுட்பம், உயிர் தகவலியல், சக்தி மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல், உணவு பதப்படுத்தும் பொறியியல், வேளாண் வர்த்தக மேலாண்மை ஆகியதுறைகளில் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே இந்த மன்றத்தில் பதிவு செய்ய முடியும்.

.

வெளி மாநிலங்களிலோ, வெளி நாடுகளிலோ இத்தகைய பட்டம் பெற்றவர்கள் உரிய ஆலோசனைக்குப்பின்னர் இந்த மன்றத்தில் உறுப்பினராக அனுமதிக்கப்படுவர்.

.

இந்த மன்ற உறுப்பினர்களுக்கான சிறப்புரிமைகள், சட்ட முன்வடிவின் 29வது அம்சமாக குறிப்பிடப்பட்டுள்ளன. அதன்படி:

.

29. பதிவேட்டில் பெயர் இடம் பெற்றுள்ள நபர் ஒருவர் நீங்கலாக வேறு நபர் எவரும், தமிழ்நாடு மாநிலத்திற்குள்ளாக வேளாண்மை ஆலோசகராக தொழில் செய்வதோ அல்லது வேளாண்மைப்பணிகளை ஆற்றுவதோ கூடாது.

.

விளக்கம்:- வேளாண்மைப் பணி என்றால்,-

(அ) பயிர் வளர்ப்பு, அறுவடைக்கு முன்னதான தொழில்நுட்பம், விதைத் தொழி்ல்நுட்பம், மண் பரிசோதனை, நீர் பரிசோதனை, உரம், செடி வளர்ச்சியை முறைப்படுத்திகள், களைக்கொல்லிகள், பயிர்களைக் காக்கும் பொருட்கள் ஆகியவற்றைப் பொறுத்த வரையிலான பரிந்துரைக்குறிப்பு வழங்குதல், அறுவடைக்குப் பிந்தைய தொழில் நுட்பம், வேளாண்மை உயிரியியல் தொழில்நுட்பம் ஆகியவற்றில் வேளாண்மைப் பணிகளைச் செய்தல்;

.

(ஆ) தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கான வேளாண்மைத் திட்டங்களை தயாரித்தல் மற்றும் வேளாண்மைத் திட்டங்களில் கையொப்பமிடுவது, அல்லது அதிகாரச் சான்றளித்தல் மற்றும் உரிய முறையில் தகுதி பெற்ற வேளாண்மை தொழிலாற்றுநர் ஒருவரால் சட்டத்தின்படி கையொப்பமிடப்பட வேண்டியதான அல்லது அதிகாரச் சான்றளிக்கப்பட வேண்டியதான மதிப்பீட்டுச் சான்றிதழை வழங்குதல்;

.

(இ) மண் மற்றும் நீரின் பண்புகளையும், இயற்கை மற்றும் இரசாயன உரங்களின் அளவையும் கணிப்பதிலும், பயிர்களுக்கு அழிவு செய்யும் பூச்சிகளையும், நோய்களையும் இனங்கண்டு தீர்வழி நடவடிக்கைகளை வகுத்துரைப்பதிலும் பல்வேறு மண் தரநிலைகளுக்கும், வேளாண் தட்பவெப்ப கூறுகளுக்கும் ஏற்ற வகையில், பயிரிடுதல் தொடர்பான திட்டங்களை நிறைவேற்றுவதை முறைப்படுத்தி உதவி செய்வதிலும், சிறு தோட்டம் அமைத்தல், மலர்செடி வளர்த்தல் மற்றும் நெடுநாள் இருக்கிற தோப்புகளை மேம்பாடு செய்தல் ஆகிய வற்றில் உயரிய தொழி்ல்நுட்ப பண்ணை முறைகளை மேற்கொள்வதிலும் குடியானவர்களுக்கு உதவுவதற்கு வேளாண்மைப்பணிமனைகளையும் ஆய்வுக்கூடங்களையும் நடத்துதல்;

என பொருள்படும்.

.

இந்த மன்றத்தில் உறுப்பினராக இல்லாத ஒருவர், தம்மை இம்மன்றத்தின் உறுப்பினர் என்று தவறாக சித்தரித்து பணியாற்றினால் அவர் முதல் முறை சிக்கும்போது ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும், இரண்டாவது முறை சிக்கினால் ஆறு மாதம் சிறைத்தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் தண்டனையும் வழங்க வகை செய்கிறது மேற்கூறிய சட்டம்.

.

இந்த மன்றத்தில் உறுப்பினராக இல்லாதவர்கள் மேற்கூறப்பட்ட பணிகளை செய்யக்கூடாது என்று இந்த சட்டம் தெளிவாகக் கூறுகிறது. ஆனால் இந்த மன்றத்தின் உறுப்பினர் என்று தவறாக சித்தரிக்காமல், மேற்கூறப்பட்ட இந்தப்பணிகளை எவரேனும் செய்தால் அவருக்கு என்ன தண்டனை என்பது தெரியவில்லை.

.

மருத்துவத் தொழிலையும், சட்டத் தொழிலையும் நெறிப்படுத்த இந்திய மருத்துவ மன்றமும், இந்திய வழக்குரைஞர் மன்றமும் இருப்பதுபோல வேளாண்மைத் தொழிலை நெறிப்படுத்த இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

.

மருத்துவம் படித்தவர்களில் ஏறக்குறைய அனைவருமே மருத்துவத் தொழிலையே செய்து வருகின்றனர். சட்டம் படித்தவர்களில் பெரும்பாலானோர் சட்டம் மற்றும் சட்டம் சார்ந்த தொழில்களை செய்து வருகின்றனர். ஆனால் வேளாண்மை படித்தவர்களில் எத்தனைப் பேர் வேளாண் தொழில் செய்து வருகின்றனர் என்று கேள்வி எழுப்பினால் பதிலைக் காணோம். வேளாண் பட்டதாரிகள் அனைவரும் அரசுப்பணிகளிலும், தனியார் நிறுவனங்களிலும்தான் பணியாற்ற விரும்புகின்றனர். யாரும் சொந்தமாக விவசாயம் செய்யத் துணிவதில்லை. ஏனெனில் அவர்கள் பெற்ற கல்வியின் மீது அவ்வளவு நம்பிக்கை!

.

சரி! ஏன் இந்த சட்டம்?

.

இந்திய அமெரிக்க வேளாண்மை அறிவு முனைப்பு ஒப்பந்தம் என்ற பெயரில் அமெரிக்காவும், இந்தியாவும் போட்டுக்கொண்ட ஒப்பந்தம், அமெரிக்க வேளாண் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த வேளாண்மையையும் ஒப்படைக்கும் விதமாகவே செயல்படுகிறது.

.

இந்த ஒப்பந்தத்தின் பயனாக மரபணு மாற்றப்பட்ட பயிர்களோடு, இந்தியாவின் உணவு இறையாண்மைக்கு எதிரான சட்டங்களும் இந்தியாவில் அமல்படுத்தப் படுகின்றன.

.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்விதமாக நாடு முழுவதும் இயற்கை வேளாண்மை குறித்த விழிப்புணர்வு பெருமளவில் பரவி வருகிறது. முன்னோடி விவசாயிகளும், சில பத்திரிகைகளும், தொண்டு நிறுவனங்களும் இந்த பணியில் ஈடுபடுவதால் பன்னாட்டு நிறுவனங்கள் மிகப்பெரும் நெருக்கடியை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

.

சொந்த நாட்டுக்குடிமகன் தொழில் தொடங்கினால் ஆயிரம் தடங்கல்களை ஏற்படுத்தும் மத்திய மாநில அரசுகள், வெளிநாட்டு நிறுவனங்கள் தொழில் தொடங்கினால் சலுகை விலையில் நிலம், மின்சாரம், மனிதவளம் ஆகியவற்றைத் தருகின்றன. இந்த வரிசையில் இந்திய வேளாண்மையையும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்க்க இந்த ஏற்பாடுகள் நடக்கின்றன.

.

பன்னாட்டு பகாசுர நிறுவனங்கள், ஆய்வு உதவித் தொகை என்ற பெயரில் வழங்கும் நிதியால் இயங்கும் வேளாண்மை பல்கலைக்கழகங்களில் கல்வி பயின்ற மாணவர்கள்தான் அந்த பன்னாட்டு நிறுவனங்களுக்கு கொத்தடிமைகளாக, மிக விசுவாசமாக நடந்து கொள்வார்கள் என்ற கருத்தின் அடிப்படையில் இந்த தமிழ்நாடு மாநில விவசாய மன்றம் அமைக்கப்படுவதாக இயற்கை வேளாண் வல்லுனர்கள் கருதுகின்றனர்.

.

கேரளா போன்ற அண்டை மாநிலங்கள், இயற்கை வேளாண்மைக்கு முன்னுரிமை கொடுத்து செயல்பட்டு வரும் நிலையில், தமிழக அரசின் இந்த முடிவு விவசாயிகளுக்கு மட்டுமல்ல: அனைத்து சமூகத்திற்கும் எதிரானதாக இருக்கிறது.

.

பல்லாயிரமாக ஆண்டுகளாக தமிழ்ப்பெருங்குடி மக்கள் அனுபவத்தில் வளர்த்தெடுத்த, சமூகத்தில் லாப நோக்கற்று பகிர்ந்து கொண்ட தமிழர்களின் வேளாண் அறிவை புறக்கணிக்கும் சட்டம் இது என்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

.

தமிழ்நாட்டின் வரலாற்றில் வேளாண்மை என்பது ஒரு தொழிலாக பார்க்கப்பட்டதில்லை. அது சமூகத்திற்கு உணவளிக்கும் ஒரு சமூக நிகழ்வாகவே பார்க்கப்பட்டது. ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர்களின் தவறான கொள்கைகள் காரணமாகவே வேளாண்மை என்பது லாபமற்ற அம்சமாக மாறியது. இதனால்தான் விவசாயிகள் பலரும் அந்த தொழிலை விட்டு விலகினர்.

.

வேளாண்மை பல்கலைக்கழகங்களில் படித்த பட்டதாரிகள் மூலமாகதான் எண்ணெய்ப் பனை, எண்ணெய் ஆமணக்கு எனப்படும் ஜாட்ரோஃபா போன்ற பயிர்களை இந்திய விவசாயிகளிடம் அறிமுகப்படுத்தின பல தனியார் நிறுவனங்கள். அந்த நிறுவனங்களையும் தற்போது காணவில்லை. அதில் பணியாற்றிய வேளாண்மை பட்டதாரிகளையும் தற்போது காணவில்லை. அந்த பயிர்களை விளைவித்து ஓட்டாண்டிகளான விவசாயிகள்தான் இப்போது பெருநகரங்களில் பிச்சைக்காரர்களாக திரிந்து கொண்டிருக்கின்றனர்.

.

இந்த நிலையில்தான் மீதமுள்ள விவசாய நிலங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு கையளிக்கவும், விவசாயிகளை பன்னாட்டு நிறுவனங்களின் கூலிகளாக மாற்றுவதற்கும் ஏற்ற ஒரு ஏற்பாட்டை தமிழ்நாடு மாநில விவசாய மன்றம் என்ற பெயரில் கொண்டுவர தமிழ்நாடு அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.

.

இந்த மன்றம் வேளாண் நிலங்களை மட்டும் குறிவைக்கவில்லை. உங்கள் வீட்டுத் தொட்டத்தையும், பூச்செடிகளையும்கூட குறிவைக்கிறது. நீண்டகாலமாக இருக்கும் தோப்புகளையும் இந்த சட்டம் விட்டுவைக்கவில்லை. தமிழ்நாட்டில் வேளாண்மைக்கு பல்கலைக்கழகங்கள் அமைக்கப்படுவதற்கு முன்பிருந்த தோட்டங்களும், தோப்புகளும்கூட இனி இந்த மன்ற உறுப்பினர்களின் ஆலோசனைப்படிதான் நடக்க வேண்டும்.

.

தமிழர்களின் பாரம்பரிய அறிவுச் சொத்துகளை திட்டமிட்டு அவமானப்படுத்தி புறக்கணிக்கும் இந்த சட்டத்தின் நோக்கம்தான் என்ன?

.

தமிழ்நாட்டின் வேளாண் துறையை பன்னாட்டு நிறுவனங்களின் காலடியில் வீழ்த்துவதை தவிர வேறென்ன இந்த சட்டத்தின் நோக்கமாக இருக்க முடியும்!

.

வேளாண்துறையை நெறிப்படுத்த(!) இருக்கும் இந்த அமைப்பில் ஒரு விவசாயிகூட இருக்க மாட்டார்.

.

இந்த சட்டத்தை எதிர்த்து போராடுவதற்கு பல்வேறு தரப்பினரரும் தயாராகி வருகின்றனர்.

.

உங்களிடம் ஆதரவு கேட்டு போராட்டக்காரர்கள் வரக்கூடும். வழக்கம் போல சலிப்படையாதீர்கள்.

.

ஏனென்றால் நாம் உட்கொள்ளும் உணவை தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யமுடியாது. கம்யூட்டரின் சாப்ட்வேர் எழுதியும் தயாரிக்க முடியாது. விளைநிலங்களில் விவசாயிகளின் உழைப்பினால் மட்டுமே அது சாத்தியம். இதுவரை விவசாயிகள் குறித்து மற்றவர்களின் அக்கறையின்மையே ஆண்டுக்கு சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளை தற்கொலை நோக்கி தள்ளியது. இந்த நிலை தொடர்ந்தால் உணவிற்காக போரிட்டு நாமும் அழிய நேரிடும்.

.

விவசாயிகளுக்கு தார்மீக ஆதரவளித்து நன்றி செலுத்த இது தக்க தருணம். பயன்படுத்துவோம்!