Sunday, September 28, 2008

அறிவுச் சொத்துரிமை - சில தவறான கருத்துகள்...!

அறிவு என்பதும், (ஆங்கிலக்) கல்வி என்பதும் பலநேரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ஆனால் கல்வி சில நேரங்களில் (மட்டும்) அறிவு வளர்ச்சிக்கு பயன்படுகிறது என்பதே அறிவியல் உண்மை. கல்வி கற்றவர் எல்லாம் அறிவுடையவர்கள் ஆவதில்லை; கல்வி பயிலாதவர்கள் அறிவில்லாமல் இருந்து விடுவதும் இல்லை. இதற்கான உதாரணம்: தோழர் பெரியார்!


அறிவு என்பதே உண்மையான சொத்து என்பதில் மாற்றுக்கருத்து இருக்க வாய்ப்பி்ல்லை. ஆனால், இந்த அறிவு எந்த ஒரு மனிதருக்கும் தாமாகவே வந்து விடுவதில்லை. மனிதன் வளரும் சமூகமே அறிவையும் அள்ளித்தருகிறது. கற்கும் திறன் உள்ளவர்கள் விரைவாக கற்கின்றனர். மற்றவர்கள் சற்று பின்தங்குகின்றனர். எனவே ஒரு மனிதன் பெறும் அறிவு, உண்மையில் அவன் வாழும், வளரும் சமூகம் அவனுக்கு கற்றுக் கொடுத்ததே.


எனவே சமூகத்திலிருந்து பெற்ற அறிவை ஒருவன் தனியுடைமையாக கருதுவானாயின், அவன் பெரியாரின் வார்த்தைகளில், அவன் அறிவு-நாணயம் அற்றவனாவான்.


எந்த ஒரு அறிஞனும் உலகத்தில் இல்லாத ஒரு பொருளை புதிதாக கண்டுபிடித்தில்லை. ஏற்கனவே உள்ள பொருளுக்கு ஒரு புதிய பயன்பாடு மட்டுமே கண்டுபிடிக்கப்படுகிறது. இதில் பலரும் முயற்சி செய்தாலும் சமூக அங்கீகாரம் சிலருக்கே கிடைக்கிறது.


உதாரணமாக கம்ப்யூட்டர் ஒரு நாளில் கண்டுபிடிக்கப்படவில்லை. அது அபாகஸ் எனப்படும் மணிச்சட்டத்திலிருந்து படிப்படியாக மேம்பாடு அடைந்தே அதன் இன்றைய நிலையை அடைந்தது.


எனவே அறிவைச் சொத்துரிமை என்ற கருத்தாக்கத்தை ஆதரிப்பதே, பெரியார் கொள்கைகளுக்கு எதிரான திசையில் நின்று பார்ப்பனியத்தை ஆதரிப்பதாகும்.


இயற்றப்பட்ட சட்டம் என்ற நிலையிலும் அறிவுச்சொத்துரிமை சட்டங்களை ஆதரிக்க முடியாது. தடா, பொடா போன்ற கருப்புச்சட்டங்களைப்போல இந்த அறிவுச் சொத்துரிமை சட்டங்களும் விரிவான விவாதங்களுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.


அறிவு சொத்துரிமை அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு வழிவகுக்குமா ?


அறிவு சொத்துரிமையில் முதன்மையான காப்புரிமை சட்டம் 1474ல், வீனிஸ் நாட்டியில் முதல் முறையாக இயற்றப்பட்டது. பின் இங்கிலாந்தில் 1623ல் காப்புரிமை சட்டம் ஒன்று இயற்றப்பட்டது. பின் பதிப்புரிமைக்கான சட்டம் 1710ல் இங்கிலாந்தில் இயற்றப்பட்டது. இருந்த போதிலும் சுமார் 150 கடந்து 18 ஆம் நூற்றாண்டில்தான் தொழிற் புரட்சி உண்டானது. ஆக அறிவு சொத்துரிமை மூலம் அறிவியல் வளர்ச்சி அடைந்தது என்பது மிகப்பெரிய மோசடி.


மேலும் எவ்வித அறிவு சொத்துரிமை சட்டங்களும் இல்லாத, அனைத்து கண்டுப்பிடிப்புகளும் தேசத்திற்கே என்று கூறிய முன்னாள் சோசலிச நாடுகள், கடுமையான அறிவு சொத்துரிமை சட்டங்கள் உடைய பணக்கார நாடுகளுக்கு ஈடாக அறிவியல் தொழில்நுட்பத்தில் வளர்ச்சியடையவே செய்தன. எவ்வித அறிவு சொத்துரிமை சட்டங்களும் இல்லாத முன்னாள் சோவியத் ரசியாதான் விண்வெளியில் அமெரிக்காவை வென்றது.


இன்றைய சீனா கூட போதிய அறிவு சொத்துரிமை சட்டங்கள் இல்லாத நிலையில் (அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி!) அறிவியல் தொழில்நுட்பத்தில் சிறந்தே விளங்கிறது.


இவ்வளவு ஏன்? அரம்ப கால அமெரிக்க காப்புரிமை சட்டம்கூட அதிக அதிகாரம் படைத்ததாக அல்லாமல் எல்லோருக்கும் பயன்படும் வகையிலேதான் இருந்தது.


ஆக அறிவு சொத்துரிமை சட்டங்கள் இல்லாமலே பல நாடுகள் அறிவியல் வளர்ச்சி அடைந்திருப்பதை கண்டபின் அறிவியல் வளர்ச்சிக்கும் அறிவு சொத்துரிமைக்கும் எந்த வகையில் தொடர்பும் இல்லை என்பதை நாம் உறுதியாக கூறலாம்.கண்டுபிடிப்பாளர்களுக்கு, படைப்பாளிகளுக்கு அறிவு சொத்துரிமை அவசியமானது ?


உழைத்தவனுக்கு பலன் வேண்டாமா? என்றும், கண்டுபிடிப்பாளர்களுக்கும் - படைப்பாளிகளுக்கும் அறிவு சொத்துரிமை கொடுப்பது அவசியமானது என்றும் சிலர் வாதிடுகின்றனர்.


உழைத்தவர்களுக்கு பலன் கிடைக்கக் கூடாது என்று நாம் கூறவில்லை. உண்மையிலேயே உழைத்தவர்களுக்குத்தான் அறிவு சொத்துரிமை பயனளித்துள்ளதா? என்று கேட்டால், இல்லை என்று தான் சொல்ல வேண்டும். காரணம், இன்று உலகெங்கும் வழங்கப்பட்டுள்ள அறிவுச்சொத்துரிமையில் 90% பன்னாட்டு நிறுவனங்களிடமே உள்ளன என்பதுதான்.


அறிவு சொத்துரிமையை விற்க முடியும் என்ற அம்சத்தை பயன்படுத்தி கண்டுபிடிப்பாளர்களுக்கும், படைப்பாளிகளுக்கும் சிறிய தொகையை கொடுத்துவிட்டு பன்னாட்டு நிறுவனங்கள் இத்தகைய உரிமைகளை வாங்கி விடுகின்றன.


மிகச்சிறந்த உதாரணமாக மைக்கேல் ஜாக்சனின் (MICHEAL JACKSON) இன்றைய நிலையை கூறலாம். இன்றளவிலும் உலகெங்கும் ஜாக்சனின் பாடல்கள் கேசட்கள் பல லட்சம் விற்பனையானாலும் அவர் கடனாளியாகதான் உள்ளார். காரணம் இவருடைய பாடல்களுக்கான பதிப்புரை பன்னாட்டு நிறுவனங்களிடம் இருப்பதுதான். கொள்ளை லாபத்தில் சிறிய அளவு ராயல்ட்டிதான் படைப்பாளிகளுக்கு பல நாடுகளில் கொடுக்கப்படுகின்றன.


ஹேரி பாட்டர் (HARRY POTTER) கதாசிரியர் ரோலிங்(J.K.ROWLING)தான் இதுவரை கொடுக்கப்பட்ட ராயல்ட்டி தொகையில் அதிகம் பெற்றவர். ஆனால் அவரை போல எல்லா படைப்பாளிக்கும் உரிய பங்கு கிடைப்பதில்லை.


இந்தியாவில் நிலைமை இன்னும் மோசம். சினிமா இசை, பாடல் போன்ற எல்லா கலைகளுக்குமான உரிமைகளும் பதிப்புரிமை சட்டப்படி தயாரிப்பாளருக்கே சொந்தம். இந்தியாவில் புத்தக ஆசிரியர்களுக்கு பதிப்புரிமை என்பது இன்று வரை எட்டாக்கனியாகவே உள்ளது.


அறிவியல் கண்டுபிடிப்புகளை பற்றி கேட்கவே வேண்டாம். இவை அனைத்தும் நிறுவனங்களிடமே உள்ளன.


ஆக கண்டுபிடிப்பாளருக்கு காப்புரிமை இல்லை, கலைஞர்களுக்கு பதிப்புரிமை இல்லை. இதுதான் உழைத்தவர்களுக்கு அறிவு சொத்துரிமை செய்யும் நன்மை.அறிவு சொத்துரிமை எதிர்ப்பது அறிவியலை எதிர்ப்பதாகுமா ?


அறிவியலுக்கு அறிவு சொத்துரிமை யாரும் வாங்க முடியாது, காரணம் அவை எப்பொழுதும் பொதுவானது. அறிவியல் அடிப்படையிலான தொழில் நுட்பங்களுக்குதான் அறிவு சொத்துரிமை வழங்கப்படுகிறது. எல்லா தொழில் நுட்பங்களும் மனிதர்களுக்கு நன்மை அளிக்கும் என்று இல்லை. அறிவியல் அடிப்படையில் அணுஆற்றல் அமைந்தாலும் மக்களின் உயிருக்கு கேடானது என்றவகையில் நாம் அதை எதிர்க்க வேண்டியுள்ளது. மதத்திற்கு எதிராக அறிவியலை முன்வைக்கும் போது, அறிவியலையே மதமாக சிலர் மாற்றிவிடுகின்றனர். இந்த போக்கு இடதுசாரிகள், பெரியாரியவாதிகள் போன்ற முற்போக்கு பிரிவினரிடையேயும் உள்ளது. அறிவியலுக்கும் அரசியல் உண்டு. அந்த அடிப்படையில் இது யாருக்கானது என்பதைப் பொருத்தே நாம் அறிவியல் தொழில் நுட்பங்களை ஆதரிக்க வேண்டும்.

-மு. வெற்றிச்செல்வன்

(vetri@lawyer.com)

7 comments:

ஆமாச்சு said...

இக்கட்டுரையை தற்செயலாய் பாரக்க நேரிட்டது. http://www.gnu.org/philosophy/not-ipr.ta.html இணைப்பு இதற்கு மேலும் பல வலுவான வாதங்களை சேர்க்கும்.

Anonymous said...

மைக்கேல் ஜாக்சன் இன்று ஏழையாய் இருப்பது சரியான உதாரணாய் படவில்லை. அவருக்கு கிடைத்த பெரும் செல்வத்தை செலவழித்துவிட்டார் என்பதே உண்மை.

ravi srinivas said...

You have not published my comments posted at different times and on different dates. Are you scared of publishing them as they expose your claims.

ravi srinivas said...

You have not published my comments posted at different times and on different dates. Are you scared of publishing them as they expose your claims.

மக்கள் சட்டம் said...

//ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்துகள் உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.பெயரைக்கூட சொல்ல திராணியில்லாத அனானிகளின் கருத்துகள் ஏற்கப்படாது.//

மறுமொழிப்பெட்டியின் மேல் இந்த அறிவிப்பு உள்ளது. இதன்படி வரும் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.

நாங்கள் எழுதுவது வெறும் Bare Act-ஐ வைத்து அல்ல. அதன் நடைமுறை சாத்தியக்கூறுகள் குறித்தும் சிந்தித்தே எழுதுகிறோம்.

முதலில் 5-6 மறுமொழிகளை அனானியாய் போடுவது. பிறகு ஆங்கிலத்தில் சில மறுமொழிகளைப் போடுவது என்ற போக்கு தொடர்ந்தால் அதை பிரசுரிக்க மறுக்கும் உரிமை எங்களுக்கு உள்ளது என்றே கருதுகிறோம்.

குறைசொல்வதைவிட உங்கள் வலைப்பூவில் சரியான கருத்துகளை எழுத வரவேற்கிறோம். அதற்கு நேரம் இல்லை என்ற சொத்தை வாதத்துடன் குறை சொல்லும் நோக்குடன் மட்டுமே வரும் மறுமொழிகள் நீக்கப்படும்.

ravi srinivas said...
This comment has been removed by a blog administrator.
மக்கள் சட்டம் said...
This comment has been removed by the author.

Post a Comment

உங்கள் கருத்துகளே எங்களை மேலும் செயல்படத் தூண்டும்.

ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.

அனானி மற்றும் ஆங்கில மறுமொழிகள் நீக்கப்படலாம்!