Saturday, August 16, 2008

இயற்கைக்கு மாறான பாலுறவும், இந்தியச் சட்டங்களும்...!

காமசூத்திரம் படைத்த இந்தியாவில், தற்போது காமத்தைப் பற்றிய அறிவு சமூகத்தில் எந்த அளவுக்கு உள்ளது என்பது உடலியலாளர்களும், உளவியலாளர்களும் கருத்து சொல்ல வேண்டிய முக்கிய அம்சமாகும்.

.
மறைந்த மருத்துவர் மாத்ருபூதம், மருத்துவர் நாராயண ரெட்டி போன்றவர்கள் பாலியல் குறித்து வெளிப்படையாகவும், விஞ்ஞான ரீதியாகவும் பேசத்தொடங்கியவுடன் பாலியல் குறித்த விவாதங்கள் பொதுத்தளத்தில் அதிகரிக்கத் தொடங்கின. எனினும் ஓரினச்சேர்க்கை போன்ற சிறுபான்மை பாலுறவு குறித்து பரவலான விவாதங்கள் நடைபெறுவது அரிதாகவே உள்ளது.

இத்தகைய தளத்தில் ஈடுபடுவோரும், ஓரினச்சேர்க்கையாளராக அடையாளம் காணப்படும் வாய்ப்பிருப்பதால், இது குறித்து பரவலான விவாதங்கள் எழுப்பப்படவில்லை என்றே தோன்றுகிறது.

.

சட்டத்தின் பார்வையில்.....

பாலியல் குறித்த விவ(கா)ரங்கள் சட்டத்தின் பார்வையில் சற்றும் தெளிவில்லாமலே, சற்றுக் குழப்பமாகவும்கூட உள்ளது என்பதே உண்மை.

இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 377, இயற்கை முறைக்கு மாறாக, ஆடவன் அல்லது பெண் எவருடனேனும், விலங்கு எதனுடனேனும் தன்னிச்சையாக காமவிகார உடலுறவு கொள்கிற எவரொருவரும் ஆயுள் சிறை தண்டனை; அல்லது 10 ஆண்டுகள் வரை நீடிக்கக்கூடிய ஒரு கால அளவுக்கு சிறை தண்டனை ஆகிய இவற்றில் இரண்டில் ஒன்றை தண்டனையாக விதிக்க வேண்டும். மற்றும் அவரை அபராதத்திற்கு உள்ளாக்கவும் செய்யலாம்

மேற்கூறிய சட்ட வாசகத்தில் இயற்கை முறை என்று கொடுக்கப்பட்டுள்ள சொற்றொடருக்கு விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை. எனவே இயற்கை முறைக்கு மாறாக என்ற வாசகத்திலும் தெளிவில்லை. இந்த குழப்பம் தங்கள் வாழ்வுரிமையை பாதிப்பதாகவும் எனவே இந்த சட்டப்பிரிவை திருத்த வேண்டும் அல்லது நீக்க வேண்டும் என்று குரல்கள் தற்போது வலுத்து வருகின்றன.

குறி்ப்பாக திருநங்கைகள் () அரவானிகள் மற்றும் ஓரினச் சேர்க்கையாளர்கள் ஆகிய இருதரப்பினரே இந்த சட்டப்பிரிவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதைக்குறித்து பார்க்கும் முன்னர், இயற்கை முறை உடலுறவு என்பதற்கு இதுவரை நீதிமன்றங்கள் கொண்ட பொருளை பார்க்கலாம்.

மனிதனைத்தவிர அனைத்து உயிரினங்களும் உடலுறவை, இனப்பெருக்கத்திற்கான வழிவகையாகவே பயன்படுத்துகின்றன. மனிதன் மட்டுமே உடலுறவை பெரும்பாலான நேரங்களில் இன்ப நுகர்வுக்கான வழியாகவும், மிகச்சில நேரங்களில் கோபத்தை வெளி்க்காட்டும் வழியாகவும் (உ-ம்: காவல் நிலையம் உள்ளிட்ட இடங்களில் நிகழும் பாலியல் வன்முறை) பார்க்கிறான். எனவே மனிதத்தன்மையை எடுத்துவிட்டால் இனப்பெருக்கத்திற்கு செய்யப்படும் உடலுறவு மாத்திரமே இயற்கையானதாகும்.

இந்த அளவுகோலின்படி பார்த்தால் அரசு அமைப்புகளே வலியுறுத்தும் குடும்பக் கட்டுப்பாடு மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாடு வழிவகைகள் அனைத்துமே இயற்கைக்கு மாறான வகையைச் சேர்ந்ததுதான். இந்த தவறுக்காக மக்களை தண்டிப்பது என்பது நடைமுறையில் இயலாத காரியம். மேலும் இந்த நிலைப்பாட்டை தற்போதைய நிலையில் யாரும் ஏற்க முடியாது.

திருநங்கைகள்

இந்நிலையில் திருநங்கைகள் () அரவானிகளின் தரப்பு வாதத்தை புரிந்து கொள்ள முயற்சிப்போம்.

திருநங்கைகளுக்கு ஆண்-பெண்ணுக்குரிய பாலுறுப்புகள் இருப்பதில்லை. இருந்தாலும் அவை பயன்படுவதில்லை. அதற்காக அவர்களுக்கு பாலுணர்வே இல்லாமல் போய்விடுவதில்லை. ஏனெனில் பாலுணர்வு என்பது உடல் மட்டுமே சார்ந்தது அல்ல! மனமும் முக்கிய பங்கு வகிக்கும் பாலுணர்வு வேட்கை திருநங்கைகளுக்கும் இருக்கும் என்பதே மருத்துவ உண்மை.

ஆனால் இந்த திருநங்கைகள் எந்த விதத்தில் பாலுணர்வு வேட்கையை தணிக்க முயற்சித்தாலும் மேற்கூறிய சட்டத்தின் பார்வையில் அது குற்றமாகவே இருக்கிறது.

திருநங்கைகள் யாரும் விரும்பி திருநங்கைகளாக பிறப்பதில்லை. இயற்கையின் போக்கில் காரணம் புரியாத விந்தைகளில் ஒன்றாகவே திருநங்கைகள் உருவாவதும் உள்ளது. அதற்காக திருநங்கைகளுக்கு உயிரின் அடிப்படை வேட்கையான பாலுணர்வு வேட்கை இருக்கக்கூடாது என்றும் எதிர்பார்க்கக் முடியாது.

இயற்கைக்கு மாறான பாலுறவு என்ற பெயரில் திருநங்கைகளின் பாலுணர்வு வேட்கைகளை தடைசெய்யும் சட்டங்களை அமல்படுத்தும் முன்னர், அந்த திருநங்கைகளின் பாலுணர்வு வேட்கையை தணிப்பதற்கான வழியையும் காட்டவேண்டும் என்று எதிர்பார்ப்பதில் நியாயம் உள்ளது.

ஓரினச்சேர்க்கையாளர்கள்

அதேபோல ஓரினச்சேர்க்கையாளர்களும் இந்த சட்டத்தால் மிகவும் பாதிக்கப்படுவதாக கூறுகின்றனர். திருநங்கைகளை சகித்துக் கொள்பவர்கள்கூட ஓரினச் சேர்க்கையாளர்களை ஏற்க மறுக்கின்றனர்.

சமூகத்தில் ஓரினச் சேர்க்கையினரை பார்க்கும் விதத்திலேயே பல பிரசினைகள் உள்ளன. தன்பாலின இச்சை என்பது தீய பழக்கம் என்று ஒரு தரப்பினரும், அது ஒரு நோய் என்று ஒரு தரப்பினரும் கருதுகின்றனர். ஆனால் ஓரினச்சேர்க்கை என்பது இயற்கைக்கு மாறானது என்பதில் பெரும்பாலானோர் ஒருமித்த கருத்து கொண்டுள்ளனர்.

இந்த கருத்தின் அடிப்படையிலேயே இந்திய தண்டனை சட்டம் இயற்றப் பட்டுள்ளது. இங்கிலாந்தின் அடிமை நாடாக இந்தியா இருந்த காலத்தில் மெக்காலே என்பவரால் எழுதப்பட்ட இந்த சட்டம் கிறிஸ்தவ மதக்கொள்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டது. இந்தியாவிலும்கூட இத்தகைய இயற்கைக்கு மாறானதாக கூறப்படும் பாலுறவை எதிர்ப்பவர்கள், மதம் சார்ந்த இலக்கியங்களிலேயே இத்தகைய உறவுகள் இருப்பதை வசதியாக மறந்து விடுகின்றனர்.

மேலும் இத்தகைய பாலுறவுகளை அங்கீகரிப்பதும், தண்டிக்காமல் விடுவதும் இத்தகைய இயற்கைக்கு மாறான பாலுறவை அதிகரிக்கும் என்ற கருத்தும் முன்வைக்கப் படுகிறது.

ஆனால், தன்பாலின இச்சை இல்லாதவர்கள் யாரையும், இத்தகைய பாலுறவுக்கு ஆட்படுத்த முடியாது என்றே, ஓரினச் சேர்க்கையாளர்கள் கூறுகின்றனர். இதனை மருத்துவம் மற்றும் உளவியல் நிபுணர்களும் ஆதரிக்கின்றனர்.

அவ்வாறு தன்பாலின இச்சை இல்லாதவர்களை, இயற்கைக்கு மாறான பாலுறவுக்கு ஆட்படுத்த விழையும் நபர்களை தண்டிக்க பல வழிகள் உள்ளன. இத்தகைய சந்தர்ப்பத்தில் தன்னை தற்காத்துக் கொள்ள விரும்பும் ஒரு நபர், எதிராளிக்கு மரணத்தை ஏற்படுத்திவிட்டால்கூட அது கொலை ஆகாது என்பதே சட்டமாக உள்ளது. (இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு: 100)

இந்த சட்டப்பிரிவின்படி, இயற்கைக்கு மாறான காம இச்சையுடன் தாக்கும் ஒரு நபரால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்ற சூழலில், தம்மை தற்காத்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபடுபவரின் செயற்பாட்டில் எதிரி இறந்து விட்டாலும் அது கொலை ஆகாது. அதற்கு பதிலாக கொலை ஆகாத மரணம் ஏற்படுத்தும் குற்றம் என்பதாகவே கருதப்படும்.

எனவே, இயற்கைக்கு மாறான பாலுறவை தடை செய்யாவிட்டால், அத்தகைய இயற்கைக்கு மாறான பாலுறவு அதிகரித்து விடும் என்ற அச்சம் மறைந்து விடுகிறது.

அடுத்தது என்ன?

இந்த நிலையில் பாலியல் சிறுபான்மையினராகிய திருநங்கைகள் மற்றும் ஓரினச் சேர்க்கையாளர்களின் மனித உரிமைகளை பாதுகாக்கும் வகையில் இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 377-ஐ நீக்க வேண்டும் என்ற கருத்திற்கு பல பிரமுகர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த கருத்தில் உங்களுக்கு உடன்பாடு இருந்தால் நீங்களும் ஆதரவு தெரிவிக்கலாம்.

அதேபோல, ஓரினச் சேர்க்கையாளர்களையோ, திருநங்கைகளையோ நேரில் அடையாளம் காணும் தருணங்களில் அருவருப்போ, அச்சமோ அடையாமல் அவர்களையும் சாதாரண மனிதர்களே என்று ஏற்றுக் கொள்வது உங்கள் அறிவு விசாலமடைவதை குறிக்கும். அவர்களுடன் இயல்பாக பழக முயற்சிப்பது உங்கள் மனிதாபிமானத்தை காண்பிக்கும்.


-சுந்தரராஜன்

14 comments:

மங்கை said...

நல்லதொரு பகிர்வுக்கு நன்றி...

சமீப காலமாக ஓரினச்சேர்க்கை பற்றிய விழிப்புணர்வு அதிகரித்திருந்தாலும், அது போதுமானதாக இல்லையென்பதும் உண்மை...

சமீபத்தில் இங்கு தில்லியில்..(29 ஜனவரி) ஓரினச்சேர்கையாளர்கள் ஒரு அணிவகுப்பு நடத்தினார்கள்... பெண்கள், ஆண்கள், திருநங்கைகள், சமூக ஆர்வலர்கள், மருத்துவர்கள், சட்ட வல்லுனர்கள், பொது மக்கள் என பலதரப்பட்டோர் கலந்து கொண்டு ஓரினச்சேர்க்கையாளர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தனர்...

நீங்கள் குறிப்பிட்ட சட்ட திருத்தம் உரிமைகளை நிலைநாட்ட உதவுவதுடன், ஓரினச்சேர்கையாளர்கள் விழிப்புணர்வு இல்லாமல் ஈடுபடும் சில ஆபத்தான செயல்களில் இருந்து அவர்களை பாதுகாக்கவும் உதவும்..

உதாரணமாக.... சமூகம் இவர்கள் மேல் சுமத்தும் களங்கத்திற்கும், சட்டத்திற்கும் பயந்து இவர்கள் அவர்களின் நடவடிக்கைகளை வெளியே சொல்வதில்லை... பணத்திற்காகவும், பொருளுக்காகவும் ஓரினச்சேர்கையில் ஈடுபடும் சிறுவர்களும், திருநங்கைகளும் ஏராளம் என்பதை நாம் அறிவோம்.. இதனால் இவர்களுக்கு பால்வினை நோய், எச் ஐ வி போன்ற நோய்கள் தாக்கும் வாய்ப்புகள் அதிகம்... அப்படிப்பட்ட உறவுகளில் ஈடுபடும் பட்சத்தில் அவர்கள் எப்படி தங்களை பாதுகாத்து கொள்ளலாம் என்பதை எடுத்து சொல்ல இவர்களை முதலில் நாம் அடையாளம் காணவேண்டும்.. அப்புறம் தானே விழுப்புணர்வு கொடுக்க முடியும்.. ஆனால் சட்டத்திற்கும் சமூகத்திற்கும் பயந்து இவர்கள் நிழலில் வாழ்வதால், அவர்களை அடையாளம் காண்பது பெரும்பாலும் முடியாமல் போய் விடுகிறது...

நமது இலக்கியங்கலில் ஓரினச்சேர்கை பற்றிய குறிப்பு இருப்பது ஆச்சிரியமாக இருக்கிறது..

ஒரு விஷயம்.. குடும்பகட்டுப்பாடும், எச்ஐவி தடுப்பு நடவடிக்கைகளும் இயற்கைக்கு மாறான செயல்கள் என்ற கண்ணோட்டத்தில் பார்க்க முடியுமா?
இரண்டுமே மக்களின் நலன் கருதி மேற்கொள்ளப்படும் திட்டங்கள் இல்லையா?... அந்த வகையில் ஓரினச்சேர்கையாளர்களின் நலனும் கருத்தில் கொள்ளவேண்டும், எல்லா நலன்களுக்கும் அவர்களும் தகுதியானவர்கள் தான்..(எச்ஐவி தடுப்பு நடவடிக்கைகளில் கடந்த 8 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறேன்)


எல்வாற்றையும் விட, ஓரினச்சேர்கையாளர்கள் மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் என்ற கருத்து இன்னும் பரவலாக நிலவதுதான் கொடுமை...

நல்லதொரு பதிவுக்கு மிக்க நன்றி

எச் ஐவி தடுப்பு நடவடிக்கைகளில் கடந்த 8 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறேன்

யு.எஸ்.தமிழன் said...

பயனுள்ள கருத்து செறிவுடன் முதிர்ச்சியுடனும் எழுதியிருக்கிறீர்கள். இதைப்போன்ற மேலும் பயந்தரும் கட்டுரைகளை வழங்க வாழ்த்துகள்!

ஆனால் இது கொஞ்சம் சகிக்கவில்லை - ”அனானி / ஆங்கில பின்னூட்டங்கள் நீக்கப்படும். சில மனநோயாளிகளை தவிர்ப்பதற்காக மறுமொழி மட்டுறுத்தல் அமலாக்கப்படுகிறது”. ஒரு தேர்ந்த படித்த பண்பாளரிடம் இதை எதிர்பார்க்கவில்லை!

Anonymous said...

உங்கள் பதிவு மேலும் பல வாசகர்களை சென்றடைய Tamilish.com தளத்தில் பகிரவும்

சித்த வைத்தியன் said...

அருமையான கருத்துப் பகிர்வு தோழரே.
மனிதன் மட்டுமல்ல,எல்லா உயிர்களும் புலன் இன்பம் கருதியும் பாலுறவு கொள்கின்றன.ஓரரினச் சேர்க்கை மற்றும் திருனங்கை உறவுகள் மறுக்கவும் மறைக்கவும் பட்டதன் ணோக்கு ஆணாதிக்கச் சமூகத்தின் வெளீப்பாடாக இருக்கலாம்
Sivaraman

மக்கள் சட்டம் said...

// யு.எஸ்.தமிழன் said...

ஆனால் இது கொஞ்சம் சகிக்கவில்லை - ”அனானி / ஆங்கில பின்னூட்டங்கள் நீக்கப்படும். சில மனநோயாளிகளை தவிர்ப்பதற்காக மறுமொழி மட்டுறுத்தல் அமலாக்கப்படுகிறது”. ஒரு தேர்ந்த படித்த பண்பாளரிடம் இதை எதிர்பார்க்கவில்லை!//

நன்றி தமிழன்.

சகிக்க முடியாத பின்னூட்டங்கள் வந்ததன் விளைவுதான் மேற்கண்ட அறிவிப்பு. இதோ எடுத்து விடுகிறோம்.

Anonymous said...

ம்ம். இதெல்லாம் ஒரு பதிவு. இதை எழுத ஒரு வக்கீலு. அதை பாராட்ட சிலபேரு. நாடு ரொம்ப கெட்டுப்போச்சு. :)

கண்டுபிடி பார்க்கலாம். said...

வக்கீலு, சும்மா சொன்னேன். நல்லாத்தான் இருக்கு.

ஆமா இந்த பதிவுல எதுக்கு தேவையில்லாம போலிஸை வம்புக்கு இழுக்கற.

அப்புறம் ஓரினச்சேர்க்கை சிற்பம் நல்லா இருக்கு. எங்க இரு்ந்து இந்த மாதிரி ஐட்டமெல்லாம் புடிக்கற.

கொஞ்சம் கிளுகிளு படம் போட்டிருக்கலாம். நீ திருந்தவே மாட்ட... :)

LINGESWARAN said...

No doubt sec 377 should go and its time now to reconsider 497 IPC also.

களப்பிரர் said...

அருமையான கருத்துப் பகிர்வு.
இதையொட்டிய எனது கருத்து இங்கே ....


http://tamilkuruthi.blogspot.com/2008/02/blog-post_29.html

Paul Navaneethan said...

Thank you such a wonderful and informative post.

You may add Dr.Anbumani's views, which in favour of (y)our views.

Keep on posting such sensational and informative posts like Credit Card issues.

We are expecting more from you.

அகராதி said...

உங்கள் கருத்துகளை டெல்லி உயர்நீதிமன்றமும் அங்கீகரித்துள்ளது.

வாழ்த்துகள்

Anonymous said...

vengayam........

நம்பி said...

ஓரினச்சேர்க்கையை இந்திய மருத்துவ கவுன்சில் அங்கிகரித்துள்ளதா?

Dinesh said...

Good article..IPC 377 should go away..my views in http://vzfrndz.blogspot.in/2009_07_01_archive.html

The first animated picture in this article give me an impresstion that An american making fun of a old muslim. It also gives the impresstion that old people are homosexual. Am i overlooking?

Post a Comment

உங்கள் கருத்துகளே எங்களை மேலும் செயல்படத் தூண்டும்.

ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.

அனானி மற்றும் ஆங்கில மறுமொழிகள் நீக்கப்படலாம்!