Monday, August 25, 2008

வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் : சிக்கல்களும் தீர்வுகளும் - 7

மேலவளவு போன்ற கொடூரமான சாதி வெறி காரணமாக நடந்த கொலை வழக்கில், உயர் நீதிமன்றம் வழக்கமான கொலை வழக்குகளில் பிணை வழங்குவது போல வழங்கியது, பெரும் அதிர்ச்சியை தலித் ஆர்வலர்களிடையே ஏற்படுத்தியது. இதனை எதிர்த்தும், உயர் நீதிமன்றம் வழங்கிய பிணையை ரத்து செய்யக்கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொழில் புரியும் மு.பூபால் உள்ளிட்ட 12 இளம் வழக்குரைஞர்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகினர். அவர்களில் இருவருக்கு குற்றவாளிகள் தரப்பிலிருந்து கொலை மிரட்டல் கடிதங்களும் வந்தன. பின்னர், 11.2.2005 அன்று உச்ச நீதிமன்றம் இவ்வழக்கின் தன்மையைக் கருத்தில் கொள்ளும்போது, உயர்நீதிமன்ற மேல்முறையீடு நிலுவைக் காலத்தில் பிணை வழங்கியிருக்கக் கூடாது என்று கூறி, சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியிருந்த பிணையை ரத்து செய்தும், அவர்கள் உடனடியாக சரணடைய வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

.

ஒரு குற்றவியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு வழங்கப்படும் பிணையை ரத்து செய்யும் அதிகாரம் பிணை வழங்கிய நீதிமன்றத்திற்கும், உயர் நீதிமன்றத்திற்கும் தான் உண்டு. பிணையில் விடுவிக்கும்போது அந்நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவருக்கு இடும் நிபந்தனைகள் மீறப்படும்போது, பிணையை வழங்கிய நீதிமன்றமே பிணை உத்தரவை ரத்து செய்யலாம். மற்ற நிகழ்வுகளில் உயர் நீதிமன்றம் குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 482 வழங்கியுள்ள தன்னதிகாரத்தின் கீழும் (Inherent Powers) அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 227இன் படியான கீழமை நீதிமன்றங்களைக் கண்காணிக்கும் அதிகாரத்தின் கீழும் (Supervisory Juisdiction) பிணையை ரத்து செய்யலாம்.

.

ஒரு குற்றவியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட பிணையை ரத்து செய்ய வேண்டுமென கீழ்க்கண்ட ஏதாவது ஒரு அல்லது ஒன்றிற்கும் மேற்பட்ட காரணங்களின் அடிப்படையில் மனுதாக்கல் செய்து கோரலாம். இவை உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத் தீர்ப்புகளின்படி உள்ள காரணங்களாகும், இவை முழுமையானவை அல்ல. இவை தவிர மற்றெந்த நியாயமான, ஏற்கத்தக்க காரணங்களின் அடிப்படையிலும் பிணையை ரத்து செய்ய நீதிமன்றத்திற்கு அதிகாரமுண்டு.

.

1. பிணையில் விடுவிக்கப்படும் நபர் பிணையில் இருக்கும்போது எவ்வகையான குற்றத்திற்காக வழக்கில் சேர்க்கப்பட்டிருக்கிறாரோ, அதே வகையான குற்றச் செயலில் ஈடுபடும்போது அவர் பிணையில் தொடர்ந்து இருக்கும் தகுதியை இழந்தவராகிறார்.

.

2. புலன்விசாரணையின்போது கிடைக்கும் புதிய தகவலின் அடிப்படையில் அந்நபர் கூடுதல் தண்டனைக்குரிய குற்றம் புரிந்தவராகத் தெரிய வருமாயின், அந்நபரின் பிணை திரும்பப் பெறப்படலாம்.

.

3. பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள குற்றம் சாட்டப்பட்ட நபர் புலன்விசாரணைக்கு எவ்விதத்திலும் இடையூறு ஏற்படுத்துவாரானால் அந்நபரின் பிணை திரும்பப் பெறத்தக்கதாகிறது.

.

4. வழக்கின் சம்பந்தப்பட்ட சாட்சிகளை எவ்வகையிலாவது மிரட்டுவதன் மூலம் சாட்சியத்தைக் கலைக்க முற்படுவாரானால், அச்சூழலில் அவர் பிணையில் இருக்கும் தகுதியை இழக்கிறார்.

.

5. பிணையில் உள்ள நபர் தலைமறைவாக முயற்சித்தாலோ, தப்பித்துச் செல்ல முயற்சித்தாலோ, வெளிநாட்டிற்கு தப்பிச்செல்ல முயற்சித்தாலோ, அல்லது வேறு வகையில் நீதிமன்றப் பார்வையிலிருந்து மறைந்து கொள்வாராயின், அந்நபரின் பிணை ரத்து செய்யப்படலாம்.

.

6. புலன்விசாரணை அதிகாரி மீதோ அல்லது வழக்கு சாட்சிகளின் மீதோ வன்முறை புரிதலும் பிணை திரும்பப் பெறலாகும்.

.

7. நீதிமன்றம் பிணை வழங்கும்போது பிழையான அணுகுமுறையின் அடிப்படையில் பிணை வழங்கப்பட்டிருந்தால் அப்பிணை ரத்து செய்யப்படலாம்.

.

8. குற்றச்சாட்டின் தன்மை மாறுபடும் பட்சத்திலும், வேறு விதமான வழக்குச் சூழ்நிலை மாற்றங்களும்கூட பிணை ரத்து செய்யக் காரணமாக அமையலாம்.

.

9. நீதிமன்ற நிபந்தனைப்படி பிணையிலுள்ள நபர் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறினாலும் பிணை ரத்து செய்யப்படத்தக்கதே.

.

10. பிணையாளர்கள் குற்றம்சாட்டப்பட்ட நபர் பிணையில் வெளியே வர பத்திரம் முலம் நீதிமன்றத்திற்கு உறுதி வழங்கியவர்கள், தாங்கள் வழங்கிய பிணைப் பத்திரத்தை திரும்பப் பெறக்கோரி நீதிமன்றத்தில் மனு செய்தாலும் பிணை ரத்து செய்யப்படலாம்.

.

11. பிணைப் பத்திரம் தவறுதலாகவோ, மோசடியாகவோ அல்லது வேறு வகையிலோ நிர்ணயிக்கப்பட்டதைவிட குறைபாடாக இருந்து ஏற்றுக் கொள்ளப்பட்ட போதிலும் பிணை ரத்து செய்யப்படலாம்.

.

12. பிணையப்பத்திரம் வேறு எவ்வகையிலாவது செல்லுபடியாகும் தன்மையை இழக்கும் போதும் பிணை ரத்து செய்யக்கூடியதாகிறது.

.

இவ்வகையில், வன்கொடுமை வழக்குகளில் பிணை திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கையை பாதிக்கப்பட்டோர் தரப்பு வலிமையுடன் எடுக்கும்போது, வழக்கு சிதைக்கப்படாமலும் வலுவிழக்காமலும் நீதிமன்றத்தில் நடத்தப் பெற முடியும். இதை சரியாகப் பயன்படுத்தினால் வன்கொடுமையாளர்கள் – பாதிக்கப்பட்டோரையோ, மற்றவர்களையோ அச்சுறுத்துதல் செய்வதை முழுமையாகத் தடுக்க முடியும்.

.

இதே போல், கடலூர் மாவட்டத்தில் 2003இல் நடைபெற்ற ஒரு வன்கொடுமை பலருக்கு நினைவிருக்கும். தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒரு படித்த ஆணும், படையாச்சி இனத்தைச் சேர்ந்த பெண்ணும் காதலித்த குற்றத்திற்காக அவர்களிருவரையும் விஷம் குடிக்க வைத்து கொன்ற சம்பவமே அது. கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், குப்பநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் சாமிக்கண்ணு. இவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். குப்பநத்தத்தில் ஏற்பட்ட ஒரு பிரச்சனையால் சாமிக்கண்ணுவின் குடும்பம் பக்கத்து கிராமமான புதுக்கூரைப்பேட்டைக்குக் குடிபெயர்ந்தது. சாமிக்கண்ணுவின் மூத்த மகன் முருகேசன், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.இ. பட்டப்படிப்பு முடித்துள்ளார். புதுக்கூரைப்பேட்டை ஊராட்சி மன்றத் தலைவர் துரைசாமி. இவர் படையாச்சி சாதியைச் சேர்ந்தவர். இவருடைய இரண்டாவது மகள் கண்ணகி, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழியில் பி.காம். படித்து வந்துள்ளார். கண்ணகி தன் அஞ்சல் வழிப்படிப்பிற்காக நேர்முக வகுப்புகளில் கலந்து கொள்ள சிதம்பரம் சென்று வந்திருக்கிறார். இவ்வகையில், முருகேசனும் கண்ணகியும் அறிமுகமாகியுள்ளனர். பின்னர், இந்த அறிமுகம் காதலாக மாறியிருக்கிறது.

.சாதி வேறுபாட்டைப் புறக்கணித்த இவர்கள் தங்கள் மனதொற்றுமையை உறுதிப்படுத்த, கடலூர் திருமணப் பதிவாளர் அலுவலகத்தில் 5.5.2003 அன்று தங்கள் குடும்பத்தினர் அறிந்து கொள்ளாத வகையில் பதிவுத் திருமணம் செய்து கொண்டுள்ளனர். பின்னர் சமயம் வரும்போது தக்க வகையில் முடிவை வெளிப்படுத்திக்கொள்ளலாம் என தற்காலிக முடிவு செய்து இருவரும் தத்தம் குடும்பத்துடனேயே வசித்து வந்துள்ளனர்.

.

இவர்கள் இருவருக்குமிடையேயான காதல் பற்றி சந்தேகம் கொண்ட கண்ணகியின் வீட்டார், சாதி பாகுபாடு காரணமாக கண்ணகியைக் கண்டித்துள்ளனர். இது பற்றி கண்ணகி முருகேசனுக்கு கடிதம் எழுத, தங்கள் முடிவை இதற்கு மேலும் தள்ளிப்போட முடியாத சூழலில் 3.7.2003 அன்று இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர். இது, கண்ணகியின் குடும்பத்தினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர்கள் தீவிரமாகத் தேடியும் இருவரும் கிடைக்காததால், முருகேசன் தன்னிடம் 8 ஆயிரம் ரூபாய் கடனாக வாங்கியது தொடர்பாக பேச வேண்டுமென்று பொய்யான காரணத்தைச் சொல்லி சாமிக்கண்ணுவை அழைத்து வரச் சொல்லியிருக்கிறார், கண்ணகியின் தந்தை துரைசாமி. அதை நம்பி சென்ற சாமிக்கண்ணுவை, “எங்கேடா உன் மகன்?” என்று கேட்டு துரைசாமி திட்டியதுடன் சாமிக்கண்ணுவை செருப்பால் அடித்துள்ளார். அவமானப்பட்டு பயந்துபோன சாமிக்கண்ணு, தான் தேடிப்பார்த்து தகவல் சொல்லுவதாகச் சொல்லிவிட்டு வந்திருக்கிறார்.

.

தான் பட்ட அவமானத்தை வெளியில் சொல்லக் கூச்சப்பட்டுக் கொண்டு, தன் மனைவியிடம் மட்டுமே இதை சாமிக்கண்ணு சொல்லியிருக்கிறார். பின்னர், தன் தம்பிகளிடம் முருகேசன் இருக்குமிடத்தை கண்டுபிடிக்கச் சொல்லிவிட்டு, தானும் முருகேசன் இருக்குமிடத்தைக் கண்டுபிடிக்கப் புறப்பட்டு விட்டார். இதேபோல், சாமிக்கண்ணுவின் தம்பி அய்யாசாமியிடமும் துரை சாமி நாடகமாட, அதை நம்பிவிட்ட அய்யாசாமி வண்ணாங்குடிகாடு என்ற கிராமத்தில் தங்கியிருந்த முருகேசனை 7.7.2003 அன்று அழைத்து வந்திருக்கிறார்.

.

அவர் மருதுபாண்டியனிடம் முருகேசனை ஒப்படைத்தார். முருகேசனை கட்டிவைத்து துரைசாமியின் மகன் மருதுபாண்டியனும் அவரது நண்பர்களும் அடித்தனர். ஆனாலும் முருகேசன் கண்ணகி பற்றி எதுவும் சொல்ல மறுத்துவிட்டார். எனவே, அவரது காலை நீண்ட கயிற்றால் கட்டி சுமார் 5 அடி அகல 300 மீட்டர் ஆழமுள்ள ஆழ்துளையில் தலைகீழாக உள்ளே விட்டு இழுத்து மிரட்டினர் (இந்த ஆழ்துளையானது நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தால் போடப்பட்டு அப்படியே விடப்பட்டுள்ளது). மிரண்டுபோன முருகேசன், கண்ணகி திருவண்ணாமலை பகுதியில் உள்ள மூங்கில் துறைப்பாடு என்ற கிராமத்தில் தனது சித்தப்பா அய்யாசாமியின் மாமனார் வீட்டில் இருப்பதை தெரிவித்தார்.

.

இரவு புதிய டாடா சுமோ வண்டியை தயார் செய்தனர். அதனை படையாச்சி சாதியை சார்ந்த சாமிக்கண்ணுவின் மகன் சின்னவன் ஓட்டிச் சென்றார். அதில் ராமதேசு, கந்தவேல், ஜோதி, வெங்கடேசன், மணி, கோதண்டபாணி, பாலு, கவுன்சிலர் கலியபெருமாள், மலையான் ஆகியோர் சென்றனர். தனது சித்தப்பா அய்யாசாமியையும் உடன் அழைத்துச் சென்றனர். மூங்கில் துறைப்பட்டு சென்று கண்ணகியை மிரட்டி வண்டியில் ஏற்றிக்கொண்டு ஊர் திரும்பினர். அங்கிருந்து செல்போன் மூலம் மருதுபாண்டிக்கு தகவல் கொடுத்துக் கொண்டே காலை 4.30 மணி அளவில் வந்து சேர்ந்தனர்.

.

மருதுபாண்டியும் அவரது நண்பர்களும் முருகேசனை ஊருக்கு அருகில் உள்ள முந்திரி தோப்பில் வைத்து அடித்தனர். இரவு முழுவதும் அங்கு முருகேசனை துன்புறுத்தினர். ஊரிலுள்ள தலித் மக்கள் சிலரை வைத்து கட்டைகளை சுடுகாட்டில் அடுக்கினர். பொன்னேரிக்கும் புதுக்கூரப்பேட்டைக்கும் நடுவில் உள்ள குட்டையில் சுமோ வண்டியை கொண்டு வந்து நிறுத்தினர். கண்ணகியை வண்டியை விட்டு இறக்கியதும், முருகேசனை முந்திரித் தோப்பிலிருந்து கொண்டு வந்தனர். இருவரையும் அடித்து மிரட்டினர். இரண்டு டம்ளர்களில் விஷத்தை ஊற்றி அவர்களை குடிக்கும்படி மிரட்டினர். அவர்கள் மறுத்ததால் முதலில் கண்ணகியை பிடித்து வாயிலும் காதிலும் விஷத்தை ஊற்றினர். அவர் மூச்சு நின்று விழுந்ததும் முருகேசனைப் பிடித்து அழுத்தி அவர் திமிரதிமிர விஷத்தை ஊற்றிக் கொன்றனர். பின்னர், கண்ணகியின் உடலை சுடுகாட்டில் அடுக்கியிருந்த கட்டைகளுக்கு மத்தியில் வைத்து டீசலை ஊற்றி எரித்தனர். முருகேசனது உடலை அருகிலுள்ள பள்ளத்தில் கட்டைகளை அடுக்கி அதில் வைத்து டீசலை ஊற்றி எரித்தனர். இந்த சூழலில் நூற்றுக்கணக்கான மக்கள் இதனை பார்த்துள்ளனர். 8.7.2003 அன்று காலை 7.00 மணியளவில் இந்தக் கொடுமை நடந்துள்ளது.

-சு. சத்தியச்சந்திரன்

(advsschandran@gmail.com)

-காயங்கள் தொடரும்

நன்றி: தலித்முரசு, ஜூலை-2008

Saturday, August 16, 2008

இயற்கைக்கு மாறான பாலுறவும், இந்தியச் சட்டங்களும்...!

காமசூத்திரம் படைத்த இந்தியாவில், தற்போது காமத்தைப் பற்றிய அறிவு சமூகத்தில் எந்த அளவுக்கு உள்ளது என்பது உடலியலாளர்களும், உளவியலாளர்களும் கருத்து சொல்ல வேண்டிய முக்கிய அம்சமாகும்.

.
மறைந்த மருத்துவர் மாத்ருபூதம், மருத்துவர் நாராயண ரெட்டி போன்றவர்கள் பாலியல் குறித்து வெளிப்படையாகவும், விஞ்ஞான ரீதியாகவும் பேசத்தொடங்கியவுடன் பாலியல் குறித்த விவாதங்கள் பொதுத்தளத்தில் அதிகரிக்கத் தொடங்கின. எனினும் ஓரினச்சேர்க்கை போன்ற சிறுபான்மை பாலுறவு குறித்து பரவலான விவாதங்கள் நடைபெறுவது அரிதாகவே உள்ளது.

இத்தகைய தளத்தில் ஈடுபடுவோரும், ஓரினச்சேர்க்கையாளராக அடையாளம் காணப்படும் வாய்ப்பிருப்பதால், இது குறித்து பரவலான விவாதங்கள் எழுப்பப்படவில்லை என்றே தோன்றுகிறது.

.

சட்டத்தின் பார்வையில்.....

பாலியல் குறித்த விவ(கா)ரங்கள் சட்டத்தின் பார்வையில் சற்றும் தெளிவில்லாமலே, சற்றுக் குழப்பமாகவும்கூட உள்ளது என்பதே உண்மை.

இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 377, இயற்கை முறைக்கு மாறாக, ஆடவன் அல்லது பெண் எவருடனேனும், விலங்கு எதனுடனேனும் தன்னிச்சையாக காமவிகார உடலுறவு கொள்கிற எவரொருவரும் ஆயுள் சிறை தண்டனை; அல்லது 10 ஆண்டுகள் வரை நீடிக்கக்கூடிய ஒரு கால அளவுக்கு சிறை தண்டனை ஆகிய இவற்றில் இரண்டில் ஒன்றை தண்டனையாக விதிக்க வேண்டும். மற்றும் அவரை அபராதத்திற்கு உள்ளாக்கவும் செய்யலாம்

மேற்கூறிய சட்ட வாசகத்தில் இயற்கை முறை என்று கொடுக்கப்பட்டுள்ள சொற்றொடருக்கு விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை. எனவே இயற்கை முறைக்கு மாறாக என்ற வாசகத்திலும் தெளிவில்லை. இந்த குழப்பம் தங்கள் வாழ்வுரிமையை பாதிப்பதாகவும் எனவே இந்த சட்டப்பிரிவை திருத்த வேண்டும் அல்லது நீக்க வேண்டும் என்று குரல்கள் தற்போது வலுத்து வருகின்றன.

குறி்ப்பாக திருநங்கைகள் () அரவானிகள் மற்றும் ஓரினச் சேர்க்கையாளர்கள் ஆகிய இருதரப்பினரே இந்த சட்டப்பிரிவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதைக்குறித்து பார்க்கும் முன்னர், இயற்கை முறை உடலுறவு என்பதற்கு இதுவரை நீதிமன்றங்கள் கொண்ட பொருளை பார்க்கலாம்.

மனிதனைத்தவிர அனைத்து உயிரினங்களும் உடலுறவை, இனப்பெருக்கத்திற்கான வழிவகையாகவே பயன்படுத்துகின்றன. மனிதன் மட்டுமே உடலுறவை பெரும்பாலான நேரங்களில் இன்ப நுகர்வுக்கான வழியாகவும், மிகச்சில நேரங்களில் கோபத்தை வெளி்க்காட்டும் வழியாகவும் (உ-ம்: காவல் நிலையம் உள்ளிட்ட இடங்களில் நிகழும் பாலியல் வன்முறை) பார்க்கிறான். எனவே மனிதத்தன்மையை எடுத்துவிட்டால் இனப்பெருக்கத்திற்கு செய்யப்படும் உடலுறவு மாத்திரமே இயற்கையானதாகும்.

இந்த அளவுகோலின்படி பார்த்தால் அரசு அமைப்புகளே வலியுறுத்தும் குடும்பக் கட்டுப்பாடு மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாடு வழிவகைகள் அனைத்துமே இயற்கைக்கு மாறான வகையைச் சேர்ந்ததுதான். இந்த தவறுக்காக மக்களை தண்டிப்பது என்பது நடைமுறையில் இயலாத காரியம். மேலும் இந்த நிலைப்பாட்டை தற்போதைய நிலையில் யாரும் ஏற்க முடியாது.

திருநங்கைகள்

இந்நிலையில் திருநங்கைகள் () அரவானிகளின் தரப்பு வாதத்தை புரிந்து கொள்ள முயற்சிப்போம்.

திருநங்கைகளுக்கு ஆண்-பெண்ணுக்குரிய பாலுறுப்புகள் இருப்பதில்லை. இருந்தாலும் அவை பயன்படுவதில்லை. அதற்காக அவர்களுக்கு பாலுணர்வே இல்லாமல் போய்விடுவதில்லை. ஏனெனில் பாலுணர்வு என்பது உடல் மட்டுமே சார்ந்தது அல்ல! மனமும் முக்கிய பங்கு வகிக்கும் பாலுணர்வு வேட்கை திருநங்கைகளுக்கும் இருக்கும் என்பதே மருத்துவ உண்மை.

ஆனால் இந்த திருநங்கைகள் எந்த விதத்தில் பாலுணர்வு வேட்கையை தணிக்க முயற்சித்தாலும் மேற்கூறிய சட்டத்தின் பார்வையில் அது குற்றமாகவே இருக்கிறது.

திருநங்கைகள் யாரும் விரும்பி திருநங்கைகளாக பிறப்பதில்லை. இயற்கையின் போக்கில் காரணம் புரியாத விந்தைகளில் ஒன்றாகவே திருநங்கைகள் உருவாவதும் உள்ளது. அதற்காக திருநங்கைகளுக்கு உயிரின் அடிப்படை வேட்கையான பாலுணர்வு வேட்கை இருக்கக்கூடாது என்றும் எதிர்பார்க்கக் முடியாது.

இயற்கைக்கு மாறான பாலுறவு என்ற பெயரில் திருநங்கைகளின் பாலுணர்வு வேட்கைகளை தடைசெய்யும் சட்டங்களை அமல்படுத்தும் முன்னர், அந்த திருநங்கைகளின் பாலுணர்வு வேட்கையை தணிப்பதற்கான வழியையும் காட்டவேண்டும் என்று எதிர்பார்ப்பதில் நியாயம் உள்ளது.

ஓரினச்சேர்க்கையாளர்கள்

அதேபோல ஓரினச்சேர்க்கையாளர்களும் இந்த சட்டத்தால் மிகவும் பாதிக்கப்படுவதாக கூறுகின்றனர். திருநங்கைகளை சகித்துக் கொள்பவர்கள்கூட ஓரினச் சேர்க்கையாளர்களை ஏற்க மறுக்கின்றனர்.

சமூகத்தில் ஓரினச் சேர்க்கையினரை பார்க்கும் விதத்திலேயே பல பிரசினைகள் உள்ளன. தன்பாலின இச்சை என்பது தீய பழக்கம் என்று ஒரு தரப்பினரும், அது ஒரு நோய் என்று ஒரு தரப்பினரும் கருதுகின்றனர். ஆனால் ஓரினச்சேர்க்கை என்பது இயற்கைக்கு மாறானது என்பதில் பெரும்பாலானோர் ஒருமித்த கருத்து கொண்டுள்ளனர்.

இந்த கருத்தின் அடிப்படையிலேயே இந்திய தண்டனை சட்டம் இயற்றப் பட்டுள்ளது. இங்கிலாந்தின் அடிமை நாடாக இந்தியா இருந்த காலத்தில் மெக்காலே என்பவரால் எழுதப்பட்ட இந்த சட்டம் கிறிஸ்தவ மதக்கொள்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டது. இந்தியாவிலும்கூட இத்தகைய இயற்கைக்கு மாறானதாக கூறப்படும் பாலுறவை எதிர்ப்பவர்கள், மதம் சார்ந்த இலக்கியங்களிலேயே இத்தகைய உறவுகள் இருப்பதை வசதியாக மறந்து விடுகின்றனர்.

மேலும் இத்தகைய பாலுறவுகளை அங்கீகரிப்பதும், தண்டிக்காமல் விடுவதும் இத்தகைய இயற்கைக்கு மாறான பாலுறவை அதிகரிக்கும் என்ற கருத்தும் முன்வைக்கப் படுகிறது.

ஆனால், தன்பாலின இச்சை இல்லாதவர்கள் யாரையும், இத்தகைய பாலுறவுக்கு ஆட்படுத்த முடியாது என்றே, ஓரினச் சேர்க்கையாளர்கள் கூறுகின்றனர். இதனை மருத்துவம் மற்றும் உளவியல் நிபுணர்களும் ஆதரிக்கின்றனர்.

அவ்வாறு தன்பாலின இச்சை இல்லாதவர்களை, இயற்கைக்கு மாறான பாலுறவுக்கு ஆட்படுத்த விழையும் நபர்களை தண்டிக்க பல வழிகள் உள்ளன. இத்தகைய சந்தர்ப்பத்தில் தன்னை தற்காத்துக் கொள்ள விரும்பும் ஒரு நபர், எதிராளிக்கு மரணத்தை ஏற்படுத்திவிட்டால்கூட அது கொலை ஆகாது என்பதே சட்டமாக உள்ளது. (இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு: 100)

இந்த சட்டப்பிரிவின்படி, இயற்கைக்கு மாறான காம இச்சையுடன் தாக்கும் ஒரு நபரால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்ற சூழலில், தம்மை தற்காத்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபடுபவரின் செயற்பாட்டில் எதிரி இறந்து விட்டாலும் அது கொலை ஆகாது. அதற்கு பதிலாக கொலை ஆகாத மரணம் ஏற்படுத்தும் குற்றம் என்பதாகவே கருதப்படும்.

எனவே, இயற்கைக்கு மாறான பாலுறவை தடை செய்யாவிட்டால், அத்தகைய இயற்கைக்கு மாறான பாலுறவு அதிகரித்து விடும் என்ற அச்சம் மறைந்து விடுகிறது.

அடுத்தது என்ன?

இந்த நிலையில் பாலியல் சிறுபான்மையினராகிய திருநங்கைகள் மற்றும் ஓரினச் சேர்க்கையாளர்களின் மனித உரிமைகளை பாதுகாக்கும் வகையில் இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 377-ஐ நீக்க வேண்டும் என்ற கருத்திற்கு பல பிரமுகர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த கருத்தில் உங்களுக்கு உடன்பாடு இருந்தால் நீங்களும் ஆதரவு தெரிவிக்கலாம்.

அதேபோல, ஓரினச் சேர்க்கையாளர்களையோ, திருநங்கைகளையோ நேரில் அடையாளம் காணும் தருணங்களில் அருவருப்போ, அச்சமோ அடையாமல் அவர்களையும் சாதாரண மனிதர்களே என்று ஏற்றுக் கொள்வது உங்கள் அறிவு விசாலமடைவதை குறிக்கும். அவர்களுடன் இயல்பாக பழக முயற்சிப்பது உங்கள் மனிதாபிமானத்தை காண்பிக்கும்.


-சுந்தரராஜன்

Thursday, August 14, 2008

ரூ. 23 கோடியும், 26 நீதிபதிகளும்....!

ஒரு சாதாரண இந்தியக் குடிமகனின் கடைசி நம்பிக்கையாகச் சொல்லப்படுவது, நீதித்துறையே! ஆனால், நீதித்துறையின் வரலாற்றைப் பார்த்தோமானால், அதிலும் மேற்சொன்ன நம்பிக்கையை குலைக்குமளவிற்கு செயல்பாடுகள் நடந்து வந்துள்ளன. செய்தி ஊடகங்கள் செய்தித்தாள், தொலைக்காட்சி, வலைத்தளம் எனப் பெருகியுள்ள இப்போதைய நிலையில் நீதிமன்றத்தின் செயல்பாடுகள் இத்தகைய ஊடகங்களில் கவனிக்கத்தக்க அளவில் முக்கியத்துவம் கொடுத்து வெளியிடப்படுகின்றன.
.
சுதந்திர இந்திய வரலாற்றில் முதன்முறையாக இந்திய உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றிக் கொண்டிருந்த ஒரு நீதிபதி (திரு.V.ராமசாமி) மீது, அவருடைய ஊழல் காரணமாக பதவியிருந்து நீக்க பாராளுமன்றத்தில் பதவியிழக்கச் செய்யும் நடவடிக்கை (IMPEACHMENT PROCEEDINGS) 1990ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. அதற்கு முன் நீதிபதிகள் விசாரணைச் சட்டப்படி (THE JUDGES INQUIRY ACT 1968) 108 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டு மக்களவைத் தலைவரிடம் விசாரணை நடத்துமாறு கோரிக்கை வைத்தபின் மூன்று நீதிபதிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டு, அந்த விசாரணைக் குழுவின் அறிக்கையும் அக்குறிப்பிட்ட நீதிபதி ஊழலில் ஈடுபட்டார் என்பதை உறுதிசெய்த பின்னரே பதவியிழக்கச் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இருந்தபோதிலும், அப்போது வீசிய அரசியல் சார்புக்காற்று காரணமாக இந்த நடவடிக்கை முடக்கப்பட்டு தோற்கடிக்கப்பட்டது.
.
இதுபோல் பல்வேறு உயர்நீதிமன்றங்களில் பல்வேறு வகையான ஊழல் குற்றச்சாட்டுக்கள் நீதிபதிகள் மீது சொல்லப்படுவதும், அவற்றுள் பெரும்பான்மை உண்மையாக இருந்து விடுவதும் அனைவரும் அறிந்ததே.
.
குறிப்பாக, நீதித்துறையில் மலிந்து வரும் ஊழல் (கையூட்டு) அல்லது நீதி சார்ந்த ஆதாயம் மட்டுமே ஊழல் என்று பொதுப்புத்தியில் பதிந்துள்ளது. ஆனால் தனக்கு வேண்டியவர்களுக்கு (NEPOTISM) வழங்கப்படும் உத்தரவு, தீர்ப்பு போன்றைவையும் ஊழல் சார்ந்தவையே அண்மைக்காலங்களில் கவனத்தையும், சமூகத்தில் பெருங்கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
.
இருபதாண்டுகளுக்கு முன், மத்திய சட்ட அமைச்சராகவும் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியுமாக இருந்த திரு பி.சிவசங்கர் நீதித்துறையின் செயல்பாடுகள் கவலையளிப்பவையாக உள்ளதெனவும், உயர்நீதித் துறையிலும்கூட (higher judiciary) மலிந்துவரும் விரும்பத்தகாத போக்கையும் சுட்டிக்காட்டினார்.
.
பத்தாண்டுகளுக்குமுன் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி திரு எஸ்.பி.பரூச்சா, நாட்டிலுள்ள நீதிபதிகளில் 20 விழுக்காட்டினர் ஊழல்வாதிகளாக இருக்கும் அதிர்ச்சிச் செய்தியை வெளிப்படுத்தினார். இதன்படி பார்த்தால், நீதிபதிகளில் ஐவரில் ஒருவர் ஊழல்வாதி என்றாகிறது. இந்தப் புள்ளிவிவரம் புதுப்பிக்கப்படுமானால் விகிதம் தலைகீழாக மாறியிலிருந்தாலும் வியப்பதற்கில்லை.
.
2007, ஜனவரியில் பதவியேற்குமுன் “தி இந்து” பத்திரிகைக்கு 03-01-07 அன்று அளித்த பேட்டியில் தற்போதைய இந்தியத் தலைமை நீதிபதி திரு. கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதித்துறையில் ஊழல் தொடர்பாக குற்றச்சாட்டுகள் மட்டுமே உள்ளன (அவை நிரூபிக்கப்படவில்லை) என்று நெத்தியடியாகச் சொன்னார்.
.
திரு. ஜே.எஸ்.வர்மா, இந்தியத் தலைமை நீதிபதியாக இருந்தபோது 1997ம் ஆண்டில் உயர்நீதித் துறையினர் ஊழல் புகார்களுக்கு இடம்கொடா வகையில் நடந்து கொள்ள வேண்டுமென்று நீதிபதிகளுக்கான நடத்தை நன்னெறிகள் (Code of Conduct for Judges) வகுக்கப்பட்டது. அதன் ஓர் அம்சம் - நீதிபதிகள் தங்கள் சொத்துக்கணக்கை தலைமை நீதிபதியிடம் அளிக்க வேண்டும் என்பது. இவ்வாறு அளிக்கப்படும் விபரங்களும் இரகசியமாக வைத்துக்கொள்ளப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், நீதிபதிகளை சொத்துக்கணக்கு காட்டச் சொல்வது நீதிபதிகளின் சுயமரியாதைக்கு இழுக்கு என்றும், நீதிபதிகளின் செயல்பாடுகள் குறித்த விபரங்களைப் பெற தகவல் அறியும் உரிமைச் சட்டம் பொருந்தாது என்றும் திரு கே.ஜி.பாலகிருஷ்ணன் கூறியதும் கூட இதன் அடிப்படையில்தான் என்று கூறலாம்.
.
இப்படியெல்லாம் கருத்து தெரிவித்த திரு கே.ஜி.பாலகிருஷ்ணன், உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவர், உயர்நிதிமன்ற நீதிபதிகள் ஏழு பேர், உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிகள் பத்துபேர், மாவட்ட நீதிபதிகள் பத்துபேர், ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதிகள் இருவர் என 26-நீதிபதிகள் ரூ.23 கோடியை சுருட்டிய ஊழல் வழக்கு, தன்னிடமே விசாரணைக்கு வரும் என்று அவர் எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை.
.
இவ்வழக்கின் முழுவிபரம் நம்மிடம் தற்போது இல்லை, எனினும், இவ்வழக்கு விசாரணை குறித்து செய்தித்தாள்களில் வெளியான விபரங்களின் அடிப்படையில் வழக்கின் பின்னணி தரப்படுகிறது. மேலும் விபரங்கள் பின்னர் தரப்படும்.
.
உத்திரப்பிரதேச மாநிலம் காசியாபாத் நீதிபதிகள் 26 பேரும், மற்ற உயர்பதவி வகிக்கும் அலுவலர்களும் நான்காம் நிலை அரசு ஊழியர்களின் சேமநல நிதியிலிருந்து ரூ.23 கோடி அளவிலான பணத்தை பொய்யான பெயர் விபரங்கள் அளித்து கையாடல் செய்தது அப்பகுதி நீதித்துறையினரிடையே பெருத்த கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இது “காசியாபாத் நீதிபதிகள் ஊழல்” என்று பரவலாக அறியப்படுகிறது. இது தொடர்பாக சி.பி.ஐ விசாரணைக்கு உத்திரவிடவேண்டுமென்று கோரி நஹர்சிங் யாதவ் என்ற வழக்குரைஞர், “அதிவக்த கல்யாண்” என்ற அறக்கட்டளையின் தலைவர் மற்றும் காசியாபாத் வழக்குரைஞர் சங்கம் ஆகியோர் மனுதாரர்களாக இருந்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தை அணுகினர்.
.
அம்மனுவை அலகாபாத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையடுத்து நீதித்துறை மீது படிந்துள்ள இந்தக் கறையை போக்க வேண்டுமெனில் இந்த ஊழல் தொடர்பான விசாரணை சி.பி.ஐ-யால் விசாரணை நடத்தப்படவேண்டும் என்பதே வழக்கின் ஒரே முக்கிய கோரிக்கை. வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்கள் உயர்நீதித்துறையில் இருப்பதால், சி.பி.ஐ மூலமான விசாரணையே சரியானதாக இருக்கும் என்பது அம்மனுதாரர்களின் கோரிக்கை.
.
இம்மனு தள்ளுபடி செய்யப்பட்டதால், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது. இந்தியத் தலைமை நீதிபதி திரு கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதி திரு பி.சதாசிவம் மற்றும் நீதிபதி திரு கே.எம்.பஞ்சால் ஆகியோர் அடங்கிய ஆயத்தின்முன் முதன்முதலில் 07.07.2008 அன்று விசாரணைக்கு வந்தபோது, வழக்கின் தனித்தன்மை கருதி தலைமை நீதிபதியின் தனியறையில் (Chambers) அடுத்த கட்ட விசாரணையை நடத்த உத்திரவிடப்பட்டது. 14.07.2008 அன்று நடைபெற்ற தனியறை விசாரணையின் போது மத்திய அரசின் வழக்குரைஞர் (Solicitor General of India) இவ்வழக்கின் விசாரணை வெளிப்படையாக நடத்தினால் அது நீதித்துறைக்கு வலு சேர்க்கும் என்று அவர் விடு்த்த வேண்டுகோளை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர். தனியறை விசாரணையின்போதே தங்களையும் வழக்கில் ஒரு தரப்பினராகக் சேர்த்துக் கொள்ள வழக்குரைஞர் திரு பிரசாந்த் பூஷண் வழியாக TRANSPARENCY INTERNATIONAL என்ற அமைப்பு மனுச் செய்தது.
.
இந்த வழக்கின் புலனாய்வை சி.பி.ஐக்கு மாற்றக் கோரியுள்ள நிலையில் உச்சநீதிமன்ற ஆயம், குற்றச்சாட்டிற்கு ஆளான நீதிபதிகளை சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்கமான முறையில் நேரடியாக சந்தித்து விசாரிப்பதை விரும்பவில்லை. அதற்கு பதிலாக, குற்றம் சாட்டப்பட்ட நீதிபதிகளிடம் புலன்விசாரணை மேற்கொள்வதற்காக சி.பிஐ அதிகாரிகள் கேட்க விரும்பும் கேள்விகளை எழுத்து மூலமாக வழங்கி, அந்நீதிபதிகள் எழுத்து மூலம் வழங்கும் பதில்களின் அடிப்படையிலேயே விசாரணை தொடர வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
.
இவ்வழக்கில் எழுப்பப்பட்டுள்ள முக்கிய குற்றச்சாட்டு, கடைநிலை ஊழியர்களின் சேமநல நிதியை பொய்யான பெயர்களைக் குறிப்பிட்டு ரூ.23 கோடி அளவில் இந்த நீதிபதிகள் கையாடல் செய்துள்ளார்கள் என்பதாகும். இந்தச் செய்தி வெளிவரக்காரணமே, இந்த வலைப்பின்னலின் சங்கிலிகளில் ஒருவராக செயல்பட்ட குற்றவாளிகளில் ஒருவர், இந்தக் குற்ற முறையை தனது ஒப்புதல் வாக்குமூலத்தில் வெளிப்படுத்தியதுதான். அவருடைய வாக்குமூலத்தின் அடிப்படையில் 82 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் நீதிபதிகள் குற்றம் சாட்டப்பட்டவர்களாக சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
.
குற்றம் சாட்டப்பட்ட நீதிபதிகளிடம் எழுத்துமூலமான கேள்விகள் அளித்து பதில்களை பெற வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தின் தலைமைப்பதிவாளர், காசியாபாத் காவல் நிலையத்திற்கு கடிதம் எழுதினார்.
.
இந்த சலுகை அடிப்படையிலான நடைமுறைக்கு 17.07.2008 அன்று நடைபெற்ற இவ்வழக்கு விசாரணையின்போது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் திரு பிரசாந்த் பூஷண் கடும் ஆட்சேபணை தெரிவித்தார். அதை தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் ஏற்க மறுத்ததுடன், தன்னுடைய நிர்வாக ரீதியான உத்திரவை கேள்விக்குட்படுத்தினால், இவ்வழக்கை விசாரணை செய்யும் ஆயத்தில் தான் பங்கேற்க முடியாது என்று தனது கருத்தை கோபத்தின் உச்சத்தில், உறுதிபட தெரிவித்தார். வழக்கின் விசாரணை வரும் ஆகஸ்டு முதல் தேதியன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
.
ஒரு குற்றவியல் வழக்கின் புலன் விசாரணை என்பது அந்தக் குற்றத்தில் ஈடுபட்ட நபர்களை நேரடியாக விசாரணை செய்து குற்றத்தின் பின்புலம் தொடர்பான அனைத்து தகவல்களையும் திரட்டி, அதில் ஈடுபட்ட அனைத்து நபர்களையும் சட்டத்தின் முன் நிறுத்துவதுதான். இதைத் தான் சட்டம் வலியுறுத்துகிறது. இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்களாகக்கூட முதல் தகவல் அறிக்கையில் சம்பந்தப்பட்ட நீதிபதிகள் காட்டப்படவில்லை என்பதும், அவர்களிடம்கூட புலன்விசாரணை செய்ய மறைமுகத்தடை என்பதும் மிகவும் வருந்தத்தக்க சூழ்நிலையாகும். இது சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற நீதிக்கோட்பாட்டை மீறுவதாகவே மக்கள் உணர்வர்.
.
“நீதி வழங்கப்படுவது என்பதும், வழங்கப்படுவது நீதிதான் என்பதும் வெளிப்படையாகத் தெரிய வேண்டியது அவசியம்” என்கிறது சட்டச்சொற்றொடர் (JUSTICE SHOULD NOT ONLY BE DONE BUT ALSO SEEM TO BE DONE). ஆனால், நீதிபதிகள் விஷயத்தில் மட்டும் இச்சொற்றொடர் பலநேரங்களில் பொருந்துவதாக இருப்பதில்லை.
.
கடந்த 2003ம் ஆண்டு கர்நாடக மாநிலம் மைசூரி்ல் நீதிபதிகள் சிலர் தங்கள் தகுதிக்குக் குறைவான விரும்பத்தகாத செயல்களில் ஈடுப்பட்டார்கள் என்று வெளியான செய்திகள் தி இந்து, டைம்ஸ் ஆப் இந்தியா, இந்தியா டுடே உள்ளிட்ட இதழ்கள் மீது கர்நாடக உயர்நீதிமன்றம் தன்னிச்சையாக (SUO-MOTU) நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக் காரணமானது. இது தொடர்பாக நடைபெற்ற வழக்கு விசாரணையொன்றில் இக்குற்றச்சாட்டை விசாரித்த நீதிபதிகள் குழுவின் அறிக்கை நகலை வழங்கக் கேட்டு மூத்த வழக்குரைஞர் இந்திரா ஜெய்சிங் தாக்கல் செய்த மனு, விசாரணை அறிக்கை இரகசியமானது என்று கூறி உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
.
“வல்லான் வகுத்ததே வாய்க்கால்” என்பதற்கேற்ப நீதித்துறையின் தனித்தன்மையும் சுதந்திரமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கூறிக்கொண்டே நீதித்துறையின் அனைத்து செயல்பாடுகளிலும் வெளிப்படையற்ற தன்மையை பின்பற்றுவதும் ஊக்குவிப்பதுமாகவே நடைபெற்று வருகிறது. இந்நிலை சிறிதளவேனும் மாற வேண்டும் இல்லையெனில், Howsoever high you may be; the law is above you என்பது பொய்யாகி விடும் அபாயமுள்ளது.

-சு. சத்தியச்சந்திரன்
(advsschandran@gmail.com)