Tuesday, May 20, 2008

கோல்ட் குவெஸ்ட் நிறுவனமும், "ஏமாந்த" மக்களும்...!

குற்றங்களைப் பற்றியும் குற்ற நிகழ்வுகளில் பங்கேற்பவர்களைப் பற்றியும் பொதுமக்களிடம் பல்வேறு கருத்துகள் உள்ளன. பங்கேற்பவர்கள் என்பது குற்றத்தை செய்பவர்களை மட்டுமல்ல; அதனால் பாதிக்கப்படுபவர்களையும் சேர்த்ததே.

அரசு மற்றும் ஆதிக்க வர்க்கத்தினரிடம் உள்ள பொதுவாக கருத்தியல், ஏழை மற்றும் படிப்பறிவற்ற மக்கள் குற்றம் செய்யக்கூடியவர்கள் என்பதே. இதன்படி குற்றத்தில் தொடர்புள்ளவரின் சாதியும், தோல் நிறமும் கூட மிகமுக்கியமானவை. இந்த கருத்தியலின்படியே பொதுவாக காவல்துறையும், பல நேரங்களில் நீதித்துறையும் செயல்படுகின்றன.

அதேபோல ஏழை மக்களைப் பொறுத்தவரை, அதை வெளிப்படையாக சொல்லும் துணிச்சல் இல்லாவிட்டாலும்கூட, பணக்காரர்கள் செய்வதே குற்றமாக கருதப்படுகிறது. எனவேதான் சாலை விபத்து போன்ற சந்தர்ப்பங்களில் நடந்தோ, சைக்கிளிலோ செல்பவரின் தவறால் விபத்து ஏற்பட்டால்கூட அதற்கு மோட்டார் வாகனத்தில் செல்பவரே பொறுப்பேற்க வேண்டும் என்ற எண்ணம் நிலவுகிறது.

இந்த அடிப்படை மனோபாவம் பலநேரங்களில் செய்தித்தாள்கள், தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள் மூலமாகவும் பரப்பப்படுகிறது.

ஊடகங்களில் பணிபுரிவது என்பது மிகவும் சுவாரசியமானது. உண்மையான உண்மைகள் நமக்கு தெரிந்தாலும், மக்களுக்கு தேவையான உண்மைகளை மட்டுமே வழங்கும் பணி சில நேரங்களில் சவாலானதும்கூட. ஏனென்றால் உண்மையான உண்மைகளை வெளிப்படுத்தினால் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம்.

சில ஆண்டுகளுக்கு முன், திருச்சியில் “போலி கள்ள நோட்டு” மாற்ற முயன்ற சிலர் பிடிபட்டதாக கூறப்பட்டது. இந்த சம்பவத்திற்காக நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில், செய்தியாளராக பங்கேற்கும் வாய்ப்பும் கிடைத்தது.

பிடிபட்ட குற்றவாளிகள் கட்டுக்கட்டாக கருப்பு வண்ண காகிதங்களை வைத்திருந்தனர். அவர்களின் அருகே ஒரு பாத்திரத்தில் திரவமொன்றும் இருந்தது. செய்தியாளர்கள் அனைவரும் வந்தவுடன், காவல்துறை அதிகாரியின் அறிமுகவுரை முடிந்தவுடன் குற்றச்சம்வத்தின் செயல்முறை விளக்கம் நடத்திக்காட்டப் பட்டது.

“குற்றவாளிகள்” கட்டுக்கட்டாக இருந்த கருப்பு வண்ணக் காகிதங்களில் சிலவற்றை எடுத்து அந்த திரவத்தில் கரைத்தனர். அது ரூபாய் நோட்டாக மாறியது. இந்த செயல்முறை விளக்கத்தை பாதிக்கப் பட்டவர்களிடம் அவர்களது வீட்டில் குற்றவாளிகள் செய்துகாட்டி அவர்களை ஏமாற்றிவிட்டதாக கூறப்பட்டது.“ஏமாந்தவர்கள்” அனைவரும் சுமார் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை பணம் கொடுத்து அதற்கு இரட்டிப்பு மடங்கில் கள்ளநோட்டு வாங்க முயற்சி செய்திருந்தனர். ஆனால் கள்ள நோட்டை கொடுத்த குற்றவாளிகள் சென்றபின்னர், அவர்கள் கொடுத்த கருப்பு வண்ண காகிதத்தை எந்த திரவத்தில் போட்டாலும் அது ரூபாய் நோட்டாக மாற மறுத்துவிட்டது.

இந்த "நூதன மோசடி"யால் "பாதிக்கப்பட்டவர்கள்" அனைவரும் பொங்கி எழுந்து காவல்துறையினரிடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து, காவல்துறையினர் மேற்கொண்ட தீவிர புலனாய்வில் குற்றவாளிகள் பிடிபட்டனர்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் பாதிக்கப்பட்டவர்களும் அவர்களின் வழக்கறிஞர்களும் இருந்தனர். அப்போது காவல்துறை அதிகாரியிடம், “இந்த கருப்பு வண்ண காகிதங்கள் கள்ளநோட்டாக மாறாததால் இவர்கள் பாதிக்கப்பட்டதாக கூறுகிறார்கள். அவை அனைத்தும் கள்ள நோட்டாக மாறியிருந்தால் அப்போது யார் குற்றவாளி?” எனக் கேட்டோம்.
அதற்கு மழுப்பலான சிரிப்புடன் பதிலளித்த அந்த அதிகாரி, “இருதரப்பும்தான்” என்று கூறினார். பாதிக்கப்பட்டதாகக்கூறி புகாருடன் வந்தவர்களையும் நமது கேள்வி குற்றவாளிகள்தானே என்று சுட்டிகாட்ட - "பாதிக்கப்பட்டவர்"களும், அவர்களின் வழக்கறிஞர்களும் இந்த எதிர்பாராத கேள்வியினால் திகைக்க இயல்பு நிலை திரும்ப சற்று நேரமானது.
குற்றவியல் தத்துவங்கள் அனைத்தும் குற்றச்செயலைவிட குற்ற மனப்பாங்கை(Mens Rea)யே பெரும் தீங்காகப் பார்க்கின்றன. இந்த அடிப்படையில் கள்ளநோட்டு மாற்ற ஆசைப்பட்டு அதற்கான முயற்சியில் ஈடுபட்ட அனைவருமே குற்றவாளிகள்தான். அவர்களின் முயற்சி நிறைவேறவில்லை என்பதால் அவர்களை அப்பாவிகளாகவும், பாதிக்கப்பட்டவர்களாகவும் பார்க்கக்கூடாது.

சன்டே இந்தியன் வாரஇதழின் செய்தியாளர் திரு.சந்திரன் என்னை தொடர்பு கொண்டு, “கோல்ட் குவெஸ்ட் நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவர்கள்” குறித்து கேட்டபோது இந்த சம்பவத்தைக் கூறி, கோல்ட் குவெஸ்ட் நிறுவனத்தால் பாதிக்கப்பட்டதாக கூறிக்கொள்பவர்களையும் இந்தப்பார்வையிலேயே பார்ப்பதாகவும் கூறினேன். இது அப்படியே அச்சாகவும், பல நண்பர்கள் என்னை தொடர்பு கொண்டு கோல்ட் குவெஸ்ட் நிறுவனத்திற்கு ஆதரவாகவும், பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கு எதிராகவும் நான் பேசுவதாக அதிர்ச்சியை தெரிவித்தனர். அதற்கு பதிலாக இந்த பதிவெழுத நேர்ந்தது.


இந்த “அப்பாவிகள்” குறித்து முதலில் சில விஷயங்களை தெளிவு செய்து கொள்வது நல்லது.

இவர்கள் கோல்ட் குவெஸ்ட் நிறுவனத்தில் இந்த அப்பாவிகள் யாரும் முதலீடு செய்யவில்லை. அந்த நிறுவனம் அறிவித்த ஒரு திட்டத்தில் உறுப்பினராகதான் சேர்ந்தனர். அந்த திட்டத்திற்கான விதிமுறைகளை புரிந்து கொள்ளாதது உறுப்பினர்களின் தவறே. உறுப்பினர்கள் அதைக் கேட்டும் நிறுவனம் சொல்லாவிட்டால் அதுவும் தவறே.


சுமார் 30 ஆயிரம் ரூபாய் தொகையைப் பெற்றுக் கொண்ட அந்த நிறுவனம், வெறும் 3 கிராம் தங்கத்தை மட்டுமே கொடுத்தது என்பதையும் புலம்புவதில் அர்த்தமில்லை. ஏனெனில் அந்த அளவு தங்கத்தை மட்டுமே தருவதாக அந்த நிறுவனம் தெளிவாகவே தெரிவித்திருந்தது. அது உலகிலேயே மிகக்குறைவான அளவில் தயாரிக்கப்பட்ட அரிய வகை நாணயம் என்பது மிகச்சிறந்த நகைச்சுவை. அதை நம்பியது அதைவிட நகைச்சுவை.


ஆக இந்த கோல்ட் குவெஸ்ட் விவகாரத்தில் உறுப்பினரானவர்கள் யாரும் தெரியாமல் மாட்டிக் கொண்டதாக தெரியவில்லை. தெரிந்தே உறுப்பினராகியுள்ளனர்.

அவர்களுக்கு சந்தேகங்கள் தோன்றியபோதெல்லாம் நிதியமைச்சரின் மனைவி மூத்த வழக்கறிஞர் நளினி சிதம்பரம் வழங்கிய சட்ட சான்றிதழ், உறுப்பினர்களுக்கு தெம்பூட்டியுள்ளது. மக்கள் ஏமாந்ததாக கூறப்படுவதற்கு இதுவே முழுமையான காரணம் அல்லவென்றாலும், இதுவும் முக்கியமான காரணம் என்பதை மறுக்க முடியாது.

இந்த வலைப்பின்னல் வணிகத்தொழிலில் காவல்துறையினர், வழக்கறிஞர்கள், செய்தியாளர்கள் உட்பட சமூகத்தில் படித்தவர்கள் எனக்கருதப்படும் பலரும் இணைந்துள்ளனர்.

இந்த வலைப்பின்னல் எங்கோ ஒரு இடத்தில் அறுந்துபோகும் என்பது யாருக்குமே தெரியாதா? அவ்வாறு அந்த இழை அறுந்து போவதற்குள் நாம் சம்பாதித்து விடுவோம்! மற்றவர்களைப்பற்றி நமக்கென்ன கவலை என்ற குறுகிய எண்ணத்தில்தானே இந்த திட்டத்தில் ஏராளமானோர் சேர்ந்துள்ளனர்?

உழைக்காமல், குறுகிய காலத்தில் பணம் சேர்க்கும் எண்ணமே இதுபோன்ற நிறுவனங்களுக்கான தொழில் வாய்ப்பாக அமைகிறது.


சமூகத்தின் பொதுக்கருத்தில் ஒருவர் செல்வந்தரா? என்பது மட்டுமே கேள்விக்குள்ளாகிறது. அவர் எந்த தவறான வழியில் பணம் சேர்த்தாலும் அது குற்றமாக பார்க்கப்படுவதில்லை. மாட்டிக்கொள்ளாமல் தவறு செய்யும் கலை, சாமர்த்தியம் என்று போற்றப்படுகிறது.

உலகமயமாதல் பொருளாதார சூழ்நிலையில், வாழ்க்கை அறங்கள் அனைத்தும் பொருளற்று கொள்ளை லாபம் ஒன்றே வாழ்வின்/வணிகத்தின் லட்சியமாக மாறிவிட்ட நிலையில் மக்களின் அறம் சார்ந்த கோட்பாடுகளும் பொருள் இழந்து வருவதையே இது காட்டுகிறது.

அரசியல்வாதிகள், வணிகக்கழகங்கள், அரசு அதிகாரிகள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், செய்தித்துறையினர் உள்ளிட்ட அனைத்து துறையினருமே இந்தப்போக்கில்தான் செயல்படுகின்றனர். இதிலிருந்து விலகிநிற்க முனையும் சிலர் கோமாளிகளாகவும், பிழைக்கும் சாமர்த்தியம் இல்லாதவர்களாகவும் சித்தரிக்கப்படுகின்றனர்.

இவ்வாறு ஏமாளிகளாகவும், கோமாளிகளாகவும் இருக்க முடியாமல், என்ன செய்தாவது பொருளீட்டும் ஆர்வத்தில் கோல்ட் குவெஸ்ட் நிறுவனத்தில் இணைந்தவர்கள்தான் இன்று பாதிக்கப்பட்டவர்களாக சித்தரிக்கப்படுகின்றனர்.

ஒரு வாதத்திற்காக அவர்கள் பாதிக்கப்பட்டவர்கள்தான் என்பதை ஏற்றுக்கொண்டாலும், அவர்களை ஏமாற்றியது கோல்ட் குவெஸ்ட் நிறுவனம் மட்டும்தானா? என்பதே நம் கேள்வி.
-பி. சுந்தரராஜன்
(sundar@LawyerSundar.net)

7 comments:

Anonymous said...

//உண்மையான உண்மைகள் நமக்கு தெரிந்தாலும், மக்களுக்கு தேவையான உண்மைகளை மட்டுமே வழங்கும் பணி சில நேரங்களில் சவாலானதும்கூட. ஏனென்றால் உண்மையான உண்மைகளை வெளிப்படுத்தினால் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம்.//


Is it?

Anonymous said...

'அவர்களுக்கு சந்தேகங்கள் தோன்றியபோதெல்லாம் நிதியமைச்சரின் மனைவி மூத்த வழக்கறிஞர் நளினி சிதம்பரம் வழங்கிய சட்ட சான்றிதழ், உறுப்பினர்களுக்கு தெம்பூட்டியுள்ளது. மக்கள் ஏமாந்ததாக கூறப்படுவதற்கு இதுவே முழுமையான காரணம் அல்லவென்றாலும், இதுவும் முக்கியமான காரணம் என்பதை மறுக்க முடியாது.'

தயவு செய்து விளக்கவும்.

dondu(#11168674346665545885) said...

//உலகமயமாதல் பொருளாதார சூழ்நிலையில், வாழ்க்கை அறங்கள் அனைத்தும் பொருளற்று கொள்ளை லாபம் ஒன்றே வாழ்வின்/வணிகத்தின் லட்சியமாக மாறிவிட்ட நிலையில் மக்களின் அறம் சார்ந்த கோட்பாடுகளும் பொருள் இழந்து வருவதையே இது காட்டுகிறது.//
மல்டிலெவல் மார்க்கெட்டிங் கான்சப்ட் ரொம்ப பழையது. நான் இது சம்பந்தமாக போட்ட இப்பதிவில் 1956-லேயே இது இருந்ததை சுட்டிக் காட்டியுள்ளேன். என்ன, இப்போது ஏமாறும் தொகைகள் மிக அதிகம்.

இது சம்பந்தமான எனது இப்பதிவைப் பார்க்கவும். http://dondu.blogspot.com/2008/05/blog-post_07.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

Baskar said...

மனசாட்சி உள்ளவர்கள் யோசிக்க வேண்டிய நல்ல பதிவு.

வெங்கட்ராமன் said...

Good Post.

Valliyappan said...

மனசாட்சி உள்ளவர்கள் யோசிக்க வேண்டிய நல்ல பதிவு.

Yeah. Its true.

அகராதி said...

இப்ப இன்னாதான் சொல்ற?

கோல்ட் குவெஷ்ட் தப்பே பண்ணலைங்கறியா? இல்லாங்காட்டி அதுல சேர்ந்தவுங்க அல்லாருமே அயோக்கியனுங்கன்னுறியா?

Post a Comment

உங்கள் கருத்துகளே எங்களை மேலும் செயல்படத் தூண்டும்.

ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.

அனானி மற்றும் ஆங்கில மறுமொழிகள் நீக்கப்படலாம்!