Monday, February 18, 2008

60% எடு - இல்லை கல்வியை விடு...!

இந்திய அரசின் சமூகநீதித் துறை செப்டம்பர் 24, 2007 அன்று - இந்தியா முழுவதும் உள்ள பொறியியல், மருத்துவம், வேளாண்மை, சட்டக் கல்லூரிகள் உள்ளிட்ட தொழில்நுட்பக் கல்லூரிகளில் படிக்கும் தலித் மாணவர்கள் (+2) மேல்நிலை இரண்டாம் ஆண்டு வகுப்பின் இறுதித் தேர்வில் 60 சதவிகிதம் மதிப்பெண் எடுத்திருந்தால்தான் – மத்திய அரசின் உயர் கல்விக்கான (போஸ்ட் மெட்ரிக்) கல்வி உதவித் தொகையைப் பெற முடியும் என்று ஓர் அரசாணையை வெளியிட்டுள்ளது.



இந்த அரசாணை முற்றிலும் தலித் விரோதமானது. மேலோட்டமாகப் பார்த்தால் - தலித் மாணவர்கள் நன்கு படிக்கவும், அறுபது சதவிகிதத்திற்கும் கூடுதலாக மதிப்பெண் பெற ஊக்குவிக்கிற, கட்டாயப்படுத்துகிற முயற்சிபோல இது தோற்றமளிக்கும். ஆனால் உண்மை அதுவல்ல. நூறுகோடி மக்களைக் கொண்ட நாட்டில், பல்வேறு சாதி, மத, பொருளாதார, புவியியல், தலைமுறை ஏற்றத்தாழ்வுகள் நிலவுகிற இந்தியாவில்/தமிழகத்தில் படிக்கும் அனைத்து மாணவர்களும் - 60 சதவிகிதம் மதிப்பெண் பெறுவது என்பது எங்கும், எப்போதும் நடைமுறை சாத்தியமற்ற எதிர்பார்ப்பாகும்.
.
ஒருவேளை மிகப்பெரிய எண்ணிக்கையிலான மாணவர்கள், குறைந்த அளவு 60 சதவிகிதத்திலிருந்து உச்சபட்ச அளவான 100 சதவிகிதம் வரை மதிப்பெண் எடுப்பார்களானால், அப்போதும் இந்த அரசு கல்வி உதவித் தொகையை எல்லோருக்கும் வழங்கிவிடாது. இன்று 60 சதவிகிதம் எடுக்க வேண்டும் என்ற நிபந்தனையை, ஒருவேளை 70 சதவிகிதம் அல்லது 80 சதவிகிதம் மதிப்பெண்ணைக் கோரி நிபந்தனையை மாற்றியமைக்கவே செய்யும்.

எல்லோரும் ஒரே மாதிரி மதிப்பெண் எடுக்கும் நிலைமை இருக்குமானால், நமது தேர்வு முறையிலேயே மிகப்பெரிய தவறு இருப்பதாகவே பொருள். 50 சதவிகிதம் முதல் 60 சதவிகிதத்திற்குள் மதிப்பெண் எடுக்கிறவர்கள் தகுதி, திறமை குறைந்த நேர்மையற்றவர்கள் (அயோக்கியர்கள்) என்பதற்கோ, 60 சதவிகிதம் முதல் 100 சதவிகிதம் வரை மதிப்பெண் எடுக்கிறவர்கள் தகுதி, திறமை மிகுந்த நேர்மையாளர்கள் (யோக்கியர்கள்) என்பதற்கோ, நம்மிடம் எந்தவிதமான அளவுகோல்களோ, முன்னுதாரணங்களோ இல்லை.
.
இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்பிருந்தே உயர் கல்வி படிப்போருக்கான கல்வி உதவித் தொகை அளிக்கும் திட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது. தலித் மக்கள் மிகப் பரவலாக படிக்கத் தொடங்கிய 1960களுக்குப் பிறகு, அக்கால இண்டர்மீடியட், புதுமுக வகுப்புகளில் 40 சதவிகிதம் முதல் 60 சதவிகிதத்திற்குள் மதிப்பெண் எடுத்த மாணவர்கள்தான் – கடந்த காலங்களில் பொறியாளர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், மாவட்ட ஆட்சியாளர்கள், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்களாக விளங்கினார்கள். தலித்துகளிலிருந்து உயர் பொறுப்புக்கு வந்த அத்தகைய அறிவுத்துறை, தொழில்நுட்பத் துறையினரிடம் இந்த ஆட்சியாளர்கள் கண்ட நிர்வாகக் குறைபாடு என்று எதையேனும் சுட்டிக் காட்ட முடியுமா?

அன்றைய நிலவரத்தைவிட, இன்றைக்கு தலித்துகளில் உயர் கல்வி படிக்க வந்துள்ளவர்களின் எண்ணிக்கை உயர்ந்திருப்பது தேச விரோதச் செயலா? தலித்துகள் இன்றும், இன்னும் இந்திய அளவில் விவசாயக் கூலிகளாகவும், சிறு, குறு விவசாயிகளாகவும், அரசு ஊழியர்களாகவும், தனியார் துறையில் கடைநிலைப் பணியாளர்களாகவும் தானே இருந்து வருகின்றனர். வணிகம், தொழில் துறை, தொழில்நுட்பத் துறைகளின் சொந்த முதலீட்டாளர்களாகவோ, பங்குதாரர்களாகவோ, வளர்ந்திடும் வாய்ப்புகள் உருவாகிவிடவில்லையே!
.
இந்தியாவின் மொத்த மக்கள் தொகையோடு ஒப்பிட்டால், தலித்துகளில் உயர் கல்விக்கு வருவோர் எண்ணிக்கை மிக மிகக் குறைவு. ஒரு புள்ளி விவரத்தின்படி, தமிழகத்தில் ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக 70,000 தலித் மாணவர்கள் +2 வகுப்பில் தேர்ச்சி பெறுகிறார்கள். இவர்களில் அய்.டி.அய். பாலிடெக்னிக், கலை, அறிவியல், மொழி, பொறியியல், மருத்துவம், சட்டம், வேளாண்மை உள்ளிட்ட எல்லா படிப்புகளிலுமே சேருவோர் எண்ணிக்கை சுமார் 15,000 முதல் 20,000–க்குள் தான் வருகிறது. ஆண்டுதோறும் சுமார் 50,000 தலித் மாணவர்கள் உயர்கல்விக்கான வாய்ப்பை எட்ட முடியாமல் தேங்கிக் கிடக்கின்றனர்.

இது தவிர, 10ஆம் வகுப்பில் தோல்வியடைந்தவர்கள், 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றும் +2 வகுப்பில் அல்லது பாலிடெக்னிக் படிப்புக்குச் செல்ல முடியாதவர்கள், 12ஆம் வகுப்பில் தோல்வியடைந்தவர்கள் எனப் பெரும் எண்ணிக்கையிலான தலித் இளைஞர்களின் எதிர்காலமே இருண்டுதான் கிடக்கிறது.
.
மனிதவளத்தை மேம்படுத்துவது பற்றியும், மனிதவள ஆற்றலை நாட்டின் வளர்ச்சிக்குப் பங்களிக்கச் செய்ய வேண்டும் என்றும் பேசும் அரசியல்வாதிகள், அறிஞர்கள், பல தலைமுறைகளாக வஞ்சிக்கப்பட்டு வரும் தலித் சமூகத்தில் இவ்வளவு பெரும் எண்ணிக்கையிலான மாணவப் பருவ இளைஞர்களின் எதிர்காலம் குறித்து எள்ளளவும் கவலைப்படுவதில்லை. அவர்களது கவலையெல்லாம் மலிவான திட்டங்கள் மூலம் வாக்கு வங்கியை எப்படி தக்க வைத்துக் கொள்வது என்பது மட்டுமே! இந்நிலையில் தான் மய்ய அரசின் சமூக நீதித்துறை அமைச்சகம், உயர்கல்வி பயிலும் தலித் மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்குவது தொடர்பாக, மாநில அரசுகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தலித் மாணவர்களுக்கு இரண்டு நிபந்தனைகளை விதித்துள்ளது.
.
அதாவது, தொழில் படிப்பில் சேர்ந்து படிக்கும் மாணவர்களில் இனிமேல் அரசு ஒதுக்கீட்டில் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே கல்வி உதவித் தொகையை வழங்க முடியும்; நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்ந்து படிப்பவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட மாட்டாது. இது மட்டுமின்றி, அரசு ஒதுக்கீட்டில் சேர்ந்து படிக்கிற மாணவர்களும் கூட, அவர்கள் தனியார் கல்லூரிகளில் படிப்பவர்களானால் +2 தேர்வில் 60 சதவிகித மதிப்பெண் பெற்றிருந்தால்தான் கல்வி உதவித் தொகை பெற முடியும் என்று அக்கடிதம் கூறுகிறது : Govt. of India, Ministry Of Social Justice And Empowerment F.No14012/6/2006 SCD - V நாள் 24.09.2007.
இக்கடிதத்தின் மூலம் அரசுக் கல்லூரிகளில் சேர்ந்து படிக்கும் தலித் மாணவர்கள் 60 சதவிகிதத்திற்கும் குறைவாக மதிப்பெண் பெற்றிருந்தாலும், கல்வி உதவித் தொகை பெறலாம் என்பது போன்ற பொருளேயற்ற ஒரு பொருளும் பொதிந்துள்ளது. தமிழகத்தில் அரசுப் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை, அய்ந்து முதல் ஏழுக்குள்ளேயே உள்ளது. மாணவர்களைத் தேர்ந்தெடுக்கும் மதிப்பெண் தர வரிசை :
.
1. தலித்துகளிலேயே மிக அதிக மதிப்பெண் பெறும் தலித் மாணவர்களும், பொதுப்போட்டியில் வரும் தலித் மாணவர்களும் இத்தகைய அரசுக் கல்லூரிகளிலேயே சேர்க்கப்படுகின்றனர்.
.
2. 70 சதவிகிதத்திற்கும் மேல் 80 சதவிகிதத்திற்குள் மதிப்பெண் எடுத்த தலித் மாணவர்கள் – அரசு உதவி பெறும் தனியார் பொறியியல் கல்லூரிகளிலும், அரசு உதவி பெறும் அண்ணாமலை பல்கலைக்கழகம் போன்ற தனியார் பல்கலைக்கழகங்களிலும் சேர்க்கப்படுகின்றனர்.
.
3. 50 சதவிகிதம் முதல் 70 சதவிகிதம் வரை மதிப்பெண் பெற்ற தலித் மாணவர்களே – பெரும்பாலும் தனியார் சுயநிதிக் கல்லூரி களிலும், அரசு உதவி பெறும் அண்ணாமலைப் பல்கலைக்கழகங்களிலும் –அரசு ஒதுக்கீட்டின்படியோ, மேலாண்மை நிர்வாக ஒதுக்கீட்டின்படியோ சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்
.
முதல் இருநிலை கல்லூரிகளிலும் சேர்க்கப்படும் மாணவர்களில், 60 சதவிகித மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கே கல்வி உதவித் தொகை என்ற நிபந்தனையால் சிக்கல் ஏதும் இல்லை. ஆனால் இவர்களில் பலரது வாழ்க்கைத் தரம், குடும்பப் பின்னணி, பெற்றோர் படித்த தலைமுறையினராகவோ, உயர் வருவாய் ஈட்டக் கூடிய அரசு அலுவலர்கள், பேராசிரியர்கள், மருத்துவர்கள், ஆசிரியர்கள் முதலிய பிரிவினரின் பிள்ளைகளே – பெரும்பாலும் தலித்துகளுக்கான இடங்களை கைப்பற்றுகின்றனர். இவர்களுக்காவது கல்வி உதவித் தொகை உண்டா என்றால் அதுதான் இல்லை.
.
பெற்றோரின் ஆண்டு வருமானம், கல்வி உதவித் தொகை பெறுவதற்கான வருமான வரம்பை விட கூடுதலாக இருப்பதால், இத்தகைய வருவாய் குடும்பத்தினரின் உயர் மதிப்பெண் பெற்ற தலித் மாணவர்களுக்கு, கல்வி உதவித் தொகை நீண்ட காலமாகவே மறுக்கப்பட்டு வருகிறது. இவ்வளவு காலமாக, தலித் மாணவர்களின் உயர் கல்விக்கு உதவித் தொகை வழங்கிட வருமான வரம்பை விதித்திருந்த மத்திய அரசு, இப்போது மதிப்பெண் வரம்பையும் கொண்டு வந்து, தலித் சமூகத்தின் உயர் கல்விக்கே வேட்டு வைத்துள்ளது.
.
கடந்த 2006-07 ஆம் கல்வியாண்டில், தமிழகத்தில் சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பித்தவர்களில், தலித்துகளுக்கென ஒதுக்கீடு செய்யப்பெற்ற பத்தாயிரம் இடங்கள் காலியாக இருந்தன. இந்த இடங்களில் தலித்துகள் சேராததால், அந்த இடங்கள் பொதுப் போட்டிக்கு மாற்றப்பட்டு, தலித் அல்லாத பிற சமூகத்தினரால் நிரப்பப்பட்டது. இதற்கான அடிப்படைக் காரணம், பத்தாயிரம் தலித் மாணவர்கள் பொறியியல் படிப்பை விரும்பவில்லை என்பதால் அல்ல. இவர்கள் அனைவருமே சுயநிதிக் கல்லூரிகளில் சேர்க்கப்படும் அளவுக்கே மதிப்பெண் பெற்றிருந்தனர்.
.
ஆனால், அரசு ஒதுக்கீட்டின் மூலம் சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளில் சேருவோருக்கென நிர்ணயிக்கப்பட்ட தொகையை கூட கட்ட முடியாமல் தான் – பத்தாயிரம் இடங்களும் காலியாக கிடந்தன. தனியார் சுயநிதிக் கல்லூரிகளின் எண்ணிக்கையில் பாதியளவேனும் மத்திய, மாநில அரசுகளிடம் இருந்திருக்குமேயானால், தலித் மாணவர்களுக்கு இந்த அவலம், ஏமாற்றம் ஏற்பட்டிருக்காது. இன்று உயர்கல்விக்கென கொண்டு வரப்பட்டுள்ள இந்த ஆணை, எதிர்காலத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் ஆபத்து உள்ளது.
.
மய்ய அரசின் சமூகநீதித் துறையின் அரசாணை, இன்னும் கூடுதலாக ஒரு செய்தியை தலித் மக்களுக்கு சொல்கிறது. + 2 வகுப்பில் 60 சதவிகிதத்திற்க்கும் கீழே மதிப்பெண் எடுத்த தலித் மாணவர்கள், எதிர்காலத்தில் உயர்கல்விக்கே விண்ணப்பிக்கக் கூடாது என்பதே அச்செய்தி. இது குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் குறிக்கோளுக்கே எதிரானது. உலகமயமாதல் சூழலில் இது ஒரு வகையான தொழில்நுட்பவியலான குலக்கல்வித் திட்டமே.
.
ராஜா கோபாலாச்சாரி, தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகக் குழந்தைகள் அய்ந்தாம் வகுப்பைத் தாண்டிவிடக் கூடாது என்ற அடிப்படையில் குலக் கல்வி முறையைக் கொண்டுவந்தார். அதைத் தோற்கடிக்க, நமக்கு பெரியாரும் காமராசரும் இருந்தார்கள். ஆனால், இன்று காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசோ, தலித்துகள் 10,12 ஆம் வகுப்பை கடந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறது.
.
மதச்சார்பின்மை, ஜனநாயகம், சோசலிசம், சமூகநீதி இவற்றின் கூட்டுக் கலவையிலான கூட்டணி அரசு ஆட்சியிலிருந்தாலும், இவ்வரசை இயக்கும் அதிகார வர்க்கம், பார்ப்பனியமயமாகவே இருக்கும்போது, கோட்பாடுகள் நீரின் மீது எழுதப்பட்ட எழுத்தே.
.
சரி, திடீரென மதிப்பெண் நிபந்தனைகளை கொண்டுவரும் மத்திய அரசின் செயலுக்கு என்ன காரணம்? நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூற்றின்படி, நாட்டில் அந்நிய மூலதன வெள்ளம் கரைபுரண்டு ஓடும் சூழலில் ஏன் இந்த நிபந்தனை? தலித்துகளின் உயர்கல்வி வாய்ப்பைக் கட்டுப்படுத்தும் சாதிய, பார்ப்பனிய, நிலவுடைமை உற்பத்தி உறவின் மனப்பாங்குக்கும், உலகமயமாதல் பொருளாதார சீர்திருத்தக் கொள்கைகளுக்கும் நெருங்கிய உறவு இங்கு இழையோடுவதையே இந்நிபந்தனை நமக்கு உணர்த்துகிறது.
.
பொருளாதார சீர்திருத்தம் என்பது உலக வங்கியின் அகராதியில் தலித்துகள், பழங்குடியினர், ஏழைகள், பெண்கள், விவசாயிகளின் மேம்பாட்டுக்காக, பாதுகாப்புக்காக செலவிடப்படும் செலவினங்களை வெட்டுவதும், நிறுத்துவதுமே ஆகும்.
.
நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையும், உற்பத்தி உறவும் உருவாக்கிய பண்ணையடிமைத்தனம், படியாள் உற்பத்தி உறவுகள், தொழில்வழி சாதியமைப்பின் மீது அவை ஏற்படுத்திய தாக்கங்கள், சாதியமும் – வர்க்கமும் பின்னிப் பிணைந்துள்ள, அக்கம்பக்கமாயுள்ள பிற்போக்கான சமூகங்களின் மீது / நாடுகளின் மீது செல்வாக்குச் செலுத்தும் ஏகாதிபத்திய நாடுகள், தங்கள் பொருளாதாரக் கொள்கைகளுக்கு புதுப்புதுப் பெயர்கள் சூட்டி, தங்கள் கொள்ளையை தொடர்ந்திட – மூன்றாம் உலக நாடுகள் மீது தங்கள் அதிகாரத்தின் பிடியை, ஆளுமையைக் கூட்டிக்கொண்டே போவார்கள்.
.
இங்குள்ள மன்மோகன் சிங், ப.சிதம்பரம் போன்ற அவர்களது அரசியல் முகவர்கள் அதற்கு "சீர்திருத்தங்கள்' என்று பெயர் சூட்டிக்கொள்வார்கள். மத்திய அரசின் சமூகநீதித் துறையின் இந்த அரசாணை ஏன் வந்தது? நிதிப் பற்றாக்குறையா? இல்லவே இல்லை!
.
உலக வங்கி இந்திய அரசுக்குப் பல நிபந்தனைகளை விதிக்கிறது. உலக வங்கிக்கு அமெரிக்க, அய்ரோப்பிய முதலீட்டாளர்களும், அரசுகளும் பல நெருக்கடிகளையும் நிபந்தனைகளையும் போடுகிறார்கள். இந்திய ஆட்சியாளர்கள் தமது ஆட்சியின் கீழுள்ள பல்வேறு சமூகத்தினருக்கும் வர்க்கங்களுக்கும் நிபந்தனைகளையும், நெருக்கடிகளையும் கொடுக்கின்றனர். பங்குச் சந்தையில் ஒரு "சென்செக்ஸ்' புள்ளி உயர்ந்தால், அம்பானியின் சொத்து மதிப்பு 1000 கோடி உயர்கிறது. ஆனால் மய்ய அரசின் ஓர் அரசாணை, பல லட்சம் தலித் மாணவர்களின் உயர்கல்விக் கண்ணைப் பறிக்கிறது.
.
பதினோறாவது அய்ந்தாண்டுத் திட்டத்தில் கல்விக்கென 10 சதவிகித நிதி ஒதுக்கீடு கோரி இடதுசாரிகள் போராட்டம் நடத்துகிறார்கள். 1980க்கு முன்னால் கல்விக்கு 6 சதவிகித நிதி ஒதுக்கிய மத்திய அரசு, இன்று 3.2 சதவிகிதத்திற்கும் கீழாகவே நிதி ஒதுக்குகிறது.
.
அண்மையில் பிரதமர் மன்மோகன் சிங் 11ஆவது அய்ந்தாண்டு திட்டத்துக்கான கலந்தாய்வுக் கூட்டமொன்றில் பேசும்போது, ஏழைகளுக்கான மானியங்கள் அவர்களை சென்றடையவில்லை என்று பேசினார். எழைகளின்பால் பிரதமருக்கு எவ்வளவு கருணை பாருங்கள் என்பது போல அவரது பேச்சு அமைந்தது. ஆனால் உண்மை அதுவல்ல! அவரது பேச்சு, ஏழைகளுக்குச் சென்றடையாத மானியங்கள் அவர்களை சென்றடைவதற்கான முயற்சிகளை எடுப்பதற்காக அல்ல: மாறாக, மானியங்களை ரத்து செய்வதற்கான வெள்ளோட்டமே அவரது பேச்சு.
.
அது மட்டுமல்ல, தலித் மாணவர்களின் கல்வி உதவித் தொகை பெறுவோர் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் வகையில், பல்லாயிரக்கணக்கான கிராமப்புற ஏழை தலித் மாணவர்களின் கல்வி உதவித் தொகைக்கு வேட்டு வைக்கும் அரசாணையை சமூக நீதித்துறை கொண்டு வந்திருப்பதன் உள்நோக்கம்.
.
எல்லா சமூகத்திலும் போட்டியில் வெல்லும் வசதிபடைத்த பிரிவினரை மட்டுமே, மேலும் மேலும் ஊக்குவிப்பது என்பது உலகமயமாதல் கொள்கையின் தொடர் நடவடிக்கையே. இந்தியாவின் 11ஆவது அய்ந்தாண்டு திட்டங்களுக்கான உலக வங்கியின் நிபுணர் குழுவினர், மானியங்களுக்கான செலவினங்களை வெட்ட வேண்டும் என்று பரிந்துரைத்ததின் அம்சங்களில் ஒன்றுதான், தலித் மாணவர்களுக்கான நிதியை வெட்ட வேண்டும் என்பது. இதன் விளைவு, தலித் மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகைகள் வழங்கப்படுவதில் மய்ய அரசு கொண்டு வந்துள்ள மதிப்பெண் வரம்பு ஆணை.
.
சமூகத்தின் கடைகோடியில் வாழும் தலித்துகள் தான் நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி ஆற்றலின் மூலாதாரங்களாக விளங்குகின்றனர். இச்சமூகத்திற்கு உயர்கல்விக்கான கல்வி உதவித் தொகை வழங்குவதால் நாடு கடனில் மூழ்கிவிடுமா? இவர்களின் பிள்ளைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்க நிதி இல்லாமல் போய்விட்டது என்றால், நாடு திவாலாகி விட்டது என்று பொருள்.
.
தமிழகத்தில் அண்மையில் ஹுண்டாய் கார் நிறுவனம் 100 கார்களை காவல் துறைக்கு இலவசமாக அளிக்க இருப்பதாக முதல்வர் கூறினார். அதன்படி, ஹûண்டாய் நிறுவனமும் நூறு கார்களை தமிழக அரசுக்கு அளித்தது. அந்தக் கார்களின் விலை 8 கோடி ரூபாய். முதல்வரின் திறமையால், அணுகுமுறையால் இந்தக் கார்கள் பெறப்பட்டதாகவும், அவரது நிர்வாகத் திறனுக்கு இது சான்று என்றும் கூறப்பட்டது. உண்மையில், நூறு கார்களை தமிழக முதல்வரிடம் அளித்த ஹûண்டாய் நிறுவனம், அதே முதல்வரிடம் 2006-07 ஆம் நிதியாண்டுக்கு மட்டும் 15 கோடி ரூபாய் வரிவிலக்கு பெற்றுள்ளது.
.
எட்டுக்கோடி ரூபாய் கொடுத்து நூறு கார்களை வாங்கிக்கொண்டு வரியை ஒழுங்காக வசூலித்து இருந்தால், அரசுக்கு இன்னும் கூடுதலாக 7 கோடி ரூபாய் வருமானம் கிடைத்திருக்கும். தமிழ்நாட்டில் உள்ள ஒரு நிறுவனத்திலேயே தமிழக அரசின் நிர்வாக லட்சணம் இப்படி இருக்குமானால், இந்திய அளவில் எவ்வளவு முறையற்ற சலுகைகளைப் பெற்று உள்நாட்டு தரகு முதலாளிகளும், பன்னாட்டு முதலாளிகளும் லாபம் அடைவார்கள்.
.
சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு அரசு அளிக்கும் வரி விலக்கு மூலம், முதல் அய்ந்தாண்டுகளுக்கு இந்திய அரசு இழக்கும் வரி வருவாய் மட்டும் ஒரு லட்சம் கோடி ரூபாய் ஆகும் என புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இப்படிப் பல வழிகளிலும் ஆட்சியாளர்கள் செல்வந்தர்க்கே செல்வம் தழைக்க சலுகைகளை வாரி வழங்கிவிட்டு, தலித்துகளின் உயர் கல்விக்கான கல்வி உதவித்தொகையில் கை வைப்பது எவ்வளவு பெரிய துரோகம்! ""ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளை ஒக்கும்'' என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாக்குக்கேற்ப, ஏழைகள் கூரிய வாளாய் மாறிடும் காலத்தை நோக்கி தலித் அரசியலை முன்னகர்த்துவது மட்டுமே – நமது எல்லா சிக்கல்களுக்கும் இன்னல்களுக்கும் தீர்வாகும். தற்போதைய நிலைமைக்கும் எதிரான நமது போராட்ட முறைகள் கூர்மைப்படுத்தப்பட வேண்டும்.
.
சமூக நீதித்துறை அமைச்சக ஆணை, மாநில அரசுகளுக்கு அனுப்பப்பட்டவுடன் இது குறித்து தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிப்பதற்கு மாறாக, அந்த ஆணையை அனைத்து சுயநிதி கல்லூரிகளுக்கும், அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகளுக்கும், அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கும் அதை நடைமுறைப்படுத்துமாறு அறிவுறுத்தி, தமிழக அரசு தன் பங்குக்கு தலித் மக்கள் விரோத கடமையை ஆற்றியுள்ளது.
.
மண்டல் குழு பரிந்துரை, மிகப்பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு, முஸ்லிம், கிறித்துவர் இடஒதுக்கீடு, கிரீமிலேயர், மொத்த இடஒதுக்கீட்டின் அளவு 50 சதவிகிதத்தை தாண்டக்கூடாது என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்புகள், 93ஆவது அட்டவணை சட்டத்திருத்தங்கள் செல்லாது என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் ஆகியவற்றுக்கெல்லாம் எதிர்ப்புக்குரல் கொடுத்த, பேராட்டக் களம் கண்ட பல சமூகநீதிக்கான இயக்கங்கள் / கட்சிகள், தலித் மாணவர்களின் கல்வி உதவித்தொகைக்கு விதிக்கப்பட்டுள்ள மதிப்பெண் வரம்பைக் கண்டிக்காமல் இருப்பது ஏன்? ஏனெனில், கல்வி உதவித் தொகைக்கான மதிப்பெண் வரம்பு முழுக்க முழுக்க தலித்துகள் தொடர்புடையது.
.
ஒருவேளை, சமூகநீதி இயக்கங்கள் இடஒதுக்கீடு அளவு குறையும்போதோ அல்லது இடஒதுக்கீட்டுக்கே ஆபத்து நேரும்போதோதான்– தங்கள் எதிர்ப்பின் வலிமையை காட்டுமோ என நாம் கருதிக்கொண்டாலும்கூட, இடஒதுக்கீட்டின் நோக்கம் உரிய இடங்களை ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு அளிப்பதால் மட்டுமே வெற்றி பெற்றுவிடாது. அந்நோக்கம் நிறைவேற இடஒதுக்கீட்டால் பயன்பெற்ற மாணவர்களுக்கு உரிய நிதி ஆதார வசதிகளும், விடுதி வசதிகளும் அளிக்கப்பட்டால் மட்டுமே – இடஒதுக்கீட்டின் நோக்கம் முழு வெற்றி பெறும். எனவே, சமூகநீதி இயக்கங்கள், கல்வி உதவித்தொகைக்கான போராட்டத்திலும் தங்களது கவனத்தை திருப்ப வேண்டிய தேவையை இந்த அரசாணை ஏற்படுத்தியுள்ளது.
.
தலித் மாணவர்களுக்கு எதிரான இந்த அரசாணையை ரத்து செய்வதற்கான போராட்டத்தை, தலித் மாணவர்களின் பிரச்சனையாக மட்டுமே பார்க்க முடியாது. ஒட்டுமொத்த தலித் சமூகத்தின், நாட்டின் மனித வள ஆற்றல் மேம்பாட்டுக்கு எதிரான சதியாகவே பார்க்க வேண்டும். மாணவர்கள் போராட்டத்தின் மூலம் தீர்த்துக்கொள்ளட்டும் என்று தலித் இயக்கங்களும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்துவிட முடியாது.
.
தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் கல்வி உதவித்தொகைக்கான பொறுப்பு, தமிழக அரசின் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது. ஆனால் தலித்துகளுக்கான கல்வி உதவித்தொகை, மத்திய அரசால் மாநில அரசு களுக்கு அளிக்கப்பட்டு, மாநில அரசு கல்லூரிகள் மூலம் அந்நிதியை மாணவர்களுக்கு வழங்குகிறது. தமிழகத்தில் உள்ள ஆட்சியாளர்கள் இந்த ஆணையின் மீது கவனம் செலுத்தாததற்கு, அது தங்கள் சமூகத்தைப் பாதிக்கவில்லை என்பதுகூட காரணமாக இருக்கலாம்.
.
"மக்கள் நல அரசு" என்ற நிலையிலிருந்து மத்திய – மாநில அரசுகள் லாப, நட்ட கணக்கு பார்க்கும் மளிகை மண்டி போல மாறிவிட்ட சூழலில், தலித்துகள் முன்னெப்போதையும்விட போர்க்குணத்தோடு களமிறங்க வேண்டும்.


-அரங்க. குணசேகரன்

(கட்டுரையாளர், தமிழக மனித உரிமைக் கழகத்தின் பொதுச் செயலாளர்.)


நன்றி:



ஜனவரி, 2008






3 comments:

அகராதி said...

பொருள் பொதிந்த கட்டுரை. உலகமயமாக்கத்தின் கோர முகத்தை ஆதாரங்களுடன் தோலுரிக்கும் முக்கிய ஆவணம்.

பார்ப்பன, அமெரிக்க ஆதரவு அம்பிகள் இந்த கட்டுரையை எல்லாம் கண்டு கொள்ள மாட்டார்கள்.

காரணம், இதில் அவர்கள் விவாதங்களை தொடர்ந்தால் அவர்களது சுயமுகம் வெளிப்பட்டு, குட்டு உடைந்துவிடும் என்ற பயம் கலந்த உண்மைதான்.

Jafar ali said...

அருமையான ஆய்வுக் கட்டுரை! வாழ்த்துக்கள்!!

அய் டி அய், அய்ந்தாண்டு என்பதற்கு பதிலாக ஐ டி ஐ, ஐந்தாண்டு என்று தமிழை எழுத ஏதும் சிரமம் இல்லையல்லவா? a+i-ஐ.

நான் சொல்வதில் தவறென்றால் மன்னிக்கவும்.

மக்கள் சட்டம் said...

//சரியான மாற்றுக் கருத்துடன் வரும் விமரிசனங்கள் வரவேற்கப்படுகின்றன. அனானி / ஆங்கில பின்னூட்டங்கள் நீக்கப்படும். சில மனநோயாளிகளை தவிர்ப்பதற்காக மறுமொழி மட்டுறுத்தல் அமலாக்கப்படுகிறது.//

என்ற அறிவிப்புக்கு பின்னரும் பின்னூட்டம் அளிக்கும் அனானிகளுக்கு...மன்னிக்கவும்!

சொந்த பெயரைக்கூட சொல்ல திராணியில்லாத உங்களுக்கு கருத்தெல்லாம் எதற்கு?

தேவையென்றால் சொந்தமாக ஒரு பிளாக் தொடங்கி உங்கள் கருத்துகளை பரப்பலாமே...!!!???

Post a Comment

உங்கள் கருத்துகளே எங்களை மேலும் செயல்படத் தூண்டும்.

ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.

அனானி மற்றும் ஆங்கில மறுமொழிகள் நீக்கப்படலாம்!