இந்த வன்கொடுமை குறித்து தகவல் அறிந்த விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் மண்ணின் மைந்தர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், சாமிக்கண்ணுவையும் மற்றவர்களையும் அணுகி விபரம் அறிந்தனர். விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பாளர் தொல். திருமாவளவன், சாமிக்கண்ணு குடும்பத்தினரை பத்திரிகையாளர் சந்திப்பில் முன்னிலைப்படுத்தி, இந்த இரட்டைக் கொலையை வெளிக்கொணர்ந்தார். பின்னர், "நக்கீரன்' பத்திரிøகயில் "விஷம் தந்து காதலர்கள் எரிப்பு! தமிழக பயங்கரம்' என்ற தலைப்பில் வெளிவந்த கட்டுரையால் காவல் துறையினர் மீது அழுத்தம் ஏற்பட்டது. எனினும், வன்கொடுமை வழக்கைத் தொடக்கத்திலிருந்தே வீணடிக்கும் தங்கள் "கடமை'யை காவல் துறையினர் செவ்வனே செய்தனர்.
சாமிக்கண்ணுவின் தம்பி அய்யாசாமி, முருகேசனையும் கண்ணகியையும் 8.7.2003 அன்று அதிகாலை 5 மணியளவில் துரைசாமியிடம் அழைத்து வந்ததாகவும், குடும்பத்தை அவமானப்படுத்தி ஓடிவிட்டதால் - இனிமேல் உயிரோடு விட்டு வைக்கக்கூடாது என்று "நவக்ரான்' பாட்டிலிலிருந்த விஷத்தை எவர்சில்வர் டம்ளரில் ஊற்றிக் கொடுத்து, தன் மகன் மருதுபாண்டியன் மூலம் கொடுத்து, “அந்த நாயைக் குடிக்கச் சொல்லுடா'' என்று கூறியதோடு, கண்ணகியை மிரட்டி விஷத்தை குடிக்கச் செய்ததாகவும்; அதேபோல், சாமிக்கண்ணு அதே ‘நவக்ரான்' பாட்டிலிலிருந்த விஷத்தை மற்றொரு எவர் சில்வர் டம்ளரில் ஊற்றிக் கொடுத்து, “அந்தப் பெண்ணே செத்துடுச்சி. இனிமேல் நீ எதுக்குடா உயிரோடு இருக்கணும். இதை குடிச்சிட்டு நிம்மதியாக போய் சேருடா' என்று சொல்லி முருகேசனை விஷத்தை குடிக்கச் செய்ததாகவும், இருவரும் இறந்ததும் பக்கத்து பக்கத்திலேயே வைத்து எரித்து விட்டதாகவும், அதன்பிறகு இரு தரப்பினரும் கிராமத்தில் பஞ்சாயத்து பேசி, "செத்தவங்க செத்துட்டாங்க, அதனால கேஸ் எதுவும் வேண்டாம்' என முடிவு செய்ததாகவும், இருந்தாலும் மகளை நாமே கொண்ணுட்டோமே என்று மனசாட்சி உறுத்தியதால், கண்ணகியின் தந்தை முருகேசன் புதுக்கூரைப்பேட்டை கிராம நிர்வாக அலுவலரிடம் வாக்குமூலம் அளித்ததாகவும், அதனடிப்படையில் கண்ணகியின் உறவினர் நால்வர் மீதும், முருகேசனின் உறவினர் நால்வர் மீதும் வழக்குப் பதிவு செய்ததுபோல் முதல் தகவல் அறிக்கை பொய்யாகப் பதிவு செய்யப்பட்டு 8 பேரும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட கண்ணகியின் தந்தை துரைசாமியும் மற்றவர்களும் தாக்கல் செய்த முதல் பிணை மனு தள்ளுபடி செய்யப்பட்டது. எனினும், மீண்டும் ஒரு பிணை மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், துரைசாமி ஊராட்சிமன்றத் தலைவராக இருப்பதாலும், ஏற்கனவே 23 நாட்கள் சிறையில் இருப்பதாலும், 30 நாட்களுக்குமேல் சிறையில் இருக்க நேர்ந்தால், அவர் தமிழ்நாடு பஞ்சாயத்துகள் சட்டப்படி தகுதியிழப்புக்கு ஆளாக நேரிடும் என்றும், ஆகையால் அவரை உடனடியாகப் பிணையில் விடுவிக்க வேண்டுமென்றும் அவரது வழக்குரைஞர் வாதிட்டார். அரசுத்தரப்பு வழக்குரைஞர், இதற்கு அரசுத்தரப்பில் தீவிரமான எதிர்ப்பு ஏதும் இல்லை என்று தெரிவித்தார். இதனடிப்படையில், அவருக்கும் மற்றவர்களுக்கும் பிணை வழங்கியது கடலூர் மாவட்ட அமர்வு நீதிமன்றம்.
எந்தக் குற்றமும் செய்யாத சாமிக்கண்ணு தரப்பினரை, வழக்கை முழுமையாக வீணடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடனேயே குற்றவாளிகளாக வழக்கில் காவல் துறையினர் சேர்த்தனர். இவ்வன்கொடுமை, வழக்குரைஞர் பொ. ரத்தினத்தின் கவனத்திற்கு வந்தவுடன், அவரும் இக்கட்டுரையாளரும், வழக்கின் புலன் விசாரணையை சி.பி.அய்.க்கு மாற்றக்கோரியும், துரைசாமிக்கும் அவரது உறவினருக்கும் வழங்கப்பட்ட பிணையை ரத்துசெய்யக் கோரியும், சென்னை உயர் நீதிமன்றத்தில் சாமிக்கண்ணு சார்பில் இரு மனுக்களை தாக்கல் செய்தனர். நீண்ட விசாரணைக்குப் பிறகு, 23.4.2003 அன்று நீதிபதி திரு. எஸ்.அசோக்குமார், வழக்கின் புலன் விசாரணையை சி.பி.அய்.க்கு மாற்றியும், மாவட்ட அமர்வு நீதிமன்றம் துரைசாமியின் ஊராட்சி மன்றத் தலைவர் பதவியைக் காப்பாற்றும் நோக்கத்துடன், இரட்டைக் கொலை வன்கொடுமை வழக்கென்றும் பாராமல் பிணை வழங்கி உத்தரவிட்டது தவறு என்று கூறி, துரைசாமிக்கு வழங்கப்பட்ட பிணையை மட்டும் ரத்து செய்து உத்தரவிட்டார்.
இதில் கவனிக்க வேண்டிய அம்சம் என்னவெனில், ஒரு நீதிமன்றம் வழங்கிய பிணையை எந்தெந்த காரணங்களுக்காக / நேர்வுகளில் ரத்து செய்யலாம் என்று முன் தீர்ப்புகள் உள்ளன (அவற்றின் தொகுப்பு கீழே). அவற்றில் உட்படாத சில நேர்வுகளிலும் பிணை ரத்து செய்ய முடியும் என்பதற்காகவே இவ்வழக்கு இங்கு குறிப்பிடத்தக்கதாக அமைந்துள்ளது.
ஒரு வழக்கின் பொருண்மைகளைப் (Fact) பொருத்தே அவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும். முன்தீர்ப்புநெறி (Law of Precedents) இந்திய நீதிமன்றங்களில் பெரும்பாலும் கடைப்பிடிக்கப்பட்டாலும், முன் தீர்ப்பு இல்லையென்பதாலேயே ஒரு வழக்கில் கோரப்படும் தீர்வு வழங்கப்பட முடியாது என்பதல்ல. இதை சமூக செயல்பாட்டாளர்கள் மனதில் நிறுத்தி செயல்பட வேண்டும்.
ஒரு குற்றவியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட பிணையை ரத்து செய்ய வேண்டுமெனில், கீழ்க்கண்ட ஏதாவது ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட காரணங்களின் அடிப்படையில் மனுதாக்கல் செய்து கோரலாம். இவை உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத் தீர்ப்புகளின்படி உள்ள காரணங்களாகும். இவை முழுமையானவை அல்ல. இவை தவிர மற்றெந்த நியாயமான, ஏற்கத்தக்க காரணங்களின் அடிப்படையிலும் பிணையை ரத்து செய்ய நீதிமன்றத்திற்கு அதிகாரம் உண்டு.
1. பிணையில் விடுவிக்கப்படும் நபர் பிணையில் இருக்கும்போது, எவ்வகையான குற்றத்திற்காக வழக்கில் சேர்க்கப்பட்டிருக்கிறாரோ, அதே வகையான குற்றச் செயலில் ஈடுபடும்போது அவர் பிணையில் தொடர்ந்து இருக்கும் தகுதியை இழந்தவராகிறார்.
2. புலன் விசாரணையின்போது கிடைக்கும் புதிய தகவலின் அடிப்படையில் அந்நபர் கூடுதல் தண்டனைக்குரிய குற்றம் புரிந்தவராகத் தெரிய வருமாயின், அந்நபரின் பிணை திரும்பப் பெறப்படலாம்.
3. பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள குற்றம் சாட்டப்பட்ட நபர், புலன்விசாரணைக்கு எவ்விதத்திலும் இடையூறு ஏற்படுத்துவாரானால், அந்நபரின் பிணை திரும்பப் பெறத்தக்கதாகிறது.
4. வழக்கில் தொடர்புடைய சாட்சிகளை எவ்வகையிலாவது மிரட்டுவதன் மூலம் சாட்சியத்தைக் கலைக்க முற்படுவாரானால், அச்சூழலில் அவர் பிணையில் இருக்கும் தகுதியை இழக்கிறார்.
5. பிணையில் உள்ள நபர் தலைமறைவாக முயன்றாலோ, தப்பித்துச் செல்ல முயன்றாலோ, வெளிநாட்டிற்கு தப்பிச்செல்ல முயன்றாலோ அல்லது வேறு வகையில் நீதிமன்றப் பார்வையிலிருந்து மறைந்து கொள்வாராயின், அந்நபரின் பிணை ரத்து செய்யப்படலாம்.
6. புலன் விசாரணை அதிகாரி மீதோ அல்லது வழக்கு சாட்சிகளின் மீதோ வன்முறை புரிதலும் பிணை திரும்பப் பெறலாகும்.
7. நீதிமன்றம் பிணை வழங்கும்போது, பிழையான அணுகுமுறையின் அடிப்படையில் பிணை வழங்கப்பட்டிருந்தால் அப்பிணை ரத்து செய்யப்படலாம்.
8. குற்றச்சாட்டின் தன்மை மாறுபடும் பட்சத்திலும், வேறு விதமான வழக்குச் சூழ்நிலை மாற்றங்களும்கூட பிணை ரத்து செய்யக் காரணமாக அமையலாம்.
9. நீதிமன்ற நிபந்தனைப்படி பிணையிலுள்ள நபர் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறினாலும் பிணை ரத்து செய்யப் படத்தக்கதே.
10. பிணையாளர்கள் (Sureties) குற்றம் சாட்டப்பட்ட நபர் பிணையில் வெளியே வர பத்திரம் முலம் நீதிமன்றத்திற்கு உறுதி வழங்கியவர்கள், தாங்கள் வழங்கிய பிணைப் பத்திரத்தை திரும்பப் பெறக் கோரி நீதிமன்றத்தில் மனு செய்தாலும் பிணை ரத்து செய்யப்படலாம்.
11. பிணைப் பத்திரம் தவறுதலாகவோ, மோசடியாகவோ அல்லது வேறு வகையிலோ நிர்ணயிக்கப்பட்டதைவிட குறைபாடாக இருந்து ஏற்றுக் கொள்ளப்பட்ட போதிலும் பிணை ரத்து செய்யப்படலாம்.
12. பிணையப்பத்திரம் வேறு எவ்வகையிலாவது செல்லுபடியாகும் தன்மையை இழக்கும் போதும் பிணை ரத்து செய்யக் கூடியதாகிறது.
இவ்வகையில், வன்கொடுமை வழக்குகளில் பிணை திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கையை பாதிக்கப்பட்டோர் தரப்பு வலிமையுடன் எடுக்கும்போது, வழக்கு சிதைக்கப்படாமலும் வலுவிழக்காமலும் நீதிமன்றத்தில் நடத்தப் பெற முடியும். இதை ஓர் ஆயுதமாக சரியாகப் பயன்படுத்தினால், வன்கொடுமையாளர்கள் பாதிக்கப்பட்டோரையோ, மற்றவர்களையோ அச்சுறுத்துவதை முழுமையாகத் தடுக்க முடியும்.
- காயங்கள் தொடரும்
நன்றி: தலித்முரசு, அக்டோபர் 2008