Tuesday, December 25, 2007

குற்றவாளிக்கு ஜாமீன் உண்டு! விசாரணை கைதிக்கு ஜாமீன் கிடையாது! -உச்ச நீதிமன்ற விந்தை தீர்ப்புகள்.

சத்திஸ்கர் மாநில அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள டாக்டர் பினாயக் சென் (Dr. Binayak Sen) என்பவரை ஜாமீனில் விடுவதற்கு உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

டாக்டர் பினாயக் சென் ஏன் கைது செய்யப்பட்டுள்ளார்? யாருடைய சிறுநீரகத்தையாவது திருடியிருப்பாரா? கவனக்குறைவாக சிகிச்சை அளித்து யாருடைய மரணத்திற்காவது காரணமாக இருந்திருப்பாரா? கொள்ளை லாப வெறியோடு தனியார் மருத்துவமனை நடத்தினாரா? தேவையற்ற பரிசோதனைகளை செய்யவைத்து மக்களை சுரண்டினாரா? மருந்து வியாபாரிகளோடு கள்ள உறவு வைத்து தேவையற்ற மருந்துகளை மக்களிடம் திணித்தாரா? அல்லது தன்னிடம் வரும் நோயாளிகளை மிரட்டி ஆபாசப்படம் எடுத்து இணைய தளம் மூலம் வணிகம் செய்தாரா? டாக்டர் பினாயக் சென் ஏன் கைது செய்யப்பட்டுள்ளார்? அவரை ஜாமீனில் விடுவதற்கு உச்சநீதிமன்றம் ஏன் மறுப்பு தெரிவிக்க வேண்டும்?

யார் இந்த பினாயக் சென்?

தமிழ்நாட்டில் “வ”(VA) என்ற ஒலிக்கப்படும் எழுத்து மேற்கு வங்கத்தில் “ப”(BA) என்று ஒலிக்கப்படுகிறது. இந்த அடிப்படையில் “டாக்டர் பினாயக் சென்”-ஐ தமிழ்ப்படுத்தினால் “விநாயக் சென்” ஆகிவிடும்.



இந்த டாக்டர் விநாயக் சென், தமிழ்நாட்டிலுள்ள வேலூர் கிறித்துவ மருத்துவ கல்லூரியில் MBBS மற்றும் MD ஆகிய படிப்புகளை மிகச்சிறப்பாக படித்துத் தேறியவர். பின்னர் 1976 முதல் 1978ம் ஆண்டுவரை புதுதில்லி, ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சமூக மருத்துவத்துறையில் ஆசிரியராக பணியாற்றியவர். பிறகு சமூக-பொருளாதார தளத்தில் பின் தங்கிய மக்களுக்கு நேரடியாக பணியாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் அப்பணியை உதறிவிட்டு(பல தனியார் மருத்துவமனை அழைப்புகளையும் புறக்கணித்துவிட்டு) கூலித்தொழிலாளிகள் மற்றும் ஆதிவாசி மக்கள் வாழும் பகுதியில் சென்று மருத்துவ சேவை செய்ய ஆரம்பித்தார்.

வறுமை நிலையில் உள்ள மக்களின் நோய் அகற்ற, அவர் படித்த நவீன மருத்துவம் முழுமையாக பயன்படாத நிலையில், பாரம்பரிய மருத்துவமுறைகளையும் பயன்படுத்திய அவர், சுகாதாரமான வாழ்வும் - ஊட்டச்சத்துமே நோயற்ற வாழ்வுக்கு சரியான வழி என்பதை உணர்ந்து கொண்டார். ஆனால் மத்திய, மாநில அரசுகள் சார்பில் மக்களின் நல்வாழ்வுக்கு ஒதுக்கப்படும் நிதி அனைத்தும் அரசியல்வாதிகள்-அதிகாரிகள்-மருந்து மற்றும் மருத்துவ சேவை வியாபாரிகளின் கூட்டணிக் கொள்ளை காரணமாக மக்களுக்கு பயன்படாமல் போவதைக் கண்டு மனம் கொதித்தார். மேலும், சமூகத்தில் நிலவும் சுரண்டல் அமைப்பில் ஆதிவாசிகள் மற்றும் தலித் மக்களின் வளங்கள் சூறையாடப்பட்டு, அம்மக்கள் அகதிகளாக விரட்டப்படுவதை கண்டு கொதித்து எழுந்தார்.



ஆரோக்கியமும், நல்வாழ்வும் அடிப்படை மனித உரிமைகள் என்பதை உணர்ந்து கொண்ட டாக்டர் வினாயக் சென், மக்கள் சிவில் உரிமைக் கழக(Peoples’ Union for Civil Liberties)த்துடன் இணைந்து செயல்படத் தொடங்கினார். (தமிழகம் போலல்லாது, சில மாநிலங்களில் அந்த அமைப்பு சாமானிய மக்களுக்காக உண்மையிலேயே செயலாற்றி வருகிறது) பின்னர் அந்த அமைப்பின் தேசியத்துணைத் தலைவராகவும், சத்திஸ்கர் மாநில செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆதிவாசிகள் மற்றும் தலித் மக்களின் நலன்களை அரசு அமைப்புகள் புறக்கணித்தபோது, அம்மக்கள் மாவோயிஸ இயக்கங்களில் சேர்ந்தனர். மாவோயிஸ இயக்கப்பணியாளர்களை அரசுப்படையினரும், அரசின் ஆதரவு பெற்ற சல்வா ஜுடும் என்ற ஆதிக்க சக்திகளின் கூலிப்படையினரும் வேட்டையாடுவதைக்கண்டு மனம் பொறுக்காத அவர், உண்மை கண்டறியும் குழுக்களை அமைத்து அரசு மற்றும் அரசு ஆதரவு பெற்ற கூலிப்படையினரின் அராஜகங்களை அம்பலப்படுத்தினார்.

அதேநேரத்தில் அடித்தள மக்களின் நல்வாழ்வைப்பேண சமூக மருத்துவத்துறையிலும் பல சாதனைகளைப் படைத்தார். இதைப் பாராட்டும்விதமாக வேலூர் சிஎம்சி மருத்துவக்கல்லூரி, அதன் முன்னாள் மாணவர்களுக்கு வழங்கும் “பால் ஹாரிசன்” என்ற பெருமை மிக்க விருதை கடந்த 2004ம் ஆண்டில் டாக்டர் வினாயக் சென்னுக்கு வழங்கி கவுரவித்தது.

இந்நிலையில்தான், கடந்த 2007 மே மாதம் 17ம் தேதி சத்திஷ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் டாக்டர் விநாயக் சென் கைது செய்யப்பட்டார். பணிநிமித்தமாக கொல்கத்தா சென்றிருந்த அவரை, தலைமறைவாகி விட்டார் என்று காவல்துறையினர் பிரச்சாரம் செய்ததால் தாமாகவே காவல் நிலையம் சென்ற அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கு உதவி செய்ததாக அவர் மீது, சத்திஸ்கர் சிறப்பு பொதுப்பாதுகாப்பு சட்டம் (Chhattisgarh Special Public Security Act, 2006) மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் (Unlawful Activities (Prevention) Act, 2004) ஆகிய சட்டங்களின்படி கைது செய்துள்ளதாக சத்திஸ்கர் மாநில அரசு கூறுகிறது.

ராய்ப்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாராயண் சன்யால் என்ற கைதி எழுதிய கடிதங்களை, மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த பியூஷ் குஹா என்பவருக்கு டாக்டர் விநாயக் சென் சட்டவிரோதமாக கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தற்போது கைது செய்யப்பட்டுள்ள பியூஷ் குஹா கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த கைது நடைபெற்றுள்ளதாகவும் அரசுத்தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் தம்மை சித்ரவதை செய்து வெற்றுத்தாள்களில் காவல் மற்றும் சிறைத்துறையினர் கையொப்பம் பெற்றதாக பியூஷ் குஹா நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சிறையில் உள்ள நாராயண் சன்யால், சிறைத்துறை அதிகாரிகளின் அனுமதியுடன் டாக்டர் விநாயக் சென்னுக்கு எழுதிய கடிதத்தை அவருக்கு எதிரான சான்றாக காட்டுகிறது அம்மாநில அரசு. அந்த கடிதத்தில் டாக்டர் விநாயக் சென்-ஐ “தோழர்” என்று நாராயண் சன்யால் அழைத்துள்ளாராம். இது ஒன்றே போதுமாம், டாக்டர் விநாயக் சென்-னும் மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்தவர்தான் என்று கூறுவதற்கு. ஆனால், நாராயண் சன்யாலை சிறைத்துறை அதிகாரிகளின் அனுமதியுடன் பலமுறை பார்த்துள்ள டாக்டர் விநாயக் சென், சிறையில் கைதிகளின் அவல நிலையை அம்பலப்படுத்தி வெளியிட்டுள்ள அறிக்கைகள் குறித்து அரசுத்தரப்பில் விளக்கம் ஏதுமில்லை.

சத்திஸ்கர் மாநில அரசின் இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் இதுவரை பத்திரிகைகளில் வெளிவந்ததுதான். அவர் கைது செய்யப்பட்டு ஆறு மாதங்களுக்கு மேலாகியும் அவர் மீது நீதிமன்றத்தில் முறைப்படி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை.

ஆனால் அவரை ஜாமீனில் விடுவிக்குமாறு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தாலோ, அரசு அதிகாரிகள் வழக்கம் போல தாமதப்படுத்தும் தந்திரங்களை கையாண்டு வருகின்றனர்.

இதன் உச்சகட்டம் மனித உரிமைகள் தினமாக அனுசரிக்கப்படும் டிசம்பர் 10ம் தேதி, நாட்டின் கடைசி நியாயஸ்தலமாக கருதப்படும் உச்சநீதிமன்றத்திலும் நடந்தேறியது. நீதியரசர்கள் அஷோக் பான், டி.கே. ஜெயின் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற விசாரணையில் டாக்டர் விநாயக் சென் சார்பில் பிரபல வழக்கறிஞர் ராஜீவ் தவான் வாதாடினார்.

அப்போது டாக்டர் விநாயக் சென் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை என்றும், எனவே அவர் மீது இதுவரை குற்றப்பத்திரிகைகூட தாக்கல் செய்யப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். டாக்டர் விநாயக் சென்னின் வீட்டில் கைப்பற்றப்பட்ட கம்ப்யூட்டரில் காவல்துறையினர் “கதை விட்டதை”ப்போல எந்த விவகாரமும் காணப்படவில்லை என்று ஆந்திர மாநில குற்றப்புலனாய்வு அதிகாரிகள் கூறியதையும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த வாதம் அனைத்தையும் கேட்ட நீதியரசர்கள், “இந்த வாதங்கள் அனைத்தும் விசாரணை நீதிமன்றத்தில் கூற வேண்டியது” என்று கூறினர். அதற்கு பதில் அளித்த வழக்கறிஞர் ராஜீவ் தவான், “விசாரணை நீதிமன்றத்தில் குற்றச்சாட்டே பதிவு செய்யாத நிலையில் இருப்பதால்தான் உச்சநீதிமன்றம் வர நேர்ந்தது” என்று எடுத்துரைத்தார்.

ஆனால் அவரது வாதத்தை ஏற்க முடியாது என்று தள்ளுபடி செய்த நீதியரசர்கள், டாக்டர் விநாயக் சென்-னை ஜாமீனில் விடமுடியாது என்று தீர்ப்பளித்தனர். டாக்டர் விநாயக் சென்னுக்கு ஜாமீன் அளிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்த நாள், டிசம்பர் 10, 2007. மனித உரிமைகள் தினமாக உலகெங்கும் அனுசரிக்கப்படும் ஒரு தினத்தில்தான் மனிதஉரிமைக்காக போராடிய ஒருவருக்கான நீதி மறுக்கப்பட்டுள்ளது.


இந்த நேரத்தில் பிரபல ஹிந்தி திரைப்பட நடிகர் சஞ்சய் தத்-துக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியதையும் ஒப்பு நோக்கலாம்.

மும்பையில் கடந்த 1993 ஆண்டு நடைபெற்ற தொடர்குண்டு வெடிப்பு சம்பவத்தில் 257 பேர் கொல்லப்பட்டதாக அரசு புள்ளிவிவரம் கூறுகிறது. இந்த வழக்கில் சஞ்சய் தத் உட்பட சுமார் 100 பேர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதாகக்கூறி சஞ்சய் தத்துக்கு 6 ஆண்டு சிறை தண்டனை விதித்து தடா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அந்த தண்டனையை வழங்கிய நீதிபதி, நடிகர் சஞ்சய் தத் 100 ஆண்டுகள் வாழ்ந்து பல திரைப்பட சாதனைகளை படைப்பார் என்றும், அவரது ஆயுளில் 6 வருடங்களை மட்டுமே தாம் பறிப்பதாகவும் மிகுந்த கவலையுடனும், அக்கறையுடனும் கூறினார். இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீட்டு செய்துள்ள நிலையில் நடிகர் சஞ்சய் தத் உள்ளிட்ட சிலருக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன், நீதிபதிகள் ஆர்.வி. ரவீந்திரன், ஜே.எம்.பஞ்ச்சால் ஆகியோர் அடங்கிய முதன்மை பெஞ்ச் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. ஆக அரசியல் பின்புலமும், பிரபலமும் இருந்தால் உச்சநீதிமன்றம் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டவருக்குக்கூட ஜாமீன் வழங்கும். ஆனால் இதுபோன்ற உயர்மட்ட தொடர்புகள் இல்லாத சாதாரண டாக்டர் விநாயக் சென் போன்றவர்கள் மீது குற்றப்பத்திரிகையே தாக்கல் செய்யப்படாவிட்டாலும் அவர்களுக்கு ஜாமீன் வழங்க வழியில்லை.



சட்டத்தின் முன் அனைவரும் சமமாம். நம்புவோம்!

-சுந்தரராஜன்

(sundararajan@lawyer.com)

டாக்டர் விநாயக் சென்-ஐ விடுவிக்க கோரும் மனுவிற்கு:

http://www.freebinayaksen.org/

http://www.savebinayak.ukaid.org.uk/

http://www.binayaksensupport.blogspot.com/

Saturday, December 22, 2007

மனித உரிமைப் போராளி அசுரன் மறைந்தார்!

(முக்கிய அறிவிப்பு: இவர் போர்ப்பறை பிளாக் அசுரன் அல்ல. போர்ப்பறை அசுரன் நீண்டநாள் வாழ்ந்து மக்கள் பணியாற்ற வாழ்த்துகள்)
...
சுற்றுச்சூழல் ஆர்வலரும், மனித உரிமைப் போராளியும், இடதுசாரி சிந்தனையாளருமான தோழர் அசுரன் 21-12-2007 (வெள்ளி) அன்று மாலை 5 மணி அளவில் மறைந்தார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்த ராம்குமார் என்ற இயற்பெயருடைய இவர், கம்யூட்டர் துறையில் கல்வி கற்றிருந்தாலும் சமூகத்தின் மீதுள்ள அக்கறை காரணமாகவும், சுற்றுச்சூழல், மனித உரிமைகள் குறித்த விழி்ப்புணர்வை வளர்க்க வேண்டும் என்ற ஆவல் காரணமாகவும் எழுத்தாளராக உருவெடுத்தார்.
.

திண்டுக்கல்லில் இருந்து வெளியாகும் "புதிய கல்வி" என்ற சுற்றுச்சூழல் இதழின் இணை ஆசிரியராக பணியாற்றிய இவருக்கு கடந்த சில ஆண்டுகள் முன்புதான் திருமணம் நடந்தது. இவருக்கு மனைவியும், ஒரு மகளும் உள்ளனர்.

கடந்த சில நாட்களாக சிறுநீரகங்கள் செயலிழந்த நிலையில், நாகர்கோவில் ராஜேந்திரா சித்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். அந்த நிலையிலும் திண்ணை இணைய இதழ், சமூக விழிப்புணர்வு போன்ற இதழ்களி்ல் எழுதி வந்தார். பின்பு நோய் முற்றிய நிலையில் திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இடதுசாரி சிந்தனையாளர் என்ற அடிப்படையில் ஒத்த கருத்துள்ள அனைவரையும் அரவணைத்து செல்லும் இயல்புள்ள இவர், எதிர்க்கருத்துள்ளவர்களுடன் கூர்மையான விவாதங்களை மேற்கொண்டார். இவரது விவாதங்களில் சூடுபறந்தாலும் உரையாடல்கள் மிகவும் இனிமையாகவே இருந்தன.

.

பன்னாட்டு ஏகபோகங்களுக்கு எதிரான மாற்று அறிவியல், வேளாண்மை, மருத்துவம் ஆகியவற்றை பரிந்துரை செய்வதில் முனைந்து நின்ற இவர் அண்மையில் "புதிய தென்றல்" என்ற சிற்றிதழையும் கொண்டுவந்தார்.

.

உலக அளவில், மனித உரிமை - சுற்றுச்சூழல் குறித்த புதிய சட்டங்களையும், செய்திகளையும் தெரிந்து கொள்வதிலும் அதை மற்றவர்களுக்கு தெரிய செய்வதிலும் மட்டற்ற ஆர்வம் காட்டியவர். அதைபோல செல்ஃபோன் மூலமான எஸ்எம்எஸ் சேவையையும்கூட சமூக மாற்றத்திற்கான ஆயுதமாக மாற்றியவர்.

.

இடதுசாரி சிந்தனையாளர் என்றபோதிலும், நாடாளுமன்ற இடதுசாரிகளைப்போல அணுசக்தி விவகாரத்தில் அமைதியாக இராமல் அணுசக்தி எதிர்ப்பாளராக தம்மை அடையாளம் காட்டிக்கொண்டவர். குறிப்பாக கூடங்குளம், கல்பாக்கம் அணுஉலைகளுக்கு எதிராக மருத்துவர்கள் ரமேஷ், புகழேந்தி ஆகியோரோடு இணைந்து செயல்பட்டவர்.

அவரது எழுத்தையும், செயல்பாடுகளையும் பார்ப்பவர்கள் யாரும், அவர் உயிருக்கு கடுமையாக போராடிக்கொண்டே இத்தகைய செயல்களில் ஈடுபட்டார் என்பதை உணர்ந்திருக்க முடியாது.

தவணை முறையில் மரணத்தை சந்தித்தாலும், உயிருடன் இருக்கப்போவது எத்தனை மணித்துளிகள் என்பது தெரியாத நிலையிலும், மனிதாபிமானம்-மனித குல விடுதலை என்பதையே இறுதி இலக்காக கொண்டு கடைசிவரை வாழ்ந்த தோழர் அசுரனின் குரல் இனி ஒலிக்காது.

அவரது குரலை தொடர்ந்து ஒலிக்கச்செய்வதே அவருக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாக இருக்கும்.

-மக்கள் சட்டம் குழு

மறைந்த தோழர் அசுரன் அவர்களின் சமூக அக்கறை கொண்ட எழுத்தின் ஒரு சிறிய பகுதியை படிக்க:

http://www.keetru.com/puthiyathendral/index.php

http://www.thinnai.com/?module=archives&op=searchauth&search_string=+அசுரன்


Monday, December 17, 2007

ஐசிஐசிஐ வங்கியில் கணக்கு வைத்துள்ளீர்களா? உஷார்! உஷார்!!

பல்வேறு வங்கிகளும், தற்போது வாடிக்கையாளர்களுக்கு நேரடி சேவை வழங்குவதை தவிர்த்து வருகின்றன. HDFC உள்ளிட்ட பல்வேறு வங்கிகளில் வாங்கிய கடனை பணமாக திரும்ப செலுத்தினால், அவற்றை ஏற்க தனிக்கட்டணம் வசூலிக்கின்றனர். இணைய வழியிலோ, செக் மூலமாகவோ பணத்தை செலுத்த வேண்டுமாம்.

செக் மூலம் செலுத்தினால் அதற்கு ரசீது பெறும் வசதி பல இடங்களில் இருப்பதில்லை. இதைப்பயன்படுத்தி வங்கிகள், வேண்டுமென்றே தாமதமாக செக்கை கலெக்சனுக்கு அனுப்பி வாடிக்கையாளர்களிடம் தாமத கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் பெருகி வருகின்றன.

இதேபோல இணையவழி வங்கிப்பணிகளை மேற்கொள்ளும் வாடிக்கையாளர்களிடம் PHISING அல்லது SPOOF என்ற பெயரிலான போலி இணையதளம் மூலமான மோசடிகள் பெருகி வருகின்றன. இத்தகைய போலி இணையதளங்களில் இருந்து குறிப்பிட்ட வங்கியின் வாடிக்கையாளருக்கு மட்டும் மின்னஞ்சல் வருகிறதாக கூறப்படுகிறது.

அவற்றில் கீழ்க்கண்ட ஏதோ ஒரு வாக்கியமும் இடம்பெறுகிறது.

# Alerts !!! Upgrade And Secure Your Online Account Immediately.

# Urgent Security Warning

# ICICI Online Banking Account Security Upgrade



மிகவும் அவசரமாக பதில் அளிக்கவேண்டும் என்று கூறும் இந்த மெயிலில் உள்ள இணைப்பு வேறொரு போலி இணையதளத்திற்கு இட்டுச்செல்லும். அங்கு வாடிக்கையாளரின் கணக்கு எண், கிரெடிட் கார்டு எண், டெபிட் கார்டு எண், Login ID, Password போன்றவற்றை கேட்பார்கள்.


மேலே கேட்கப்பட்ட விவரங்களை கொடுத்துவிட்டால் உங்கள் கதி அதோ கதிதான். உங்கள் கணக்கில் உள்ள அனைத்து தொகையும் களவாடப்படும்.



சரி. பொய்யான இணையதளத்தை கண்டுபிடிப்பது எப்படி?



இணையதளத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள டூல்பாரில் ஒரு பூட்டு சின்னம் இருக்கும். பெரும்பாலான போலி இணையதளங்களில் இந்த பூட்டு சின்னம் இருக்காது.
.

அடுத்ததாக நாம் பார்க்க வேண்டியது இணையதளத்தின பாதுகாப்பு. வலைதளத்தினை பற்றி. [ secured website ]. சாதாரணமாக அனைத்து இணையதளங்களும் "http" என்று தொடங்கும். ஆனால் வங்கி போன்ற பாதுகாப்பான இணையதளங்களில் லாக் இன் செய்யும்போது அது, "https" என்று மாறிவிடும். (s=secured)


ஆனால் போலி இணையதளங்களில் லாக் இன் செய்தாலும் அது "http" என்று மட்டுமே இருக்கும். மேலும் இணையதளத்தின் கீழ்புறமுள்ள டூல்பாரில் பூட்டு சின்னமும் இருக்காது.

போலி இணையதளங்களை கண்டுபிடிக்க இவை தற்போதைய வழிமுறைகளே. இவற்றையும் மீறி போலி இணையதளங்கள் உருவாகலாம். இத்தகைய மோசடிகளிலிருந்து தப்பிக்க சந்தேகப்படும்படியான மின்னஞ்சல்களை குப்பைத்தொட்டி(Recycle bin)க்கு அனுப்புவதை சரியான வழியாகும். தேவை என்றால் நமது வங்கியின் இணையதளத்திற்கும் நாமாகவே சென்று லாக் இன் செய்யவேண்டும். மெயிலோடு வரும் இணைப்புகளை கட்டாயமாக தவிர்க்க வேண்டும்.
.
இத்தகைய போலி வங்கி இணையதளங்களை இணைக்கும் மெயில்கள், குறிப்பிட்ட வங்கிகளில் கணக்கு வைத்துள்ளவர்களுக்கு மட்டுமே வருகின்றன. மற்றவர்களுக்கு வருவதில்லை. அப்படியானால் வங்கி வாடிக்கையாளர்களின் மின்னஞ்சல் முகவரிகள் எப்படி மோசடிப்பேர்வழிகளுக்கு கிடைத்தது என்று யோசிப்பது மிக முக்கியமான அம்சமாகும்.
-மக்கள் சட்டம் குழு

(இது போன்ற உங்கள் அனுபவங்களை, அறிந்த விவரங்களை பின்னூட்டத்திலோ, தனி அஞ்சலிலோ அனுப்பி வைத்தால் அவையும் பதிவாக இணைக்கப்பட்டு விழி்ப்புணர்வு ஏற்படுத்த பயன்படும்)

Tuesday, December 4, 2007

இந்தியாவில் இயங்கும் தனியார் வங்கிகளை கட்டுப்படு்த்தும் அதிகாரம் எனக்கு இல்லை – ப. சிதம்பரம் (மறைமுக) ஒப்புதல்

வங்கிகளின் கடன் வசூல் போக்கு குறித்து இந்திய ரிசர்வ் வங்கி திடீர் கரிசனம் காட்டியுள்ளது. வாடிக்கையாளர்களிடம் கடன்வசூல் செய்யும்போது சட்டப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று சில தினங்களுக்கு முன் அவ்வங்கி உபதேசம் செய்துள்ளது. நன்றி: தினமலர் 30-11-07

இந்த உபதேசம் ஊடகங்களிலும் மிக உரத்து விவாதிக்கப்பட்டது. எனினும் இந்த விவகாரம் குறித்து இந்திய ரிசர்வ் வங்கி கடந்த 2006 நவம்பர் மாதம் வெளியிட்ட சுற்றறிக்கை “வங்கிப்பணிகளை அவுட்சோர்ஸிங் செய்வது மற்றும் இடர் மேலாண்மை குறித்த விதிமுறைகள்” (http://www.rbi.org.in/scripts/NotificationUser.aspx?Mode=0&Id=3148), இந்த விவகாரம் குறித்து மிகவிரிவான விதிமுறைகளை வகுத்துள்ளது.

இதேபோல “வங்கிகளின் கிரெடிட் கார்டு செயல்பாடுகள் குறித்த முதன்மை சுற்றறிக்கை” (http://www.rbi.org.in/commonman/Upload/English/Notification/PDFs/78385.pdf) யும் வாடிக்கையாளர்களின் நலன்களை பாதுகாக்கும் பட்டயமாக உள்ளது.

ஆனால் இந்த விதிமுறைகள் முறைப்படி பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்கும் பணியை மட்டும் ஏனோ இந்திய ரிசர்வ் வங்கி மேற்கொள்ளவில்லை. இந்நிலையில்தான் மேற்கூறப்பட்ட விதிமுறைகளில் கூறப்பட்டுள்ள விவரங்களையே மற்றுமொரு வடிவில் வழங்கியுள்ளது. “வங்கிகளின் கடன்வசூல் முகவர்கள் – வரைவு விதிமுறைகள்” (http://www.rbi.org.in/scripts/NotificationUser.aspx?Id=3961&Mode=0) என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள விதிமுறைகளில்,
1. கடன் வசூல் நடவடிக்கைகளில் உரிய கவனம்,
2. வசூல் முகவர்கள் குறிப்பிட்ட தொலைபேசி எண்களில் இருந்து மட்டுமே பேசவேண்டும்,
3. கடன் வசூல் நடைமுறையில் உள்ள குறைகள் குறித்து புகார் தெரிவிக்க உரிய அமைப்பு ஏற்படுத்த வேண்டும்,
4. கடன் வசூல் முகவர்களுக்கு நுகர்வோர் உரிமைகள் குறித்து பயிற்சி அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட சில வழிகாட்டு நெறிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்த வரைவு விதிமுறைகள் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த வரைவு விதிமுறைகள் குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துகளை டிசம்பர் மாதத்திற்குள் தெரிவிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ள “வங்கிப்பணிகளை அவுட்சோர்ஸிங் செய்வது மற்றும் இடர் மேலாண்மை குறித்த விதிமுறைகள்” மற்றும் “வங்கிகளின் கிரெடிட் கார்டு செயல்பாடுகள் குறித்த முதன்மை சுற்றறிக்கை” ஆகியவற்றை முறைப்படி செயல்படுத்தி இருந்தாலே கிரெடிட் கார்டு செயல்பாடுகளில் பல பிரசினைகளுக்கு தீர்வு கண்டிருக்க முடியும். ஆனால் அவற்றை நடைமுறைப்படுத்த எந்த முயற்சியும் மேற்கொள்ளாமல் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு மக்களை ஏமாற்றுகிறது இந்திய ரிசர்வ் வங்கி. பத்திரிகைகளும் இதை புரிந்து கொள்ளாமல் கிரெடிட் கார்டு பிரசினைக்கு முடிவு கட்டப்பட்டுவிட்டது போல பம்மாத்து செய்கின்றன.

இந்நிலையில் கடந்த 03-12-07 அன்று நாடாளுமன்றத்தில் பேமென்ட் செட்டில்மென்ட் சிஸ்டம் பில் 2007 குறித்த விவாதங்களுக்கு பதில் அளித்து பேசிய மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம், கடன் வசூல் அராஜகத்தில் தனியார் வங்கிகளே பெருமளவில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளார்.

நன்றி: தினத்தந்தி 04-12-07

மேலும் அரசுடைமை வங்கிகள் இத்தகைய நாகரிகமற்ற செயல்களில் ஈடுபட்டால் அந்த வங்கியின் மேலாளர் அடுத்த நாளே வீட்டுக்கு அனுப்பப்படுவார் என்றும் வீரவசனம் பேசியுள்ளார். எனவே உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தனியார் வங்கிகள், நிதி அமைச்சரின் கட்டுப்பாட்டில் இல்லை என்பது உறுதியாகிறது.

மாபெரும் பொருளாதார மேதையான சிதம்பரத்தின் பேச்சு நமக்கு சில கேள்விகளை எழுப்புகிறது.

1. தனியார் வங்கிகள் இந்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் இயங்குகிறதா? இல்லையா?

2.ஆம் எனில் இந்த வங்கிகளை கட்டு்ப்படுத்த ரிசர்வ் வங்கி மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? இல்லையெனில் ரிசர்வ் வங்கி என்ற ஒரு அமைப்பு எதற்காக?

3. இந்திய ரிசர்வ் வங்கியை கட்டுப்படுத்தும் பொறுப்பு மத்திய நிதி அமைச்சகத்திற்கு உள்ளதா? இல்லையா?

4. ஆம் எனில் இந்திய வங்கி நுகர்வோர்களை பாதுகாக்க மத்திய நிதிஅமைச்சகம் மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? இல்லை எனில் மத்திய நிதி அமைச்சகம் என்ற அமைப்பு எதற்காக?

5. மத்திய நிதி அமைச்சகத்தையும், இந்திய ரிசர்வ் வங்கியையும், இந்தியாவில் வணிகம் செய்யும் தனியார் வங்கிகளையும் கட்டுப்படுத்தும் அதிகாரம் மத்திய நிதி அமைச்சருக்கு இருக்கிறதா?

6. ஆம் எனில் மேற்கண்ட விவகாரங்களுக்காக மத்திய நிதி அமைச்சர் மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? இல்லை எனில் மத்திய நிதி அமைச்சர் என்ற பதவி யாருடைய நலன்களுக்காக செயல்படுகிறது?

-சுந்தரராஜன்

(sundararajan@lawyer.com)

Saturday, December 1, 2007

பிளாக்(Blog) மூலமாக மதத்தை விமரிசனம் செய்ததாக சட்ட மாணவர் கைது!

கடவுளும் மதங்களும் விமரிசனத்திற்கு அப்பாற்பட்ட அம்சங்களாகவே உலகின் பெரும் பகுதியில் உள்ளன. மதங்களின் பெயரால் பல்வேறு சமூக அவலங்கள் அரங்கேற்றப்பட்டாலும், அந்த அவலங்களால் பெரும்பான்மை பாதிக்கப்பட்டாலும், அந்த மதங்களையும், அவை சார்ந்த கடவுள்களையும் விமர்சனம் செய்வது கண்டனத்திற்குரியதாகவே கருதப்படுகிறது.
மூடத்தனங்களை தோலுரிக்கும் அனைவரும், மக்களின் மத நம்பிக்கைகளை புண்படுத்துவதாக புகார்கள் கூறப்படுகின்றன.

இதற்கு எந்த நாடும், எந்த மதமும் விதிவிலக்காக அமையவில்லை.

எகிப்து நாட்டில் கரீம் சுலைமான் அமீர் என்ற 23 வயதுடைய சட்ட மாணவர்,

இஸ்லாம் மதத்தையும், நாட்டின் அதிபரையும், அந்நாட்டின் அல்-அஸார் மதத்தலைவர்களையும் அவரது பிளாக்குகள் (http://karam903.blogspot.com/,
http://shiningwords.blogspot.com/) மூலமாக விமர்சனம் செய்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைது கடந்த 2005ம் ஆண்டு அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டார். (அவரது வீடியோ பேட்டி: http://www.youtube.com/watch?v=Y_tARm-SF64)

ஆனால் அவரது பிளாக்கின் ஆங்கில மொழிபெயர்ப்பை படித்தால், மதத்தின் பெயரால் மேற்கொள்ளப்படும் தேவையற்ற போர்களுக்கு எதிராகவும், பெண் விடுதலைக்கு ஆதரவாகவும் எழுதிய மனித உரிமை ஆர்வலராகவே அவர் செயல்பட்டு வந்துள்ளது தெரிகிறது.

சுமார் இரண்டு மாதங்கள் தனிமை சிறையில் அடைக்கப்பட்ட அவர் மீதான மேற்கூறிய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாக கூறி அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அலெக்ஸாண்டிரியா மாகாணத்தில் உள்ள போர்க் அல்-அராப் சிறையில் அவர் அடைக்கப் பட்டுள்ளார்.

அவரது கருத்துகளுக்காக அவரை சிறையில் அடைக்கக்கூடாது என்றும், அவரை விடுவிக்க வேண்டும் என்றும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


கருத்துரிமையை பறிக்கும் இது போன்ற சம்பவங்கள் இஸ்லாமிய நாடுகளில் மட்டுமே நடைபெறுவதாக ஒரு தவறான பிரச்சாரமும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பழமை வாய்ந்த மதங்களுள் ஒன்றான கிறிஸ்தவ மதமும் பகுத்தறிவுக்கு எதிரானதாகவே விளங்கியுள்ளது. மதங்களை விமர்சித்தவர்களை அதிகார பலத்தால் மண்டியிட வைப்பதும், அதற்கு மறுப்பவர்களை விஷம் கொடுத்து கொல்வதுமே அம்மதத்தின் வரலாறாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்து மதமும் இதற்கு விதிவிலக்கல்ல. வேதகால இந்தியாவில் சார்வாகம் மற்றும் லோகாயதவாதம் என்ற பெயரில் நாத்திகம் பேசப்பட்டுள்ளது. எனினும் அதற்கான ஆதாரங்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளன; அவ்வாறு பேசியவர்கள் கதி என்ன ஆனது என்று தெரியவில்லை. துளசிதாசர் மற்றும் வால்மீகி ஆகியோர் எழுதிய ராமாயணத்தில் “ஜாபாலி” என்ற நாத்திக அமைச்சர் ராமனின் பல தவறுகளை சுட்டிக்காட்டுவதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் கம்ப ராமாயணத்திலோ சூத்திரனான சம்பூகன் பெயர் மட்டுமல்ல; நாத்திகனான ஜாபாலியின் பெயரும் திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திலும் சித்தர்களின் சிந்தனை மரபென்பது மக்களின் மூடத்தனங்களை அகற்றும் பகுத்தறிவு மரபாகவே பெருமளவில் உள்ளது. எனினும் ஆதிக்க சக்திகளை கலங்கடித்த இந்த இலக்கியங்கள் பெருமளவில் அழிக்கப்பட்டுள்ளன.

இந்த மரபில் வந்த தோழர் பெரியாரின் போராட்ட வாழ்வு நாம் அறிந்ததுதான். அவரது சீடர்கள் என்று கூறிக்கொள்வோரின் ஆட்சியிலும் இலக்கியம் என்ற பெயரில் மாணவர்களின் மூளையில் திணிக்கப்படுவது ஆன்மிக கருத்துகளே. அதற்கு மாற்றாக உள்ள இலக்கியங்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகின்றன. பாடப்புத்தகங்களில், பெரியாரேகூட பெண் விடுதலைப் போராளியாக வருகிறாரே தவிர கடவுள் மறுப்பாளராக காட்டப்படுவதில்லை.

இந்திய அரசியல் அமைப்பில் இந்திய குடி மக்களுக்காக விதிக்கப்பட்ட அடிப்படை கடமைகளில்

“சமயம், மொழி, பிராந்தியம் அல்லது குறுகிய பிரிவுகளைத்தாண்டி வந்து, இந்திய மக்களிடையே சகோதரத்துவத்தையும் ஒன்றுபட்ட உணர்வையும் உண்டாக்கவும்;

பெண்களின் கண்ணியத்தைக் களங்கப்படுத்தும் பழக்க வழக்கங்களைத் தவிர்க்கவும்…”


“அறிவியல் ரீதியான அணுகுமுறை, மனிதாபிமானம் மற்றும் ஆராய்வு ஊக்கம், சீர்திருத்தம் ஆகியவற்றை வளர்ப்பதற்கும், காப்பதற்கும்…”

“-ஆவன புரிவதை ஒவ்வொரு குடிமகனும் தனது கடமையாக எடுத்துக்கொள்ள வேண்டும்”
என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால் இந்தக்கடமையை யாராவது செய்யப்போனால் மக்களின் மத உணர்வுகளை புண்படுத்துவதாகக்கூறி குற்றவியல் சட்டம் உங்களைத் தடுக்கும்.

மதத்தின் பெயரால் செய்யப்படும் எந்த அராஜகத்தையும் விமர்சிக்கக்கூட பெரும்பாலானோர் முன்வருவதில்லை. அவர்களில் பெரியாரின் சீடர்களும், இடதுசாரிகளும் அடக்கம்.

உதாரணமாக கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து குஜராத்தில் நடைபெற்ற அரசு ஆதரவுடன் நடைபெற்ற பயங்கரவாதத்தை சொல்லலாம். அந்த சம்பவத்திற்கு எதிராக தமிழகத்தில் மக்கள் மட்டுமே கொந்தளித்தனர். அரசியல் தலைவர்கள் சிலர் அந்த சம்பவத்தை ரசித்தனர். மற்ற சிலர் மவுனம் காத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக “தெஹல்கா” பத்திரிகை அண்மையில் மேற்கொண்ட புலனாய்வு இந்திய பத்திரிகை வரலாற்றில் புதிய முத்திரை பதித்தது. ஆனால் சமூகத்தில் அது எதிரொலித்ததா? என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.

சில ஊடகங்களைத்தவிர மற்ற ஊடகங்கள் கள்ள மவுனம் சாதித்தன. அரசியல்வாதிகள் அதையும் அரசியலாக்க முயற்சித்தனர். நீதிமன்றங்களோ தங்கள் “கற்றறிந்த” தலைகளை மண்ணுக்குள் புதைத்துக்கொண்டன. ஆக மொத்தத்தில் மிகப்பெரும் சான்றாதாரங்கள் யாருக்கும் பயனின்றி போகும் நிலை.

இஸ்லாம் மதம் இந்தியாவில் சிறுபான்மையாக இருப்பதால் இதுபோன்ற பேரழிவுகளை செய்ய வாய்ப்பில்லை. ஆனால் அம்மதத்தை விமர்சிக்கும் தஸ்லீமா நஸ் ரீன் போன்றவர்களை தாக்கி அம்மத தீவிரவாதிகள் நிறைவு காண்கின்றனர்.

இது போன்ற சந்தர்ப்பங்களில் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்படுகிறதா? என்று பார்த்தால் மிகப்பெரிய ஏமாற்றமே கிடைக்கும். வழக்கு தொடுப்பதிலிருந்து நீதிமன்றம் வரை பெரும்பாலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியவர்கள் மதம் சார்ந்தவர்களாகவே இருப்பதால் மதரீதியான குற்றங்களில் ஈடுபடுவோர் சுலபத்தில் தண்டிக்கப்படுவதில்லை.

ஆக, கருத்துரிமை என்பது ஆதிக்கத்தில் உள்ளவர்களுக்கு இணக்கமான கருத்து உள்ளவர்களுக்கே என்பதே உண்மை நிலை. இந்த நிலை நீடித்தால் இன்று எகிப்தின் சட்டமாணவர் கரீம் சுலைமான் அமீர்-க்கு ஏற்பட்ட நிலை நாளை தமிழ் பிளாக்கர்களுக்கும் ஏற்படாது என்பதற்கு உத்தரவாதமில்லை. ஏனெனில் தமிழச்சியின் பிளாக்கில் எழுதப்பட்ட கருத்தை ஏற்கமுடியாமல் அந்த பிளாக்கையே களவாடி அழித்தவர்கள்தான் இந்தியாவின் அதிகார பீடங்களிலும் வீற்றிருக்கின்றனர்.

என்ன செய்யப்போகிறோம்?
-சுந்தரராஜன்