Thursday, November 22, 2007

வங்கிக்கடன் வசூலிப்பில் அத்துமீறல்

வங்கிகளின் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சட்டதிட்டங்கள் மட்டுமல்லாமல், காலம்காலமாக மதிக்கப்படும் மரபுகளும் உள்ளன.


இதனை BANKING LAW AND PRACTICE என்பார்கள். ரிசர்வ் வங்கியும் அவ்வப்போது தேவையான வரைமுறைகளை வகுத்துக் கொடுப்பதோடு, பல்வேறு வழிகாட்டுதல்களையும், ஆலோசனைகளையும் வழங்கி வருகிறது.

இந்நிலையில் கடன் வசூப்புக்கு குண்டர்களைப் பயன்படுத்துகின்றன என்ற குற்றச்சாட்டு வங்கிகள் மீது சமீபகாலத்தில் அதிகரித்துள்ளது. ஆரம்பத்தில் இந்த அவலம் இங்கொன்றும் அங்கொன்றுமாக சில தனியார் வங்கிகளில் தொடங்கியது.

ஆனால், கடந்த மூன்று, நான்கு ஆண்டுகளில் இந்த வசூல் கலாசாரம் தொற்றுநோய் போல் வேகமாகப் பரவி வருகிறது. கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான தவணை தவறினால், வீட்டுக்கதவைத் தட்டுவதற்கு "தனியாள்கள்" நியமிக்கும் போக்கு வங்கிகளுக்கு அழகல்ல.

இந்தக் கடன் வசூலிப்பு ஏஜெண்ட்களின் அராஜகத்தால் பல குடும்பங்கள் நிம்மதி இழந்துள்ளன. எப்படியாவது கடனை வசூலித்துக் கொடுக்க வேண்டியது இந்த ஏஜெண்ட்களின் வேலை. இவர்களால் ஏற்படும் துன்பத்தையும், அவமானத்தையும் பொறுத்துக்கொள்ள முடியாமல் தற்கொலைக்குத் தள்ளப்பட்டவர்கள் பலர்.

பல தனியார் வங்கிகளுக்கு எதிராக, பல் வேறு மாநில நீதிமன்றங்களும், உச்ச நீதிமன்றமும் கடுமையாகக் கண்டனம் தெரிவித்துள்ளன. எனினும் நிலைமை மாறவில்லை.

கவலைக்குரிய இந்த நிலை எப்படி ஏற்பட்டது? கடந்த காலங்களில், வங்கிக்கடன் வழங்குவதற்கு சில வரைமுறைகள் கடைப்பிடிக்கப் பட்டன. பெரும்பாலும் தேவை அடிப்படையிலும் ஏதேனும் ஒருவகை செக்யூரிட்டியின்' பேரிலும்தான் வங்கிகள் தனிநபர் கடன்கள் வழங்கி வந்தன. கடன் கோருபவர்களுக்கு, அக் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான நிதி ஆதாரம் மற்றும் வருமானம் உள்ளதா என்பதைப் பரிசீலித்த பின்னரே வங்கிகளில் கடன் தருவார்கள்.

ஆனல் 1990களின் தொடக்கத்தில் அறிமுகமான பொருளாதார தாராளமயமாக்கல் மற்றும் அதே காலகட்டத்தில் தோன்றிய, அதீத நுகர்வோர் கலாசாரத்தின் விளைவாக, வங்கிகள் அதிலும் குறிப்பாக புதிய தலைமுறை தனியார் வங்கிகள், வெளிநாட்டு வங்கிகள் மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்கள் ஆகியவற்றின் போக்கில் ஒரு பெரும் மாற்றம் ஏற்பட்டது. புதிதாக உருவான நுகர்வோர் கலாசாரத்தை லாபம் ஈட்டுவதற்கான ஓர் அரிய வாய்ப்பாக வங்கிகள் கருதின.

இதன் பயனாக, வாகனக் கடன், தனிநபர் கடன், நுகர்பொருள் வாங்குவதற் காக கடன் மற்றும் கடன் அட்டைகள் என விதவிதமான கடன்களை வங்கிகள் தாராளமாக வாடிக்கையாளர்களுக்கு வழங்கத் தொடங்கின.

முன்பு, கடன் விண்ணப்பங்களை மிகவும் கவனமாகப் பரிசீலிப்பதை கடமையாகக் கருதிய வங்கிகள் இப்போது அப்படிச் செய்வதில்லை. மாறாக, "கடன் வாங்கலியோ, கடன்!'' என்று கூவிக் கூவிக் கடன் கொடுக்கத் தொடங்கின. தொலைபேசிகளில் தொடர்பு கொண்டு, வாடிக்கையாளர்களுக்கு வலை விரித்தன.

இந்நிலையில், வங்கிகளுக்குத் தேவையெல்லாம் கையெழுத்திட்ட, பூர்த்தி செய்யப்படாத காசோலைகள் மட்டுமே! காரணம், மேலே குறிப்பிட்ட வசூல் முறையை நம்பித்தான் கோடிக்கணக்கான ரூபாயைக் கடனாக இந்தத் தனியார் வங்கிகள் வழங்கி வருகின்றன.

இப்படி, லாப நோக்கினால் உந்தப்பட்ட வங்கிகள், கடன் வழங்குவதில் காட்டிய அதீத ஆர்வம், கடன் விண்ணப்பங்களைப் பரிசீலிப்பதில் ஏற்பட்ட அலட்சியப்போக்கு ஒரு புறம் என்றால், இன்னொருபுறம், கடன் தொகையை வசூலிப்பதற்கு வெளியாட்களை நியமித்தன. தாங்களே மேற்கொள்ள வேண்டிய பணியை, வங்கிக்குத் தொடர்பில்லாத ஆட்களை அல்லது நிறுவனத்தை ஒப்பந்த அடிப்படையில் நியமித்தன.

அவர்கள் முறைகேடான வழிமுறைகளை கையாளுவதால் வங்கிக்கு அவப்பெயர் ஏற்படுமே என்ற கவலை ஏனோ ஏற்பட வில்லை.
நீதிமன்றங்களை அணுகினால் காலதாமதம் ஏற்படுகிறது என்பது உண்மை. ஆனால், இதைக் காரணம் காட்டி, வங்கிகள் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக்கொள்வதை எந்த ஒரு நாகரிக சமுதாயமும் அனுமதிக்காது.

நல்லவேளையாக, இதுவரை அமைதி காத்துவந்த பாரத ரிசர்வ் வங்கி, இப்போது தன் மவுனத்தைக் கலைத்துள்ளது. கடந்தமாத இறுதியில், "நிதி மற்றும் கடன்கொள்கை''யை அறிவித்த ரிசர்வ் வங்கி கவர்னர் ஒய்.வி.
ரெட்டி, "வங்கிகள் தங்கள் கடன்தொகையை வசூலிப்பதற்கு, ஏஜெண்ட்களை நியமித்து, வன்முறையைப் பயன்படுத்துவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்'' என்று எச்சரித் துள்ளார்.

காலம் கடந்து வந்திருந்தாலும், இந்த அறிவிப்பு ஆறுதல் அளிக்கக்கூடியது. இது தொடர்பான விரிவான வழிமுறைகள் அடங்கிய வரைவு சுற்றறிக்கையையும் ரிசர்வ் வங்கி அண்மையில் வெளியிட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி இதற்கான தொடர் நடவடிக் கையை தாமதமின்றி மேற்கொண்டு, வங்கிகளின் இத்தகாத செயலை உடனடியாகத் தடுத்து நிறுத்தும் என்று நிச்சயமாக நம்பலாம்.


இதற்கிடையே உச்ச நீதிமன்றம் ஒரு யோச னையைத் தெரிவித்துள்ளது. வசூல் ஏஜெண்ட்களின் அராஜகம் மற்றும் அத்துமீறிய செயல்களுக்கு அவர்களை நியமித்த வங்கிகளே பொறுப்பு ஏற்க வேண்டும் என்ற வகையில் விதிகள் மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்பதே அது. உச்ச நீதிமன்றத்தின் யோசனை செயல்படுத்தப்படுமேயானால், வங்கிகள் எச்சரிக்கை உணர்வோடு செயல்படுவார்கள் என்பதில் ஐயமில்லை.

ரிசர்வ் வங்கி கவர்னரின் எச்சரிக்கையை அடுத்து, பாரத ஸ்டேட் வங்கி தனது கடன் தொகையை வசூல் செய்வதற்காக, 3,000 மார்க்கெட்டிங் மற்றும் சிறப்பு வசூல் அதிகாரிகளை வங்கி அலுவலர்களாக நியமிக்கத் திட்டமிட்டுள்ளது. இந்த அலுவலர்கள் வங்கியின் விதிமுறைகளுக்கு உட்பட்டு மென்மையான முறையில் கடன்தொகையை வசூலிக்க முற்படுவார்கள் என்றும் பாரத ஸ்டேட் வங்கி தெரிவிக்கிறது. இதைத் தொடர்ந்து, இதர வங்கிகளும் இந்த அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும்.

இத்தருணத்தில், மற்றொரு விஷயத்தையும் குறிப்பிட வேண்டும். வீட்டுக்கடன் வாங்கும் வாடிக்கையாளர்கள், கடன் தொகையைத் தவணை முறையில், அசல் மற்றும் வட்டியைத் திருப்பிச் செலுத்துகிறார்கள்.

வங்கிகள் மற்றும் வீட்டுக்கடன் வழங்கும் நிதி அமைப்புகள், வட்டிவீதத்தையும் கடனுக்கு மாதம்தோறும் கட்ட வேண்டிய தவணைத் தொகையையும் தங்கள் போக்கில் மாற்றுகின்றன என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இதில் வெளிப்படையான நடைமுறை இல்லாததால், வாடிக்கையாளர்கள் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகிறார்கள்.

இதுதவிர, வீட்டுக்கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு நிர்ணயிக்கப்பட்ட காலம் முடிவதற்கு முன்பே கடன் தொகையை முழுவதுமாக வட்டியுடன் திருப்பிச் செலுத்துவதற்கு வாடிக்கையாளர்கள் விரும்பினால், அதற்கென ஒரு தனிக்கட்டணத்தை வங்கிகள் வசூக்கின்றன. ஆக, தவணையை கட்ட தாமதம் ஏற்பட்டாலும் தண்டனை; முன்கூட்டியே கடனைத் திருப்பிச் செலுத்தினாலும் தண்டனையா? இப்படி கூடுதல் கட்டணம் வசூப்பது நியாயமாகாது. இது உடனடியாக நிறுத்தப் பட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவித்துள்ளார். இதுவும் விரைந்து அமல் படுத்தப்பட வேண்டும்.

சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் தேவையான வங்கிச் சேவை அளிக்கவும், நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்காகவும் செயல்பட வேண்டிய வங்கிகள், வணிக ரீதியிலும் செயல்படுவது புரிந்துகொள்ளக் கூடியதே. ஆனால், தனியார் லேவாதேவிக்காரர்களைப்போல் வங்கிகள் செயல்படுவதை ஒருபோதும் ஏற்க முடியாது.

-எஸ். கோபாலகிருஷ்ணன்
(கட்டுரையாளர்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் துணைப் பொது மேலாளர்)


நன்றி:
22 நவம்பர் 2007

7 comments:

Anonymous said...

Long time; no see...

Anonymous said...

The decission taken by the RBI is most welcome at the same time it ordered the public sector banks to to issue loans on liberal terms and conditions.

Anonymous said...

ர்ர்ர்ர்ரொம்ப நாள் கழிச்சு வரும்போதாவது சொந்த சரக்கோட வரக்கூடாதா? சுட்ட சரக்கோடயா வரணும்?

ஆனாலும் பரவாயில்ல...

அதுவும் நல்லாதான் இருக்கு....!

Siva said...

என்ன நீதிமனறத்திற்க்கு நீண்ட விடுமுறை மாதிரி உங்களுக்கும் அக்டோபர் 10லிருந்து விடுமுறையா?

Siva said...

<==
அவர்கள் முறைகேடான வழிமுறைகளை கையாளுவதால் வங்கிக்கு அவப்பெயர் ஏற்படுமே என்ற கவலை ஏனோ ஏற்பட வில்லை.
==>
ரூ.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்ட் தனியார் வங்கிக்கு வந்திருப்பதுபோல்தான் தெரிகிறது.இனிமேல் இந்த மாதிரி சட்டத்திற்க்கு புறம்பான வகையில் கடனை வசூலிப்பதால் வங்கியின் பெயர் கெடுகிற்தாம்.அதனால் இனிமேல் இந்த சப் ப்ரைம் கடனை கொடுக்க்பபோவதில்லையாம்.

அகராதி said...

கிரெடிட் கார்ட் கிங்கரர்கள் குறித்து ரிசர்வ் பாங்க்-ன் கருத்துகள் முதலைக் கண்ணீர் வடிப்பதைப் போல உள்ளது.

இந்த கிங்கரர்கள் விருப்பம் போல் வட்டியும், மற்ற கட்டணங்களும் வசூலித்துக்கொள்ளலாம் என்ற சட்டபூர்வ கொள்ளைக்கு அனுமதி அளித்ததே இந்த ரிசர்வ் வங்கிதான்.

கிரெடிட் கார்டால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேருக்கு ரிசர்வ் பாங்க்-ன் பாங்கிங் ஆம்புட்ஸ்மேன் மூலம் தீர்வு கிடைத்துள்ளது எனக்கேட்டுப் பாருங்கள்.

அங்கே புகார் கொடுக்க சென்றால் போலிஸ் ஸ்டேஷனைவிட அதிக அளவில் அவமானப்படுத்துகின்றனர்.

கட்டுரையாளர் முன்னாள் வங்கி அதிகாரி என்பதால் ரிசர்வ் வங்கியை காப்பாற்றும் விதத்தில் எழுதியுள்ளார்.

இறுதியாக நாம் தெரிந்து கொள்ள வேண்டியது ஒன்றுதான். அது, "தானாக வராது மாற்றம்!"

Anonymous said...

மிகவும் நல்ல, இன்றைய காலத்திற்கு தேவையான கட்டுரை. இந்த பிரசினைகள் குறித்து வெளிப்படையாக பேசினால், தாம் கடனாளி என்பது தெரிந்து விடும் என்பதாலேயே பலரும் பேசுவதில்லை.

மேலும் தாம் நாணயம் குறைந்தவர் என்ற கருத்து பரவிவிடும் என்பதாலும் இந்த பிரசினையில் பாதிக்கப்படுபவர்கள் வெளியில் சொல்வதில்லை.

இந்த விவகாரத்தில் ரிசர்வ் வங்கியின் பணி பாராட்டும் விதத்தில் இல்லை என்பதே உண்மை. நிதி அமைச்சகமும் என்ன செய்கிறது என்பது புரியவில்லை. இந்த நிலையில் கிரெடிட் கார்டு நிறுவனங்களின் அத்துமீறல்களுக்கு எதிரான கூட்டு நடவடிக்கைகள் தேவை.

அத்தகைய நடவடிக்கைகளை நீங்கள் ஏன் முன்னெடுத்து செல்லக்கூடாது?

Post a Comment

உங்கள் கருத்துகளே எங்களை மேலும் செயல்படத் தூண்டும்.

ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.

அனானி மற்றும் ஆங்கில மறுமொழிகள் நீக்கப்படலாம்!