இந்த அமைப்பின் முக்கிய பணி கடன்பெறும் நுகர்வோரின் நேர்மையை அளவிட்டு அதை புள்ளிவிவரமாக வழங்குவதே. இதன்மூலம் ஆபத்து குறைந்த கடன்களை வழங்கமுடியும் என்று வங்கிகள் கருதுகின்றன. அதாவது வாங்கிய கடனை திரும்ப கட்டும் பழக்கம் உடைய நல்ல வாடிக்கையாளர்களை பெறுவதே இந்த அமைப்பின் நோக்கம்.
அனைத்து வாடிக்கையாளர்களின் பெயர், பிறந்த தேதி, அடையாளத்திற்காக வழங்கப்படும் வாக்காளர் அடையாள அட்டை – பாஸ்போர்ட் – ஓட்டுனர் உரிமம் – ரேஷன் கார்ட் – பான் கார்டு போன்றவற்றின் எண்களும் இந்த தகவல் கிடங்கில் சேமிக்கப்படுகின்றன. எனவே வாங்கிய கடனை திரும்ப செலுத்தாத வாடிக்கையாளர்கள் இந்த பட்டியலில் சிக்குவது உறுதி. இவ்வாறு சிக்கும் ஒரு வாடிக்கையாளர் பிறகு வேறெந்த வங்கியிலோ, நிதி நிறுவனத்திலோ கடன் பெற முடியாது.
இது உலகத்தின் பல பகுதிகளிலும் பின்பற்றப்படும் ஒரு நடைமுறைதான். அமெரிக்கா போன்ற முன்னேறிய(தாகக் கூறப்படும்) நாடுகளில், கடன் வரலாறு சிறப்பாக உள்ள வாடிக்கையாளர்களுக்கு மிகக்குறைந்த வட்டியில் கடன் அளிக்கப்படுகிறது.
நல்ல திட்டம்தானா?
ஒரு வெளிப்படையான பார்வையில் இந்த திட்டம் மிகவும் நல்ல திட்டமாக தோன்றும். ஆனால் இந்தியாவில் இந்த அமைப்பின் செயல்பாடுகள் இந்த திட்டத்தின் நோக்கத்தை சிதைப்பவையாக உள்ளன.
கடன் தகவல் மையம் அமைக்கும் திட்டத்தை இந்தியாவில் அமல்படுத்த 1972ம் ஆண்டு முதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டாலும், 2000ம் ஆண்டில்தான் சிபில் அமைப்பு முழு வடிவத்திற்கு வந்தது. இந்த சிபில் நிறுவனத்தை முறைப்படுத்தும் நோக்கில் நாடாளுமன்றத்தில் 2004ம் ஆண்டில் விவாதம் நடந்தது.
வாடிக்கையாளர்களின் நலன்களைப்புறக்கணித்து, வங்கிகளின் நலன்களை மட்டுமே பாதுகாக்கும் சட்டமான, கடன் தகவல் நிறுவனங்கள் (ஒழுங்குபடுத்தும்) சட்டம், 2005 (The Credit Information Companies (Regulation) Act, 2005) மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தினார்.
அந்த விவாதத்தில் மிகச்சில உறுப்பினர்களே கலந்து கொண்டனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த எந்த ஒரு உறுப்பினரும் இந்த விவாதத்தில் கலந்துகொண்டதாக தெரியவில்லை.
இந்த சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு சுமார் 5 ஆண்டுகள் முன்பாகவே துவங்கப்பட்ட சிபில்(www.cibil.com) நிறுவனத்தில் இன்றைய நிலையில்,
டிரான்ஸ்யூனியன் இன்டர்நேஷனல் இன்க், டன் & பிராட்ஸ்ட்ரீட் தகவல் சேவை என்ற நிறுவனங்களின் தொழில் நுட்ப பங்கேற்புடன், ஸ்டான்டர்ட் சார்ட்டர்ட் பாங்க், ஐசிஐசிஐ(ICICI), ஹெச்டிஎஃப்சி(HDFC), ஹெச்எஸ்பிசி(HSBC), சிட்டி பாங்க், ஜிஈ(GE) போன்ற தனியார்/வெளிநாட்டு நிறுவனங்களும், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் பாங்க், பஞ்சாப் நேஷனல் பாங்க், யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா, சென்டிரல் பாங்க் ஆஃப் இந்தியா, பாங்க் ஆஃப் பரோடா போன்ற தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளும், சுந்தரம் ஃபைனான்ஸ் போன்ற வங்கியல்லாத தனியார் நிதி நிறுவனங்களும் பங்கு பெற்றுள்ளன.
நடைமுறை என்ன?
சிபில் அமைப்பில் உள்ள அனைத்து வங்கி மற்றும் வங்கியல்லாத நிதிநிறுவனங்களும் தங்கள் வாடிக்கையாளர்களைப் பற்றிய தகவல்களை இந்த தகவல் கிடங்கில் சேமிக்கின்றன. ஒரு வாடிக்கையாளர் எந்த ஒரு வங்கியிலோ அல்லது நிதிநிறுவனத்திலோ கடன் வாங்கிவிட்டு உரிய முறையில் திரும்ப செலுத்தாவிட்டால் அந்த விபரமும் சிபில் அமைப்பில் உறுப்பினராக உள்ள வங்கிகளுக்கு வழங்கப்படும்.
கடன் கொடுக்கும் வங்கிகள் வாடிக்கையாளரிடம் பெறும் அனைத்து தகவல்களும், பெயர், பிறந்த தேதி, அடையாளத்திற்காக வழங்கப்படும் வாக்காளர் அடையாள அட்டை – பாஸ்போர்ட் – ஓட்டுனர் உரிமம் – ரேஷன் கார்ட் – பான் கார்டு போன்றவற்றின் எண்களும் இந்த தகவல் கிடங்கில் சேமிக்கப்படுகிறது. பின் இந்த வாடிக்கையாளரின் நம்பகத்தன்மையும் ஒரு புள்ளிவிவரமாக பதிவு செய்யப்படுகிறது. ஒரு வாடிக்கையாளர் ஏதோ ஒரு நிறுவனத்தில் கடன் பெற்று திரும்ப செலுத்தாவிட்டால் அவரது பெயர், மோசமான வாடிக்கையாளர் பட்டியலில் வைக்கப்படுகிறது.
எந்த ஒரு நபருக்கும் புதிதாக கடன் வழங்கும் நிறுவனம், கடனுக்கான விண்ணப்பத்தை பெற்றவுடன் அந்த உத்தேச வாடிக்கையாளர் குறித்த தகவலை சிபில் அமைப்புக்கு தெரிவிக்க வேண்டும். அந்த வாடிக்கையாளர் வேறு ஏதேனும் நிறுவனத்தில் கடன் வாங்கி திரும்ப செலுத்தியிராவிட்டால் அவரது பெயர் மோசமான வாடிக்கையாளர் பட்டியலில் இருப்பது தெரியவரும். பிறகு அவர் வங்கிக்கடன் என்பதையே மறந்து விட வேண்டியதுதான்.
நியாயம்தானே! இதிலென்ன தவறு? என்ற கேள்வி எழலாம்.
விசாரணை இன்றியே தண்டனை!
வங்கிகள் நியாயமாக கொள்ளும் நிலையில்தான் இந்த நடவடிக்கையும் நியாயமாக அமையும். ஆனால் இந்தியாவில் இயங்கும் எந்த தனியார்/வெளிநாட்டு வங்கியும் நியாயமாக நடப்பது இல்லை. ரிசர்வ் வங்கியின் உத்தரவுகளை இவை பொருட்படுத்துவதே இல்லை.
குறிப்பாக, கடன் பெறும் வாடிக்கையாளரின் திரும்ப செலுத்தும் தன்மையை சோதித்தல், கணக்குகளை வெளிப்படையாக பராமரித்தல், வாடிக்கையாளரின் புகார்களை விசாரிக்க தனி அமைப்பை நிறுவுதல் ஆகிய முக்கிய கோட்பாடுகளை இதுவரை எந்த தனியார்/வெளிநாட்டு வங்கியும் நடைமுறைப்படுத்தியதாக தெரியவில்லை.
இந்த நிலையில் வங்கிக்கும், வாடிக்கையாளருக்கும் ஏற்படும் பிணக்குகளை விசாரிக்கவே ஆள் இல்லாத நிலையில் விசாரணை இன்றியே வாடிக்கையாளர் குற்றவாளியாக தீர்மானிக்கப்படுகிறார். அவரது தரப்பு விளக்கத்தை கேட்க யாரும் இல்லாத நிலையில் வழக்கின் தரப்பினரில் ஒருவரான வங்கியே நீதிபதியாகி தீர்ப்பும் வழங்கி தண்டித்து விடுகிறது.
வழக்கு தரப்பினரே நீதிபதியாகி, மற்றொரு தரப்பினரை விசாரிக்காமலே தீர்ப்பு அளிப்பது என்பது இயற்கை நீதிக்கு எதிரானது.
ஆனால் இந்த சட்ட விரோத செயலை, சட்டம் படித்த நிதியமைச்சர் ப.சிதம்பரம் முதல் அனைத்து அரசு தலைவர்களும் ஆசிர்வதித்து அனுமதிக்கின்றனர்.
ஏட்டு சுரைக்காய்கள்!
அதேபோல, கடன் தகவல் நிறுவனங்கள் (ஒழுங்குபடுத்தும்) சட்டம், 2005 (The Credit Information Companies (Regulation) Act, 2005) கீழும் ஒரு வாடிக்கையாளர், அவரது கடன் நம்பகத்தகவலை(Credit Worthiness) அவர் கடன்கோரும் வங்கிமூலம் பெறமுடியும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் எந்த வங்கியிலும் இதற்கான வசதி இருப்பதாக தெரியவில்லை. சிபில் ஒரு தனியார் அமைப்பு என்பதால் தகவல் அறியும் உரிமைச் சட்டம் அங்கே செல்லுபடியாகாது.
எனவே வங்கிகள் என்ன அநியாய வட்டி மற்றும் கட்டணங்கள் விதித்தாலும், எதிர் கேள்வி கேட்காமல் கட்டும் வாடிக்கையாளர் நல்ல வாடிக்கையாளராகவும், கேள்வி கேட்பவர்கள் மோசமான வாடிக்கையாளராகவும் சித்தரிக்கப்படுகின்றனர்.
ஒரு வாடிக்கையாளரைப்பற்றி தவறான தகவல் கொடுத்தால், பாதிக்கப்படும் வாடிக்கையாளருக்கு இழப்பீடு வழங்க செய்யும் விதத்திலும், கடன் தகவல் மையங்கள் தவறிழைத்தது உறுதியானால் ஒரு கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கவும் மேற்கூறிய சட்டத்தில் இடம் உள்ளது. ஆனால் வாடிக்கையாளர்களின் கடன் நம்பகத்தகவலை வங்கிகள் தவிர வேறு யாரும் பெற முடியாத நிலையில் இந்த சட்டம் வெறும் ஏட்டு சுரைக்காய்தான். சமையலுக்கு உதவாது.
கிரெடிட் கார்டு வணிக நெறிமுறைகள் குறித்து ரிசர்வ் வங்கி பிறப்பித்த உத்தரவுகள் நடைமுறைப்படுத்தப்படுகிறதா? என்பதைக்கூட கண்காணிக்காத ரிசர்வ் வங்கி, சிபில் அமைப்பை கட்டுப்படுத்தும் என்று நம்புவது ஒரு மூடநம்பிக்கையே.
நுகர்வோர் பாதுகாப்பு கருத்தியல் நிறைந்த வளர்ந்த நாடுகளில் கடன் தகவல் மையங்கள் சிறந்த முறையில் பணியாற்றலாம். ஆனால் நுகர்வோரின் நலனில் மயிரளவுகூட அக்கறை செலுத்தாத வணிக நிறுவனங்களும், அரசு அமைப்புகளும் கோலோச்சும் இந்தியாவில், நுகர்வோர் விழிப்புணர்வு மிகக்குறைந்த அளவே உள்ள இந்தியாவில் - சிபில் போன்ற கடன் தகவல் மையங்கள் மக்களை சுரண்டும் அமைப்புகளாகவே விளங்குகின்றன.
என்ன செய்யப் போகிறோம்?
மூளையை மழுங்கடிக்கும் திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், கவர்ச்சி அரசியல், பரபரப்பூட்டும் ஊடகங்கள் இவற்றின் ஆதிக்கத்தை தகர்த்து, உணர்வு பூர்வமான அணுகுமுறையை விடுத்து; அறிவுபூர்வமான விமர்சன அணுகுமுறையை மேற்கொள்வதே இந்த சமூக அநீதிகளை – அவலங்களை மாற்றும் வழியாகும்.
-சுந்தரராஜன்
(sundararajan@lawyer.com)