Sunday, October 5, 2014

உச்சநீதிமன்ற கிளை தமிழகத்தில் அமையுமா?

 “நீதிமன்ற பணியானது மருத்துவ பணிகளைப் போல அத்தியாவசிய பணியாகும். எனவே, மருத்துவமனைகளைப் போல நீதிமன்றமும் ஆண்டு முழுவதும், 365 நாட்களும் இயங்க வேண்டும்” என கடந்த மே மாதத்தில், புதிதாக பொறுப்பேற்றுள்ள உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆ.எம். லோதா கருத்து தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக அவர், நீதிமன்றங்களில் வழக்குகள் தீர்க்கப்படாமல், பெருமளவில் தேங்கி கிடக்கிறது, எனவே, விடுமுறைகள் தொடர்பாக கருத்து கேட்டு, நாட்டின் அனைத்து உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கும், வழக்குரைஞர் குழுமங்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த ஒரு மாத காலமாக நீதித்துறையிலும், ஊடகங்களிலும் இது பெரும் விவாதமாக மாறியுள்ளது. இந்த கருத்துக்கு பல்வேறு மாநிலத்தின் வழக்குரைஞர் குழுமங்கள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளதுடன், இது நடைமுறைக்கு சாத்தியமில்லாதது என்றும் கூறியுள்ளன. தலைமை நீதிபதியின் இந்த கருத்துக்கு, தங்களது எதிர்ப்பை பதிவு செய்யும் விதமாக தமிழ்நாட்டின் அனைத்து வழக்கறிஞர் சங்கங்களும் கடந்த ஜூன் மாதம் 13ம் தேதி நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டன. 

ஆண்டு முழுவதும் வேலை நாளாக அறிவித்தால் வழக்குகள் தேக்கம் ஏற்படாது என்றும், நீதிமன்ற விடுமுறைகள் மட்டுமே, வழக்குகள் தேக்கத்திற்கு காரணம் என்றும் கருதினால் அது ஒரு தவறான கருத்தாக மட்டுமே இருக்க முடியும். அதற்கு பல்வேறு அடிப்படையான காரணங்கள் உள்ளன. அதில் பிரதானமானது, இன்றளவிலும் உச்சநீதிமன்றத்தின் கிளைகள் அமைக்கப்படாததும், பல்வேறு நீதிமன்றங்களில் காலியாக உள்ள நீதிபதிகளின் பணியிடங்கள் நீண்டகாலமாக நிரப்பப்படாததுமே ஆகும்.  

“இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, குடியரசு தலைவரின் ஒப்புதலைப் பெற்று, இந்திய உச்சநீதிமன்றத்தை டில்லியிலோ, அல்லது வேறு பகுதியிலோ அல்லது பகுதிகளிலோ அவ்வப்போது அமைக்கலாம்” என்று இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் சரத்து 130 கூறுகிறது.   
சுதந்திரமடைந்த போது  இந்திய மக்கள் தொகை சுமார் 30 கோடி. தற்போதைய மக்கள் தொகை 130 கோடி. எதிர்காலத்தில் மக்கள் தொகை மேலும் உயரும். கல்வி, அறிவியல் வளர்ச்சி உள்ளிட்டவைகளின் காரணமாக மக்களிடையே விழிப்புணர்வு அதிகரிக்கும். அதனைத் தொடர்ந்து தங்களின் உரிமைகளை நிலைநாட்டிட நீதிமன்றங்களில் வழக்குகள் அதிகமாக தாக்கல் செய்யப்படும். அந்த சமயத்தில், வழக்கிடைதாரர்களுக்கு விரைவாக நீதி கிடைக்க வேண்டும் என்னும் நோக்கில்தான், நாட்டின் பல பகுதிகளில் உச்சநீதிமன்றத்தின் கிளை அமைப்பது தொடர்பான இந்த பிரிவு உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்.

உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மேல் முறையீடு வழக்குகளில், வட மாநிலங்களான டில்லியிலிருந்து 12%,  பஞ்சாப் மற்றும் ஹரியானாவிலிருந்து 8.9%,  உத்திரகாண்டிலிருந்து 7%,  இமாச்சல பிரதேசத்திலிருந்து 4.3%ம் தாக்கல் செய்யப்படுகிறது.. ஆனால் தென்னிந்தியாவின் கேரளாவிலிருந்து 2.5%,  ஆந்திர பிரதேசத்திலிருந்து 2.8%,  தமிழ்நாட்டிலிருந்து 1.1%ம்  மட்டுமே தாக்கல் செய்யப்படுகிறது என ஆய்வுகள் கூறுகின்றன. ஆகவே, சென்னையில் உச்சநீதிமன்ற கிளை அமைக்கப்பட்ட வேண்டும் என்பது வழக்குரைஞர்கள் மற்றும் பொதுமக்களின் நெடுநாளைய கோரிக்கையாகும்.

இருப்பினும், சுதந்திரத்திற்குப் பிறகு 67 ஆண்டுகளைக் கடந்த பின்னரும், துவக்கத்தில் உருவாக்கியபடி, டில்லியில் மட்டுமே உச்சநீதிமன்றம் அமைந்துள்ளது. நியாயமான தேவைகளும், தவிர்க்கவும், தட்டிக் கழிக்கவும் முடியா பல்வேறு காரணங்களும்   தொடர்ந்தாலும் டில்லி தவிர்த்து நாட்டின் வேறு எந்த பகுதியிலும் இன்று வரையிலும் இந்திய உச்சநீதிமன்றத்தின் கிளை அமைக்கப்படவில்லை.

இன்றைய உலகமயமாக்கல் சூழலில், உலகிலுள்ள அனைத்தும் மக்களை தேடி வந்து கொண்டிருக்கிறது அல்லது மக்களுக்கு அருகாமையிலேயே கிடைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் விதிவிலக்காக, இங்கு நியாயமாக கிடைக்க வேண்டிய நீதிக்காக, குடிமக்கள் பல ஆயிரக்கணக்கான மைல்கள் தூரம் பயணம் செய்ய வேண்டிய நிர்பந்தம் நிலவுகிறது. வழக்கு கட்டணம் மட்டுமின்றி, போக்குவரத்து செலவு, தங்குமிடம், உணவு, பயண காலம் என பெரும் பொருட்செலவை சந்திக்க வேண்டியதுள்ளது.  இதன் காரணமாக வழக்கிடைதாரருக்கு, தனது அடிப்படை உரிமையை நிலைநிறுத்த, மிகுந்த பொருட்செலவும், கால விரயமும் ஆகிறது.

இப்படியாக, பணம் மற்றும் பொருளாதார வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே நீதி கிடைக்கும் எனும் மோசமான நிலைதான் இங்கு நிலவுகிறது. இதன் காரணமாகவே, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் வழக்குகளில், தென் இந்தியாவிலிருந்து தாக்கல் செய்யபடும் வழக்குகளின் எண்ணிக்கையானது சொற்ப அளவாக உள்ளது. உச்சநீதிமன்ற கிளைகள் அமைக்கப்பட்டால் இந்த நிலையில் நிச்சயமாக மாற்றம் ஏற்படும்.

ஒவ்வொரு உயர்நீதிமன்றமும், தனது அதிகார வரம்பிற்குற்பட்ட பகுதிகளில்  தேவைகேற்ப ஒன்றோ அல்லது அதற்கு கூடுதலான கிளைகளையோ உருவாக்கிக் கொள்ளலாம் என இந்திய அரசியலமைப்பு சாசனத்தில் கூறப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, தமிழ்நாடு, மகராஷ்டிரம், கொல்கத்தா, கர்நாடகம், மத்திய பிரதேசம், இராஜஸ்தான், உத்திர பிரதேசம், அருணாச்சல பிரதேசம், மிசோரம், நாகலாந்து ஆகிய மாநிலங்களில், அங்கு எழுந்த தேவைகளின் காரணமாக உயர்நீதிமன்ற  கிளைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக அந்த பகுதிகளை சார்ந்த குடிமக்கள் அதற்கு முன்பாக நீதிமன்றத்தை அணுகுவது தொடர்பாக சந்தித்து வந்த பல்வேறு இன்னல்களிலிருந்து விடுபட்டிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் தெற்கு மற்றும் மத்தியில் அமைந்துள்ள 14 மாவட்டங்களுக்காக  கடந்த 2004ம் ஆண்டில், உருவாக்கப்பட்ட, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில், தற்போது ஆண்டுக்கு சராசரியாக, நீதிப்பேராணை மனுக்கள் மட்டும் 20,000க்கும் அதிகமாக தாக்கல் செய்யப்படுகின்றன. தமிழகத்தில் சென்னையில் மட்டுமே உயர்நீதிமன்றம் இருந்தபோது, இந்த 14 மாவட்டங்களிலிருந்து இவ்வளவு வழக்குகள் தாக்கல் செய்யப்படவில்லை. அப்போது தாக்கல் செய்யப்படும் வழக்குகளைக் காட்டிலும் தற்போது அதிகமாக தாக்கல் செய்யப்பட்டாலும் சராசரியாக இவ்வளவு வழக்குகள் தாக்கல் செய்யப்படவில்லை. மேலும் மதுரை கிளை வந்த பிறகு, வழக்கிடைதாரர்களுக்கு, போக்குவரத்து செலவு, பயண நேரம் போன்றவை வெகுவாகக் குறைந்துள்ளது. தங்கும் செலவு அறவே இல்லாமல் போய்விட்டது. நெருக்கடியான சென்னையில் ஒரு சிறிய அளவு நெருக்கடி இது போன்ற வழக்கிடைதாரர்கள் மற்றும் அவர்களுடன் வருபவர்களால் குறைந்துள்ளது. இந்த சான்றானது, உச்சநீதிமன்ற கிளை அமைக்கப்பட்டால் அப்படியே பொருந்தும்.

27 மே 1949 அன்று, அரசியல் சாசன உருவாக்கத்தின் போது நடந்த ஒரு விவாதத்தில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு, “டில்லி தவிர்த்த பிற இடங்களில் உச்சநீதிமன்றத்தின் கிளையை உருவாக்கலாம் என, இந்திய அரசியல் சாசனத்தின் தந்தையான டாக்டர். அம்பேத்கர் பதில் கூறியுள்ளார்.

கடந்த 1998ம் ஆண்டில், மத்திய பிரதேசம் மாநிலம் இந்தோர் பகுதியை சேர்ந்த  எஸ்.பி. ஆனந்த் மற்றும் வழக்கறிஞர். எம்.எல். பாப்னா ஆகியோர் இந்தோர் உயர்நீதிமன்ற கிளையில், இந்திய உச்சநீதிமன்றத்தின் கிளையினை இந்தோர் பகுதியில் அமைத்திடக் கோரி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உத்தரவிட கோரி வழக்கு தாக்கல் செய்தார்கள். அந்த வழக்கினை ஏற்றுக்கொண்ட  நீதிமன்றம், இந்தோரில் உச்சநீதிமன்ற கிளை அமைக்கவும், அதற்கான ஒப்புதலையும், நிதியையும் நடுவணரசு வழங்கிட வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவுக்கு எதிராக நடுவணரசு மேல்முறையீடு செய்தது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கும், குடியரசு தலைவருக்கும் யாரும் உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று கூறி அந்த உத்தரவை, உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய ஆயம் தள்ளுபடி செய்தது.

ஆனால், கடந்த பிப்ருவரி மாதம் புதுச்சேரியைச் சேர்ந்த  வழக்கறிஞர் வசந்த குமார் என்பவர், இந்திய உச்சநீதிமன்றத்தின் கிளையினை நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைக்கவேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவுக்கு பதில் அளிக்க நடுவணரசுக்கு அறிவிப்பு அனுப்பட்டுள்ளது.

எனவே, இதுநாள் வரையிலும் பயன்படுத்தப்படாத, அரசியலமைப்பு சாசனத்தின் சரத்து 130க்கு உயிர் கொடுக்கும் விதமாக, இந்திய உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, விரைவாக குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப்பெற்று, சுமார் ஆறு மாநிலங்களுக்கு ஒரு கிளை என்ற அடிப்படையில்,  நாட்டின் வடக்கு (டில்லி), கிழக்கு (கொல்கத்தா), மேற்கு (மகராஷ்டிரம்), தெற்கு (தமிழ்நாடு) மற்றும் மத்திய பகுதி (மத்தியபிரதேசம்) களில், உச்சநீதிமன்ற கிளைகள் அமையும் விதமாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

மேலும், இந்திய உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 31, தற்போது அதில் காலியிடம் 5 ஆகும். மொத்தமுள்ள 24  உயர்நீதிமன்றங்களில் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை 906, கடந்த 01.04.14ம் தேதி நிலவரப்படி, அதில் காலியிடம் 257 ஆகும். குறிப்பாக தமிழகத்தில் மட்டும் 14 காலியிடம் நிரப்பப்படாமல் உள்ளது.  நாடு முழுவதிலும் உள்ள மாவட்ட நீதின்றங்களில் நீதிபதிகளின் காலியிடம் 3300. நீண்ட காலமாக நிரப்பப்படாமலுள்ள இந்த காலி இடங்களை நிரப்பினாலேயே நிலுவையிலுள்ள பெரும்பாலான வழக்குகள் தீர்வு செய்யப்பட்டுவிடும். காலியிடங்கள் தொடர்ந்து நீடிப்பதால் பணியுள்ள நீதிபதிகளுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டு, இயல்பான பணிகளிலும் தொய்வு ஏற்படுகிறது.


ஆகவே, சென்னை உட்பட நாட்டின் பல பகுதிகளில் விரைவில் உச்சநீதிமன்ற கிளை அமைத்தல், உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில்  காலியாக உள்ள இடங்களில் உடனடியாக நீதிபதிகளை நியமித்தல், இனி காலியாகும் இடங்களுக்கு முன்கூட்டியே நீதிபதிகளை தேர்வு செய்தல் உள்ளிட்ட பல்வேறு ஆக்கபூர்வமான செயல்பாடுகளின் மூலமாக நிலுவையிலுள்ள வழக்குகளை பெருமளவில் முடிவுக்கு கொண்டு வரலாம். 


-ஐ. இராபர்ட் சந்திரகுமார்