நடவடிக்கை எடுக்க வேண்டிய வழக்குகளில் நடவடிக்கை எடுக்காமல்
இருப்பதும் காவல் துறையின் வரையறைக்குள் வராத வழக்குகளில் தேவையில்லாமல் நடவடிக்கை
எடுப்பதும் அல்லது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதும் காவல் துறையினர் மீது தொடர்ச்சியாக இருந்துவரும் குற்றச்சாட்டுகள் ஆகும்.
வழக்குகளை பதிவுசெய்வதில் சில எளிய முறைகளை பின்பற்றுதல், காவல்
துறையினருக்கு உள்ள கடமைகள், நீதிமன்றங்களுக்கு உள்ள அதிகாரங்கள் ஆகியவற்றை தெரிந்து
கொண்டு உரிய முறையில் அணுகுதல் ஆகியவை மேற்கண்ட பிரச்சனைகளில் இருந்து பாதிக்கபட்டோர்
விடுபட உதவும்.
முதலில் ஒரு குற்றச்சாட்டின் பல்வேறு தன்மைகளை நாம் புரிந்துகொள்ள
வேண்டும். பொதுவாக குற்றங்களை உரிமையியல் வழக்குகள்
(Civil Cases), குற்றவியல் வழக்குகள் (Criminal Cases) என இருவகையாக பிரிக்கலாம். இதில் உரிமையியல் சார்ந்த வழக்குகளில் காவல் துறையினர்
தன்னிச்சையாக செயல்பட எந்தவித சட்ட உரிமையும்
இல்லை. பொதுவாக இரண்டு தனிப்பட்ட தரப்பினருக்கு
இடைப்பட்ட சொத்து மற்றும் அனுபவத்தின் மீதுள்ள உரிமைகள் மற்றும் கடமைகள் தொடர்பான பிரச்சனைகளை
உரிமையியல் வழக்குகள் என்கிறோம். இந்த உரிமையியல் பிரச்சனைகள் கூட அடிதடி தகராறுகள்,
ஆவணங்களை போலியாக உருவாக்குதல், அத்துமீறி நுழைதல், நம்பிக்கை மோசடி ஆகியவற்றோடு வரும்போது
அந்த செயல்களை பொறுத்தவரை குற்றவியல் தன்மை பெறுகின்றன.
குற்றவியல் வழக்குகளை பொறுத்தவரை அவை இரண்டு தனிப்பட்ட மனிதர்களுக்கு இடையே ஏற்பட்டாலும்
சமுதாயத்திற்கெதிராக ஏற்பட்டாலும் அவை அரசுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களாக
கருதப்படுவதுடன் காவல் துறையினரின் விசாரணை, கைது போன்றவற்றிற்கும் வழிவகுக்கின்றன. பொதுவாக அடிதடி, திருட்டு, கொலை, கொள்ளை, ஏமாற்றுதல்,
பெண்கள் மீதான வன்முறைகள், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், பொதுச் சொத்தை சேதப்படுத்துதல்
போன்றவை குற்றவியல் வழக்குகளாக கருதப்படுகின்றன.
குற்றவியல் வழக்குகளை இரண்டு முக்கியப் பிரிவுகளாக பிரிக்கலாம்.
அவை நீதிமன்றத்தின் உத்தரவோ அனுமதியோ இன்றி காவல் துறையினர் தானாக விசாரிக்க
அதிகாரமுள்ள வழக்குகள் (Cognizable Offences), நீதிமன்றத்தின் அனுமதியின்றி
விசாரணை செய்ய காவல் துறைக்கு அதிகாரமில்லாத வழக்கு(Non Cognizable
Offences)களாகும்.
அடிதடி, திருட்டு, கொலை, கொள்ளை, வெட்டுகுத்து, பெண்கள் மீதான வன்முறைகள், பொது அமைதிக்கு பங்கம் விளைத்தல்
பொதுச்சொத்துகளை சேதப்படுத்துதல், நாட்டின் இறையாண்மைக்கு எதிராக நடத்தல் போன்றவை காவல்
துறையினர்
தானாக விரைந்து செயல்பட வேண்டிய வழக்குகளாக இருப்பதால் அவை
நீதிமன்றத்தின் அனுமதியின்றி காவல் துறையினர் விசாரிக்க அதிகாரமுள்ள
வழக்குகளாக (Cognizable Offences) கருதப்படுகின்றன.
ஒருவர்
இரண்டு திருமணங்கள் செய்துகொண்டார் என்ற குற்றச்சாட்டு, தன்மீது
அவதூறு பரப்பிவிட்டார்
என்ற குற்றச்சாட்டு, அஜாக்கிரதையாக காயம் ஏற்படுத்திவிட்டார் என்ற குற்றச்சாட்டு, பொய்யான ஆவணம் தயாரித்துவிட்டார் போன்ற குற்றச்சாட்டுகளில்
காவல் துறையினரின் நடவடிக்கை தேவைப்படினும்
காவல் துறையினர்
மிக அவசரமாக செயல்பட வேண்டிய அவசியமில்லாததாலும் அவற்றில் உரிமையியல்
விசயங்கள் சற்றுக்கூடுதலாக கலந்திருப்பதாலும் அவை நீதிமன்றத்தின் அனுமதியின்றி விசாரணை
செய்ய காவல் துறைக்கு அதிகாரமில்லாத வழக்குகளாக (Non Cognizable Offences)கருதப்படுகின்றன.
ஆனால் நீதிமன்றத்தின் அனுமதியின்றி விசாரணை செய்ய காவல் துறைக்கு
அதிகாரமில்லாத வழக்குகளாக இருந்தாலும் ஒரே ஒரு வழக்கு நீதிமன்றத்தின் அனுமதியின்றி
காவல் துறையினர்
விசாரிக்க அதிகாரமுள்ள வழக்காக இருப்பினும் அவ்வழக்கு முழுமையுமே
நீதிமன்றத்தின் அனுமதியின்றி காவல் துறையினர் விசாரிக்க
அதிகாரமுள்ள வழக்காக கருதப்படும்.
எவையெல்லாம் நீதிமன்றத்தின் அனுமதியின்றி காவல் துறையினர் விசாரிக்க அதிகாரமுள்ள வழக்குகள் எவையெல்லாம் நீதிமன்றத்தின்
அனுமதியின்றி விசாரணை செய்ய காவல் துறைக்கு அதிகாரமில்லாத வழக்குகள் என்று இந்திய தண்டனைச் சட்டத்தில் ஒவ்வொறு தண்டனைக்கு
அருகிலும் கொடுக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தின் அனுமதியின்றி காவல் துறையினர் விசாரிக்க அதிகாரமுள்ள வழக்குகள் குறித்து யாரேனும் காவல் துறையினருக்கு
தகவல் தந்தாலோ அல்லது காவல் துறையினரின் நேரடி கவனத்திற்கு வந்தாலோ அதன் மீது விசாரணை
நடத்துவது காவல் துறையினரின் கட்டாயமான கடமையாகும். இதிலிருந்து தவறும் காவல்துறையினர்
மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க காவல் துறையின் நிலையாணையின் (Police
Standing Order) படியும் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புகளின்படியும்
வழியுள்ளது.
எனவே நீதிமன்றத்தின் அனுமதியின்றி காவல் துறையினர் விசாரிக்க அதிகாரமுள்ள வழக்குகள் குறித்து தகவல் தெரிந்தால்
குற்றவியல் நடைமுறைச்சட்டத்தின் பிரிவு 154படி முதல் தகவல் அறிக்கை (First Information Report) பதிவுசெய்து விசாரிக்க
வேண்டியது காவல் துறையினரின் கட்டாய கடமையாகும்.
அவ்வாறு காவல் துறையினர் நீதிமன்றத்தின் அனுமதியின்றி காவல் துறையினர் விசாரிக்க அதிகாரமுள்ள வழக்குகளில் முதல் தகவலறிக்கையை காவல்
அதிகாரிகள் பதிவு செய்ய மறுத்தால் நடை முறை ரீதியில் எளிமையாக அதே புகாரை பதிவுத் தபாலில்
அதே காவல் நிலையத்திற்கு அனுப்பி ஆதாரத்தை வைத்துக்கொண்டால் காவல் துறையினர் தானாக வழக்கை பதிவுசெய்யவும், பாதிக்கப்பட்ட
புகார்தாரர் பின்னாளில் நீதிமன்றத்தை அணுகவும் உதவியாக இருக்கும். மேலும் உடல் காயமடைந்த
யாரேனும் ஒருவரின் புகாரை காவல் துறையினர் பதிவுசெய்ய மறுத்தால் ஏதேனும் மருத்துவமனையில் அதுவும் இயன்றவரை
அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக காயத்திற்கான காரணத்தைச் சொல்லி சேர்ந்துகொண்டால்
அங்கிருந்தே காவல் நிலையத்திற்கு தானாக தகவல் செல்லவும் அந்த மருத்துவமனைப்பதிவை புகார் பதிவிற்கு பயன்படுத்தவும் வாய்ப்புண்டு.
குற்றவியல் நடைமுறைச்சட்டப்பிரிவு 154 (3) ன் கீழ் மாவட்ட கண்காணிப்பாளருக்கோ, பெருநகரங்களில்
காவல் துறை ஆணையாளருக்கோ பதிவு தபாலில் அனுப்பலாம். அவ்வாறு கிடைக்கப்பெற்ற புகாரை
அத்தகைய அதிகாரி
தானாக விசாரிக்கலாம் அல்லது தகுதியுடைய ஒரு காவல்துறை அதிகாரியை
விசாரணை நடத்தவும் உத்தரவிடலாம்.
அவ்வாறும் புகாரானது பதிவு செய்யப்படாவிட்டால் குற்றவியல் நடைமுறைச்
சட்டப்பிரிவு 156(3)
ன் கீழ் அக்குற்றச்சாட்டு நடைபெற்ற எல்லையில் உள்ள நீதித்துறை
நடுவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கலாம். அப்புகாரில் உண்மை இருப்பதாக
நீதித்துறை நடுவர் திருப்தி அடைந்தால், அவ்வழக்கை முதல் தகவலறிக்கை பதிவு செய்து விசாரிக்குமாறு
சம்மந்தப்பட்ட காவல் துறையினருக்கு உத்தரவிடலாம். அவ்வாறு உத்தரவிடப்பட்டால் காவல்
துறையினர் வழக்கை பதிவு செய்து விசாரிப்பதை தவிர வேறு வழியில்லை. மேலும் வழக்கை பதிவுசெய்து விசாரிக்க ஆணையிட்ட நடுவர் நீதிமன்றம் வழக்கின் விசாரணையையும் மேற்பார்வையிடலாம். இப்பிரிவின்கீழ் நீதித்துறை
நடுவரின் அதிகாரத்தை சக்கிரியா வாசு எதிர் உ.பி அரசு, டிவைன் ரெட்ரிட் எதிர் கேரள அரசு
ஆகிய வழக்குகள் விரிவுபடுத்தியுள்ளன.
மேலும் இப்பிரிவின்
கீழ் ஒரு புகார்தாரர்
நீதிமன்றத்தை அணுகும்போது குற்றம் சாட்டப்படுபவரை (Accused) நீதிமன்றம் விசாரிக்க வேண்டியதில்லையென்றும் அவ்வாறு நீதிமன்றத்தை அணுக குற்றம்
சாட்டப்படுபவருக்கு எந்த உரிமையும் இல்லையென்றும் நீதிமன்றத் தீர்ப்புகள் கூறுகின்றன.
இருப்பினும் எந்திரகதியில் அதிகாரவரம்பில்லாமல் அவ்வாறு குற்றவியல்
நடைமுறைச்சட்டப்பிரிவு 156
(3) ன் கீழ் ஆணையிடப்பட்டால் அவ்வாணையையும் அவ்வாணையினால் பதிவுசெய்யப்பட்ட
முதல் தகவல் அறிக்கையையும் குற்றவியல் சட்டப்பிரிவு 482 ன் கீழ்
அவ்வாணையால் பாதிக்கப்பட்டவர் கேள்விக்குள்ளாக்கி நீக்கலாம் என குருதத் பிரபு மற்றும்
பிறர் எதிர்
எம். எஸ். கிருஸ்ணாபத் மற்றும் பிறர் வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றத்தின் வழக்கு குறிப்பிடுகின்றது.
எனினும் இப்பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவரின் உரிமை குறித்து
தெளிவான தீர்ப்புகள் இருப்பதாக தெரியவில்லை. குற்றச்சாட்டை பதிவுசெய்வதில் உள்ள மற்றொரு
முக்கியமான பிரிவுதான் தனிப்புகார் (Private Complaint) ஆகும். குற்றவியல் நடைமுறைச்சட்டப்
பிரிவு 200ன் கீழ் தொடுக்கப்படும் இப்புகார், பிரிவு 190(1)
ன் கீழாக புலன்கொள்ளப்பட்டு முதலில் புகார்தாரர் சத்தியபிரமானத்தின் மூலம் விசாரிக்கப்படுகிறார். அவ்வாறு விசாரிக்கப்படும் போது தேவைப்படின் சாட்சிகள் யாரேனும் இருந்தால் அவர்களையும்
நீதித்துறை நடுவர்
விசாரிக்கலாம். தேவைப்படின்
பிரிவு 202ன் கீழ் காவல் துறை அதிகாரிகளையோ அல்லது தகுதியுள்ள பிறரையோ கூட விசாரிக்கலாம். அவ்வாறு விசாரித்தபின் புகாரை விசாரிப்பதற்கு சாராம்சம்
இல்லையென கருதினால் குற்றவியல் நடைமுறைச்சட்டப்பிரிவு 203ன் கீழ்
வழக்கை தள்ளுபடி செய்யலாம். மாறாக வழக்கை விசாரிக்க
சாராம்சம் இருக்குமென கருதினால் குற்றம் சாட்டப்படுவருக்கு குற்றவியல் நடைமுறைச்சட்டப்பிரிவு
204ன் கீழ் அழைப்பாணை அனுப்பி வழக்கை தொடர்ந்து விசாரிக்கலாம்.
இதைப்போலவே
நீதிமன்றத்தின் அனுமதியின்றி விசாரணை செய்ய காவல் துறைக்கு அதிகாரமில்லாத வழக்குகளில்
காவல் துறையினரை விசாரிக்க நீதித்துறை நடுவருக்கு குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு
155(3) ன் கீழ் அதிகாரமுள்ளது. அவ்வாறு நீதித்துறை
நடுவரால் உத்தரவிடப்பட்டால் அவ்வழக்கை காவல் துறையினர் நீதிமன்றத்தின் அனுமதியின்றி காவல் துறையினர் விசாரிக்க அதிகாரமுள்ள வழக்குபோல் விசாரிக்கலாம். ஆனால் கைது
செய்வது மட்டும் நீதிமன்ற ஆணையின்றி செய்ய இயலாது.
மேற்கண்ட முறைகளைவிட சற்று எளியதும் சற்று கூடுதல் ஆற்றலுடையுதுமான
வழிதான் நீதிமன்றத்தின் அனுமதியின்றி காவல் துறையினர் விசாரிக்க அதிகாரமுள்ள வழக்குகளுக்கு உயர்நீதிமன்றத்தின் தன்னிச்சை
அதிகார பிரிவான குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 482 ஆகும். இப்பிரிவின் கீழ் பாதிக்கப்பட்ட நபர் தனது புகாரை காவல்துறையினர் பதிவு செய்யவேண்டுமென்று கூறி நேரடியாக உயர்நீதிமன்றத்தை அணுகி
தீர்வு பெறலாம். பிரிவு 482
குற்றவியல் வழக்குகளில் உயர்நீதிமன்றத்திற்கு உள்ள தன்னிச்சை
அதிகாரத்தை வழங்குவதாலும் உயர்நீதிமன்றமே புகாரை பதிவு செய்ய ஆணையிடும்போது அதிலிருந்து
தவறினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போன்றவற்றை சந்திக்க வேண்டி வரும் என்பதாலும் இப்பிரிவின்
முக்கியத்துவம் புகார்களை பதிய வைப்பதில் சற்று கூடுதலாகும்.
-க. திலகேஸ்வரன்
(thilakjurist@gmail.com)