Sunday, October 5, 2014

உச்சநீதிமன்ற கிளை தமிழகத்தில் அமையுமா?

 “நீதிமன்ற பணியானது மருத்துவ பணிகளைப் போல அத்தியாவசிய பணியாகும். எனவே, மருத்துவமனைகளைப் போல நீதிமன்றமும் ஆண்டு முழுவதும், 365 நாட்களும் இயங்க வேண்டும்” என கடந்த மே மாதத்தில், புதிதாக பொறுப்பேற்றுள்ள உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆ.எம். லோதா கருத்து தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக அவர், நீதிமன்றங்களில் வழக்குகள் தீர்க்கப்படாமல், பெருமளவில் தேங்கி கிடக்கிறது, எனவே, விடுமுறைகள் தொடர்பாக கருத்து கேட்டு, நாட்டின் அனைத்து உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கும், வழக்குரைஞர் குழுமங்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த ஒரு மாத காலமாக நீதித்துறையிலும், ஊடகங்களிலும் இது பெரும் விவாதமாக மாறியுள்ளது. இந்த கருத்துக்கு பல்வேறு மாநிலத்தின் வழக்குரைஞர் குழுமங்கள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளதுடன், இது நடைமுறைக்கு சாத்தியமில்லாதது என்றும் கூறியுள்ளன. தலைமை நீதிபதியின் இந்த கருத்துக்கு, தங்களது எதிர்ப்பை பதிவு செய்யும் விதமாக தமிழ்நாட்டின் அனைத்து வழக்கறிஞர் சங்கங்களும் கடந்த ஜூன் மாதம் 13ம் தேதி நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டன. 

ஆண்டு முழுவதும் வேலை நாளாக அறிவித்தால் வழக்குகள் தேக்கம் ஏற்படாது என்றும், நீதிமன்ற விடுமுறைகள் மட்டுமே, வழக்குகள் தேக்கத்திற்கு காரணம் என்றும் கருதினால் அது ஒரு தவறான கருத்தாக மட்டுமே இருக்க முடியும். அதற்கு பல்வேறு அடிப்படையான காரணங்கள் உள்ளன. அதில் பிரதானமானது, இன்றளவிலும் உச்சநீதிமன்றத்தின் கிளைகள் அமைக்கப்படாததும், பல்வேறு நீதிமன்றங்களில் காலியாக உள்ள நீதிபதிகளின் பணியிடங்கள் நீண்டகாலமாக நிரப்பப்படாததுமே ஆகும்.  

“இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, குடியரசு தலைவரின் ஒப்புதலைப் பெற்று, இந்திய உச்சநீதிமன்றத்தை டில்லியிலோ, அல்லது வேறு பகுதியிலோ அல்லது பகுதிகளிலோ அவ்வப்போது அமைக்கலாம்” என்று இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் சரத்து 130 கூறுகிறது.   
சுதந்திரமடைந்த போது  இந்திய மக்கள் தொகை சுமார் 30 கோடி. தற்போதைய மக்கள் தொகை 130 கோடி. எதிர்காலத்தில் மக்கள் தொகை மேலும் உயரும். கல்வி, அறிவியல் வளர்ச்சி உள்ளிட்டவைகளின் காரணமாக மக்களிடையே விழிப்புணர்வு அதிகரிக்கும். அதனைத் தொடர்ந்து தங்களின் உரிமைகளை நிலைநாட்டிட நீதிமன்றங்களில் வழக்குகள் அதிகமாக தாக்கல் செய்யப்படும். அந்த சமயத்தில், வழக்கிடைதாரர்களுக்கு விரைவாக நீதி கிடைக்க வேண்டும் என்னும் நோக்கில்தான், நாட்டின் பல பகுதிகளில் உச்சநீதிமன்றத்தின் கிளை அமைப்பது தொடர்பான இந்த பிரிவு உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்.

உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மேல் முறையீடு வழக்குகளில், வட மாநிலங்களான டில்லியிலிருந்து 12%,  பஞ்சாப் மற்றும் ஹரியானாவிலிருந்து 8.9%,  உத்திரகாண்டிலிருந்து 7%,  இமாச்சல பிரதேசத்திலிருந்து 4.3%ம் தாக்கல் செய்யப்படுகிறது.. ஆனால் தென்னிந்தியாவின் கேரளாவிலிருந்து 2.5%,  ஆந்திர பிரதேசத்திலிருந்து 2.8%,  தமிழ்நாட்டிலிருந்து 1.1%ம்  மட்டுமே தாக்கல் செய்யப்படுகிறது என ஆய்வுகள் கூறுகின்றன. ஆகவே, சென்னையில் உச்சநீதிமன்ற கிளை அமைக்கப்பட்ட வேண்டும் என்பது வழக்குரைஞர்கள் மற்றும் பொதுமக்களின் நெடுநாளைய கோரிக்கையாகும்.

இருப்பினும், சுதந்திரத்திற்குப் பிறகு 67 ஆண்டுகளைக் கடந்த பின்னரும், துவக்கத்தில் உருவாக்கியபடி, டில்லியில் மட்டுமே உச்சநீதிமன்றம் அமைந்துள்ளது. நியாயமான தேவைகளும், தவிர்க்கவும், தட்டிக் கழிக்கவும் முடியா பல்வேறு காரணங்களும்   தொடர்ந்தாலும் டில்லி தவிர்த்து நாட்டின் வேறு எந்த பகுதியிலும் இன்று வரையிலும் இந்திய உச்சநீதிமன்றத்தின் கிளை அமைக்கப்படவில்லை.

இன்றைய உலகமயமாக்கல் சூழலில், உலகிலுள்ள அனைத்தும் மக்களை தேடி வந்து கொண்டிருக்கிறது அல்லது மக்களுக்கு அருகாமையிலேயே கிடைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் விதிவிலக்காக, இங்கு நியாயமாக கிடைக்க வேண்டிய நீதிக்காக, குடிமக்கள் பல ஆயிரக்கணக்கான மைல்கள் தூரம் பயணம் செய்ய வேண்டிய நிர்பந்தம் நிலவுகிறது. வழக்கு கட்டணம் மட்டுமின்றி, போக்குவரத்து செலவு, தங்குமிடம், உணவு, பயண காலம் என பெரும் பொருட்செலவை சந்திக்க வேண்டியதுள்ளது.  இதன் காரணமாக வழக்கிடைதாரருக்கு, தனது அடிப்படை உரிமையை நிலைநிறுத்த, மிகுந்த பொருட்செலவும், கால விரயமும் ஆகிறது.

இப்படியாக, பணம் மற்றும் பொருளாதார வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே நீதி கிடைக்கும் எனும் மோசமான நிலைதான் இங்கு நிலவுகிறது. இதன் காரணமாகவே, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் வழக்குகளில், தென் இந்தியாவிலிருந்து தாக்கல் செய்யபடும் வழக்குகளின் எண்ணிக்கையானது சொற்ப அளவாக உள்ளது. உச்சநீதிமன்ற கிளைகள் அமைக்கப்பட்டால் இந்த நிலையில் நிச்சயமாக மாற்றம் ஏற்படும்.

ஒவ்வொரு உயர்நீதிமன்றமும், தனது அதிகார வரம்பிற்குற்பட்ட பகுதிகளில்  தேவைகேற்ப ஒன்றோ அல்லது அதற்கு கூடுதலான கிளைகளையோ உருவாக்கிக் கொள்ளலாம் என இந்திய அரசியலமைப்பு சாசனத்தில் கூறப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, தமிழ்நாடு, மகராஷ்டிரம், கொல்கத்தா, கர்நாடகம், மத்திய பிரதேசம், இராஜஸ்தான், உத்திர பிரதேசம், அருணாச்சல பிரதேசம், மிசோரம், நாகலாந்து ஆகிய மாநிலங்களில், அங்கு எழுந்த தேவைகளின் காரணமாக உயர்நீதிமன்ற  கிளைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக அந்த பகுதிகளை சார்ந்த குடிமக்கள் அதற்கு முன்பாக நீதிமன்றத்தை அணுகுவது தொடர்பாக சந்தித்து வந்த பல்வேறு இன்னல்களிலிருந்து விடுபட்டிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் தெற்கு மற்றும் மத்தியில் அமைந்துள்ள 14 மாவட்டங்களுக்காக  கடந்த 2004ம் ஆண்டில், உருவாக்கப்பட்ட, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில், தற்போது ஆண்டுக்கு சராசரியாக, நீதிப்பேராணை மனுக்கள் மட்டும் 20,000க்கும் அதிகமாக தாக்கல் செய்யப்படுகின்றன. தமிழகத்தில் சென்னையில் மட்டுமே உயர்நீதிமன்றம் இருந்தபோது, இந்த 14 மாவட்டங்களிலிருந்து இவ்வளவு வழக்குகள் தாக்கல் செய்யப்படவில்லை. அப்போது தாக்கல் செய்யப்படும் வழக்குகளைக் காட்டிலும் தற்போது அதிகமாக தாக்கல் செய்யப்பட்டாலும் சராசரியாக இவ்வளவு வழக்குகள் தாக்கல் செய்யப்படவில்லை. மேலும் மதுரை கிளை வந்த பிறகு, வழக்கிடைதாரர்களுக்கு, போக்குவரத்து செலவு, பயண நேரம் போன்றவை வெகுவாகக் குறைந்துள்ளது. தங்கும் செலவு அறவே இல்லாமல் போய்விட்டது. நெருக்கடியான சென்னையில் ஒரு சிறிய அளவு நெருக்கடி இது போன்ற வழக்கிடைதாரர்கள் மற்றும் அவர்களுடன் வருபவர்களால் குறைந்துள்ளது. இந்த சான்றானது, உச்சநீதிமன்ற கிளை அமைக்கப்பட்டால் அப்படியே பொருந்தும்.

27 மே 1949 அன்று, அரசியல் சாசன உருவாக்கத்தின் போது நடந்த ஒரு விவாதத்தில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு, “டில்லி தவிர்த்த பிற இடங்களில் உச்சநீதிமன்றத்தின் கிளையை உருவாக்கலாம் என, இந்திய அரசியல் சாசனத்தின் தந்தையான டாக்டர். அம்பேத்கர் பதில் கூறியுள்ளார்.

கடந்த 1998ம் ஆண்டில், மத்திய பிரதேசம் மாநிலம் இந்தோர் பகுதியை சேர்ந்த  எஸ்.பி. ஆனந்த் மற்றும் வழக்கறிஞர். எம்.எல். பாப்னா ஆகியோர் இந்தோர் உயர்நீதிமன்ற கிளையில், இந்திய உச்சநீதிமன்றத்தின் கிளையினை இந்தோர் பகுதியில் அமைத்திடக் கோரி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உத்தரவிட கோரி வழக்கு தாக்கல் செய்தார்கள். அந்த வழக்கினை ஏற்றுக்கொண்ட  நீதிமன்றம், இந்தோரில் உச்சநீதிமன்ற கிளை அமைக்கவும், அதற்கான ஒப்புதலையும், நிதியையும் நடுவணரசு வழங்கிட வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவுக்கு எதிராக நடுவணரசு மேல்முறையீடு செய்தது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கும், குடியரசு தலைவருக்கும் யாரும் உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று கூறி அந்த உத்தரவை, உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய ஆயம் தள்ளுபடி செய்தது.

ஆனால், கடந்த பிப்ருவரி மாதம் புதுச்சேரியைச் சேர்ந்த  வழக்கறிஞர் வசந்த குமார் என்பவர், இந்திய உச்சநீதிமன்றத்தின் கிளையினை நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைக்கவேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவுக்கு பதில் அளிக்க நடுவணரசுக்கு அறிவிப்பு அனுப்பட்டுள்ளது.

எனவே, இதுநாள் வரையிலும் பயன்படுத்தப்படாத, அரசியலமைப்பு சாசனத்தின் சரத்து 130க்கு உயிர் கொடுக்கும் விதமாக, இந்திய உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, விரைவாக குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப்பெற்று, சுமார் ஆறு மாநிலங்களுக்கு ஒரு கிளை என்ற அடிப்படையில்,  நாட்டின் வடக்கு (டில்லி), கிழக்கு (கொல்கத்தா), மேற்கு (மகராஷ்டிரம்), தெற்கு (தமிழ்நாடு) மற்றும் மத்திய பகுதி (மத்தியபிரதேசம்) களில், உச்சநீதிமன்ற கிளைகள் அமையும் விதமாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

மேலும், இந்திய உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 31, தற்போது அதில் காலியிடம் 5 ஆகும். மொத்தமுள்ள 24  உயர்நீதிமன்றங்களில் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை 906, கடந்த 01.04.14ம் தேதி நிலவரப்படி, அதில் காலியிடம் 257 ஆகும். குறிப்பாக தமிழகத்தில் மட்டும் 14 காலியிடம் நிரப்பப்படாமல் உள்ளது.  நாடு முழுவதிலும் உள்ள மாவட்ட நீதின்றங்களில் நீதிபதிகளின் காலியிடம் 3300. நீண்ட காலமாக நிரப்பப்படாமலுள்ள இந்த காலி இடங்களை நிரப்பினாலேயே நிலுவையிலுள்ள பெரும்பாலான வழக்குகள் தீர்வு செய்யப்பட்டுவிடும். காலியிடங்கள் தொடர்ந்து நீடிப்பதால் பணியுள்ள நீதிபதிகளுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டு, இயல்பான பணிகளிலும் தொய்வு ஏற்படுகிறது.


ஆகவே, சென்னை உட்பட நாட்டின் பல பகுதிகளில் விரைவில் உச்சநீதிமன்ற கிளை அமைத்தல், உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில்  காலியாக உள்ள இடங்களில் உடனடியாக நீதிபதிகளை நியமித்தல், இனி காலியாகும் இடங்களுக்கு முன்கூட்டியே நீதிபதிகளை தேர்வு செய்தல் உள்ளிட்ட பல்வேறு ஆக்கபூர்வமான செயல்பாடுகளின் மூலமாக நிலுவையிலுள்ள வழக்குகளை பெருமளவில் முடிவுக்கு கொண்டு வரலாம். 


-ஐ. இராபர்ட் சந்திரகுமார்

Friday, June 13, 2014

ஒரு கழிப்பறையின் கதை!

பொதுச்சுகாதாரத்தை பேணுவதில் கழிப்பறையின் முக்கியத்துவம் குறித்து உலக அளவில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஏழை நாடுகளின் குடிமக்களுக்கு இலவச கழிப்பறை வசதிகளை செய்து தருவதில் ஐக்கிய நாடுகள் அவை ஆர்வம் காட்டி வருகிறது. இந்தியாவிலோ பாதுகாப்பான கழிப்பறை இல்லாததால் தாழ்த்தப்பட்ட ஏழைப் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாவதாக செய்திகள் கூறுகின்றன.
  
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இருக்கும் ஒரு கழிவறையின் கதையை பார்ப்போம்.


அதற்கு முன் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கங்கள் குறித்து ஒரு சிறு அறிமுகம். சென்னை உயர்நீதிமன்றத்தில் இரண்டு வழக்கறிஞர் சங்கங்கள் உள்ளன. இதில் சாமானிய வழக்கறிஞர்களுக்கானது, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் (Madras High Court Advocates Association). சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக தொழில்புரியும் யாரும் இந்த சங்கத்தில் உறுப்பினராகலாம்.

இதே உயர்நீதிமன்றத்தில் உள்ள மற்றொரு வழக்கறிஞர் சங்கம், மெட்ராஸ் பார் அசோஸியேஷன். சுமார் 150 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் இந்த சங்கம் மிகவும் முக்கியமான சங்கமாகும். இந்த சங்கத்தில் உறுப்பினராவது அவ்வளவு எளிதல்ல. இந்த சங்கத்தில் சுமார் 1000 உறுப்பினர்களே உள்ளனர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். சாமானியர்கள் யாரும் இந்த சங்கத்தில் உறுப்பினராவது குறித்து யோசித்துக்கூட பார்க்க முடியாது. அவ்வளவு கடினமான விதிமுறைகள் இருக்கும்.

சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் தனது 150வது ஆண்டுவிழாவை கொண்டாடியது. இந்த 150 வருட காலத்தில், பெரும்பாலான காலம் இந்தியா ஆங்கிலேயர்களிடம் அடிமையாக இருந்தது. அப்போது சுதந்திரப்போராட்ட வீரர்களுக்கு எதிராகத்தான் இந்த நீதிமன்றம் செயல்பட்டிருக்க வேண்டும். இதையும் சேர்த்துத்தான் சென்னை உயர்நீதிமன்றம் கொண்டாடியது. இதே மனோபாவத்துடன்தான் மெட்ராஸ் அசோஸியேஷனும் தனது 150வது ஆண்டு விழாவை கொண்டாடியது.


மெட்ராஸ் பார் அசோஷியனின் உறுப்பினர்களுக்கும் சமூக உணர்வுகளுக்கும் எந்தத் தொடர்பும் இருப்பதாக தெரியவில்லை. நாட்டில் என்ன நடந்தாலும் அதற்கு எந்த எதிர்வினையும் ஆற்றாமல் தமது தொழிலை மட்டுமே பார்ப்பவர்களாகவே இவர்கள் இருப்பார்கள். மக்களுக்கு எதிராக போர் தொடுக்கும் அரசு அமைப்புகளுக்கும், அதற்கு பின் புலமாக இருக்கும் வர்த்தக்கழகங்களுக்கும் தேவையான சட்ட உதவிகளை இந்த மெட்ராஸ் பார் அசோஸியேஷனின் உறுப்பினர்களே செய்வார்கள். சமூகநீதியில் இடஒதுக்கீடின் முக்கியத்துவம் போன்ற பல அம்சங்களுக்கு எதிரான கருத்தியல் கொண்டவர்களாகவே இந்த சங்கத்தின் உறுப்பினர்களும், அவர்களுடைய ஜூனியர்களும்கூட இருப்பார்கள்.

தமிழ்நாட்டிலிருந்து உயர்நீதிமன்ற நீதிபதியாகும் பலர்  இந்த சங்கத்தின் உறுப்பினர்களாகவே இருப்பார்கள். இதோடு வேறு மாநிலங்களிலிருந்து வரும் நீதிபதிகளும் இந்த மெட்ராஸ் பார் அசோஸியேஷனின் விசேஷ கவனிப்புக்கு ஆளாக்கப்படுவார்கள். உயர்நீதிமன்ற நீதிபதி பதவிக்கான தேர்வுக்கு அறிவியல் ரீதியான வழிமுறையே இல்லாதநிலையில், மர்மமான வழியில் நீதிபதி பதவி பெறுபவர்கள், நீதிபதிகளை உருவாக்கும் ஒரு சங்கத்திற்கு நன்றிக்கடன் பெற்றிருப்பதில் வியப்பேதுமில்லை.

இந்த சங்கத்தின் அலுவலகம் உள்ளிட்ட அனைத்தும் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திற்குள்தான் உள்ளது. ஆனாலும் இந்த சங்கத்தின் ஆளுகைக்குள் இருக்கும் இடங்கள் அனைத்தும் ஆலயங்களின் கருவறை போன்றது. இந்தியாவின் பிற இடங்களுக்கு பொருந்தும் சட்டங்கள், இந்த இடத்திற்கு பொருந்தாது.

இந்த சங்கத்தின் உறுப்பினர்களுக்காக தனியார் கார் பார்க்கிங் உள்ளிட்ட வசதிகள் இருக்கும். இதை இந்த சங்கத்தில் உறுப்பினராக தகுதி இல்லாத வழக்கறிஞர்கள் பயன்படுத்த முடியாது. இத்தகைய பெருமை வாய்ந்த மெட்ராஸ் பார் அசோஸியேஷன் அலுவகத்தின் பின்புறத்தில், அதாவது உயர்நீதிமன்றத்தின் 6வது நீதிமன்ற அறையின் அருகில் ஒரு கழிப்பறை உள்ளது. இது கழிப்பறை என்பதற்கான எந்த அடையாளமோ, அறிவிப்போ இருக்காது. நீதிமன்ற அலுவலகம் போன்ற அமைப்புள்ள இந்த கழிப்பறையை மெட்ராஸ் பார் அசோஸியேஷனின் பெண் உறுப்பினர்கள் மட்டுமே பயன்படுத்தி வந்தனர்.

இந்த கழிப்பறையை பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் லோகநாயகி என்பவர் முயற்சித்தபோது அங்கிருந்த உதவியாளர், “இந்த கழிப்பறை மெட்ராஸ் பார் அசோஸியேஷனுக்கு சொந்தமானது. எனவே அதன் உறுப்பினர்கள் மட்டுமே இந்த கழிவறையை பயன்படுத்தமுடியும்” என்று கூறி வழக்கறிஞர் லோகநாயகிக்கு அனுமதி மறுத்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியால் அதிர்ச்சியடைந்த வழக்கறிஞர் லோகநாயகி, உடனடியாக சென்னை உயர்நீதிமன்ற பதிவாளரிடம் புகார் செய்துள்ளார். எழுத்து மூலமாக அளிக்கப்பட்ட அந்தப் புகாரில், சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள கழிப்பறையில் தீண்டாமை கடைபிடிக்கப்படுவதாகவும், அரசியல் சட்டக் கோட்பாடுகளை காப்பாற்ற வேண்டிய நீதிமன்றத்தின் வளாகத்திலேயே நடைபெறும் இந்த சமூக அநீதிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்தப்புகாரில் வலியுறுத்தப்பட்டது. இந்தப் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து நடந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியளிக்கக்கூடியது! ஆம், அந்த கழிவறை பூட்டப்பட்டது.

சட்டம் படித்த ஒரு பெண் வழக்கறிஞருக்கு ஏற்பட்ட இந்த அவலத்தை அகற்ற வழக்கறிஞர் மு. ராதாகிருஷ்ணன் முன் வந்தார். உடனடியாக ஒரு பொதுநல வழக்கு (W.P. No. 15144/2014) பதிவு செய்யப்பட்டு, பல முயற்சிகளுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை (13-06-2014) அன்று சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வில் இந்த வழக்கு முதல் வழக்காக விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி பொறுப்பை வகிக்கும் நீதியரசர் அக்னிஹோத்ரி எடுத்த எடுப்பிலேயே மிகுந்த கோபத்துடன், “இந்த வழக்கை டிஸ்மிஸ் செய்யப் போகிறேன், மேலும் அபராதமும் விதிக்கப்போகிறேன்!” என்றார். இதற்கு சளைக்காத வழக்கறிஞர் மு. ராதாகிருஷ்ணன், முதலில் தனது தரப்பு வாதத்தை எடுத்துரைக்க அனுமதிக்குமாறு வேண்டி, தன் வாதத்தை தொடங்கினார். இடையில் குறுக்கிட்ட நீதிபதி, இந்த வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டார்.

இந்த வழக்கின் போக்கும், தீர்வும் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் நீதித்துறையிலும், வழக்கறிஞர் தொழிலும் இருக்கும் சமூக ஏற்றத்தாழ்வுகளை பிரதிபலிக்கும் ஒரு உதாரணமாகவே இந்த சம்பவத்தை பார்க்கலாம்.

நீதித்துறையில் உள்ளவர்களுக்கு சமூகம் குறித்தும், சமூக சமத்துவம் குறித்தும் குறிப்பாக அரசியல் சட்டம் குறித்தும் உள்ள அறிவை, அக்கறையை, பார்வையை இந்த சம்பவம் உணர்த்துகிறது.

இந்தச் செய்தி ஊடகங்களிலும்கூட இருட்டடிப்பு செய்யப்படலாம். பொறுத்திருந்து பார்ப்போம், என்ன நடக்கிறது என்பதை...!






Tuesday, May 13, 2014

மூன்றாம் பாலினம்

நிறம், இனம், பால், பிறப்பு, மொழி போன்றவைகளை முன்னரே தீர்மானித்து எவரும் இப்புவியில் பிறப்பதில்லை. அதுபோலவே, தான் ஒரு திருநங்கையாகப் பிறக்க வேண்டும் என எவரும் விரும்பி, பிறப்பதில்லை. எப்படி பெண், ஆண் பிறப்போ அதுபோலத்தான் திருநங்கைபிறப்பும். அதற்கு எவரும் எவ்விதத்திலும் பொறுப்பாக முடியாது. ஆனால் இங்கே, தன் சக ஆண் பெண்ணைப் போல எந்த உரிமையையும் திருநங்கைகளால் அனுபவிக்க இயலாத துர்பாக்கிய நிலையே நீடித்து வருகிறது.


மொழி, இனம், நிறம், பிறப்பு, பால், சமயம், சாதி, போன்றவைகளின் அடிப்படையில் எவ்வித பாகுபடுத்தலும் கூடாதுஎன தனிச்சரத்தை இந்திய அரசியலைப்புச் சட்டம் இயற்றப்பட்டு அது கடந்த 64 ஆண்டுகள் பூர்த்தியான பிறகும் இன்றளவும் முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை என்பதற்கு நம் கண்முன்னர் நிற்கும் காட்சியே, சமூகத்தில் திருநங்கைகள் குறித்த ஒதுக்கலாகும்.

சமூகத்தில் ஒரு பெண் கேலிக்குள்ளாக்கப்படும் போது சிலரேனும் உடனே தட்டிக் கேட்கும் நிலை காணப்படும் சூழலில் திருநங்கைகள் பொது இடங்களில் வைத்து பாலியல் சீண்டல்களுக்கே உள்ளாக்கப்பட்டாலும் எவரும் அதை பொருட்படுத்துவதில்லை. அது ஒரு சாதாரண நிகழ்வாகவே பெரும்பாலும் பார்க்கப்படுகிறது. அதேபோல, விலங்குகளுக்குக் கூட இங்கே அளித்து வரும் காப்பீட்டுத் திட்டங்கள் திருநங்கைகளுக்கு வழங்கப்படுதற்கு எண்ணற்றத் தடைகள் உள்ளன.

ஆனால், திருநங்கைகள் தற்போது மெல்ல மெல்ல, ஊடகம், திரைத்துறை, அரசியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தங்கள் திறமைகளை வெளிபடுத்த துவங்கிவிட்டனர். இருப்பினும் அவர்களுக்கு உரிய அங்கிகாரம் கிடைக்காமல் இருந்து வரும் நிலையில் தங்களை மூன்றாம் பாலினத்தவர் என்று சட்ட ரீதியாக அங்கீகரிக்க வேண்டும் என்பது திருநங்கைகள் மற்றும் சமூக ஆர்வலகளின் நீண்டநாள் கோரிக்கையாகும். 

இந்நிலையில், தேசிய சட்டப் பணிகள் மையம் மற்றும் உரிமை ஆர்வலர் லக்‌ஷ்மி நாராயண் திரிபாதி மற்றும் திருநங்கைகள் சிலர், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுக்களில், “நாங்கள் இரு பாலினத்திலும் சேராததால் எங்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு போன்றவை மறுக்கப்படுகிறது. பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு சமூகத்தால் ஒதுக்கி வைக்கப்படுகிறோம். ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட அரசின் அங்கீகாரம் வழங்கப்படுவதில்லை. காவல்துறையினரால்   காரணமில்லாமல் துன்புறுத்தப்படுகிறோம். எனவே, அரசியல் சட்டப்படி எங்களுக்கும் வாழ உரிமை உண்டு என்பதால், எங்களை மூன்றாம் பாலினமாக அங்கீகரிக்க வேண்டும்என்று கோரியிருந்தனர். 

அந்த பொதுநல மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், ஏ.கே.சிக்ரி ஆகியோர் அடங்கிய குழுமம் கடந்த ஏப்பிரல் மாதம்   ம் நாள், “அரசியல் சட்டப்படி வாழும் உரிமை அனைத்து குடிமக்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. பாலின அடிப்படையில் பாகுபாடு காட்டுவதையும், உரிமைகள் மறுக்கப்படுவதையும் ஏற்க முடியாது. இந்தியாவில், பழங்காலம் தொட்டே இரு பாலினத்திலும் சேராதவர்கள் இருந்து வந்துள்ளனர். அவர்கள் ஹிஜ்ரா, அரவாணி, திருநங்கைபோன்ற பல பெயர்களில் அழைக்கப்பட்டு வருகின்றனர். சமூகத்தில் முந்தைய காலங்களில் திருநங்கைகள் மரியாதையுடன் நடத்தப்பட்டனர். ஆனால் தற்போது அவர்கள் பாரபட்சமாக நடத்தப்படுவதுடன், பல்வேறு இன்னல்களையும் சந்தித்து வருகின்றனர்.  ஒருவர் மருத்துவ ரீதியாக தன் பாலினத்தை மாற்றிக் கொண்டால், மாற்றப்பட்ட பாலினத்தில் இருக்கும் உரிமை அவருக்கு உண்டு. அவ்விதம் மாறியவர்களும் இந்த நாட்டின் குடிமக்கள்தான். எனவே, ‘மூன்றாம் பாலினம்என்ற பிரிவை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கிறோம்.

திருநங்கைகளை சமூகத்தில் பின்தங்கியவர்களாகக் கருதி, உரிய சலுகைகள், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் அவர்களுக்கு இதர பிற்படுத்தபட்டோர் பிரிவில் சேர்த்து உரிய இட ஒதுக்கீடு போன்றவைகளையும், வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட் மற்றும் ஓட்டுநர் உரிமம் உள்பட அனைத்துச் சலுகைகளையும் நடுவணரசும், மாநில அரசுகளும்  வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மூன்றாம் பாலினத்தவரின் பிரச்சினைகளை கவனிக்க நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளதாக நடுவணரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த குழுவானது  அவர்களது பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் மூன்று மாதங்களுக்குள் அறிக்கையை அளிக்க வேண்டும். அவற்றை நடுவணரசும், மாநில அரசுகளும் ஆறு மாதங்களுக்குள் அமல்படுத்த வேண்டும். மேலும், மருத்துவரீதியாக அவர்களை பாலின சோதனைக்கு உட்படுத்துவது சட்ட விரோதம் என்றும், தன்பாலின சேர்க்கையாளர்கள், இருபாலின சேர்க்கையாளர்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது என்றும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்கதொரு  தீர்ப்பினை வழங்கியுள்ளது. 

ஒரு குறிப்பிட்ட நாளில் திடீரென ஒரு ஆணோ, பெண்ணோ திருநங்கையாக உருமாற்றம் அடைந்து விடுவதில்லை. உடல்ரீதியாக ஆணாக, பெண்ணாக இருந்துகொண்டு மனரீதியாக, உணர்வுரீதியாக எதிர்பாலின உணர்ச்சிகளை உணர்பவர்களே திருநங்கைகள். தங்கள் பருவவயதை அடையும்போது இதர ஆண், பெண்ணிடமிருந்து தான் வேறுபட்டுள்ளோம் என்றும், எதிர்பாலினத்திற்குரிய உணர்ச்சிகளைக் கொண்டுள்ளோம் என்றும் உணர்கிறார்கள். ஆணின்/பெண்ணின் உடலில் சிறைபடுத்தப்பட்டு பெண்ணாக/ஆணாக உணர்பவர்கள் திருநங்கைகள் என்று பொதுவாக கூறப்படுகிறது. ஆனால் திருநங்கைகள் சிலரும், பிறரும் இது திருநங்கை என்பதற்கான சரியான விளக்கமல்ல என்று கூறுகின்றனர். திருநங்கைகள் பெரும்பாலும் ஆணாகவே பிறப்பதன் காரணமாக அவர்களுக்கு இயற்கையாகவே கருப்பை கிடையாது. அதன் காரணமாய் அவர்களால் மறு உற்பத்தி செய்ய இயலாமல் போகிறது.

பெரும்பாலான திருநங்கைகள் ஆணாகப்பிறந்து பெண்ணாக உணர்பவர்களே. குடும்ப உறுப்பினர்களால் கண்டறியப்பட்டு, திருநங்கையாகப் பிறந்துவிட்ட ஒரே காரணத்திற்காக பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வீட்டைவிட்டு வெளியேற்றப்படுகின்றனர் அல்லது தாங்கள் எதிர்பாலின உணர்ச்சிகளை உணர்வதை அறிந்தவுடன் வீட்டில் சொல்ல பயந்து வீட்டைவிட்டு வெளியேறுகின்றனர். இதன்காரணமாக திருநங்கைகள் அனைவராலும் தான் பிறந்த குடும்பத்துடனும், உள்ளூரிலும் வாழ இயலாமல் வெளியூருக்குச் சென்று வாழ வேண்டிய நிர்பந்தச் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். புனே, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களுர், கோழிக்கோடு உள்ளிட்ட நாட்டின் பல்வேறு நகரங்களுக்குச் சென்று அங்குள்ள திருநங்கைகளுடன் சேர்ந்து வசித்து வருகின்றனர்.

 பொதுத்தளங்களில் தொழில் மறுப்பு, உழைப்பு மறுப்பு காரணமாக பிச்சையெடுத்தல், பாலியல் தொழிலில் ஈடுபடல், உணவுவிடுதிகள், திருமண நிகழ்வுகளில் நடனமாடுதல் போன்ற தொழில்களில் ஈடுபட்டு வாழ்க்கை நடத்தி வருவதனுடன் அதன் மூலமான வருவாயினைக் கொண்டு ஆணாக தொடர்ந்து வாழ்ந்திட விருப்பமில்லாமல் தாயம்மாஎனும் சடங்கின் வாயிலாகவும், அங்கீகாரம் இல்லாத பாலின மாற்று அறுவை சிகிச்சை மூலமாகவும் பெண்ணாக மாறி தங்கள் விருப்பம் போல வாழத் துவங்குகின்றனர். திருநங்கைகள் பலர் ஒன்றிணைந்து ஜமாத்என்ற பெயரில் பெரும் குழுவாக நாடு முழுவதும் பரவலாக வாழ்ந்து வருகின்றனர்.

ஆண், பெண்ணாக உருமாற்றம் அடைவது இந்தியப் புராணங்களில் தொடர்ந்து வரும் நிகழ்வுகளில் ஒன்றாகும். நாரதர் ஒரு குளத்தில் குளித்துவிட்டு கரையேறும் போது பெண்ணாக மாறினார் என்றும், கானகத்தில் உள்ள ஒரு விருட்சக மரத்தின் நிழலில் உறங்கி எழுந்த இளவரசன் பெண்ணாக மாறிவிட்டான் என்றும், மகாபாரதக் கதைகளில் கூறப்பட்டுள்ளது. கிருஷ்ணர் மோகினி வடிவம் கொண்டது ஐயப்பன் கதையிலும் இடம்பெற்றுள்ளது. அர்ச்சுனன் கிருஷ்ணருடன் ஒரு முறையாவது பாலுறவு கொள்ளவேண்டும் எனும் நோக்கில் 'அர்ச்சுனி' என்ற பெயரில் உருமாற்றம் கொண்டான் என்கிறது பத்மபுராணம். பீஷ்மரை யுத்தத்தில் கொள்ளும் 'சிகண்டி' என்பவர் ஒரு திருநங்கைதான். அதுபோலவே வனவாசத்தில் அர்ச்சுனன் 'பிருகன்னளை' என்ற பெயரில் திருநங்கையாக வாழ்ந்ததாகவே கூறப்பட்டுள்ளது.

இந்தியாவின் பெரும்பகுதியில் ஆட்சிபுரிந்த கில்ஜி வம்சத்தைச் சேர்ந்த அரசரான அலாவுதீன் கில்ஜி (1296–1316)-ன் ஆட்சிக்காலத்தில் டில்லியில் முக்கியப்பதவிகள் வகித்த அனைவரும் திருநங்கைகளே. கில்ஜியின் அந்தப்புரத்துப் பெண்களாக இருந்தவர்களில் பெரும்பாலனோர் திருநங்கைகளாகத்தான் இருந்திருக்கிறார்கள். அடிமையாக இருந்து பின்னர் அலாவுதின் கில்ஜியால் 1000 தினார் விலைக்கு வாங்கப்பட்டு பின்னாளில் அவரது படைத்தளபதியான மாலிக்கபூர், அடிமைவம்சத்தை நிறுவிய பால்பனின் ஆட்சியில் முதல்வராகப் பொறுப்பு வகித்த இமாதுதீன் ரேயான், கில்ஜி வம்சத்தைச் சேர்ந்த அரசரான குதுப்தீன் முபாரக்கின் பிரியத்திற்குரிய அடிமையும், ஆட்சியில் முக்கிய பொறுப்பும் வகித்த குஷ்ருகான், சுல்தான் பெரோஸ் துக்ளக்கிற்கு பின்னர் ஆட்சிக்கு வந்த சுல்த்தான் முகமது ஆட்சியில் முக்கியப்பொறுப்பு வகித்த கருப்பினத்தைச் சேர்ந்த க்வாஜா ஜெகான் மாலிக் சர்வார் என்பவரும் திருநங்கையே என்பதும் வரலாற்றின் வாயிலாக அறியவருகிறது.

 பாலியல் சிறுபான்மையினரான திருநங்கைகள் குறித்து கிறித்தவர்களின் புனித நூலான வேதாகமத்தில் 'அன்னகர்' என்றும் குறிப்பிடப்படுகின்றனர். இசுலாம் சமூகத்தில் பிறந்து பின்னர் வரலாற்றில் வெற்றியாளர்களாய் திகழ்ந்த மாலிக்காபூர், குஸ்ருகான், ஜலாவுதீன்கான் போன்றோர் திருநங்கைகளே. முகலாயர் வம்சத்தினரின் ஆட்சிக்காலத்தில் (1526-1665) அந்தப்புர காவலர்களாக திருநங்கைகளே நியமிக்கப்பட்டுள்ளனர். ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான 'சீவகசிந்தாமணி'யிலும் வாத்ஸ்யான‌ரின் 'காமசூத்திரத்திலும்' திருநங்கைகள் தொடர்பான செய்திகள் இடம்பெற்றுள்ளன.

புராணக்கதையான மகாபாரதத்தில் யுத்தம் துவங்கியபோது பாண்டவர்கள் தங்களின் வெற்றிக்காக ஒரு சுத்தவீரனை பலி கொடுக்க வேண்டி அர்ச்சுனனுக்கும், நாகவம்சத்தைச் சேர்ந்த உலுபி என்ற பெண்ணுக்கும் பிறந்த திருநங்கையைத் தேர்வு செய்தபோது அவர் தன் உயிரை மாய்த்துக்கொள்ளும் முன்பாக இவ்வுலக இன்பங்கள் அனைத்தையும் அனுபவித்துவிட விரும்பியபோது, அவர் திருநங்கை என்பதால் அவருக்கு எவரும் பெண் கொடுக்க முன்வராத சூழலில் கிருஷ்ணர் பெண் உருவம் எடுத்து அவரை மணக்கிறார். மறுநாள் திருநங்கை களப்பலி கொடுக்கப்பட்டதும் பெண் உருவிலிருந்த கிருஷ்ணர் தாலி அறுக்கிறார் என்ற புராணக் கதையின் நிகழ்வுதான் அரவாணத் திருவிழாவின் மையமாகும்.

பாலின உணர்ச்சியானது ஆணிலிருந்து பெண்ணுக்கு எவ்வாறு வேறுபடுகிறதோ அதே போலவே திருநங்கைகளுடைய பாலின உணர்ச்சி வேறுபட்டது. இதன் காரணமாக திருநங்கைகள் ஆண்/பெண்ணைவிட குறைவானவர்கள் என்று எவரும் கருதி விடமுடியாது. இந்திய தண்டனை சட்டம் பிரிவு 377 திருநங்கைகளுடனான மற்றும் திருநங்கைகளுக்கு இடையேயான புணர்ச்சியானது இயற்கைக்கு முரணான புணர்ச்சியாக, தண்டனைக்குரிய குற்றமாகவும் காண்கிறது. இதற்கு முரணாக டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கிய சிறப்பு வாய்ந்த தீர்ப்பு பிறகு உச்சநீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. அந்த தீர்ப்பினை   சீராய்வு செய்ய வேண்டி தாக்கல் செய்யப்பட மனு தற்போது நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், 1989ஆம் ஆண்டு பிறந்து, பெண்கள் பள்ளியில் படித்த நங்கை என்பவர் பெண்கள் பிரிவில் காவல்துறையில் தேர்ச்சி பெற்றார். அவருக்கு 2011 ஆம் ஆண்டு காவலர் பணி வழங்கப்பட்டது. அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய அதிகாரிகள், அவர் பெண்ணல்ல, திருநங்கை என்று கூறி பணியிலிருந்து நீக்கியுள்ளனர். இந்த முடிவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நங்கை வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், இது முற்றிலும் சட்டத்திற்கு புறம்பானது என்று தெரிவித்தனர். பாலினம் பற்றி குறிப்பிடும் போது அவர் தன்னை பெண் என்று குறிப்பிட்டுள்ளார். அவரது பிறப்பு சான்றிதழிலும் பெண் என்றே கூறப்பட்டுள்ளது. எனவே, அவரை  மீண்டும் வேலையில் தொடர அனுமதிக்குமாறு  நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். திருநங்கைகளை மூன்றாம் பாலினமாக அங்கீகரித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்து மூன்று தினங்களுக்குப் பிறகு, ஏப்ரல் மாதம் 18 ம் நாள் இத்தீர்ப்பு பகரப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் காரணமாக இனி இது போன்ற நிகழ்வுகள் ஏற்படாது என்ற சூழல் தற்போது நிலவுகிறது.

துரதிருஷ்டவசமாக திருநங்கைகள் அவர்களது உரிமைகளை பெறுவதற்கான சட்டங்கள் நமது நாட்டில் இன்னும் இயற்றப்படாமல் உள்ளன. நேபாளம், பாகிஸ்தான் உள்பட பல்வேறு நாடுகளில் அவர்களின் உரிமைகள் அங்கீகரிக்கப்பட்டு, திருநங்கைகள் பாதுகாக்கப்படுகின்றனர். பன்னாட்டு அமைப்புகளில் இந்தியாவும் அங்கம் வகிக்கிறது. ஆகையால் சர்வதேச நாடுகளில் திருநங்கைகளுக்கு அளிக்கப்படும் உரிமைகள் இந்தியாவிலும் பின்பற்றப்பட வேண்டியது அவசியமாகிறது.


திருநங்கைகளை மூன்றாம் பாலினமாக சட்ட, சமூக ரீதியாக அங்கீகரித்தல், அயல்நாடுகளில் பாலின மாற்று அறுவைசிகிச்சைக்கு வாய்ப்புகள் உள்ளதுபோல இங்கும் வாய்ப்புகள், தொழில் நுட்ப வசதிகள் ஏற்படுத்தப்படல், பெயர், மதம் மாற்றுவதற்கு சட்டப்படியான அங்கீகாரம் இருப்பது போல பாலினம் மாற்றுவதற்கும் சட்ட அங்கீகாரம் அளித்தல் என்பது போன்ற திருநங்கைகள் மேம்பாடு தொடர்பான செயல்பாடுகளுக்கு அடிப்படையான தனி சட்டத்தினை நடுவணரசும், மாநில அரசுகளும் விரைவில் இயற்றி அது தொடர்பான பணிகளை   முன்னெடுத்தலின் மூலமாக மட்டுமே, திருநங்கைகள் வாழ்வு மேம்படும்.

-இ. இ. இராபர்ட் சந்திரகுமார்

Thursday, April 17, 2014

முதல் தகவல் அறிக்கை (F.I.R.) பதிவு - சட்டமும் நடைமுறையும்...

நடவடிக்கை எடுக்க வேண்டிய வழக்குகளில் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதும் காவல் துறையின் வரையறைக்குள் வராத வழக்குகளில் தேவையில்லாமல் நடவடிக்கை எடுப்பதும் அல்லது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதும் காவல் துறையினர் மீது தொடர்ச்சியாக இருந்துவரும் குற்றச்சாட்டுகள் ஆகும்.

வழக்குகளை பதிவுசெய்வதில் சில எளிய முறைகளை பின்பற்றுதல், காவல் துறையினருக்கு உள்ள கடமைகள், நீதிமன்றங்களுக்கு உள்ள அதிகாரங்கள் ஆகியவற்றை தெரிந்து கொண்டு உரிய முறையில் அணுகுதல் ஆகியவை மேற்கண்ட பிரச்சனைகளில் இருந்து பாதிக்கபட்டோர் விடுபட உதவும்.


முதலில் ஒரு குற்றச்சாட்டின் பல்வேறு தன்மைகளை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.  பொதுவாக குற்றங்களை உரிமையியல் வழக்குகள் (Civil Cases), குற்றவியல் வழக்குகள் (Criminal Cases) என இருவகையாக பிரிக்கலாம். இதில் உரிமையியல் சார்ந்த வழக்குகளில் காவல் துறையினர் தன்னிச்சையாக  செயல்பட எந்தவித சட்ட உரிமையும் இல்லை.  பொதுவாக இரண்டு தனிப்பட்ட தரப்பினருக்கு இடைப்பட்ட சொத்து மற்றும் அனுபவத்தின் மீதுள்ள உரிமைகள் மற்றும் கடமைகள் தொடர்பான பிரச்சனைகளை உரிமையியல் வழக்குகள் என்கிறோம். இந்த உரிமையியல் பிரச்சனைகள் கூட அடிதடி தகராறுகள், ஆவணங்களை போலியாக உருவாக்குதல், அத்துமீறி நுழைதல், நம்பிக்கை மோசடி ஆகியவற்றோடு வரும்போது அந்த செயல்களை பொறுத்தவரை குற்றவியல் தன்மை பெறுகின்றன.

குற்றவியல் வழக்குகளை பொறுத்தவரை அவை  இரண்டு தனிப்பட்ட மனிதர்களுக்கு இடையே ஏற்பட்டாலும் சமுதாயத்திற்கெதிராக ஏற்பட்டாலும் அவை அரசுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களாக கருதப்படுவதுடன் காவல் துறையினரின் விசாரணை, கைது போன்றவற்றிற்கும் வழிவகுக்கின்றன.  பொதுவாக அடிதடி, திருட்டு, கொலை, கொள்ளை, ஏமாற்றுதல், பெண்கள் மீதான வன்முறைகள், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், பொதுச் சொத்தை சேதப்படுத்துதல் போன்றவை குற்றவியல் வழக்குகளாக கருதப்படுகின்றன.

குற்றவியல் வழக்குகளை இரண்டு முக்கியப் பிரிவுகளாக பிரிக்கலாம். அவை நீதிமன்றத்தின் உத்தரவோ அனுமதியோ இன்றி காவல் துறையினர் தானாக விசாரிக்க அதிகாரமுள்ள வழக்குகள் (Cognizable Offences), நீதிமன்றத்தின் அனுமதியின்றி விசாரணை செய்ய காவல் துறைக்கு அதிகாரமில்லாத வழக்கு(Non Cognizable Offences)களாகும்.

அடிதடி, திருட்டு, கொலை, கொள்ளை, வெட்டுகுத்து, பெண்கள் மீதான வன்முறைகள், பொது அமைதிக்கு பங்கம் விளைத்தல் பொதுச்சொத்துகளை சேதப்படுத்துதல், நாட்டின் இறையாண்மைக்கு எதிராக நடத்தல் போன்றவை காவல் துறையினர் தானாக விரைந்து செயல்பட வேண்டிய வழக்குகளாக இருப்பதால் அவை
நீதிமன்றத்தின் அனுமதியின்றி காவல் துறையினர் விசாரிக்க அதிகாரமுள்ள வழக்குகளாக (Cognizable Offences) கருதப்படுகின்றன.

ஒருவர் இரண்டு திருமணங்கள் செய்துகொண்டார் என்ற குற்றச்சாட்டு, தன்மீது அவதூறு பரப்பிவிட்டார் என்ற குற்றச்சாட்டு, அஜாக்கிரதையாக காயம் ஏற்படுத்திவிட்டார் என்ற குற்றச்சாட்டு, பொய்யான ஆவணம் தயாரித்துவிட்டார் போன்ற குற்றச்சாட்டுகளில் காவல் துறையினரின் நடவடிக்கை தேவைப்படினும்  காவல் துறையினர் மிக அவசரமாக செயல்பட வேண்டிய அவசியமில்லாததாலும் அவற்றில் உரிமையியல் விசயங்கள் சற்றுக்கூடுதலாக கலந்திருப்பதாலும் அவை நீதிமன்றத்தின் அனுமதியின்றி விசாரணை செய்ய காவல் துறைக்கு அதிகாரமில்லாத வழக்குகளாக (Non Cognizable Offences)கருதப்படுகின்றன.

ஆனால் நீதிமன்றத்தின் அனுமதியின்றி விசாரணை செய்ய காவல் துறைக்கு அதிகாரமில்லாத வழக்குகளாக இருந்தாலும் ஒரே ஒரு வழக்கு நீதிமன்றத்தின் அனுமதியின்றி காவல் துறையினர் விசாரிக்க அதிகாரமுள்ள வழக்காக இருப்பினும் அவ்வழக்கு முழுமையுமே நீதிமன்றத்தின் அனுமதியின்றி காவல் துறையினர் விசாரிக்க அதிகாரமுள்ள வழக்காக கருதப்படும்.

எவையெல்லாம் நீதிமன்றத்தின் அனுமதியின்றி காவல் துறையினர்  விசாரிக்க அதிகாரமுள்ள வழக்குகள் எவையெல்லாம் நீதிமன்றத்தின் அனுமதியின்றி விசாரணை செய்ய காவல் துறைக்கு அதிகாரமில்லாத வழக்குகள்  என்று இந்திய தண்டனைச் சட்டத்தில் ஒவ்வொறு தண்டனைக்கு அருகிலும் கொடுக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தின் அனுமதியின்றி காவல் துறையினர்  விசாரிக்க அதிகாரமுள்ள வழக்குகள் குறித்து யாரேனும் காவல் துறையினருக்கு தகவல் தந்தாலோ அல்லது காவல் துறையினரின் நேரடி கவனத்திற்கு வந்தாலோ அதன் மீது விசாரணை நடத்துவது காவல் துறையினரின் கட்டாயமான கடமையாகும். இதிலிருந்து தவறும் காவல்துறையினர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க காவல் துறையின் நிலையாணையின் (Police Standing Order) படியும் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புகளின்படியும் வழியுள்ளது.

எனவே நீதிமன்றத்தின் அனுமதியின்றி காவல் துறையினர்  விசாரிக்க அதிகாரமுள்ள வழக்குகள் குறித்து தகவல் தெரிந்தால் குற்றவியல் நடைமுறைச்சட்டத்தின் பிரிவு 154படி முதல் தகவல் அறிக்கை (First Information Report) பதிவுசெய்து விசாரிக்க வேண்டியது காவல் துறையினரின் கட்டாய கடமையாகும்.

அவ்வாறு காவல் துறையினர்  நீதிமன்றத்தின் அனுமதியின்றி காவல் துறையினர்  விசாரிக்க அதிகாரமுள்ள வழக்குகளில் முதல் தகவலறிக்கையை காவல் அதிகாரிகள் பதிவு செய்ய மறுத்தால் நடை முறை ரீதியில் எளிமையாக அதே புகாரை பதிவுத் தபாலில் அதே காவல் நிலையத்திற்கு அனுப்பி ஆதாரத்தை வைத்துக்கொண்டால் காவல் துறையினர்  தானாக வழக்கை பதிவுசெய்யவும், பாதிக்கப்பட்ட புகார்தாரர் பின்னாளில் நீதிமன்றத்தை அணுகவும் உதவியாக இருக்கும். மேலும் உடல் காயமடைந்த யாரேனும் ஒருவரின் புகாரை காவல் துறையினர்  பதிவுசெய்ய மறுத்தால் ஏதேனும் மருத்துவமனையில் அதுவும் இயன்றவரை அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக காயத்திற்கான காரணத்தைச் சொல்லி சேர்ந்துகொண்டால் அங்கிருந்தே காவல் நிலையத்திற்கு தானாக தகவல் செல்லவும் அந்த மருத்துவமனைப்பதிவை புகார் பதிவிற்கு பயன்படுத்தவும் வாய்ப்புண்டு.

குற்றவியல் நடைமுறைச்சட்டப்பிரிவு 154 (3) ன் கீழ் மாவட்ட கண்காணிப்பாளருக்கோ,  பெருநகரங்களில் காவல் துறை ஆணையாளருக்கோ பதிவு தபாலில் அனுப்பலாம். அவ்வாறு கிடைக்கப்பெற்ற புகாரை அத்தகைய அதிகாரி தானாக விசாரிக்கலாம் அல்லது தகுதியுடைய ஒரு காவல்துறை அதிகாரியை விசாரணை நடத்தவும் உத்தரவிடலாம்.

அவ்வாறும் புகாரானது பதிவு செய்யப்படாவிட்டால் குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 156(3) ன் கீழ் அக்குற்றச்சாட்டு நடைபெற்ற எல்லையில் உள்ள நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கலாம். அப்புகாரில் உண்மை இருப்பதாக நீதித்துறை நடுவர் திருப்தி அடைந்தால், அவ்வழக்கை முதல் தகவலறிக்கை பதிவு செய்து விசாரிக்குமாறு சம்மந்தப்பட்ட காவல் துறையினருக்கு உத்தரவிடலாம். அவ்வாறு உத்தரவிடப்பட்டால் காவல் துறையினர்  வழக்கை பதிவு செய்து விசாரிப்பதை தவிர வேறு வழியில்லை.  மேலும் வழக்கை பதிவுசெய்து விசாரிக்க ஆணையிட்ட நடுவர் நீதிமன்றம் வழக்கின் விசாரணையையும் மேற்பார்வையிடலாம். இப்பிரிவின்கீழ் நீதித்துறை நடுவரின் அதிகாரத்தை சக்கிரியா வாசு எதிர் உ.பி அரசு,  டிவைன் ரெட்ரிட் எதிர் கேரள அரசு ஆகிய வழக்குகள் விரிவுபடுத்தியுள்ளன.

மேலும்  இப்பிரிவின் கீழ் ஒரு புகார்தாரர் நீதிமன்றத்தை அணுகும்போது குற்றம் சாட்டப்படுபவரை (Accused) நீதிமன்றம் விசாரிக்க வேண்டியதில்லையென்றும் அவ்வாறு நீதிமன்றத்தை அணுக குற்றம் சாட்டப்படுபவருக்கு எந்த உரிமையும் இல்லையென்றும் நீதிமன்றத் தீர்ப்புகள் கூறுகின்றன.

இருப்பினும் எந்திரகதியில் அதிகாரவரம்பில்லாமல் அவ்வாறு குற்றவியல் நடைமுறைச்சட்டப்பிரிவு 156 (3) ன் கீழ் ஆணையிடப்பட்டால் அவ்வாணையையும் அவ்வாணையினால் பதிவுசெய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையையும் குற்றவியல் சட்டப்பிரிவு 482 ன் கீழ் அவ்வாணையால் பாதிக்கப்பட்டவர் கேள்விக்குள்ளாக்கி நீக்கலாம் என குருதத் பிரபு மற்றும் பிறர் எதிர் எம். எஸ். கிருஸ்ணாபத் மற்றும் பிறர்  வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றத்தின் வழக்கு குறிப்பிடுகின்றது.

எனினும் இப்பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவரின் உரிமை குறித்து தெளிவான தீர்ப்புகள் இருப்பதாக தெரியவில்லை. குற்றச்சாட்டை பதிவுசெய்வதில் உள்ள மற்றொரு முக்கியமான பிரிவுதான் தனிப்புகார் (Private Complaint) ஆகும். குற்றவியல் நடைமுறைச்சட்டப் பிரிவு 200ன் கீழ் தொடுக்கப்படும் இப்புகார், பிரிவு 190(1) ன் கீழாக புலன்கொள்ளப்பட்டு முதலில் புகார்தாரர்  சத்தியபிரமானத்தின் மூலம் விசாரிக்கப்படுகிறார்அவ்வாறு விசாரிக்கப்படும் போது  தேவைப்படின் சாட்சிகள் யாரேனும் இருந்தால் அவர்களையும் நீதித்துறை நடுவர் விசாரிக்கலாம்.  தேவைப்படின் பிரிவு 202ன் கீழ் காவல் துறை அதிகாரிகளையோ அல்லது தகுதியுள்ள பிறரையோ கூட விசாரிக்கலாம்.  அவ்வாறு விசாரித்தபின் புகாரை விசாரிப்பதற்கு சாராம்சம் இல்லையென கருதினால் குற்றவியல் நடைமுறைச்சட்டப்பிரிவு 203ன் கீழ் வழக்கை தள்ளுபடி செய்யலாம்.  மாறாக வழக்கை விசாரிக்க சாராம்சம் இருக்குமென கருதினால் குற்றம் சாட்டப்படுவருக்கு குற்றவியல் நடைமுறைச்சட்டப்பிரிவு 204ன் கீழ் அழைப்பாணை அனுப்பி வழக்கை தொடர்ந்து விசாரிக்கலாம்.

 இதைப்போலவே நீதிமன்றத்தின் அனுமதியின்றி விசாரணை செய்ய காவல் துறைக்கு அதிகாரமில்லாத வழக்குகளில் காவல் துறையினரை விசாரிக்க நீதித்துறை நடுவருக்கு குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 155(3) ன் கீழ் அதிகாரமுள்ளது.  அவ்வாறு நீதித்துறை நடுவரால் உத்தரவிடப்பட்டால் அவ்வழக்கை காவல் துறையினர்  நீதிமன்றத்தின் அனுமதியின்றி காவல் துறையினர்  விசாரிக்க அதிகாரமுள்ள வழக்குபோல் விசாரிக்கலாம். ஆனால் கைது செய்வது மட்டும் நீதிமன்ற ஆணையின்றி செய்ய இயலாது.

மேற்கண்ட முறைகளைவிட சற்று எளியதும் சற்று கூடுதல் ஆற்றலுடையுதுமான வழிதான் நீதிமன்றத்தின் அனுமதியின்றி காவல் துறையினர்  விசாரிக்க அதிகாரமுள்ள வழக்குகளுக்கு உயர்நீதிமன்றத்தின் தன்னிச்சை அதிகார பிரிவான குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 482 ஆகும்.  இப்பிரிவின் கீழ் பாதிக்கப்பட்ட நபர் தனது புகாரை காவல்துறையினர்  பதிவு செய்யவேண்டுமென்று கூறி நேரடியாக உயர்நீதிமன்றத்தை அணுகி தீர்வு பெறலாம். பிரிவு 482 குற்றவியல் வழக்குகளில் உயர்நீதிமன்றத்திற்கு உள்ள தன்னிச்சை அதிகாரத்தை வழங்குவதாலும் உயர்நீதிமன்றமே புகாரை பதிவு செய்ய ஆணையிடும்போது அதிலிருந்து தவறினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போன்றவற்றை சந்திக்க வேண்டி வரும் என்பதாலும் இப்பிரிவின் முக்கியத்துவம் புகார்களை பதிய வைப்பதில் சற்று கூடுதலாகும்.

-க. திலகேஸ்வரன்
(thilakjurist@gmail.com)