Tuesday, April 10, 2012

கைது – ஏன்? எதற்கு? எப்படி?


குற்றவியல் சட்டம் அல்லது காவல்துறை அல்லது நீதித்துறை என்றதுமே பலருடைய நினைவுக்கும் வருவது “கைது சம்பவம்தான். பிரபலமானவர்களின் கைது சம்பவங்களை தொலைகாட்சியிலும், கற்பனையான கைது சம்பவங்களை திரைப்படங்களிலும் பார்க்கும் பலருக்கு கைது குறித்த ஒரு குழப்பமான புரிதலே இருக்கும்.

நடைமுறையில் ஒரு குற்றம் குறித்து காவல்துறை அதிகாரிக்கு தகவல் கிடைத்தவுடன், அந்த குற்றச்செயலில் பிணையில் விடத்தகாத குற்றத்தை ஒருவர் செய்திருப்பார் என்று நம்புவதற்கு உரிய முகாந்திரம் கிடைத்தவுடன் உடனே நடைபெறும் சம்பவம் “கைதுதான்.


குற்றம் தொடர்ந்து நடைபெறாமல் தடுப்பதற்காகவும், குற்றப்புலனாய்வும் – குற்றவிசாரணையும் நேர்மையாகவும் நடுநிலையாகவும் இடையூறு இன்றி நடப்பதற்காகவும், குற்றம் செய்திருப்பதாக நம்பப்படும் நபரை தடுத்து நிறுத்தி காவல்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கையே “கைது ஆகும்.

ஆனால் பல நேரங்களில் புகாரில் எதிரியாக குறிப்பிடப்படும் நபரை கைது செய்யாமல், அவரை தப்பிக்க விடுவதோ – அவரிடம் வேறொரு புகாரை எழுதி வாங்கிக்கொண்டு முதல் புகார்தாரரை கைது செய்வதோ இந்தியாவின் காவல் நிலையங்களில் மிகவும் நடக்கும் வழக்கமான நிகழ்வுகள்தான்.

கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட வேண்டிவர்கள் மிகவும் கவுரமாக நாட்டில் உலவுவதும், குற்றமற்ற பலர் பொய்யான காரணங்களுக்காக சிறையில் அடைக்கப்படுவதும் இந்தியாவில் மட்டுமல்ல, இந்தியா போன்ற மனித உரிமைகளில் குறைவான புரிதலைக் கொண்ட பல்வேறு நாடுகளிலும் மிக பரவலாக நடந்து வருகிறது.

இதை தீர்க்கதரிசனத்துடன் கணித்திருந்த இந்திய அரசியல் சட்ட வரைவுக்குழுவின் தலைவர் அம்பேத்கர், இந்திய அரசியல் சட்டத்திலேயே கைதுகள் குறித்தும் எழுதியுள்ளார்.

இந்திய அரசியல் சட்டத்தின் உறுப்பு 21ன் படி சட்டப்படி உருவாக்கப்பட்டுள்ள விசாரணை முறைப்படியன்றி, வேறெந்த விதமாகவும் ஒரு நபரின் தனிப்பட்ட சுதந்திரத்தையும் உயிரையும் பறிக்கக்கூடாது என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.

இந்திய அரசியல் சட்டத்தின் உறுப்பு 22 (1) இன் படி, “கைது செய்து ஒரு நபரைக் காவலில் வைப்பதற்கு முன், அவர் எதற்காக கைது செய்யப்பட்டுள்ளார் என்பதற்கான காரணத்தை அவருக்கு தெரிவிக்க வேண்டும். மற்றும் கைது செய்யப்படும் நபரால் தேர்ந்தெடுக்கப்படும் வழக்குரைஞரை கலந்தாலோசிக்கவும், அவரை தமது சட்டரீதியான தற்காப்பிற்கு பயன்படுத்துவதற்கும் உள்ள உரிமைகள் மறுப்பேதுமின்றி வழங்கப்படவேண்டும்.

இந்திய அரசியல் சட்டத்தின் உறுப்பு 22 (2) இன் படி, “ஒரு நபரைக் கைது செய்து காவலில் வைக்கும்போது, அப்படி கைது செய்யப்பட்ட நபரை, கைது செய்யப்பட்ட 24 மணிநேரத்திற்குள் அருகே உள்ள ஒரு குற்றவியல் நடுவரிடம் முன்னிலைப்படுத்த வேண்டும். அந்த 24 மணி காலக்கெடுவில், கைது செய்யப்பட்ட இடத்திலிருந்து அந்த குற்றவியல் நடுவர் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்ல தேவைப்படும் பயண நேரத்தை சேர்க்கக்கூடாது. எந்த ஒரு நபரையும், ஒரு குற்றவியல் நடுவரின் உத்தரவின்படி இல்லாமல், அந்த காலக்கெடுவுக்கு மேல் காவலில் வைத்திருக்கக்கூடாது.

ஒரு நாட்டின் குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்ட உயர்பதவி வகிப்போரின் பணிகளையும், நாடாளுமன்றம் உள்ளிட்ட அரசு அமைப்புகளின் பணிகளையும் வரையறை செய்யும் அரசியல் அமைப்புச் சட்டத்தில், தனி நபரின் கைதுக்கு எதிரான பாதுகாப்புகள் குறித்த மேற்கண்ட செய்திகளை சாதாரணமாக எதிர்பார்க்க முடியாது. ஆனால் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இதுபோன்ற சாதாரண அம்சங்களும் இடம் பெற்றுள்ளது ஒரு சுவையான அம்சமாகும். இந்திய காவல்துறையின் இன்றைய அவல நிலையை அண்ணல் அம்பேத்கர் அன்றே உணர்ந்து மிகுந்த தீர்க்க தரிசனத்துடன், குடிமகனின் உரிமைகள் குறித்த அம்சங்களை அரசியல் அமைப்பில் இணைத்தது, அவர் இந்திய மக்கள் மீது கொண்ட கரினத்தையும், காவலர்கள் மீது கொண்ட தொலைநோக்குப் பார்வையையும் குறிக்கிறது.

எனவே ஒரு குற்றச் செயலில் பாதிக்கப்பட்ட நபரோ, குற்றச்செயலை செய்துவிட்டு கைதை எதிர்பார்த்திருக்கும் நபரோ – யாராக இருந்தாலும் கைது சம்பவத்தின் சட்டக்கூறுகள் குறித்து குறைந்த பட்ச புரிதலையாவது பெற்றிருப்பது நல்லது. இதன் மூலம் சட்டவிரோத கைதுகளை குறைப்பதுடன், சட்டரீதியாக கைது செய்யப்பட வேண்டியவர்கள் தப்பிப்பதையும் தவிர்க்க முடியும்,

சட்டரீதியான கைதுகளும், சட்ட விரோத கைதுகளும்:

இந்தியாவின் குற்றவியல் நீதிமன்றங்களும், காவல்துறை உள்ளிட்ட சட்ட அமலாக்க அமைப்புகளும் அவற்றிற்கு விதிக்கப்பட்ட சட்ட நெறிமுறைகளின்படியே செயல்பட வேண்டும் என்றாலும், பலநேரங்களில் சட்டத்தின் கண்களில் மண்ணைத்தூவிவிட்டு சட்டத்திற்கு முரணாக செயல்படுவதில் காவல்துறையும், அரசு வழக்கறிஞர்களும் முனைப்பு காட்டுகின்றனர்.

எந்த ஒரு கைது சம்பவமும் பல்வேறு சட்ட அம்சங்களின் நிபந்தனைக்கு உட்பட்டே செய்யப்படவேண்டும். இவ்வாறு சட்டத்திற்கு உட்பட்டு நடைபெறும் கைது சம்பவங்களைவிட சட்ட அம்சங்களை புறந்தள்ளி தனிமனித விருப்பு – வெறுப்புகளால் உருவாகும் சட்ட விரோத கைது சம்பவங்களே இந்தியாவில் அதிகம். சட்ட ரீதியான கைதுகளை உரிய முறையில் கண்காணிக்க வேண்டியதும், சட்ட விரோத கைதுகள் குறித்து தெரிய வரும்போது அதுகுறித்து உறுதியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு குற்றவியல் நீதிமன்றங்களிடமே உள்ளது. ஆனால் பணிச்சுமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பெரும்பாலான குற்றவியல் நீதிமன்றங்கள் இதுபோன்ற அம்சங்களை பரிசீலிப்பதே இல்லை.

சட்டவிரோத கைதுகளால் பாதிக்கப்படும் நபர்களில் வசதி மிக்கவர்கள், உயர்நீதிமன்றத்தை அணுகும்போது மட்டுமே அவர்களுக்கான தீர்வுகள் கிடைக்கின்றன. இதற்கான வழிவகைகளை அறிந்து கொள்ளும் முன் சட்டரீதியான கைது குறித்து புரிந்து கொள்வோம்.

கைது நடைமுறைகள்:

கைது நடவடிக்கைக்கான நடைமுறைகளை குற்றவியல் நடைமுறைச் சட்டம் நிர்ணயம் செய்கிறது. இந்த சட்டத்தின் பிரிவு 46(1)ன் படி, “உரிய அதிகாரி ஒருவர், கைது செய்யப்பட வேண்டிய நபரிடம், அவரை கைது செய்வதற்கான காரணத்தை தெரிவித்தவுடன், கைது செய்யப்படுவதற்கு உடன்படுவதை வெளிப்படையாக தெரிவித்தல் வேண்டும். அவ்வாறு இல்லாமல் கைது செய்யப்படவேண்டிய நபர், கைது செய்யப்படுவதற்கு உடன்படாதபோது அவருடைய உடலை நேரடியாக தொட்டு கைது செய்யலாம். மேலும் கைது செய்யப்பட்ட நபர் தப்பித்து சென்றுவிடாத வகையில் காவலில் வைக்கலாம்.

குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 46(2)ன் படி, “கைது செய்யப்பட வேண்டிய நபர், கைது முயற்சியை வன்மையாக தடுத்தாலோ, அல்லது தாம் கைது செய்யப்படுவதிலிருந்து தந்திரமாக தப்பிக்க முயற்சி செய்தாலோ, கைது செய்யும் அதிகாரம் படைத்த அதிகாரி கைது நடவடிக்கைக்கு தேவையான வழிமுறைகளை கையாளலாம். (அதாவது தப்பியோட முயற்சிக்கும் நபரை தடுத்து நிறுத்தவும், தம் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரவும் தேவையான அளவிற்கு கைது செய்யப்படவேண்டிய நபரை தாக்கியும் தடுத்து நிறுத்தலாம்)

கு.ந.சட்டம் பிரிவு 46(3)ன் படி, “கைது செய்யப்பட வேண்டிய நபர், மரண தண்டனையோ அல்லது ஆயுள் தண்டனையோ பெறத்தக்க அளவில் ஒரு குற்றத்தை செய்ததாக குற்றம் சாட்டப்படாத நிலையில், அவரை தடுத்து நிறுத்தும் முயற்சியில் அவருக்கு மரணத்தை விளைவிப்பதற்கான உரிமை வழங்கப்படவில்லை. (அதாவது, கைது செய்யப்படவேண்டிய நபர் மரண தண்டனையோ அல்லது ஆயுள் தண்டனையோ பெறத்தக்க அளவில் ஒரு குற்றத்தை செய்ததாக சந்தேகிப்படும் நிலையில், அவர் தப்பியோட முயற்சித்தாலோ – கைதை தவிர்க்க முயற்சித்தாலோ அதை தடுப்பதற்காக முயற்சிக்கும் அதிகாரி தேவையெனில், கைது செய்யப்பட வேண்டிய நபருக்கு மரணம் ஏற்படுத்தும் வகையிலும் நடவடிக்கையை மேற்கொள்ளலாம்)

கு.ந.சட்டம் பிரிவு 46(4)ன் படி, “ பொதுவாக பெண்களை கைது செய்ய நேரிட்டால் சூரியன் உதித்த பின்னரும், சூரியன் அஸ்தமிக்கும் நேரத்திற்கு முன்னதாகவும் மட்டுமே கைது செய்ய வேண்டும்.

பெண்களை கைது செய்யும்போது பெண் அதிகாரிகளைக் கொண்டே கைது செய்ய வேண்டும். எனினும் பெண் காவல்துறை அதிகாரி இல்லாத நிலையில், அவசியம் என்றால் ஆண் அதிகாரியும் கைது செய்யலாம்.

பொதுவாக ஒரு காவல்துறை அதிகாரி, ஒரு குறிப்பிட்ட நபரை கைது செய்ய முனைந்தால் அவருடைய உத்தரவுக்கு பணிந்து கைது நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு கொடுக்கும் விதத்தில் சரண் அடைவதையே சட்டம் வலியுறுத்துகிறது. ஒரு நபரை கைது செய்யும் காவல்துறை அதிகாரியோ அல்லது அதற்கான அதிகாரம் பெற்ற நபரோ, கைது செய்யப்படும் நபரின் பாதுகாப்பிற்கும், பிற அம்சங்களுக்கும் பொறுப்பேற்கிறார். மேலும் கைது சம்பவம் நடந்த உடன் அது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தல் உட்பட பல்வேறு செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது. இதேபோல கைது செய்யப்படும் நபருக்கும் சட்டரீதியான பல பாதுகாப்பு அம்சங்கள் இருக்கின்றன.

கைது நடவடிக்கை சட்டரீதியாக இருப்பதை உறுதி செய்யவும், சட்ட விரோத கைது சம்பவங்களை தடுப்பதற்காகவும் பல்வேறு சட்டப்பாதுகாப்புகளை சட்டங்களும், உச்சநீதிமன்றமும்  ஏற்படுத்தியுள்ளன. அவை குறித்து அடுத்து பார்க்கலாம். 

Monday, April 2, 2012

உங்கள் புகாரை ஏற்க காவல்துறை அதிகாரிகள் மறுத்தால்...!

ஒரு சாதாரணக் குடிமகன் நியாயமான ஒரு காரணத்திற்காக காவல்நிலையத்தில் புகார் செய்து நடவடிக்கை மேற்கொள்வது என்பது, சந்திரனுக்கு பயணம் செய்வதைப் போன்ற சவாலான அம்சம்தான். ஏனெனில் ஒரு குற்றவியல் சம்பவம் குறித்து விசாரணை நடத்தும் அதிகாரம் காவல்துறையிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது. 


காவல்துறையில் நிலவும் மிகக்குறைந்த மனிதவளம் உள்ளிட்ட வசதிக்குறைவுகளை யாரும் மறுக்க முடியாது. எனவே காவல்துறையில் பணியாற்றும் பெரும்பாலான அதிகாரிகளும், அலுவலர்களும் நேரம் – காலம் பார்க்காமல் பணியாற்றுவதும் உண்மைதான். காவல்துறைக்கான பல அத்தியாவசிய தேவைகள் உரிய முறையில் பூர்த்தி செய்யப்படுவதில்லை என்பதும் ஏற்கத்தகுந்த வாதம்தான். எனினும், இதற்காக சாமானிய மனிதனை, காவல்துறையினர் புறக்கணிப்பதையும் அங்கீகரிக்க முடியாது. 

நடைமுறையில் காவல்நிலையத்திற்கு வரும் எந்த ஒரு புகாரையும் விசாரணைக்கு ஏற்காமல் தட்டிக்கழிப்பதற்கான காரணத்தை தேடுவதிலேயே ஒரு காவல்துறையின் அதிகாரியின் மூளை முதன்மையாக செயல்படுகிறது. 

சமூகத்தில் செல்வாக்கு மிக்கவர்களால் தரப்படும் புகாரையோ, செல்வாக்கு மிக்கவர்களின் பரிந்துரையுடன் வருபவர்களின் புகார்களை விசாரிப்பதில் காட்டப்படும் முனைப்பு, சாமானிய மக்களின் புகார்களை விசாரிப்பதில் காட்டப்படுவதில்லை என்பதை காவல்துறையினரே ஒப்புக்கொள்வர். செல்வாக்கு மிக்கவர்களால் அனுப்பப்படும் புகார்களை புறக்கணித்தால், காவல்துறையினருக்கு விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படலாம். அவ்வாறில்லாத நிலையில் காவல்துறை அதிகாரிகளுக்கு தனிப்பட்ட ஆதாயம் இல்லாத நிலையில் அந்தப் புகார்கள் கவனிக்கப்படுவதில்லை. 

இந்தச்சூழலில் பாதிக்கப்பட்டவர்கள், தங்கள் நியாயமான புகார்கள் மீது தேவையான நடவடிக்கை மேற்கொள்வதற்கு குற்றவியல் நடைமுறைச் சட்டம் வழிகாட்டுகிறது. இச்சட்டத்தின் அத்தியாயம் 15இல் உள்ள பிரிவு 200 இதுகுறித்து விளக்குகிறது. இந்த சட்டப்பிரிவின் கீழ், ஒரு குற்ற சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஒரு நபர் நேரடியாக குற்றவியல் நடுவரை அணுகலாம். 

 இவ்வாறு பெறப்படும் ஒரு புகாரை விசாரிப்பதற்கு குற்றவியல் நடுவருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான முதல் புகாரை பெறும் குற்றவியல் நடுவர், புகார் தருபவரையும், அவரது சாட்சிகளையும் விசாரித்து அவர்களது வாக்குமூலங்களை பதிவு செய்யலாம். இவ்வாறு பெறப்படும் புகாரை விசாரிக்கும் குற்றவியல் நடுவர், புகாரில் உண்மையும் – குற்றம் சாட்டப்பட்ட நபரை கைது செய்வதற்கான முகாந்திரமும் இருப்பதாக திருப்தி அடைந்தால் அப்பகுதிக்குரிய காவல்துறை அதிகாரிகளிடம், குற்றம் சாட்டப்பட்ட நபரை கைது செய்து நடவடிக்கை எடுப்பதற்கு உத்தரவிடலாம். இதற்கான அதிகாரம் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 156 (3)ன் படி குற்றவியல் நடுவருக்கு வழங்கப்பட்டுள்ளது. 

ஆனால் நடைமுறையில் இது போன்ற நிகழ்வுகள் மிகவும் அரிதாகவே நடைபெறுகிறது. ஏனென்றால் குற்றவியல் நீதிமன்றங்களில் தேங்கியிருக்கும் ஏராளமான வழக்குகளோடு, இதுபோன்று பாதிக்கப்பட்டவர்களால் நேரடியாக வழங்கப்படும் புகார்கள் கூடுதல் பணிச்சுமை என்பதால் நீதிமன்றங்கள் இதுமாதிரியான மனுக்களை பரிவுடன் அணுகுவதில்லை. மேலும் புகாரில் கூறப்படும் குற்றச்செயலை நிரூபிக்கும் பொறுப்பு பாதிக்கப்பட்டவரிடமே விடப்படுவதும் உண்டு. குற்றப்புலனாய்வில் அறிவோ, அனுபவமோ இல்லாத சாமானியர்களிடம் குற்றத்தை நிரூபிக்கும் பொறுப்பை ஒப்படைப்பது என்பது நடைமுறையில் சாத்தியமில்லாதது என்பதை புரிந்து கொள்ள சிறப்புத் திறமைகள் தேவையில்லை. ஆனால் சில நேரங்களில் இதுபோன்ற உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பிப்பதையும் மறுக்கமுடியாது. 
  
இதற்கு மாற்றாக குற்ற நிகழ்வுகளில் உயர்நீதிமன்றத்தை அணுகுவது பல நேரங்களில் பலன் அளிப்பதாக உள்ளது. 

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 482, உயர் நீதிமன்றத்தின் உயர் அதிகாரங்கள் குறித்து விளக்குகிறது. இந்த சட்டப்பிரிவின் அடிப்படையில் கீழ்நிலையில் உள்ள குற்றவியல் நீதிமன்றங்களுக்கும், காவல்துறைக்கும் உரிய அனைத்து உத்தரவுகளையும் பிறப்பிக்கும் அதிகாரம் உயர்நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. 

இந்த அதிகாரத்தின்கீழ், நியாயமான காரணங்களுக்காக புகாரை பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு காவல்துறைக்கும், இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துமாறு குற்றவியல் விசாரணை நீதிமன்றங்களுக்கும் உத்தரவிடும் அதிகாரம் உயர்நீதிமன்றத்திற்கு உள்ளது. 

 ஒரு குற்ற சம்பவம் குறித்து, காவல்துறையினரிடம் புகார் அளிக்கும்போது, காவல்துறையினர் அந்தப்புகார் மீது நடவடிக்கை எடுப்பார்களா என்பதை புரிந்து கொள்வதில் பெரிய சிரமங்கள் இருக்காது. புகார் கொடுக்க வருபவரையே மிரட்டுவதும், அச்சுறுத்துவதும் ஏறக்குறைய அனைத்து காவல் நிலையங்களிலும் நடைபெறும் வழக்கமான நடைமுறையே. 

சில காவல்நிலையங்களில், யார் மீது புகார் கூறப்படுகிறதோ – அவரையே தொடர்பு கொண்டு, அவரிடம் முதல் புகாரைதாரர் மீது வேறுபுகாரை பெற்று அதை முதல் புகாராக பதிவு செய்வதும் வழக்கத்தில் உள்ளது. 

 இத்தகைய சிக்கல்களை தவிர்ப்பதற்கு குற்றவியல் சட்டத்தில் அனுபவமும், நேர்மையும் கொண்ட ஒரு வழக்குரைஞர் உதவியுடன் புகார்களை அளிப்பது நல்லது. இந்தப்புகார் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்வதற்கு காவல்துறையினர் முனைப்பு காட்டாத நிலையில், அந்தப் புகாரின் நகல் ஒன்றை ஒப்புதல் அட்டையுடன் கூடிய பதிவு அஞ்சல் மூலம், குறிப்பிட்ட காவல் நிலையத்திற்கு அனுப்பலாம். மேலும் புகாரின் நகல்களை, தொலைநகல் மூலம் காவல்துறை ஆணையர் போன்ற உயர் அதிகாரிகளுக்கும் அனுப்பலாம்.  இதன் மூலம் காவல்துறையினர், குறிப்பிட்ட புகார் குறித்து விசாரணை நடத்துவதற்கான அழுத்தத்தை அளிக்கலாம். குறிப்பிட்ட புகார் சமூகத்திற்கு எதிரான குற்றச்செயல் குறித்ததாக இருந்தால், அந்தப் புகார் குறித்து அப்பகுதியில் இருக்கும் செய்தியாளர்களை தொடர்பு செய்தி வெளிவரச்செய்வதும், அந்தப் புகார் மீது விசாரணை நடத்துவதற்கு அழுத்தம் கொடுப்பதாக அமையும். 

இவ்வாறு எத்தகைய அழுத்தம் கொடுத்தாலும் அதற்கெல்லாம் கலங்காது, அந்தப்புகாரை உரிய முறையில் விசாரிக்காமல் தள்ளிவிட முயற்சிக்கும் அதிகாரிகளுக்கும் நம் நாட்டில் பஞ்சமில்லை. இத்தகைய சூழ்நிலையில், புகார்தாரர் நீதிமன்ற விசாரணையில் பங்கேற்கவும் சட்டம் வழிகாட்டுகிறது. 

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 301 (2), புகார்தாரரின் தரப்பில் அரசு வழக்கறிஞருக்கு துணையாக, அரசு வழக்கறிஞர் அல்லாத ஒரு வழக்கறிஞர் செயல்படுவதற்கு அனுமதி அளிக்கிறது. குறிப்பிட்ட குற்றப்புலனாய்வு ஆவணங்களையும் புகார்தாரர் பெறமுடியும். இதற்கு கிரிமினல் ரூல்ஸ் ஆஃப் பிராக்டிஸ் வழி வகுக்கிறது. இதன் மூலம் ஆவணங்களைப் பெறும் புகார்தாரரின் வழக்கறிஞர், சாட்சிகள் மற்றும் சான்றாதாரங்கள் ஆய்வு முடிந்தபின்னர், அரசு வழக்கறிஞர் பரிசீலிக்கத் தவறிய அம்சங்கள் ஏதேனும் இருந்தால் அதனை எழுத்து மூலமாக வடித்து குறிப்பிட்ட நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கலாம். 

இவ்வாறு குற்றவியல் வழக்கில் புகார்தாரர் சார்பில் தனி வழக்கறிஞரை அனுமதிப்பதற்கு உயர்நீதிமன்றத்தை அணுகுவது நல்லது. 

இந்த முயற்சிகள் பலன் அளிக்காத நிலையிலும், காவல்துறை நடத்தும் விசாரணை அல்லது வழக்கின் போக்கு குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஆதரவளிப்பதாக நம்புவதற்கு இடம் அளிக்கும் நிலையிலும்கூட புகார்தாரர் அதில் தலையிடலாம். காவல்துறை நியாயமாக நடக்கவில்லை என்பதை நீதிமன்றம் ஏற்கும் வகையில் நிரூபித்தால், அந்த வழக்கின் விசாரணையேயோ, வழக்கையோ உள்ளூர் காவல்துறை அல்லாத வேறு புலனாய்வு அமைப்புகள் நடத்த உத்தரவிட வேண்டி உயர்நீதிமன்றத்தை அணுக சட்டம் இடம் அளிக்கிறது. குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 482, உயர்நீதிமன்றத்திற்கு அளிக்கும் அதிகாரத்தினஅ அடிப்படையில் இத்தகைய வழக்குகளை உயர்நீதிமன்றம் விசாரிக்கும். 

அப்போது இந்த புகார் அல்லது வழக்கு, சிபிசிஐடி எனப்படும் மத்திய குற்றப்புலனாய்வுத் துறைக்கோ அல்லது சிபிஐ எனப்படும் மத்திய புலனாய்வு அமைப்புக்கோ மாற்றப்படும் வாய்ப்புகள் உள்ளன. அவ்வாறு புகார் மீதான விசாரணையோ, வழக்கோ வேறு புலனாய்வு அமைப்புகளுக்கு மாற்றப்படும்போது, புகார்தாரர் உரிய புலனாய்வு அதிகாரிகளை அணுகி, தங்கள் ஐயப்பாடுகளை எடுத்துரைக்க முடியும். 

இவை அனைத்திற்கும் தேவை, புகார் அளிக்கும் நிலையிலும் அதைத் தொடர்ந்த நிலையிலும் குற்றவியல் சட்டத்தில் அனுபவமும், நேர்மையும் கொண்ட வழக்குரைஞரின் உதவியே!

ஒரு புகார் காவல்துறையின் கவனத்தை கவர்ந்து சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் அடுத்த நடவடிக்கை கைது செய்வதாகவே அமையும். மிகச்சில நேரங்களில் குற்றவாளிகளும், மிகப்பல நேரங்களில் குற்றத்திற்கு எந்த தொடர்பும் இல்லாத நபர்களும் கைது செய்யப்படுவர். சில அரிதான நேரங்களில் நாம் மேலே பார்த்ததுபோல புகார் தரும் நபர் மீதே வேறு புகார் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்படுவதும் உண்டு. எப்படிப் பார்த்தாலும் குற்றவியல் சட்டத்தின் அடிப்படை நடவடிக்கையாக “கைது” இருக்கிறது. இந்த கைது குறித்து அடுத்து பார்ப்போம்...!