Tuesday, July 5, 2011

இலவச கட்டாயக் கல்வி : சட்டமும், நடைமுறையும்...!

தனிமனித வளர்ச்சிக்கும், அதன் ஊடாக சமூக வளர்ச்சிக்கும் அடிப்படையாக விளங்குவது கல்வி. சமமற்ற சமூகத்தை, சமநீதிச் சமூகமாக உருவாக்கிட கல்வியின் பங்கு அளப்பறியது. அப்படிப்பட்டதான கல்வியை, “மக்கள் நல அரசு” என அறிவித்துக் கொள்ளும் நம் போன்ற நாடுகள் அனைத்து குடிமக்களுக்கும், பாகுபாடின்றி வழங்கிட வேண்டியது அடிப்படையான உரிமையாகும். அதேவேளையில் வழங்கப்படும் கல்வியானது இலவச, கட்டாய, தரமான கல்வியாக அமைய வேண்டியதும் மிகவும் அவசியமானதாகும்.


அகில உலக மனித உரிமைகள் பிரகடனம்:1948

“கல்வி பெறும் உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு. ஆரம்ப மற்றும் அடிப்படை நிலைகளிலாவது கல்வி இலவசமாக இருக்க வேண்டும். ஆரம்பக் கல்வியை கட்டாயமாக்க வேண்டும். தொழில்நுட்பம் மற்றும் தொழில்முறைக் கல்வியை பரவலாக்குவதோடு, உயர் கல்வியை அனைவருக்கும் தகுதி அடிப்படையில் சம வாய்ப்பிற்குரியதாக்க வேண்டும்.” என்று இந்திய அரசால் கையொப்பமிட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள அகில உலக மனித உரிமைகள் பிரகடனம் விதி 26(1) தெளிவாகக் கூறுகிறது.

உடன்படிக்கைகள்:-

1989ம் ஆண்டில் இயற்றப்பட்டு, இந்திய அரசால் கையொப்பமிட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள ஐக்கியநாடுகள் சபையின் “குழந்தைகள் உரிமைகளுக்கான உடன்படிக்கை”யின் விதி 28(ஆ)வில் “ஒவ்வொரு குழந்தைக்கும் சமவாய்ப்பின் அடிப்படையில் ஆக்க பூர்வமான முன்னேற்றகரமான முறையில், கட்டாய, இலவச, தரமான கல்வி பெறுவதற்கான உரிமையுண்டு” என்று கூறியுள்ளது.

பொருளாதார,சமூக மற்றும் கலாச்சார உரிமைகள் குறித்த உடன்படிக்கை, 1966ன் விதி12(2)(அ)வில் “ஆரம்பக்கல்வி, அனைவருக்கும் கட்டாயமாகவும், இலவசமாகவும் கிடைக்க வேண்டும்” என்று கூறுகிறது.

இந்திய அரசியலமைப்பு சாசனம் (86-வது சட்டதிருத்தம்), 2002:

அரசியலமைப்பு சாசனம் 1950ம் ஆண்டில் இயற்றப்பட்ட போது, சரத்து 45ல் “சாசனம் அமலுக்கு வந்த பத்து ஆண்டுகளுக்குள்ளாக, 14 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாயக்கல்வி அளிக்க அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும்” என்று அரசின் நெறியுறுத்தும் கொள்கையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்த உரிமையானது, 21(A) என்ற புதிய சரத்து உருவாக்கப்பட்டு “இலவச மற்றும் கட்டாயக் கல்வி பெறும் உரிமையானது, அடிப்படை உரிமை”யாக அங்கீகரிக்கபட்டது.

மேலும், பிரிவு 51(A)(k)வில் புதிதாக ஒரு சரத்து இணைக்கப்பட்டு, “பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கும் தங்களது பாதுகாப்பில் உள்ள குழந்தைகளுக்கும், கல்வி பெறும் வாய்ப்புகளையும், வசதிகளையும் உருவாக்கிட வேண்டும்” என்றும் திருத்தம் செய்யப்பட்டது.

மேலும், 1992 ஆம் ஆண்டிலேயே உச்சநீதிமன்றம், பதினான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவச, கட்டாயக் கல்வி கொடுக்க வேண்டியது அடிப்படை உரிமை என்று கூறியிருந்தாலும், பத்தாண்டுகள் கழித்து 2002ஆம் ஆண்டில் தான், அது குறித்த திருத்தம் அரசியல் அமைப்பு சாசனத்தில் மேற்கொள்ளப்பட்டது. ஏற்கனவே தாமதம் ஏற்பட்டிருந்த போதிலும் மேலும் எட்டு ஆண்டுகள் கழித்து 2010ஆம் ஆண்டில் தான், இது குறித்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என்பதே வேதனையான உண்மை. இந்த நாட்டின் குடிமக்களான குழந்தைகளின் மீதும், நாட்டின் எதிர்காலத்தின் மீதும், ஆட்சியாளர்களுக்கு இருக்கும் ஈடுபாடும், அக்கறையும எவ்வளவு அலாதியானது என்பதற்கு இதுவே சான்றாக விளங்கும்.


இப்படியாக பல்வேறு செயல்பாடுகளுக்குப் பிறகு கொண்டுவரப்பட்டுள்ள இச்சட்டத்தில், “6 முதல் 14 வயது வரையிலான குழந்தைகள் அனைவருக்கும் அவர்களின் குடியிருப்புக்கு அருகிலிருக்கும் பள்ளியில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரைக்கும் இலவச மற்றும் கட்டாயக்கல்வி பெறுவதற்கு உரிமையுண்டு என்று உத்தரவாதபடுத்தியுள்ளது. தற்போது நாட்டின், கல்வி தொடர்பான உயரிய ஆலோசனை மையமான, “கல்விக்கான மத்திய ஆலோசனை வாரியம்” இச்சட்டமானது, 1 முதல் 8ம் வகுப்பு வரை மட்டும் என்பதை 9 மற்றும் 10ம் வகுப்புகளுக்கும் என நீட்டிப்பு செய்ய ஒப்புதல் வழங்கியுள்ளது குறிப்படத்தக்கது.

இவ்வொப்புதலைப் பெற்றுள்ள மத்தியஅரசு, அடுத்த கல்வியாண்டிற்குள் உயர்நிலைப்பள்ளி வரையிலும் இலவச மற்றும் கட்டாயக்கல்வி வழங்குவதை இச்சட்டத்தில் இணைத்து, அமலுக்குக்கும் கொண்டு வரும் என்ற எதிர்பார்ப்பு கல்வியாளர்கள் மத்தியில் உள்ளது.

கல்வியானது, இந்திய அரசியலமைப்பு சாசனத்தின்படி மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து வழங்கவேண்டியது என்ற நிலையில் “பொதுப்பட்டியலில்” இணைக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, இந்த சட்டத்தை அமலாக்கம் செய்து நடைமுறைக்குக் கொண்டு வர மத்தியஅரசு 65 விழுக்காடும், மாநிலஅரசு 35 விழுக்காடும் நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் மத்திய அரசின் 2010ம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டில், இச்சட்டத்திற்காக நிதி எதுவும் ஒதுக்கீடு செய்யவில்லை என்பதிலிருந்து இலவச மற்றும் கட்டாயக்கல்வி அளிப்பது தொடர்பாக பெயரளவுக்கு மட்டும் ஒரு சட்டத்தை இயற்றிவிட்டால் போதும் என மத்தியஅரசு கருதுவதாகவே தோன்றுகிறது.

நாட்டில், நடப்பிலுள்ள ஆசிரியர்களில் 21 விழுக்காட்டினர் கல்வி கற்றுக் கொடுப்பதற்கான திறனும், தகுதியும் பெறாதவர்கள் என்று மத்தியஅரசு ஒப்புக்கொண்டுள்ளது. ஏற்கனவே மாநிலங்களில் 5.8 இலட்சம் ஆசிரியர்கள் பணியிடங்கள் காலியாக இருக்கிற சூழலில், மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம், மேலும் 4.5 இலட்சம் கூடுதல் ஆசிரியர்கள் தேவை என்று கூறியுள்ளது. இப்படியாக ஏறக்குறைய 13 இலட்சம் ஆசிரியர்களின் தேவை நாடு முழுவதும் தற்போது ஏற்பட்டுள்ளது.

“தேசிய கல்விக் கொள்கை” 1986ம் ஆண்டில் இயற்றப்பட்ட போது, அதில் ஓராசிரியர் பள்ளிகள் அனைத்தும் ஈராசிரியர் பள்ளிகளாக மாற்றப்படும் என உத்திரவாதம் அளிக்கப்பட்டது. ஆனால் 24 ஆண்டுகள் கடந்து இந்த சட்டம் இயற்றப்பட்ட பிறகும், இன்றளவும் நாட்டில் 9 விழுக்காடு பள்ளிகளில் ஓராசிரியர் மட்டுமே பணியாற்றி வரும் அவலநிலைதான் நீடித்து வருகிறது. இத்தகைய சூழலில் போதிய அளவிலான ஆசிரியர்களின் எண்ணிக்கை இல்லாத காரணத்தால் இந்த சட்டத்தின் நோக்கங்கள் நிறைவேற மேலும்; மூன்று ஆண்டுகாலம் தேவைப்படும் என்று ஜீன் 2011ல் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், 2009ல் இயற்றப்பட்ட இந்த சட்டத்திற்கான விதிகளை பல்வேறு மாநிலங்கள் உருவாக்கிவிட்ட சூழலில், இன்றளவும் தமிழக அரசு உருவாக்காத சூழலில், இந்த சட்டத்திற்கான விதிகளை உடனடியாக வெளியிட வேண்டும் என உத்திரவிடக் கோரி ஜீன் 2011ல் தாக்கல் செய்யப்பட்ட ஒரு பொது நல வழக்கில், ஆறு வார காலத்திற்குள் விதிகளை உருவாக்கி அறிவிப்பு செய்ய வேண்டும் என்று மாநில அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசானது சமீபத்தில் “சமஸ்கிருத பள்ளிகளை” நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நிறுவிட, அதற்கான கட்டமைப்பு மற்றும் அடிப்படை செலவுகளுக்கான தொகைகள் முழுவதையும் ஒதுக்கீடு செய்துள்ளது கவனிக்க வேண்டியது. சில மாதங்களுக்கு முன்னர் டெல்லியில் நடைபெற்ற “காமன்வெல்த் போட்டி”களின் போது, விளையாட்டு தொடர்பான குழுவினர்கள் தங்க வைப்பதற்காக, 60 மாநகராட்சி பள்ளிகள் காலி செய்யப்பட்டு, தற்காலிக கூரைகள் அமைக்கப்பட்டு, அதில் வைத்து வகுப்பு நடத்தப்பட்டது என்ற செய்தி தற்போது வெளிவந்துள்ளது.

சட்டமாக இயற்றியபிறகும் அமல்படுத்த இவ்வளவு சிக்கல்களை ஏற்படுத்தும் ஆட்சியாளர்கள், சட்டமேதும் இயற்றப்படாமலேயே ‘சமஸ்கிருத’ பள்ளிகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பார்க்கும் போது மதசார்பற்ற அரசாக தன்னைக் காட்டிக் கொள்ளும், மத்திய அரசின் மீது மிகுந்த சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. இதுபோன்ற நடைமுறை சிக்கல்களை ஆட்சியாளர்கள் விரைவாக சரிபடுத்தி, இந்த சட்டம் கொண்டு வரப்பட்டதற்கான நோக்கத்தை நோக்கி பயனிக்கும் வகையில் தங்களது செயல்பாடுகளை மாற்றியமைப்பார்களா? என்பதற்கான பதிலை சில ஆண்டுகள் கழித்தே நாம் அறிய முடியும்.

அடிப்படை கட்டமைப்புகளையே உருவாக்காமல் ஒரு சட்டம் இயற்றப்பட்டு இரண்டு ஆண்டு காலம் பூர்த்தியான பிறகும் அதை நடைமுறைக்கு கொண்டு வர எந்தவித முன்னேற்றமும் இல்லாத நிலை. ஆம் நிச்சயமாகவே நம்மை “மக்கள் நல அரசு” தான் ஆட்சி செய்கிறது.

-இ. இ. இராபர்ட் சந்திரகுமார்