Monday, August 23, 2010

ஆனந்த சுதந்திரம்... ...அடைந்து விட்டோமா?

இந்தியாவின் 63வது சுதந்திர தினத்தை கொண்டாடும் சூழலில், இந்த சுதந்திரம் அனைத்து இந்தியர்களுக்கும் பயன் அளித்திருக்கிறதா என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. ஊழலில் திளைக்கும் அரசியல் சூழலையும், நிராதரவாக நிற்கும் ஏழை – பாமர குடிமக்களையும் பார்க்கும்போது இது குறித்தெல்லாம் இந்திய விடுதலைப் போராளிகள் சிந்தித்து இருப்பார்களா? என்று தோன்றலாம்.

ஆனால் இந்திய அரசியலமைப்புச் சட்ட வரைவுக்குழுவின் தலைவர் டாக்டர் பி. ஆர். அம்பேத்கார் மிகுந்த தொலைநோக்குடன் இந்தியாவின் இன்றைய நிலை குறித்து சிந்தித்ததுடன் அதை பதிவும் செய்திருக்கிறார்.

இந்திய அரசியலமைப்புச் சட்ட வரைவுக்குழுவின் கூட்டத்தில் 1949ம் ஆண்டு நவம்பர் 25ம் தேதி உரையாற்றிய அறிஞர் அம்பேத்கார், இன்றைய இந்தியாவின் நிலை குறித்து தமது ஐயங்களை மிகத்தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.

“1950 ஜனவரி 26ம் தேதி முதல் இந்தியா மக்களாட்சி நாடாக செயல்பட தொடங்கும். அதாவது மக்களுக்காக, மக்களால், மக்கள் அரசு செயல்படத் தொடங்கும். அந்த நாளில் முரண்பாடுகளோடு கூடிய வாழ்விற்குள் நாம் நுழைய இருக்கிறோம். நம்மிடம் அரசியல் ரீதியான சமத்துவம் இருக்கும். ஆனால் சமூக – பொருளாதார ரீதியான சமத்துவம் இருக்காது. அதற்கு பதிலாக சமூக – பொருளாதார நிலையில் இந்தியர்களிடம் ஏராளமான முரண்பாடுகளும், ஏற்றத்தாழ்வுகளும் இருக்கும்.”

“எவ்வளவு நாட்களுக்கு இவ்வாறு சமூக – பொருளாதார முரண்பாடுகளோடும், ஏற்றத்தாழ்வுகளோடும் நம்மால் வாழ முடியும்? சமூக – பொருளாதார நிலைகளில் சமத்துவத்தை எவ்வளவு நாட்களுக்கு மறுக்க முடியும்? சமூக – பொருளாதார சமத்துவம் தொடர்ந்து மறுக்கப்பட்டால், அதனால் பாதிக்கப்படுபவர்கள் செயலற்று, சும்மா இருந்து விட மாட்டார்கள். இந்திய அரசியலமைப்புச் சட்ட வரைவுக்குழு அரும்பாடுபட்டு உருவாக்கிய இந்த அரசியல் ஜனநாயக அமைப்பை, இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் சுக்குநூறாக தகர்த்து எறிவார்கள்!” என்று மாமேதை அம்பேத்கார் தீர்க்கதரிசனத்துடன் இன்றைய இந்தியாவின் நிலையை அன்றே முன்னறிவித்தார்.

இந்த நிலை வந்துவிடக்கூடாது என்பதற்காகவே இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் நான்காவது பகுதியாக “அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறைகள்” என்ற தலைப்பில் தொகுத்தார். இந்த நெறிமுறைகளை இந்திய அரசியல் தலைவர்கள் ஏற்றுக்கொண்டு செயல்படுத்துவார்கள் என்று நம்பினார். எனினும் பிறந்து சில காலமே ஆன இந்திய குடியரசின் தோள்களில் கூடுதல் சுமையை ஒரேயடியாக சுமத்தக்கூடாது என்ற அடிப்படையில், “அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறை”களை நடைமுறைப்படுத்துவதற்கான காலக்கெடு எதனையும் அவர் விதிக்க விரும்பவில்லை. மேலும் இதில் கூறப்பட்டுள்ள விடயங்களை அரசு உடனடியாக வலியுறுத்தி குடிமக்கள் வழக்கு தொடுப்பதற்கும் வகையில்லாத நிலையில் இந்த அத்தியாயத்தை படைத்தளித்தார். ஆனாலும் “அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறைகள்” என்ற அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ள மக்கள் நலத்திட்டங்களை அம்ல்படுத்தாமல் புறக்கணிக்கும் அரசியல் கட்சிகளையும், தலைவர்களையும் மக்கள் புறக்கணிப்பார்கள் என்று அம்பேத்கார் எச்சரித்தார்.

இந்திய அரசியல்வாதிகளைப்பற்றி அம்பேத்கார் கொண்டிருந்த ஐயம் நியாயமானதே என்று காலம் நிரூபித்துக் கொண்டிருக்கிறது.

நாட்டின் இயற்கை வளங்களை சூறையாடுதல்; இவற்றை பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்த்தல்; ஏழை, பாமர, உழைக்கும் மக்களை ஏமாற்றி, அவர்களின் உடைமைகளை, உழைப்பை சுரண்டுதல்; தொழிலாளர்கள், பணியாளர்களின் உடல் நலம் குறித்து அக்கறையற்று இருத்தல்; குழந்தைகளுக்கு கல்வி மறுத்து அவர்களையும் உடல் உழைப்பு தொழிலாளிகளாக்குதல்; கல்வி, வேலை வாய்ப்பை மறுத்தல்; தொழிற்சாலை நிர்வாகத்திலிருந்து தொழிலாளர்களை அகற்றுதல்; பட்டியல் இனமக்களையும், பழங்குடியினரையும் ஏமாற்றி வஞ்சித்து சமூக அநீதி புரிதல்; சுயச்சார்பு வேளாண்மையை திட்டமிட்டு அழித்து இந்திய விவசாயத்தை பன்னாட்டு நிறுவனங்களின் வேட்டைக் காடாக்குதல்; சுற்றுச்சூழலை, வனங்களை, வன உயிரிகளை பாதுகாப்பதற்கு பதிலாக அவற்றை திட்டமிட்டு அழித்தல்; சுயேச்சையாக செயல்படவேண்டிய நீதித்துறையை அரசு நிர்வாகத்தின் ஒரு பகுதியாக மாற்றியமைத்தல் ஆகிய மக்கள் விரோத பணிகளையே இந்தியாவை இதுவரை ஆட்சி செய்த அனைத்து அரசுகளும் தொடர்ந்து செய்து வருகின்றன.

அரசின் மேற்கண்ட நடவடிக்கைகளால் நாட்டில் வசிக்கும் அனைத்து தரப்பினரும் ஏதோவொரு விதத்தில் பாதிக்கப்பட்டிருப்போம். ஆனால் மிக மோசமாக பாதிக்கப்படுபவர்கள் பழங்குடி இனத்தவரும், பட்டியல் இனத்தவருமே

சத்தீஷ்கர், ஜார்கண்ட், ஓரிஸா, ஆந்திரம், மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் பழங்குடி மக்கள் அதிகம் வசிக்கும் மலை மற்றும் வனப்பகுதிகளில் இரும்புத்தாது, செம்பு, தங்கம், வைரம், அலுமினியம், பாக்சைட், நிலக்கரி, சிலிகா, கிரானைட் போன்ற அரிய கனிம வளங்கள் ஏராளமாக உள்ளன. இந்த இயற்கை வளங்களை சூறையாடும் வணிக நிறுவனங்களுக்கு விற்பனை செய்யவும் அரசு அமைப்புகள் முனைந்து நிற்கின்றன.

இப்பகுதி மக்களுக்கு தேவையான எந்த அடிப்படை வசதியையும் செய்து தராத அரசு அமைப்புகள் இம்மக்களின் வாழ்வுரிமையை பறித்தெடுப்பதில் முனைந்து நிற்கின்றன.

இதைப் புரிந்து கொண்டால் இந்தியாவில் தீவிரவாதம் உருவாவதற்கு மத்திய, மாநில அரசுகளின் நடைமுறைகளே காரணம் என்பது விளங்கும்.

---
“இந்தியாவின் பழங்குடி சகோதரர்களும், சகோதரிகளும் மிகநீண்ட காலமாகவே அரசு நிர்வாகம் என்பதை அராஜக நடைமுறைகளும், ஆதிக்க மனோபாவமும் கொண்ட வனத்துறை அதிகாரியாக – கொடூரமான மிருகத்தன்மை கொண்ட காவல்துறை அதிகாரியாக – பேராசை படைத்த நிலவரி வசூலிக்கும் அதிகாரியாக மட்டுமே பார்த்து வந்துள்ளனர். அரசின் நலத்திட்டங்கள் எதுவும் இம்மக்களை சென்றடையவில்லை. மாறாக வளர்ச்சித்திட்டங்கள் என்ற பெயரில் இம்மக்களின் வாழ்வுரிமை பறிக்கப்பட்டே வந்துள்ளது!” என்று வி.ஐ.பி. ஒருவர் அண்மையில் கருத்து தெரிவித்துள்ளார்.

அந்த வி.ஐ.பி., அருந்ததி ராய் போன்ற எழுத்தாளரோ, மாவோயிஸ்ட் இயக்கத் தலைவர்களோ, மனித உரிமை ஆர்வலர்களோ இல்லை.

இறையாண்மை கொண்ட இந்திய அரசின் பிரதமர் மாண்புமிகு மன்மோகன் சிங் அவர்கள்தான் மேற்சொன்ன கருத்துகளை, ஒப்புதல் வாக்குமூலமாக கூறியுள்ளார். மாவோயிஸ்ட்களால் வளர்ச்சித்திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் மாநிலங்களை சேர்ந்த முதலமைச்சர்கள் ஆலோசனைக்கூட்டம் கடந்த 2010 ஜூலை 14ம் தேதி டெல்லியில் நடந்தது. அந்தக் கூட்டத்தில் உரையாற்றிய திருவாளர் மன்மோகன் சிங் அவர்கள்தான் மேற்கூறிய ஒப்புதல் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளார். ஆனால் இதை மாற்றுவதற்கான ஆக்கப் பூர்வமான வழிகள் எதுவும் ஆலோசிக்கப்பட்டதாக தெரியவில்லை. அதற்கு பதிலாக ஆயுதப்படைகளை அதிகரிக்கும் போக்கே நிலவி வருகிறது.

இந்திய சுதந்திர போராளிகளின் கனவுகளை, அம்பேத்காரின் திட்டங்களை தவிடுபொடியாக்கி, தீவிரவாதத்திற்கு வித்திட்டு, நீர் வார்த்து, உரமிட்டு வளர்த்தவர்கள் அதற்கான காரணங்களை அறிந்தும், அது குறித்து முழுமையா ஆய்வு செய்யாமல் கலைந்து சென்றனர்.

---

ஒரிஸா மாநிலம் சுந்தர்கார் மாவட்டத்தில் ஏராளமான நிலக்கரி வளம் உள்ளது. இம்மாவட்டத்தில் உள்ள சுமார் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலங்களை கடந்த 1987ம் ஆண்டு மத்திய அரசு கையகப்படுத்தியது. இந்தியாவின் நவரத்தினங்கள் என்று கூறப்படும் மிகச்சிறந்த நிறுவனங்களி்ல் ஒன்றான இந்திய நிலக்கரி நிறுவனத்தின் துணை நிறுவனமான மகாநதி கோல்ஃபீல்ட்ஸ் நிறுவனத்திடம் இந்த நிலங்கள் ஒப்படைக்கப்பட்டன.

இப்பகுதி மக்களுக்கு உரிய இழப்பீடும், மாற்று குடியிருப்பு வசதிகள், சாலை போன்ற அடிப்படை வசதிகள், கல்வி – மருத்துவம் போன்ற அத்தியாவசிய வசதிகள், வேலைவாய்ப்பு போன்றவை செய்து தருவதாக வாக்குறுதி கொடுக்கப்பட்டது.

அப்பகுதி மக்கள், விவசாயத்தை புறக்கணிக்க நிர்பந்தம் செய்யப்பட்டனர். அவர்களின் வாழ்விடங்களிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். அவர்களது நிலங்களில் புழங்கும் உரிமை ஆயுத முனையில் பறித்தெடுக்கப்பட்டது. அத்துமீறுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட்டனர்.

ஆனால் அரசு வாக்குறுதி வழங்கியபடி இழப்பீடோ, மற்ற வசதிகளோ இந்த கட்டுரை எழுதப்படும் இன்றுவரை செய்து தரப்படவில்லை. நாட்டின் வளர்ச்சிக்காக தங்கள் வாழ்வாதாரங்களை தியாகம் செய்துவிட்டு, சொந்த நாட்டிலேயே அகதிகளாக நின்ற அம்மக்கள் ஒரிஸா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மிக நீண்டகாலம் நடைபெற்ற வழக்கில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று ஒரிஸா உயர்நீதிமன்றம் கடந்த 2006ம் ஆண்டு தீர்ப்பளித்தது. சுமார் 20 ஆண்டுகள் வாழ்விழந்து தவித்த அம்மக்களுக்கு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ஏற்க மறுத்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது மகாநதி கோல்ஃபீல்ட்ஸ் நிறுவனம்.

இந்த மேல்முறையீட்டு மனுவை மூன்று ஆண்டுகள் நிலுவையில் வைத்திருந்து விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த கடந்த 2010 ஜூலை 19ம் தேதியன்று தீர்ப்பளித்தது. இந்த கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்டுள்ள அம்பேத்காரின் கருத்துகளுடன் தீர்ப்பை ஆரம்பித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அஃடாப் ஆலம் மற்றும் பி. எஸ். சவுகான் ஆகியோர் ஒரிஸா உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்துள்ளனர்.

இலட்ச கணக்கான இந்தியர்களின் அடிப்படை வாழ்வுரிமைகளை பறித்து இந்திய அரசு உருவாக்குவதாக கூறும் துர்வளர்ச்சி காரணமாக, குடிமக்களுக்கு வளர்ச்சி என்ற சொல்லே வெறுக்கக்கூடியதாக, அச்சமூட்டக்கூடியதாக மாறிவிட்டதை நீதிபதிகள் இந்த தீர்ப்பில் சுட்டிக்காட்டுகின்றனர். மேலும் அரசின் இவ்வாறான ஒவ்வொரு பொறுப்பற்ற செயல்பாடும் தீவிரவாத அரசியலுக்கும், புரட்சிகர செயல்பாடுகளுக்கும் வித்திடுவதையும் நீதிபதிகள் குறிப்பிட்டு காட்டுகின்றனர்.

மாபெரும் தொழில்திட்டங்களுக்காக கட்டாயமாக இடம் பெயர்க்கப்படும் மக்களுக்கு தேவையான சாலை, மருத்துவம், கல்வி, வேலைவாய்ப்பு போன்ற வாக்குறுதிகள் காற்றில் பறக்கவிடப்படும் அவலத்தையும் நீதிபதிகள் இந்த தீர்ப்பில் பதிவு செய்துள்ளனர்.

இவ்வாறு சமூக அவலத்தை விமரிக்கும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் இதற்கான காரணத்தையோ, தீர்வுகளையோ முழுமையாக விவாத்தித்தார்களா என்பது கேள்வியே

மாமேதை அம்பேத்காரின் தீர்க்கதரிசனம், பிரதமர் மன்மோகன் சிங்கின் ஒப்புதல் வாக்குமூலம், உச்சநீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்பு ஆகிய அனைத்தும் நாட்டில் தீவிரவாதம் உருவாவதற்கான காரணங்களை தெளிவாக எடுத்துக்கூறுகின்றன. ஆனால் இவற்றை திரும்பியும் பாராமல் தீவிரவாதிகளை ஒடுக்கவதற்காக பசுமை வேட்டை போன்ற ஆட்கொல்லித் தீர்வுகளை அரசு அமைப்புகள் முன்வைக்கின்றன.

இந்த அவலச் சூழலில் இந்தியாவின் 63வது சுதந்திர தினம் கொண்டாடப் படுகிறது. சுயேச்சையாகவும், நேர்மையாகவும் செயல்பட வேண்டிய பத்திரிகைத்துறையும், நீதித்துறையும் கண்ணுக்குத் தெரியாத கட்டுப்பாடுகளுக்குள் சிக்கியிருக்கின்றன.

நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள அனைத்து மக்களும் ஏதோவொரு சுரண்டலுக்கு ஆளாகியே வாழ்ந்து வருகின்றனர்.

இதுதான் ஆனந்த சுதந்திரமா? இதற்குத்தான் சுதந்திரப் போராளிகள் ஆசைப்பட்டனரா? சுதந்திரப் போராளிகளின் கனவுகளை நனவாக்குவதில் குடிமக்களுக்கு பங்கு உள்ளதா?


இந்தியாவின் இன்றைய அவல நிலையை மாற்றுவதில் இந்தியாவின் குடிமக்கள் அனைவருக்கும் பங்குள்ளது. இந்திய அரசியல் சட்டத்தை மனித உரிமைப் பார்வையில் கற்றுக் கொள்வதும், மற்றவர்களுக்கு கற்றுக்கொடுப்பதுமே இன்றைய தேவை. இது ஆட்சித்துறை, நீதித்துறை, ஊடகத்துறை உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் மிகமுக்கிய தேவையாகும்.

இவ்வாறு கற்றுக்கொண்ட அரசியல் அமைப்புச் சட்டத்தின் கோட்பாடுகளை நடைமுறைப்படுத்துமாறு அரசு அமைப்புகளை தொடர்ந்து வலியுறுத்துவதும், தேவையான இடங்களில் போராடுவதுமே இந்திய சுதந்திரப் போராளிகளின் கனவுகளை நனவாக்கும். இல்லாவிட்டால் ஆகஸ்ட் 15 என்பது மூவண்ண கொடியேற்றும் ஒரு விடுமுறை நாளாக மட்டுமே இருக்கும். 

-பி. சுந்தரராஜன்
(sundar@LawyerSundar.net)

நன்றி: சட்டப் பாதுகாப்பு, ஆகஸ்ட்-2010

Saturday, August 21, 2010

பெண்ணுரிமையும், திருமண வயதும் ..!

குடும்ப அமைப்புமுறையை சிறந்ததொரு முன்மாதிரியாக, உலக நாடுகளிடம் தொடர்ந்து பறைசாற்றிவரும் இந்தியாவில், திருமணங்களின் பங்கு முக்கிய இடத்தை வகிக்கிறது. திருமணபந்தமானது, நெடுங்காலமாக இந்திய பெண்களின் வாழ்வில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்த அடிப்படையில் பெண்ணுரிமைக்கும் திருமணத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.



ஆனால், திருமணம் தொடர்பாக பொதுவான சட்டம் ஏதும் இந்தியாவில் இயற்றப்படவில்லை. மாறாக மொழி, இனம், ஜாதி, சமயம், கலாச்சாரம், பண்பாடு, மாநிலம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களின் அடிப்படையில் திருமணம் தொடர்பான சடங்குகள் வேறுபடுகின்றன. எனவே மதங்களை அடிப்படையாகக் கொண்டு, தனித்தனியாக திருமணச் சட்டங்கள் இயற்றப்பட்டு, அவைகளே நடைமுறையில் உள்ளன.

திருமணம் என்பது கிறித்தவம், இந்து மற்றும் இசுலாம் போன்ற மதங்களைப் பொறுத்தவரையில் ஒரு சமயச் சடங்காகவே கருதப்படுகிறது. இதன் காரணமாகவே இன்றைய சமூகத்தில் கொடுமையான நிகழ்வுகளில் ஒன்றாகக் கருதப்படுகிற குழந்தைத் திருமண முறையானது, வெகுகாலமாகவே நம் சமூகத்தில் தொடர்ந்து நடைமுறையில் இருந்து வருகிறது.

“சமூக சீர்திருத்தத்தின் தந்தை” என அழைக்கப்பட்ட, இராஜா ராம்மோகன்ராய் 1828ம் ஆண்டில் உருவாக்கிய பிரம்ம சமாஜம் என்ற அமைப்பின் வாயிலாக, குழந்தைத் திருமண முறையை எதிர்த்தல், பெண் கல்வி, விதவை மறுமணம், சாதி மறுப்புத் திருமணம் மற்றும் பெண் விடுதலையை ஆதரித்தல், பலதார மணம் மற்றும் பர்தா முறையை ஒழித்தல் போன்ற சமூக சீர்திருத்தப் பணிகளை மேற்கொண்டார். மேலும் தனது சிறு வயதில், தம்மிடம் மிகுந்த அன்பு செலுத்திய தனது மூத்த சகோதரனின் மனைவி, அவரது கணவனின் மறைவுக்குப்பிறகு உறவினர்களால், வலுக்கட்டாயமாக உடன்கட்டை ஏற்றி கொலை செய்யப்பட்டதைக் கண்டதால் மிகவும் மனமொடிந்து போனார். இக்கொடிய நிகழ்வினை ஒழிக்கவேண்டி அவர் தொடர்ந்து பணியாற்றியதன் விளைவாகவே, 1829ம் ஆண்டில் வில்லியம்பெண்டிங் பிரபுவால், ‘‘சதி எனும் உடன்கட்டை ஏறுதல் முறை ஒழிப்புச்சட்டம்’’ இயற்றப்பட்டது.

இவரைத் தொடர்ந்து பொறுப்புக்கு வந்த, கேசவ சந்திர சென்னின் முயற்சியால் 1872ம் ஆண்டு, “சிறப்புத் திருமண சட்டம்” கொண்டுவரப்பட்டது. இச்சட்டம் சாதி மறுப்புத் திருமணம் மற்றும் விதவை மறுமணம் போன்ற சமூக சீர்திருத்த நிகழ்வுகளை ஆதரித்தது. மேலும் அச்சட்டத்தின்படி, குழந்தைத் திருமணமும், பலதார மணமும் ஒழிக்கப்பட்டது.

சட்டங்கள் பல இயற்றப்பட்டாலும், சமூகத்தில் குழந்தைத் திருமண முறையானது தொடர்ந்து நீடிக்கவே செய்தது. இன்றளவும் சமூகத்தில் அரசியல், சட்டம், சுதந்திரம், சமூகநீதி உள்ளிட்ட பல்வேறு தளங்களில் முன்மாதிரியாக விளங்கும், தேசப்பிதா என அழைக்கப்படும் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி 1883ல் தனது 13ஆவது வயதில் 13 வயதே கஸ்தூரிபா அவர்களையும், மகாகவி சுப்பிரமணிய பாரதியார் 1897ல் தனது 14ஆவது வயதில் 7 வயதே ஆன செல்லம்மா அவர்களையும், பெரியார் ஈ.வெ. இராமசாமி 1898ல் தனது 19ஆவது வயதில் 13வயதே ஆன நாகம்மை அவர்களையும், இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் தந்தை டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் 1906ல், தனது 15ஆவது வயதில் 9 வயதே ஆன இராமாபாய் அவர்களையும் திருமணம் செய்துகொண்டார்கள். இப்படியாகக 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பகாலம் வரையிலும், குழந்தைத் திருமண முறையானது நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இயல்பான ஒன்றாகவே விளங்கியிருக்கிறது என்பது இதன் மூலமாகப் புலனாகிறது.

இதுபோன்ற பல்வேறு காரணங்களால், 1929ம் ஆண்டு, “குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம்” கொண்டுவரப்பட்டது. இச்சட்டத்தின்படி, முதல் முறையாக பெண்ணின் திருமண வயது 14 என்று வரையறை செய்யப்பட்டது. இச்சட்டத்தில் 1940ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட திருத்தத்தின் வாயிலாக, பெண்ணின் திருமண வயது 15 என்றும், 1978ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட திருத்தத்தின் வாயிலாக, பெண்ணின் திருமண வயது 18 என்றும் உயர்த்தப்பட்டது. 18க்கும் குறைவான வயதுடைய பெண்ணைத் திருமணம் செய்துகொடுக்கும் பெற்றோர்கள் மற்றும் அதற்குத் துணைபுரியும் உறவினர்கள், இச்சட்டத்தின் கீழ் தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள்.

“குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம், 1929”க்குப் பதிலாக, 2006ஆம் ஆண்டில், “குழந்தைத் திருமண தடைச் சட்டம்” கொண்டுவரப்பட்டது. இச்சட்டத்தின்படி பெண்ணின் திருமண வயது 18 என்று உறுதி செய்யப்பட்டது. ஒருவேளை குழந்தைத் திருமணம் ஏற்கனவே நடந்திருந்தால், திருமணமான பெண் தனது 18 வயதை அடைந்ததிலிருந்து 2 ஆண்டுகளுக்குள், அந்த திருமணம் குறித்து நீதிமன்றத்தில் மனு செய்தால், அந்த திருமணமானது செல்லாது என்று நீதிமன்றம் அறிவிப்பு செய்யும். ஏற்கனவே நடந்த திருமணத்தின் வாயிலாக குழந்தை ஏதேனும் பிறந்திருந்தால், அந்த குழந்தைக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்படும். குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம், 2005ல் கூறப்பட்டுள்ளது போல, தேவையின் பொருட்டு அந்த பெண்ணிற்கு அவரது கணவன் அல்லது பெற்றோர் பராமரிப்புத் தொகையும், ஊக்கத்தொகையும் மற்றும் தேவையினைப் பொருத்து குடியிறுப்பு வசதியும் ஏற்பாடு செய்துகொடுக்க வேண்டும்.

“இந்துத் திருமண சட்டம்” 1955ன் படியும், பெண்ணின் திருமண வயது 18 என உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரிவு 7அ வின் படி, சுயமரியாதை மற்றும் சீர்திருத்தத் திருமணங்களுக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இன்றளவும் “இந்திய தண்டனைச் சட்டம், 1860” ஆனது, பெண்ணானவள் ஆணின் சொத்து என்றே கருதுகிறது. இந்திய அரசியலமைப்பு சாசனம், 1950” பிரிவு 21ன் படி, வாழ்வுரிமையானது நாட்டின் குடிமக்கள் அனைவருக்கும் உத்தரவாதபடுத்தப் பட்டுள்ளது. உறிய வயதை அடைவதற்கும் முன்பாகவே திருமணம் செய்வதன் மூலமாக, மகப்பேறு காலத்தில் போதிய அளவுக்கு உடல் வளர்ச்சியடையாமல் இருக்கும் காரணத்தால், தாய் மற்றும், கருவின் உயிருக்குப் பாதுகாப்பற்ற நிலையே நிலவுகிறது.

18 வயதுக்கு முன்பாகத் திருமணம் செய்து கொடுப்பதன் மூலமாக இந்திய அரசியலமைப்பு சாசனத்தில் அடிப்படை உரிமையாக உறுதி செய்யப்பட்டுள்ள, தான் விரும்பியவரையே தன் வாழ்க்கைத்துணையாகத் தேர்ந்தெடுக்கும் உரிமையும், குழந்தைப்பருவத்தை அனுபவிக்கும் உரிமையும், பள்ளி மற்றும் கல்லூரியில் இடைநிறுத்தம் ஏற்படுவதன் மூலமாகக கல்விபெறும் உரிமையும் பறிக்கப்படுகிறது.

2005ம் ஆண்டின், மத்திய ‘மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின்’ தேசிய செயல்திட்டத்தின் ஒரு இலக்கானது, 2010ஆம் ஆண்டுக்குள் குழந்தைத் திருமணமுறைக்கு முழுமையாக முடிவுகட்டுதல் என்பதாகும். ஆனால் தற்போது 2010ல் பாதி ஆண்டை கடந்துவிட்டோம். குழந்தைத் திருமணமுறை இன்னமும் தொடர்ந்த வண்ணமே உள்ளது. இலக்கு மட்டும் திட்ட வடிவில் அப்படியே உள்ளது.

‘அய்.நா.வின் சிறுவர் நிதியம்’ என்ற அமைப்பு 2009ம் ஆண்டில் பெண் குழந்தைகளின் நிலை குறித்து மேற்கொண்ட ஆய்வில், உலகில் மகப்பேறு காலத்தில், 20 முதல் 24 வயதையுடைய தாய்மார்களின் இறப்பு விகிதத்தில் இந்திய பெண்கள் 47% பேர். அதில் 18 வயதை அடைவதற்கு முன்பே திருமணம் முடித்தவர்களில் 56% பேர் இந்திய கிராமங்களைச் சேர்ந்தவர்களாவார்கள். வாழ்க்கையின் போக்கை உணர அதற்குரிய வயதை அடையவேண்டியது அத்தியாவசியமானது ஆகும். அறியாப்பருவத்தில் நடக்கும் திருமணத்தால் மனமும், உடலும் பாதிப்புக்குள்ளாகும் என்பது இயற்கையானதாகும்.

150 ஆண்டுகளுக்கு முன்பாக இயற்றப்பட்ட, இந்திய தண்டனைச் சட்டம், 1860ன் ‘பிறன்மனைப் புணர்தல்’ குறித்துக் கூறும் பிரிவு 497 ஆனது, பெண் என்பவள் ஆணின் சொத்து என்ற பொருள்படக் கூறுகிறது. இந்த பிரிவின் படி, பிறன்மனைப் புணர்தல் சந்தர்பத்தில் அந்த மனைவி உடந்தைக் குற்றவாளியாகத் தண்டிப்பதற்கு உரியவராக மாட்டார். தொடர்புடைய மனைவிக்கு வழக்கு தொடுக்கும் உரிமை ஏதும் கிடையாது என்றும் ஆணுக்கு மட்டுமே வழக்கு தொடுக்கும் உரிமையானது உள்ளது என்றும் கூறுகிறது.

பெண்ணின் திருமண வயது 18 என உறுதி செய்யப்பட்டுள்ள சூழலில், பிரிவு 375ன் 5ஆவது உள்விதியானது, 16 வயதுக்குட்பட்ட பெண்ணின் சம்மதத்துடன் அல்லது சம்மதமின்றி உடலுறவு கொண்டால்தான் அது ‘வன்புணர்ச்சி’ என்று கூறுவதோடு மட்டுமின்றி, ஒருவர் தம் மனைவியோடு, அந்த மனைவி 15 வயதுக்குட்பட்டவாராக இல்லாதபோது கொள்ளும் உடலுறவு, வன்புணர்ச்சி அல்ல என்றும் கூறுகிறது.

‘வன்புணர்ச்சிக்கான தண்டனை’ குறித்துக் கூறும் பிரிவு 376 ஆனது, வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்ட பெண்ணானவர், அதைச்செய்தவரின் சொந்த மனைவியாகவும், 12 வயதிற்கும் கீழ்படாதவராகவும் இருந்தால், அதில் ஈடுபட்ட எவருக்கும் 2 ஆண்டுகள் சிறைதண்டனை மற்றும் அபராதமும் மட்டுமே விதிக்கப்படும் என்று கூறுகிறது. அவ்வாறு இல்லாத பட்சத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என கூறுகிறது. இதன்படி பார்த்தால் குழந்தைத் திருமண முறையும், திருமணம் வாயிலான வன்புணர்ச்சியும் இங்கே சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது.

2008ஆம் ஆண்டின், கட்டாய திருமணப் பதிவு தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பு, ஒவ்வொரு மாநிலத்திலும் முறையாக அமலாக்கம் செய்யப்பட வேண்டும். பொதுவாகவே திருமணப் பதிவின் போது வயது சான்றிதழ் சமர்பிக்க வேண்டிய தேவை உள்ளது. இதன் மூலமாய் குழந்தைத் திருமண முறையானது சட்ட ரீதியாக கண்காணிப்பிற்கு உள்ளாக்கப்படும். “குழந்தைத் திருமண தடைச் சட்டம்-2006” மதச்சார்பான சட்டங்களின்படி நடக்கும் திருமணங்களைக் குறித்துத் தெளிவாக எதுவும் கூறவில்லை. குழந்தைத் திருமணம் செல்லாது என சட்டத்தில் தீர்க்கமாக அறுதியிட்டுக் கூறுவதற்குப் பதிலாக, பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்ட பெண்ணே மனு செய்து, அத்திருமணத்தைச் செல்லாது என அறிவிப்பு செய்ய வேண்டும் என போராட வேண்டிய சூழலே நிலவுகிறது.

உரிய வயதை அடைந்த பிறகு, ஏற்கனவே நடந்த திருமணமானது செல்லாது என்று அறிவிக்க சமூகத்தில் பெண்களுக்கு இயல்பாக இருக்கும் தயக்கத்தை தவிர்க்கவும், அவர்களை திடப்படுத்தி ஊக்குவிக்கவும் அரசு வழிவகைகளை மேற்கொள்ள வேண்டும். இது போன்ற சட்டத்திருத்தங்கள் கொண்டுவரப்படுவதன் மூலமாகவும், குழந்தைத் திருமணம் தொடர்பான நிகழ்வுகள் உறுதிபடுத்தப்படும் சூழல்களில், அதற்கான தண்டனைகள் கடுமையாக்கப்படுவதன் வாயிலாகவும்தான், சட்ட ரீதியாக பெண்களுக்கான உரிமைகள் முழுமையாக உத்தரவாதபடுத்தப்படும்.

- இ.இ.இராபர்ட் சந்திரகுமார்
( robertckumar@gmail.comஇம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் )