பி.டி. பருத்தி, பி.டி.கத்திரிக்காய் என்று மரபணு மாற்ற விதைகளை மத்திய, மாநில அரசுகள் மக்கள் மீது திணிப்பதனால் நமது நாட்டின் உணவுச் சுதந்திரமும், பாதுகாப்பும் பறிக்கப்படுகிறது என்று இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் கூறினார்.
webdunia photo
WD
சென்னையில் மனித உரிமை, சுற்றுச் சூழல் நீதிக்கான வழக்கறிஞர்கள் மையம் ஏற்பாடு செய்த ‘மரபணு மாற்ற விதைகளும் இந்திய விவசாயிகள் எதிர்கொள்ளவிருக்கும் சட்டச் சிக்கல்களும்’ என்ற கலந்தாய்வில் பங்கேற்றுப் பேசிய நம்மாழ்வார், மரபணு மாற்றப்பட்ட (பி.டி.) கத்திரிக்காய்க்கு மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது நமது நாட்டின் மீதான இரண்டாவது காலனி ஆதிக்கம் என்றும், அதனை எதிர்த்து நாம் போராட வேண்டும் என்றும் கூறினார்.
எந்த ஒரு பயிரானாலும் அதன் தன்மையை நிர்ணயிப்பது அது விளைவிக்கப்படும் மண்தான் என்றும், அதனால்தான் நமது நாட்டில் விளைவிக்கப்படும் சிறப்பான பயிர்கள் பலவும் அது விளையும் இடத்தின் பெயரோடு சேர்த்து அழைக்கப்படுவதை சுட்டிக்காட்டிய நம்மாழ்வார், அப்படிப்பட்ட பயிரின் இயற்கையான பன்முகத் தன்மையை பி.டி. கத்திரிக்காய் போன்ற மரபணு மாற்றப்பட்ட விதைகள் அழித்துவிடும் என்று எச்சரித்தார்.
“ஒரு இடத்தில் விளையும் பயிர் அந்தச் சமூகத்தின் சொத்து, அதனை இப்படிப்பட்ட மரபணு மாற்ற விதைகளைத் திணிப்பதன் மூலம் அழிப்பது, இயற்கையின் அடிப்படையான உயிரியல் பரவலை திட்டமிட்டு அழிக்கும் செயலே” என்று கூறிய நம்மாழ்வார், நாகை மாவட்டத்தில் பரவலாக மக்கள் வாங்கும் பொய்யூர் கத்திரிக்காய், அந்த ஊரில் பயிரிட்டால் மட்டுமே அந்த சுவையை அளிக்கும் என்றும், அதனை வேறிடத்தில் பயிரிட்டால் அந்தத் தனிச் சுவை இல்லாமல் போகும் என்றும், வேலூர் எண்ணெய்க் கத்திரிக்காய் (முள்ளு கத்திரிக்காய் என்றும் கூறுவார்கள்) அவ்விடச் சிறப்பின் விளைவே என்றும், இதுவே உயிர்ப் பரவலின் உன்னதமான சிறப்பு என்றும் கூறினார்.
நமது நாட்டின் பல்வேறு பகுதிகளில் இப்படி சிறப்பாகப் பயிரிடப் பொருட்களை அனைத்தையும் அழிக்கும் திட்டத்துடனேயே மரபணு மாற்ற விதைகள் வேகமான திணிக்கப்படுகின்றன என்றும், அதற்கு அரசுகள் மாத்திரமின்றி, வேளாண் பல்கலைக் கழகங்களும் அறமின்றித் துணை போகின்றன என்றார் நம்மாழ்வார்.
இலாப நோக்கை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு, விவசாயத்தை வணிகமயமாக்கும் பன்னாட்டு ஆய்வு நிறுவனங்களுக்கு விவசாயத்தை ஏக போக உரிமையாக்கும் வழிமுறையே காப்புரிமை சட்டம் என்று சாடிய நம்மாழ்வார், இப்படிப்பட்ட நிறுவனங்களுக்கு நமது நாட்டின் அரசுகள் கதவு திறந்துவிட்டால் நமது உணவுப் பாதுகாப்பிற்கு என்ன உத்தரவாதம் என்று கேள்வி எழுப்பினார்.
WD
பி.டி. கத்திரிக்காய் பயன்பாட்டை ஆதரித்து தமிழக வேளாண் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் சட்டப் பேரவையில் பேசும்போது, அந்த விதைகளை பயிரிட்டு அதிலேதும் குளறுபடி ஏற்பட்டால் நீதிமன்றத்திற்குப் போகலாம் என்று கூறுவது அவரின் தெளிவின்மையையே காட்டுகிறது என்று கூறிய நம்மாழ்வார், மரபணு மாற்றப்பட்ட விதைகளை அனுமதித்துவிட்டால் பிறகு நமது விவசாய உரிமையை மீட்க முடியாது என்றும், அதனை நுழைய விடாமல் தடுப்பதே முக்கியம் என்று வலியுறுத்தினார்.
பி.டி. விதைகளை நாட்டிற்குள் அனுமதிப்பது நமது உணவை நாம் தேர்வு செய்யும் சுதந்திரத்தை அடியோடு அழித்துவிடும் என்றும் நம்மாழ்வார் எச்சரித்தார்.
1960களில் மேற்கொள்ளப்பட்ட பசுமைப் புரட்சியின் காரணமாகத்தான் இந்தியாவின் உணவுப் பற்றாக்குறை தீர்க்கப்பட்டது என்று பிரபல வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் கூறியது குறித்து கேள்வி கேட்டதற்கு, அது தவறான தகவல் என்றும், பசுமைப் புரட்சியால் உணவுப் பற்றாக்குறை தீர்ந்தது என்றால், பி.எல். 420 திட்டத்தின் கீழ் கோதுமை இறக்குமதி செய்யப்பட்டது ஏன் என்று கேள்வி எழுப்பினார். நமது நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் வழி உரத்தையும், பூச்சி மருந்துகளையும் கொட்டி உற்பத்தியை எடுக்கும் பசுமைப் புரட்சி வழியல்லவென்றும், இயற்கை விவசாயத்தை நடைமுறைப்படுத்தி உற்பத்தியைப் பெருக்குவதே சரியான வழியென்றும் நம்மாழ்வார் கூறினார்.
“உணவுப் பாதுகாப்பு என்பது வெறும் உற்பத்தி மட்டுமல்ல, அது ஊட்டமுடைய உணவு உற்பத்தியாகவும் (Nutrition Security) இருக்க வேண்டும்” என்று கூறிய நம்மாழ்வார், நமது அரசுகளின் உணவுக் கொள்கை என்பது மக்களை மையப்படுத்தியதாக இருக்க வேண்டுமே தவிர, சந்தையை மையப்படுத்தியதாக இருக்கக் கூடாது என்றும், மரபணு மாற்ற விதைகளைத் திணிப்பது இலாப நோக்கு கொண்ட நிறுவன விவசாயத்திற்கு (Corporate Agriculture) உதவுவதே என்றார்.
நன்றி: WEBDUNIAதமிழ்