Tuesday, May 20, 2008

கிரெடிட் கார்ட் பில் பிரசினையை தீர்க்க சிறப்பு சட்டம்!

கிரெடிட் கார்டு பில்லில் பிரசினையா? நீங்கள் வாங்காத பொருட்கள் பில்லில் இடம் பெற்றுள்ளனவா? தவறான தேதியோ, தொகையோ இடம் பெற்றுள்ளதா?
அநியாயமான வட்டியோ, கட்டணங்களோ கணக்கிடப்பட்டுள்ளதா? கூட்டல்-கழித்தலில் தவறா? நீங்கள் கட்டிய தொகை வரவு வைக்கப்படவில்லையா?

உங்கள் பிரசினைகளைத் தீர்க்க நியாய கடன் பில் சட்டம் (Fair Credit Billing Act) என்ற சிறப்பு சட்டமே உள்ளது.

கிரெடிட் கார்டு மற்றும் ரிவால்விங் கிரெடிட் முறையில் கடன் வழங்கும் நிறுவனங்களுக்கான இந்த சிறப்பு சட்டம் 1986ம் ஆண்டிலேயே மத்தியஅரசால் இயற்றப் பட்டுள்ளது.

மேற்கூறிய பிரசினைகள் குறித்து உங்களுக்கு ஏதும் புகார்கள் இருந்தால், குறிப்பிட்ட வங்கிக்கு இது குறித்து எழுத்து மூலமாக புகார் அளிக்க வேண்டும். இந்த புகாரை பெற்றுக்கொண்டது குறித்து உங்களுக்கு 30 நாட்களில் ஒப்புதல் வரும். புகாரை பெற்றுக் கொண்டதிலிருந்து 90 நாட்களுக்குள் உங்கள் புகாரை விசாரித்து பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்.

இந்த நாட்களில் பிரசினைக்குரியத் தொகைக்கு வட்டி கணக்கிடப்பட மாட்டாது. நீங்கள் கடனை கட்டவில்லை என்று கடன் தகவல் மையங்களுக்கு அறிக்கை அனுப்பப்பட மாட்டாது.

விசாரணையில் நீங்கள் குறிப்பிட்ட புகார் உண்மை எனத் தெரியவந்தால் அதை நிவர்த்தி செய்வது குறித்து, குறிப்பிட்ட வங்கி எழுத்து மூலமாக உறுதி அளிக்க வேண்டும். உங்கள் புகாரில் நீங்கள் சந்தேகப்பட்ட விஷயம் சரியல்ல எனத் தெரியவந்தால் நீங்கள் கட்ட வேண்டிய தொகையை மொத்தமாகவோ, உரிய வட்டியுடன் தவணையாகவோ கட்ட வேண்டும்.

நுகர்வோர் அனுப்பும் புகார்களை உரிய முறையில் விசாரிக்க மறுக்கும் வங்கிகளுக்கு அபராதம் விதிக்கப்படும். புகாரில் உள்ள விஷயங்கள் தவறு என பின்னர் விசாரணையில் தெரியவந்தாலும் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்காத வங்கிக்கு அபராதம் உத்தரவாதம்.


நியாய கடன் பில் சட்டம் (Fair Credit Billing Act)-ன் படி நடந்து கொள்ளாத வங்கிகளுக்கு எதிராக வாடிக்கையாளர்கள் வழக்கு தொடர முடியும். வழக்கு நிரூபிக்கப் பட்டால் தவறிழைத்த வங்கிக்கு 5 ஆயிரம் ரூபாய் முதல் 50 ஆயிரம் ரூபாய் முதல் இழப்பீடும் பெறலாம். இது குறித்த முழுமையான விவரங்கள் http://www.ftc.gov/bcp/conline/pubs/credit/fcb.shtm என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.

கிரெடிட் கார்டு நிறுவனங்களிடம் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளும் இந்த சட்டத்தை பயன்படுத்த முக்கியத் தகுதி: நீங்கள் அமெரிக்க குடிமகனாக இருக்க வேண்டும்!

ஆம்! இந்த சட்டம் இந்தியாவில் அல்ல! அமெரிக்காவில்தான் இந்த சட்டம் அமலில் உள்ளது!

இந்தியர்கள் இதுபோன்ற மக்கள் நலம் காக்கும் சட்டங்களுக்கு ஆசைப்படக்கூடாது. ஏனெனில் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம், 03-12-2007 அன்று நாடாளுமன்றத்தில் பேசும்போது, வெளிநாட்டு – தனியார் வங்கி நிறுவனங்கள் இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இல்லை என்று ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்திய ரிசர்வ் வங்கி, ஆண்டுதோறும் சடங்குத்தனமாக, பெயரளவில் வெளியிடும்
“வங்கிகளின் கிரெடிட் கார்டு செயல்பாடுகள் குறித்த முதன்மை சுற்றறிக்கை வங்கிகள் அனைத்தும் பின்பற்றுகிறதா என்பதைக்கூட கண்காணிக்க நேரமில்லாமல் இருக்கிறது.


நியாய கடன் பில் சட்டம் (Fair Credit Billing Act) என்ற இந்த சட்டம் குறித்து மத்திய நிதி அமைச்சர் சிதம்பரத்துக்கோ, இந்திய ரிசர்வ் வங்கிக்கோ தெரியாதா? பல தேவையில்லாத விவகாரங்களில் அமெரிக்காவை காப்பியடிக்கும் இவர்கள் இதுபோன்ற மக்கள் நலச்சட்டங்களை காப்பியடித்து இந்தியாவில் அமல்படுத்த மாட்டார்களா? என்றெல்லாம் கேள்விகள் எழலாம்.

பதில் சொல்லத்தான் ஆளில்லை!

பி. சுந்தரராஜன்

6 comments:

Anonymous said...

ஆவலைத்தூண்டும் தலைப்பை வைத்து ஏமாற்றி விட்டீர்கள். நமது தேசத்தலைவர்களை அடையாளம் காண இதுவும் ஒரு வழிதான்.

அமெரி்க்கா போல் மற்ற நாடுகளில் உள்ள நுகர்வோர் நலச்சட்டங்களையும் அறிமுகப்படுத்தினால், அவை நமக்கு கிடைக்காவிட்டாலும்கூட தெரிந்து கொள்ளவாவது உதவும்.

அமர பாரதி said...

நம் அரசியல்வாதிகளுக்கு இருக்கும் கேனத்தனமான மேட்டிமைத்தனம், கடன் பெற்றவர் எது பேசினாலும் அவரை முதலில் குற்றவாளியாகவே பார்ப்பது, தன்னுடைய குடி மக்களை அரசாங்கமே கேவலமான ஜந்துக்களாகப்பார்ப்பது போன்ற செயல்கள் இந்தியாவில் மட்டுமே நடக்கும். அரசாங்கம் தன்னை கடவுள் போல நினைத்துக்கொண்டு மக்களை பிழிவது இந்தியாவில் மட்டுமே நடைமுறையில் உள்ளது.

ஒரு சிறிய மேலதிகச்செய்தி.
இந்த சட்டம் அமெரிக்க குடிமகனுக்கு மட்டுமல்ல, இங்கு தற்காலிகமாக வாழும் அனைத்து மக்களுக்கும் பொருந்தும்.

Anonymous said...

பதிவும் அருமை. படங்களும் அருமை.

இது போன்ற விழிப்புணர்வு பணிகளை தொடர்ந்து செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

Anonymous said...

அமெரிக்காவை முன்மாதிரியாக் கொண்டு தேசப் பாதுகாப்பு என்ற பெயரில் தடா, பொடா போன்ற கருப்புச் சட்டங்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் "தேசபக்தி" தலைவர்கள், நுகர்வோர் நலனை எவ்வாறு புறக்கணிக்கின்றனர் என்பதை அழகாக அம்பலப்படுத்தி உள்ளீர்கள்.

மக்கள் சட்டம் said...

//Anonymous said...
அமெரி்க்கா போல் மற்ற நாடுகளில் உள்ள நுகர்வோர் நலச்சட்டங்களையும் அறிமுகப்படுத்தினால், அவை நமக்கு கிடைக்காவிட்டாலும்கூட தெரிந்து கொள்ளவாவது உதவும்.//

வெளிநாடு வாழ் நண்பர்களிடமிருந்து இத்தகைய தகவல்களையோ, தகவல் மூலங்களையோ வரவேற்கிறோம்.

Athisha said...

மிக நல்ல பதிவு எளிய தமிழில் , நன்றி தோழரே..
தொடரட்டும் உங்கள் சேவை

Post a Comment

உங்கள் கருத்துகளே எங்களை மேலும் செயல்படத் தூண்டும்.

ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.

அனானி மற்றும் ஆங்கில மறுமொழிகள் நீக்கப்படலாம்!